இதைப் படிங்க முதல்ல!‘‘நேத்து ஆன்லைன்ல  லன்ச் ஆர்டர் செஞ்சேன். 120 ரூபா ஆச்சு. அதுல ரூ.30 எனக்கு அப்படியே கேஷ்பேக் ஆகிடுச்சு..!’’

 ‘‘இதென்ன பிரமாதம்... நான் ரூ.400க்கு டின்னர் ஆர்டர் செஞ்சேன். ‘அந்த’ நிறுவன கேட்வே மூலமா ஒரு 50%; அப்பறம் கிரெடிட் கார்ட் பேமென்ட்டுக்கு ஒரு 20% கேஷ்பேக்னு ஏதேதோ ஆஃபர் போட்டு கடைசில வெறும் ரூ.110தான் கொடுத்தேன்..!’’
அன்றாடம் காதில் ஒலிக்கும் உரையாடல்கள் இவை. ‘கேஷ் பேக்’. இதுதான் இப்போதைய இளசுகளின் ஹாட் டாக்.

அவசர வாழ்க்கையில் உடைகள் மட்டுமல்ல, உணவும் இன்று ரெடிமேட் ஆகிவிட... அதை டார்கெட் வைத்து களமிறங்கி இருக்கும் ஆன்லைன் ஆப்ளிகேஷன்தான் இந்த கேஷ் பேக்.இது எப்படி சாத்தியம்? பாதிக்குப் பாதி கூட இல்லாத விலையில் ஒரு பொருளை விற்க முடியுமா? ஆன்லைன் வர்த்தக தொழில்நுட்ப நிபுணரான எம்.கணபதியிடம் இக்கேள்வியை முன்வைத்தோம்.‘‘ஒரு விஷயத்தை எப்பவும் மறக்கக் கூடாது. இந்த உலகத்துல எதுவுமே சும்மா கிடைக்காது; வராது. எல்லாத்துக்கும் பின்னாடி ஒரு விலை, மறைமுக லாபம் இருக்கு.

50% ஆஃபர் விலைனா அது ஸ்டாக் கிளியரன்ஸ்னு தெரிஞ்ச நமக்கு இந்த கேஷ்பேக் ஒரு கண்கட்டி வித்தைனு தெரியாதது சோகம். இந்த ஆன்லைன் அப்ளிகேஷன்களுடைய முதல் தேவை என்ன தெரியுமா..? உங்களுக்குத் தேவையே இல்லாத appஐ உங்களுக்குத் தேவையுடையதா மாத்தறதுதான்! அடுத்து நீங்க அதை அன்இன்ஸ்டால் செய்யாம பார்த்துக்கணும்!

இதுக்காகவே ‘முதல் ஆர்டர் முற்றிலும் இலவசம்’னு விளம்பரப்படுத்தி உங்களை டவுன்லோட் செய்ய வைக்கறாங்க.  நாமும் ஆசையா டவுன்லோட் செஞ்சு முதல் ஆர்டரை இலவசமா பெறுவோம். இது முடிஞ்சதுமே ‘அடுத்து இவ்வளவுக்கு வாங்கினா இவ்வளவு கேஷ்பேக்’னு நோட்டிஃபிகேஷன் அனுப்புவாங்க. அதையும் வாங்குவோம்!

இப்படித்தான் நடக்குது. உண்மைல என்ன நடக்குதுனா இந்த ‘கேஷ் பேக்’ நம்ம அக்கவுண்ட்டுக்கு பணமா வராது. பதிலா எந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செஞ்சு நீங்க வாங்கினீங்களோ அந்த appல பேலன்ஸா கேஷ்பேக் ஆன பணம் இருக்கும். இதனால நம்மால அந்த appஐ அன்இன்ஸ்டால் செய்ய முடியாது. நம்ம பணம் அதுல இருக்கே! இதைக் கழிக்க வேறொன்றை திரும்ப ஆர்டர் செய்வோம். அதுக்கான கேஷ்பேக் அதே மாதிரி அவங்க appல சேரும். இப்படித்தான் நம்மை அவங்களோட appக்கு அடிமையாக்கறாங்க.

இதுக்கு அடுத்த டார்கெட் சம்பந்தப்பட்ட ஆப்-புக்கும் உங்களுக்கும் இடைல இன்னொரு ஆப்! அதுதான் பேமென்ட் கேட்வே கான்செப்ட்! அந்த ஆப் வழியா பணம் செலுத்தினா இவ்வளவு கேஷ்பேக் அல்லது ஆஃபர்னு அடுத்த டார்கெட்!இப்ப உங்களுடைய இன்னொரு பகுதி பணம் இரண்டாவதா ஒரு ஆப்ல பேலன்ஸா சேமிப்பாகும். அப்பறம் அந்த ஆப்லயும் நீங்க பொருட்கள் வாங்க ஆரம்பிச்சுடுவீங்க. ஆக, உங்களுக்குத் தேவையே இல்லாம இருந்த ரெண்டு ஆப்களை இப்ப நீங்களே நினைச்சாலும் அன்இன்ஸ்டால் செய்ய முடியாது!

இந்த ஆப்களை மொபைல்ல இன்ஸ்டால் செய்யறப்ப நம்மையும் அறியாம சில அனுமதிகளைக் கொடுத்திருப்போம்... என் கால், கான்டாக்ட், மெஸேஜ், ஸ்டோரேஜ்... எல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்னு.

