ரத்த மகுடம்



பிரமாண்டமான சரித்திரத் தொடர்- 27

எழுந்த திகைப்பை அடக்கியபடி அந்தப் பாலகனை உற்றுப் பார்த்தான் கரிகாலன்.‘‘எதற்காக அப்படிப் பார்க்கிறீர்கள் வணிகரே..?’’

பதிலேதும் சொல்லாமல், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சுவடிகளை கரிகாலன் ஏறிட்டான். சிவகாமியின் உருவம் அவனைப் பார்த்துப் புன்னகைத்தது.தனக்குத் தெரியும் இந்தச் சித்திரம் இந்தப் பாலகனுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகிறது..? ஒருவேளை மறைக்கிறானா..? ஏன்..?‘‘சரி வாருங்கள் வணிகரே...’’ பாலகன் அழைத்தான்.

‘‘நீ செல்... சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்...’’‘‘இல்லை... உங்களுக்காக...’’
‘‘பாதகமில்லை. கூடுதலாக இன்னும் சில தருணங்கள் காத்திருப்பதால் குடிமுழுகிப் போகாது. இறக்கப்பட்ட பனை ஓலைகள் தொடர்பான கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். அவ்வளவுதானே..? வருகிறேன். நேரம் ஒதுக்கி என்னுடன் உரையாடியதற்கு நன்றி. செல்...’’
இமைக்காமல் கரிகாலனைப் பார்த்துவிட்டு பாலகன் அகன்றான்.

கடைசியாக அவன் உதடுகளில் புன்னகை அரும்பியதை கவனித்த கரிகாலன், தீவிர யோசனையில் ஆழ்ந்தான். கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று பல்லவ நாட்டைச் சுற்றிலும் பின்னப்படுகிறது. அதன் கண்ணியாக சிவகாமி விளங்குகிறாள். பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர் அவளை முழுமையாக நம்புகிறார். சாளுக்கியர்களோ அவளைக் குறித்த ஐயத்தை எழுப்பியபடியே இருக்கிறார்கள்.

அப்படியும் சொல்ல முடியாது. பல்லவ மன்னரின் சகோதரரான ஹிரண்ய வர்மர் கூட சிவகாமியை நம்பாதே என்றுதானே அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார்..?

யார் சொல்வது உண்மை..? சிவகாமி யார்..? அவள் செய்திருக்கும் சபதம்தான் என்ன..? பல்லவர்களின் அரண்மனையில் இதற்கு முன் இல்லாத திரைச்சீலை இப்போது மட்டும் எங்கிருந்து உதித்தது..? அதில் சிவகாமியின் உருவத்தை சித்திரமாக ஏன் தீட்டி வைத்திருக்கிறார்கள்..? அதுவும் சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தரை, தான் சந்திப்பதற்கு முன் தன் பார்வையில் அது பட வேண்டும் என மெனக்கெட்டது போல் அல்லவா அது தெரிந்தது; தெரிகிறது..? போலவே கடிகையில் அடுக்கப்பட்டிருக்கும் சுவடிகளின் மேல் ஓவியமாக வரையப்பட்டிருக்கும் உருவம். இதுவும் அதே சிவகாமிதான். அரண்மனையில் காணப்பட்ட அதே சித்திரத்தின் இன்னொரு வடிவம்தான்.

இவை அனைத்தும் என் பார்வையில் விழுகிறது. அப்படி விழ வேண்டும் என்பதற்காகவே நான் செல்லும் இடங்களில் எல்லாம் திட்டமிட்டு வைக்கப்படுகிறது. திட்டமிடுவது யார்..? எதன் பொருட்டு இப்படி காய் நகர்த்துகிறார்கள்..? விரிக்கப்பட்ட வலையில் நான் விழுந்தால் பரவாயில்லை. பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் எதிர்காலமே விழுந்தால்..?

