தமிழக சதுப்பு நிலங்களின் கதி என்ன..?
8 லட்சத்து 84 ஆயிரம் ஹெக்டேர்
சர்வதேச சதுப்பு நிலப் பாதுகாப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொண்டு அந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையொப்பமிட்டு முப்பத்தாறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தேசம் முழுதும் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றன என்று கவலை தெரிவிக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
 அது என்ன சதுப்பு நிலம்?
ஆண்டு முழுதும் நீர் நிறைந்திருக்கும் சேற்றுப் பாங்கான வளமான நிலப்பகுதியே சதுப்பு நிலம். கண்ணையும் மனதையும் குளுகுளுவென்று நிறைக்கும் பசுமையான நிலக் காட்சிகள் மட்டுமே சதுப்பு நிலத்தின் இயல்பு கிடையாது. சிறு சிறு தாவரங்கள், மீன் இனங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் என அடர்த்தியான உயிர்ச்சூழல் மண்டலமாக இருப்பவை சதுப்பு நிலங்கள்.
நிலத்தின் மேற்புற நீரைச் சேமித்து வைத்தல், நிலத்தடி நீரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மேம்படுத்துதல், நீரை வடிகட்டி சுத்தமாக்குதல், வெள்ள அபாயத்தைத் தடுத்தல், மண் அரிப்பைத் தடுத்தல், நீர்ச் சூழலை தக்கவைத்தல், நுண்ணுயிர் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ஆகியவை சதுப்பு நிலத்தால் இப்பூமிப் பந்துக்கு விளையும் நன்மைகள்.

நன்னீர் சதுப்பு நிலங்கள், உவர் நீர் சதுப்பு நிலங்கள் என இரு பெரும் பகுதிகளாக சதுப்பு நிலங்களைப் பிரிக்கிறார்கள். நன்னீர் சதுப்பு நிலங்கள் என்பவை நாட்டின் உட்பகுதியில் உள்ள பிரதேங்கள்.
உவர் நீர் சதுப்பு நிலங்கள் கடற்கரையோரமாக உள்ளவை. இந்த இருவகை சதுப்பு நிலங்களிலுமே செயற்கை மற்றும் இயற்கை என இருவகையான சதுப்பு நிலங்கள் உள்ளன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் மூலம் உருவாகும் சதுப்புகள் இயற்கையான நன்னீர் சதுப்புகள். நீர்த் தேக்கங்கள், நீர்ப் பிடிப்பு அணைகள் மூலம் உருவாகுபவை செயற்கையான நன்னீர் சதுப்புகள்.  அதுபோலவே, கடற்கரையோர நீர்த்திட்டுகள், பீச், மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்திக் காடுகள் ஆகியவை இயற்கையான உவர் நீர் சதுப்புகள். கடற்கரையோர மீன் பிடிப்புப் பகுதிகள், உப்பளங்கள் ஆகியவை செயற்கையான உவர் நீர் சதுப்புகள்.
கடந்த 2011ம் ஆண்டின் கணெக்கெடுப்பின்படி தமிழகத்தில் 24,684 சதுப்பு நிலங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு எட்டு லட்சத்து எண்பத்து நான்காயிரம் ஹெக்டேர். கடந்த 1971ம் ஆண்டு ஈரானின் ரம்சார் நகரில் சதுப்பு நிலங்கள் பாதுகாப்பது தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதை ரம்சார் மாநாடு என்று சொல்கிறார்கள்.
ஐநா சபை ஆதரவுடன் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகம் முழுதும் உள்ள எட்டு லட்சத்துப் பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது எப்படி என்று விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஐநா சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் ரம்சார் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்று கையொப்பம் இட வேண்டும் என்று வலியுறுத்தப்படவே இந்தியாவும் அதில் கையொப்பமிட்டது.
இது நடந்து ஒரு தலைமுறையே கடந்தபின்னும் இங்கு அதற்கான பணிகள் மிக ஆரம்பகட்ட நிலையிலேயே இருக்கின்றன. பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு 2001ல் எம்.கே.பாலகிருஷ்ணன் என்ற வழக்குரைஞர் இந்தியாவின் சதுப்பு நிலப் பகுதிகள் பாதுகாப்பு தொடர்பாக ரிட் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை இது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டது. இது மாதிரியான பொதுநல வழக்குகளுக்கே உரிய இயல்போடு பல்வேறு வாய்தாக்களுக்குப் பிறகு 2009ம் ஆண்டில் இவ்வழக்கு நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கட்ஜு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இது தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சதுப்பு நிலப் பாதுகாப்பு என்று இல்லாமல் நீர்ப்பற்றாக்குறை தொடர்பான அனைத்துப் பிரச்னைகளையும் பரிசீலிப்பதற்கான ஒரு அமைப்பாக அது இருக்கும் எனப்பட்டது.