இதை எடுத்துப்பாங்க. நம்முடைய மொத்த தொடர்புகளும் அவங்களுக்கு டேட்டாவா உதவ ஆரம்பிச்சுடும். இதோட உங்களுடைய முகநூல், வாட்ஸ் அப் இப்படி எல்லா பயன்பாட்டையும் தெரிஞ்சுகிட்டு உங்களுக்கு என்ன தேவை... எது தேவையில்லைனு ஆராய்ந்து அதுக்கு ஏத்த மாதிரி விளம்பரம் கொடுக்க ஆரம்பிப்பாங்க.

நமக்குதான் இப்ப 1.5 ஜிபி தினமும் டேட்டா இருக்கே... கண்டுக்காம நாமும் பயன்படுத்துவோம். கடைசில உங்களுக்கு கொடுத்த 50% கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சு ஒரு கட்டத்துல கடைகள்ல வாங்கற அதே விலைக்கு வாங்க ஆரம்பிச்சுடுவோம்!

இதுல ஒரு தோற்ற மயக்கம் இருக்கு. அது என்னனா, ஷோரூம் வாடகை, ஏசி, மின்சார செலவு... இதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்ல இல்ல. ஆக, ஃபேக்டரில இருந்து பாதி விலைக்கு வாங்கித்தான் நமக்கு விக்கிறாங்க...

சர்வீஸ் சார்ஜ் மட்டும் வசூலிக்கறாங்கனு நினைக்கிறோம். அப்புறம் என்ன... அவன் சொல்ற விலைக்கு வாங்கிடறோம். இதுதான் நடக்குது...’’ என எம். கணபதி தெளிவுபடுத்த, ஆன்லைன் விற்பனை மற்றும் ஆப்களில் என்னவிதமான பிரச்னைகள் வரலாம்... அதை எப்படித் தீர்க்கலாம்... என சொல்ல ஆரம்பித்தார் வழக்கறிஞர் ஸ்வப்னா சுந்தர்.

‘‘பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகங்கள்ல பொருட்கள் டேமேஜ் ஆகிடுச்சு அல்லது பொருள் மாறி வந்துடுச்சுனுதான் பிரச்னைகள் வரும். வேணும்னா ரிப்போர்ட் பண்ணுங்கனு ஆப்ஷன் கொடுப்பாங்க.இப்படி புகார் கொடுத்து அதை ஃபாலோ செய்கிற அளவுக்கு நமக்கு நேரம் இருந்தா நாமே கடைல போய் வாங்கிடுவோமே! அதனால பெயருக்கு ஒரு புகாரைத் தட்டிட்டு கஸ்டமர் கேருக்கு போன் செஞ்சு காச்சு மூச்சுனு கத்திட்டு நம்ம வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுடுவோம்.

இதுவே பொருட்களுக்கு பதில் சாப்பாடுனா... நாம பிரிச்சதுமே முடிஞ்சது கதை. ஒண்ணும் பண்ண முடியாது. நல்லா இல்லைனாலும் சாப்பிட்டுதான் ஆகணும். இதுதான் உண்மை.ஆன்லைன் வர்த்தகம் இப்ப தெளிவா நடக்குது. ஏன்னா, ஒரு கஸ்டமருக்கு பிரச்னைனா உடனே சமூகவலைத்தளங்கள்ல எழுதி அந்த புரொடக்ட்டையே காலி பண்ணிடுவாங்க. அதனாலயே கஸ்டமர் சர்வீஸை கவனமா வைச்சிருக்காங்க. அப்படியே ஒரு பிரச்னைனா ‘நாங்கதான் terms & Conditionsல கொடுத்திருக்கோமே’னு முடிச்சிடறாங்க.

அதிகபட்சம் கன்ஸ்யூமர் கோர்ட் போகலாம். அங்க போனாலும் உங்களுக்கு புெராடக்ட்டை மாத்திக் கொடுப்பாங்க அல்லது பணம் திருப்பிக் கொடுப்பாங்க. நஷ்ட ஈடெல்லாம் கேட்கவே முடியாத அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் இயங்குது. இதுல நாம கேஸ் நடத்தறதுக்கான செலவு நம்முடையதுதான். இதனாலயே பலரும் வழக்கு தொடர்வதில்லை.

டிஜிட்டல் வர்த்தகத்தை வலியுறுத்துகிற அரசும் இதையெல்லாம் கண்டுக்கறதில்லை. ஏன்னா, ஆன்லைன் வர்த்தகங்கள்ல நாம செலவு செய்யற பணத்துக்கு ஏற்ப வங்கிகளுக்கும், அரசாங்கத்துக்கும் நம்மகிட்ட இருந்தும், ஷாப்பிங் தளங்கள்ல இருந்தும் ஒரு குறிப்பிட்ட பணம் போகுது!ஸோ, முடிஞ்சவரைக்கும் கவனமா பணப் பரிவர்த்தனை செய்யணும்.

இல்லைன்னா கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் கொடுக்கணும். புரொடக்ட் ரிடர்ன் ஆப்ஷன், கேன்சல் ஆர்டர் இதையெல்லாம் சரியா பயன்படுத்தத் தெரிஞ்சா ஆன்லைன் ஷாப்பிங் பயன்படுத்துங்க. இல்லைன்னாலும் தெரிஞ்சுகிட்டு பயன்படுத்துங்க!’’ அழுத்தமாகச் சொல்கிறார் வழக்கறிஞர் ஸ்வப்னா சுந்தர்.                            

ஷாலினி நியூட்டன்