என் மாமியார்! மனம் திறக்கிறார் மருமகள் ஜோதிகா



முகத்தில் தேஜஸ் தகதகக்கிறது. செயலில் பணிவும் பக்குவமும் பளபளக்கிறது. பேச்சில் ப்யூர் தமிழ் விளையாடுகிறது. ஷார்ட்கட்டில் சொன்னால் ஜொலிஜொலிக்கிறார் ஜோதிகா. ‘‘என் செகண்ட் இன்னிங்ஸ் கேரியரில் ‘காற்றின் மொழி’ ரொம்பவே ஸ்பெஷல். இதோட டீசரை பாத்துட்டீங்களா? உங்களுக்கு பிடிச்சிருக்கா?’’ ஃப்ரெண்ட்லி பேச்சில் வரவேற்கிறார் ஜோதிகா.   

முந்தைய படத்துல ஜோவை போலீஸா பார்த்தாச்சு. ‘காற்றின் மொழி’யில் என்ன சஸ்பென்ஸ் வச்சிருக்கீங்க?

ஃப்ரெஷ்ஷான விஷயங்கள் நிறைய இருக்கு. முதல்முறையா ரேடியோ ஆர்.ஜே.வாக பண்ணியிருக்கேன். கொஞ்சம் பப்ளியான கேரக்டர். பர்ஃபாமென்ஸ்ல ஸ்கோர் செய்திருக்கேன்னு நினைக்கறேன். இந்தில வித்யாபாலன் நடிச்ச ‘தும்ஹரிசுலு’ படத்தின் ரீமேக் இது.

ஏற்கெனவே அந்தப் படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகியிருந்தேன். ‘மொழி’க்குப் பிறகு ராதாமோகன் சாரே இந்தக் கதையை கொண்டு வந்ததும் சந்தோஷமாகிடுச்சு. கணவன் - மனைவிக்கிடையேயான அழகான ஒரு ரிலேஷன்ஷிப்பை சொல்லும் படமிது.

விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர் சார்னு நிறைய பேர் இருக்காங்க. யோகிபாபு, சிம்பு கேமியோ ரோல் பண்ணியிருக்காங்க. ‘தும்ஹரிசுலு’ ரீமேக் ஆகுதுனு தெரிஞ்சதும் ‘இந்தப் படத்துல கண்டிப்பா நானிருப்பேன்’னு வந்து நடிச்சுக் கொடுத்தாங்க லட்சுமி மஞ்சு.
இதுவரை 55 படங்கள்கிட்ட நடிச்சிருப்பேன். ஆனா, முதல்தடவையா முழுக்க முழுக்க ஏசி அறையிலயே மொத்த படப்பிடிப்பும் நடந்தது இந்தப் படத்துக்குதான்!

ராதாமோகன் சாரோட ஒர்க்கிங் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட நிறைய பாசிட்டிவிட்டி இருக்கும். ஸ்பாட்டுல எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கான ஸ்கிரிப்ட்டைத்தான் எப்பவும் தேர்வு செய்வார்.

கேரக்டரை சிம்பிளா சொல்லிட்டு மொத்த பொறுப்பையும் நம்ம தலைல சுமத்திடுவார். ஸோ, நாம பொறுப்போட செய்தே ஆகணும் என்கிற கட்டாயத்துல இருப்போம்! படத்தை தனஞ்செயன் சார் தயாரிச்சிருக்கார். எனக்கு அப்படியே சூர்யாவோட ‘2டி’யில் ஒர்க் பண்ணின ஃபீல்!

உங்களோட கூட்டுக் குடும்ப லைஃப் எப்படி போயிட்டிருக்கு...?

சந்தோஷமா போயிட்டிருக்கு. இந்த லைஃப் ரொம்ப பிடிச்சிருக்கு. வீட்டுல சூர்யாவோட அம்மா, அப்பா, கார்த்தி, அவங்க ஃபேமிலினு நாங்க அத்தனை பேரும் ஒண்ணா இருக்கறதால வீடு எப்பவும் கலகலனு இருக்கும். தினமும் காலைல நாங்க அத்தனை பேரும் டைனிங் டேபிள்ல ஒண்ணா உட்கார்ந்துதான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவோம்.

சினிமால இருந்து பசங்களோட ஸ்கூல்ல நடக்கற ஜாலி கலாட்டாக்கள் வரை அத்தனையும் பேசி சிரிச்சு ஷேர் பண்ணிக்குவோம். வீட்ல இருக்கற ஒவ்வொருத்தருமே ஒவ்வொரு சப்ஜெக்ட்ல டேலன்டட். அதனால பசங்க படிப்பு பத்தி நான் ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்ல. தேவ், தியா ரெண்டு பேரும் ஸ்கூல் விட்டு வந்ததும்  வீட்லயே ட்யூஷன் நடக்கும்.

தாத்தா பாட்டி அவங்களுக்கு தமிழ் கத்துக் கொடுப்பாங்க. கார்த்தி அவங்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் எடுப்பார். அவரோட மனைவியோட தம்பி மேத்ஸ் சொல்லிக் கொடுப்பார். ஷூட் லேட்டாச்சுனா பசங்களைப் பத்தின கவலை வராது. வீட்ல இருக்கிறவங்க அவங்களை ஹோம் ஒர்க் பண்ண வைச்சு, சாப்பாடு ஊட்டி பார்த்துப் பார்த்து கவனிச்சுப்பாங்க.

 Life is beautiful!