அப்படித்தான் ‘டெக்னாலஜி மிஷன்: வார்’ (Technolog Mission: WAR - Winning, Augmentation and Renovation) என்ற அமைப்பு உருவானது. நீர்ப்பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகளை வென்றெடுத்தல், மேம்படுத்துதல், சீரமைத்தல் என்ற மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்திட்டம் இது. அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் இந்த அமைப்பு செயல்படும் எனப்பட்டது.
2011ம் ஆண்டுக்குப் பிறகு இது சதுப்பு நிலப் பாதுகாப்பை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. 2017ம் ஆண்டில் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள் இது தொடர்பாக தாமே முன்வந்து மாநில அரசுகளை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படவே உயர்நீதிமன்றங்கள் களத்தில் இறங்கி ரம்சார் மாநாட்டின் தீர்மானங்கள் என்ன ஆயிற்று என்று பிரச்னையை தூசி தட்டின.
தமிழகத்தில் பி.எஸ்.ராமன் இது தொடர்பான தகவல்களைத் திரட்டி அறிக்கை அளிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த அறிக்கையின்படி கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் மட்டுமே ரம்சார் மாநாட்டின் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பகுதியாக சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனில், மிச்சம் உள்ள ஆயிரக்கணக்கான சதுப்பு நிலங்களின் கதி? அது அதோகதிதான்.
கடந்த 2015 - 16ம் ஆண்டிலாகட்டும் அதற்கு அடுத்த ஆண்டிலாகட்டும் சதுப்பு நில மேம்பாட்டுக்கு என்று செலவழிக்கப்பட்ட தொகை வெறும் பூஜ்யம்தான். அப்படியானால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏதேனும் தொகை செலவழிக்கப்பட்டதா என்றால், ம்ஹூம், அது தொடர்பாக எந்தவிதமான தகவலும் அறிக்கையும் இல்லை.
இந்த 2017 - 18ம் ஆண்டில் மட்டும் வெறும் ஐம்பத்தாறு லட்சம் ரூபாய் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பள்ளிக்கரணை, விழுப்புரத்தின் கலுவேலி, மன்னார் வளைகுடாவின் சதுப்பு நிலங்கள் ஆகியவை இனிதான் அரசால் ரம்சார் பரிந்துரைகளின்படி பராமரிக்கப்பட உள்ளதாம்.
பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து, ஊராட்சி, நகராட்சி போன்ற உள்ளூர் அமைப்புகள் மூலம் மாவட்ட அளவிலான சதுப்பு நிலப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் செயல்பாடுகள் என்னவோ பெரிதாக இல்லை. இதில், எண்பத்தொரு சதுப்பு நிலங்கள் முதல் கட்டமாக சீரமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அறுபத்தொரு சதுப்பு நிலங்கள் இரண்டாம் கட்டமாகப் பரிசீலிக்கப்படுமாம்.
இதைத் தவிர வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவுகொண்ட மொத்தம் இருபத்தி நாலு சதுப்பு நிலங்கள் ஏற்கெனவே வனஉயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்கிறார்கள். இதில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் என மூன்று மாவட்டங்களில் விரிந்திருக்கும் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள், பிச்சாவரம், ராமநாத புரம் மாவட்ட மாங்குரோவ் காடுகள் ஆகியவையும் அடங்கும்.
வேடந்தாங்கல், கரிகிலி, புலிக்காடு, வேட்டங்குடி, கஞ்சிரங்குளம், சித்திரகுடி, உடையமார்த்தாண்டபுரம், வடுவூர் சதுப்பு நிலங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
ஏற்கெனவே பருவ மழை பொய்த்தலால் வறண்டு கொண்டிருக்கும் இந்த நீர்நிலைகள் சாக்கடைக் கலப்பு, தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பு, குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுதல் ஆகியவற்றாலும் குற்றுயிராகவும் குலையுயிராகவும் இருக்கின்றன. இந்நிலையில் சட்டங்கள் ஏட்டளவில் இருந்தும் அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் நட்டம் வந்து சேர்வது நமக்கு மட்டும் அல்ல, நம் எதிர்காலத் தலைமுறைக்கும்தான்.
இளங்கோ கிருஷ்ணன்
வேதா
|