ஹோம் அக்ரி- 35



விலங்குகளின் உறுப்புகளும் கோள்களும்!

தாவரத்தின் பாகங்கள் எப்படி கோள்களோடு தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அதுபோலவே மிருகங்களின் உறுப்புகளும் கோள்களோடு தொடர்புள்ளவையாக இருக்கின்றன.

‘Bio-dynamic’ முறையில் இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இடு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கொம்பு சாண உரம் மற்றும் கொம்பு சிலிக்கா உரம் கன்று ஈன்ற பசுக்களின் கொம்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்று நாம் முன்னரே பார்த்தோம். பசுக்களின் கொம்புகள் பிரபஞ்ச சக்தியை நன்றாக ஈர்க்கக்கூடியவையாக இருக்கின்றன.

நம் புராதன பழக்க வழக்கங்களும், கலாசாரமும் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தக்கூடியதாகவே இருக்கின்றன. அதுபோலவே ‘யாரோ’ உரம் ஆண் மானின் சிறு நீரகப் பையில் வைத்து தயாரிக்கப்படுவதையும் பார்த்தோம்.
மானின் சிறு நீரகப்பையும் கிரகங்களின் சக்தியை ஈர்க்கவல்லதாகவும், குறிப்பாக சுக்கிரனின் கதிரியக்கங்களை பயன்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இப்போது விலங்குகளின் மற்ற உறுப்புகன் தயாரிக்கும் மற்ற ‘bio-dynamic’ இடுபொருட்களைப்பற்றி பார்ப்போம்.

கேமோமில் உரம்: இது ஒரு வகையான சாமந்திப் பூ. சாமந்திப் பூவின் மருத்துவ குணங்கள் உலக அளவில்  மிகவும் பிரபலமானதுதான். இந்த சாமந்திப் பூவில் தயாரிக்கும் தேநீர் பலவிதமான வயிற்று உபாதைகளையும் போக்கக்கூடியது.

மன சாந்தத்தையும் தரக்கூடியது. இந்தச் செடி புதனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்தப் பூக்களை காலையில் அறுவடை செய்து மாட்டின் சிறு குடலில் நிரப்பவேண்டும். பின்னர் சிலகாலம் ஒரு மண்தொட்டியில் வைத்து மண்ணுக்குள் புதைத்து விடவேண்டும். இந்த உரம் தழைச்சத்தையும், சுண்ணாம்புச் சத்தையும் மண்ணிற்கும் செடிக்கும் கொடுக்கும்.

செந்தட்டி உரம்:
சிறு காஞ்சொறி எனப்படும் இந்த செந்தட்டி தழைச்சத்து உள்ள இடங்களில் மண்டிக்கிடக்கும். உடலில் பட்டால் அரிப்பு எடுக்கும். தண்டு இலைகளில் சுனை நிரம்பி இருக்கும். இந்தச் செடி செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இந்தச் செடியை பூப்பதற்கு முன் வெட்டி நிழலில் காயவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் தொட்டியில் அழுத்தமாக நிரப்பி ஓர் ஆண்டு காலம் மண்ணில் புதைத்து வைத்து மக்கியவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.

இது செடிகளில் பச்சையம் உருவாவதற்கும் செடிகளுக்கு கந்தகம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கவும் உதவியாக இருக்கிறது. மேலும் மாலிப்டீனம், மக்னீசியம், வேண்டியம் போன்ற நுண்ணூட்டச்சத்து கிடைக்கவும் உதவுகிறது. கோமியத்தோடு கலந்து தெளிக்கும்போது சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.

இது போலவே ஓக் உரம், ஓக் மரத்தின் பட்டையை ஆட்டின் மண்டை ஓட்டில் வைத்தும், டாண்டலியான் (ஒரு வகையான சீமை காட்டு முள்ளங்கி) உரம் மாட்டின் அடிவயிற்றில் இருக்கும் ஜவ்வைக் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன.வேதங்களின் அடிப்படையில் ஒருசில முறைகளைப் பின்பற்றும் முறையும் புழக்கத்தில் இருக்கிறது.

முன்பு பார்த்தபடி ‘விருக்‌ஷாயுர்வேதம்’ என்ற நூலிலிருந்துதான் ‘பஞ்சகாவ்யா’ போன்ற இடுபொருட்களின் விவரங்கள் நமக்குத் தெரிந்து இன்று இயற்கை விவசாயம் செய்பவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறைகளை ஆழமாக ஆராய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒரு சில முறைகளைப் பற்றி பார்ப்போம்.

விதைகளுக்கான மேற்பூச்சு:
விதைப்பதற்கு முன் விதைகளை 1:1 என்ற விகிதத்திலான தேன்: நெய் கலவையில் கலக்கவேண்டும். விதைகளில் இந்தக் கலவை பூச்சு போல் ஒட்டிக்கொள்ளும். இந்த விதமாக நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் நன்றாக முளைப்புத்திறன் அடைவதோடு, வளர்ந்த செடிகள் பலமாகவும், நோயின்றியும் இருக்கும். இதுபோல வெங்காயம், பூண்டு போன்றவைகளை விதைக்கும் முன் ஈரமான பசுஞ்சாணத்தில் தோய்த்து எடுத்து விதைக்க ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும்.

