2.0மீண்டும் ஒரு பிரமாண்டத்தில் நம்மை மூழ்கடித்திருக்கிறது ‘2.0’.திடீரென பேசிக்கொண்டிருந்த செல்போன்கள் பறிக்கப்பட்டு ‘விர்’ரென கொண்டு செல்லப்பட, நகரமே கலங்கி நிற்கிறது.
செய்வதறியாமல் தவிக்கிறது அரசும் காவல்துறையும். முக்கிய விஐபிக்கள் கொல்லப்படுகிறார்கள். எல்லா முயற்சிகளும் பலனற்றுப்போக விஞ்ஞானி வசீகரன் சிட்டி ரோபோவுக்கு மறுபடியும் உயிர் தருகிறார். செல்போன்கள் பிடுங்கிச் செல்லப்படுவதன் ரகசியம் என்ன... இத்தகைய வெறியூட்டிய கொலைப் பின்னணிக்கு யார் காரணம் என்பதே மீதிக்கதை.

குருவி முதல் ரோபோ வரை எங்கும் எதிலும் பிரமாண்டம். ஒவ்வொரு பிரேமிலும் நிறைந்து நிற்கிறது இயக்குநர் ஷங்கரின் திட்டமிடலும், நுணுக்கமான உழைப்பும். புரோகிராம், ரோபோ என விஞ்ஞானம் வாகை சூடும் கதையில் படத்தையே தன் கண்ணசைவில் கன்ட்ரோல் செய்கிறார் ரஜினிகாந்த்.

வசீகரன், சிட்டி, குட்டி என மூன்று பேராகவும் ரஜினியை பார்ப்பதே தனி அனுபவம். எந்த சைஸில் ரஜினி வந்தாலும் வானத்திற்கும் பூமிக்குமாக எழுந்து நிற்கிறார். அவரின் பரபர வசனங்கள், வேகம், ரொமான்ஸ் எதுவும் இல்லையே என்ற எண்ணம்கூட எழ மறுக்கிறது.

எதிரில் அக்‌ஷய்குமார் எழுந்து நிற்பது செம மாஸ். பறவைகளுக்காக தன் இல்லத்தை மாற்றியிருக்கும் விதம் கதையின் வாசலைத் திறக்கிறது. பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அதில் சிறு உயிரினங்களுக்கும் இடமுண்டு என்கிற உயரிய கதாபாத்திரம். ரோபோ மாதிரியே இருக்கிறாரே எமி ஜாக்ஸன் என்று பார்த்தால், படத்திலும் அவர் ரோபோதான்.

‘2.0’வின் கலை பிரமாண்டம், முதுகெலும்பு எல்லாமே வி.எஃப்.எக்ஸ்தான். முத்துராஜின் கலை இயக்கமும், கணினி வரைகலையின் உச்சமும் ஹாலிவுட் ரகம். அத்தனை உயரத்தில் அக்‌ஷய்குமார் படிந்திருக்கும் செல்போன்களோடு வருவதாகட்டும், தார் சாலைகளில் செல்ேபான்கள் உருகி ஓடும் இடமாகட்டும் நிஜமாகவே ‘வாவ்.’

மறைந்த நா.முத்துக்குமாரின் வசீகர வரிகளில் இதம் பதமாகத் துளிர்க்கிறது ‘புள்ளினங்காள்...’ பாடல். பின்னணியில் பயமேற்றி பெட்டர் ஸ்கோர் செய்கிறது ஏ.ஆர்.ஆரின் இசை. ஜெயமோகன், ஷங்கர் வசனங்கள் சில இடங்களில் துல்லியம்.நீரவ் ஷா படம் முழுவதும் அவர் பங்கிற்கு நெருக்க உணர்வைத் தருகிறார். ரசூல் பூக்குட்டியின் ஆடியோகிராஃபி அழகு.

அக்‌ஷயின் கேரக்டர் வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். தொடர்ந்து வசீகரன், சிட்டி, அக்‌ஷய் என மூவரிடம் மட்டுமே படம் நிற்பதில் சற்றே சலிப்பு. பறவைகளைக் கொண்டாடும் அக்‌ஷய் இறந்தவுடன் கொடூர வில்லானாவது ஏன்? முதல் பாகம் ‘எந்திரனி’ல் இருந்த கதை சொல்லல் இரண்டாம் பாகத்தில் இல்லை. இருந்தாலும் தமிழுக்கு புகழ் சேர்த்த நவீன படைப்பு, ‘2.0’.    

குங்குமம் விமர்சனக்குழு