‘மகளிர் மட்டும்’ல நான் புல்லட் ஓட்டினதை பார்த்துட்டு என் குழந்தைகள் ஹேப்பி. தினமும் அவங்களை ஸ்கூலுக்கு புல்லட்ல கொண்டுபோய் விடச் சொல்றாங்க! குறிப்பா என் பையனை விட என் பொண்ணுக்கு நான் புல்லட் ஓட்டறதுல அவ்வளவு மகிழ்ச்சி. தியாவுக்காகவே சில நாட்கள் புல்லட்ல அவளை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயிருக்கேன்.

சிவகுமார் சார் பேசி நிறைய பார்த்திருக்கோம். கேட்டிருக்கோம். ஆனா உங்க அத்தை..? அவங்க உங்ககிட்டயாவது பேசுவாங்களா?

யெஸ். அப்பா மாதிரியே லட்சுமியம்மாவும் ரொம்ப நல்லா பேசுவாங்க. அத்தையை அம்மானுதான் கூப்பிடுவேன். தன் மக மாதிரிதான் என்னைத் தாங்கறாங்க. வீட்ல நான் இருந்தாலும் கிச்சன் பக்கமே போக வேண்டியிருக்காது. சொல்லிக்கிற மாதிரி வீட்டு வேலைகளும் பெருசா பண்றதில்ல. பொறந்த வீட்ல ஃப்ரீயா இருந்த மாதிரிதான் புகுந்த வீட்லயும் ரிலாக்ஸா இருக்கேன்!

நான் சாப்பிட்டு முடிச்ச பிறகு என் பிளேட்டை கிச்சனுக்கு கொண்டு போக நினைச்சா கூட லட்சுமியம்மா விடமாட்டாங்க. வீட்டுல உள்ளவங்கள கூப்பிட்டு பிளேட்டை வாங்கிக்க சொல்லிடுவாங்க. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கொடுப்பினை! மகாராணி மாதிரி வாழறேன். நான் நடிச்ச படங்கள் எல்லாமே அவங்களுக்கு பிடிக்கும். குறிப்பா ‘நாச்சியார்’!

சூர்யா - ஜோதிகா ஜோடியை மறுபடியும் திரையில் எப்போ பார்க்கலாம்?

எங்களுக்கும் ஆசை இருக்கு. ஆனா, யாரும் எங்களுக்கான கதையை கொண்டு வரமாட்டேங்குறாங்களே! எங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்கக் கேட்டு யாருமே இன்னும் அப்ரோச் பண்ணலை. இதுதான் நிஜம். இப்ப உள்ள யங்ஸ்டர்ஸுக்கு ரியல் லைஃப் லவ் ஜோடினா, பிடிக்காது போலிருக்கு!

அதே மாதிரி எனக்கு வர்ற கதைகள் எல்லாமே மெச்சூர்ட் சப்ஜெக்ட்டா இருக்கு. ‘36 வயதினிலே’ வந்து ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் ‘மகளிர் மட்டும்’ கிடைச்சது. ஆனா, ‘நாச்சியார்’க்குப் பிறகு நிறைய ஆஃபர்ஸ் தேடி வருது. ஸ்டிராங்க் சப்ஜெக்ட்களோட வரும் கதைகளையும் விரும்பிப் பண்றேன். ஹாரர் கதைகள் பண்ணணும்னு ஆசையிருக்கு.

அடுத்து ரெண்டு படங்கள்ல நடிக்கறேன். ஒரு படம், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கறாங்க. இன்னொண்ணு ‘2டி’க்கு பண்றேன். ரெண்டுமே வித்தியாசமான கதைகள். புது இயக்குநர்களோட படங்கள்.

சமீபத்துல பார்த்த படம்..?
நிறைய படங்கள் பார்த்துட்டு இருக்கேன். ‘கோலமாவு கோகிலா’வை தியேட்டர்ல போய் பார்த்தேன். நயன்தாரா ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. ரொம்ப பிடிச்சிருந்தது. நல்ல கதைகளா அவங்க தேர்ந்தெடுத்து நடிக்கறாங்க.

கீர்த்தி சுரேஷோட ‘நடிகையர் திலகம்’ பார்த்தேன். சூர்யா ‘பிதாமகன்’ல மெச்சூரிட்டியான கேரக்டர் பண்ணியிருப்பாங்க. அப்ப அவங்களுக்கு வயசு 24தான். அதே மாதிரி மெச்சூரிட்டியோட கீர்த்தி ‘நடிகையர் திலகம்’ பண்ணியிருக்காங்க.

கங்கிராட்ஸ் கீர்த்தி.எப்படி இருந்தது இமயமலையில் ட்ரெக்கிங்... ?

அமேஸிங். நானும் சூர்யாவும் வருஷத்துக்கு ஒருமுறை இந்தியால இருக்கிற இடங்களுக்கு பசங்களோடு போவோம். அவங்க இயற்கையை நேசிக்கணும். அதனாலதான் இப்படி. குறிப்பா சுற்றுலா இடங்களை விட குழந்தைகளின் உடலுக்கு பயிற்சி கொடுக்கிற மாதிரியான இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கறோம். அப்படித்தான் இந்தத் தடவை இமயமலைக்கு ட்ரெக்கிங் போனோம்.

டூர் ப்ளான் பண்றப்ப ‘என்ன சாப்பாடு கொண்டு போறது’னு பேச்சு வரும். குழந்தைகளுக்கு பசியோட அருமை தெரியணும். அதனால அன்றைய முழு நாளும் அவங்க எதுவும் சாப்பிடக் கூடாதுனு சொல்லிடுவோம். ஒருநாள் முழுக்க வயித்த காயப் போட்ட
பிறகுதான் சாப்பிட வைப் போம்.  

மை.பாரதிராஜா