அம்ருத்பாணி என்கிற அமிர்தகரைசல்:

200 லிட்டர் தண்ணீரில் கால் கிலோ பசு நெய், அரைக் கிலோ சூடு செய்யாத தேன், 10 கிலோ பசுஞ்சாணம் இவைகளை நன்றாகக் கரைத்து சில நாட்கள் நொதிக்க வைக்கவேண்டும். விதைகள், நாற்றுகள், கரணைகள் போன்றவற்றை இவற்றில் நனைத்து நடலாம்.

ஏக்கருக்கு 200 லிட்டர் போதுமானது. இது நிலத்திற்கு பிராண சக்தியைக் கொடுக்கும். இந்தக் கரைசலை இலை வழியாகவும், பாசனத்தின் வழியாகவும் கூட அளிக்கலாம்.
இந்த அமிர்த கரைசலை மண்புழு நிறைந்த மண்ணில் சேர்த்து பசைபோல செய்து எந்தவிதமான விதைகளுக்கும் மேற்பூச்சாக உபயோகப்படுத்தலாம்.

கோமூத்திரமும் வேப்பிலையும்:
கோமூத்திரத்தை சூரிய ஒளியில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ளவும். 20 கிலோ வேப்பந்
தழைகளை சிறு காம்புகளோடு 200 லிட்டர் நீரில் 4 நாட்கள் நிழலில் வைக்கவேண்டும். இந்த இரண்டையும் கலந்து பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தலாம். இதை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வெயிலில் வைப்பதன் மூலம் இதனுடைய திறன் அதிகரிக்கும்.

புகையிடுதல்:
சாம்பிராணி மற்ற ஹோம திரவியங்கள் கொண்டு உண்டாக்கும் புகை பலவிதமான பூச்சிகளையும் விரட்டுவதோடு ஒருவிதமான ஆக்க சக்தியை தோட்டத்தில் நிலைநிறுத்துவதாகவும் நம்பிக்கை இருக்கிறது.இதுபோன்ற பல தயாரிப்புகள் வேத சாஸ்திரங்களிலும், வேதங்கள் சார்ந்த பல நூல்களிலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான முறைகள் நாம் இன்றும் பயன்படுத்தக் கூடியவையாகவே இருக்கின்றன.

(வளரும்)

வண்ணத்துப்பூச்சிகள் நன்மை தரக்கூடியவையா? அப்படியென்றால் எந்தவிதத்தில் அவை விவசாயத்தில் பயனுள்ளவையாக அமைகின்றன?
- செல்வராணி, செங்கல்பட்டு.

நிச்சயமாக, தேனீக்களைப்போல் வண்ணத்துப்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. பூக்களில் இருக்கும் தேனை உண்ணச் செல்லும்போது இந்த மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. ஒருசில பூச்சிகளின் தொல்லைகளையும் வண்ணத்து பூச்சிகள் கட்டுப்படுத்துகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் ஒரு தோட்டத்தில் இருப்பது அந்த தோட்டத்தின் ஆரோக்கியத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

எறும்புகளை விவசாயத்தில் நண்பனாகக் கருதலாமா?
- கருவாயன், கரிமேடு.

எறும்புகள் பெரும்பாலான நேரத்தில் விவசாயிக்கு அனுகூலமான காரியங்களையே செய்கின்றன. கரையான்களும் எறும்புகளும் இருக்கும் நிலத்தில் 36% வரை மகசூல் (கோதுமைப் பயிரில்) அதிகரித்திருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எறும்புகளும், கரையான்களும் மண்ணில் உண்டாக்கும் வளைகளும், சுரங்கங்களும் காற்றோட்டத்தை மேம்படுத்துவதோடு, மண் அதிகமான தழைச்சத்தை சேமித்து வைக்கவும் உதவுகின்றன.

வலை பின்னும் எறும்புகள் சில செடிகளிலும் மரங்களிலும் வலைகளைப் பின்னி இனப்பெருக்கம் செய்வதால் தீங்கு செய்யும் பூச்சிகளை அண்டவிடுவதில்லை. ஆனால், இந்த இனப்பெருக்கம் அளவுக்கு அதிகமானால் பயிர்கள் சேதமாகும்.

இந்த அளவை விவசாயி கட்டுப்படுத்தவேண்டும். எறும்புகள் பலவிதமான தீங்குகளையும் செய்கின்றன. செடிகளின் மாவுப்பூச்சிகளோடு கூட்டு சேர்ந்து சில சமயம் செடிகளுக்கு பெரும் சேதத்தை உண்டு செய்கின்றன.

மன்னர் மன்னன்