முறியடிக்க வேண்டும்... சகலத்தையும் முறியடிக்க வேண்டும்... ஆணிவேரையே கண்டறிந்து களைய வேண்டும்... பல்லவ சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற வேண்டும்...முடிவுடன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுவடிகளை ஏறிட்டான். அடுக்குகளைக் களைந்து சுவடிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். தீட்டப்பட்டிருந்த சிவகாமியின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது.

‘‘அவள் இடுப்பில் இருந்த மச்சத்தைப் பார்த்தாயா..?’’ சாளுக்கிய மன்னர் எழுப்பிய வினா, மின்னலென உடலைத் தாக்கியது. கண்கள் பிரகாசிக்க அந்தப் பகுதியைப் பார்த்தான். இடப்பக்கம், அதாவது அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட தர்ம சாஸ்திரங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பகுதி என சற்று முன் பாலகன் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. தனக்கு அச்செய்தியைச் சொல்வதற்காகவே நின்று பேசிவிட்டுச் சென்றிருக்கிறானோ..?

அதன் அருகில் கரிகாலன் செல்லவும், இடப்பக்கத்திலிருந்து, அதுவும் சரியாக சித்திரத்திலிருக்கும் சிவகாமியின் இடுப்புப் பகுதியிலிருந்து கொத்தாக சுவடிகளை எடுத்துக் கொண்டு மாணவர்கள் செல்லவும் சரியாக இருந்தது.‘‘எங்கப்பா எடுத்துச் செல்கிறீர்கள்..?’’ ஒரு மாணவனை நிறுத்திக் கேட்டான்.‘‘சுரங்கத்துக்கு வணிகரே...’’ பதிலை எதிர்பார்க்காமல் அந்த மாணவன் அகன்றான்.

சுரங்கம் என்பது பாதாள அறை. நிலவறை என்றும் இதை அழைப்பார்கள். சுவடிகளைப் பராமரிப்பதற்காகவே நிர்மாணிக்கப்பட்ட இடம் அது. அதைத்தான் அந்த மாணவன் குறிப்பிட்டான். கடிகை குறித்து அறிந்திருந்த கரிகாலனுக்கு இது தெளிவாகப் புரிந்தது.

இவர்கள் பின்னாலேயே சென்று உடனே அந்தக் கட்டுகளை எடுத்து ஆராய வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினான். கூடாது. அது தன்னைக் கண்காணிக்கும் எதிரிகளை எச்சரிக்கை அடையச் செய்துவிடும். அர்த்த சாஸ்திரம்... கவுடில்யர் குறிப்பிட்டிருக்கும் பதிமூன்று ஆசிரியர்கள்... இதுதான் குறிப்பு. இதனுள்தான் ரகசியம் புதைந்திருக்கிறது. அதுவும் சாளுக்கிய மன்னர் தன்னிடம், ‘சிவகாமியின் இடுப்பில் இருக்கும் மச்சத்தைப் பார்த்தாயா...’ என குறிப்பால் உணர்த்திய ரகசியம்.

இதை ஏன் எதிரியான தன்னிடம் தெரிவித்தார் என்பது அந்த ரகசியத்தைக் கண்டறிந்தபிறகுதான் தெரியும்! பாலகன் வேறு இன்னும் எளிமைப்படுத்தி இருக்கிறான்... பதிமூன்று ஆசிரியர்களையும், தான் ஆராயத் தேவையில்லை... இவர்களில் சிலர் குறித்து மகாபாரதம் சாந்தி பர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது... ஆக, இந்த சிலரை மட்டும் ஆராய்ந்தால் போதும்!

சுரங்கப் பகுதி என்னும் பாதாள அறைக்குச் செல்லும் வழியை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு கடிகையின் மறுபக்கம் வேடிக்கை பார்ப்பதுபோல் சென்றான்.ஒரே அளவாக வெட்டப்பட்ட ஓலைகளை ஒன்றாகக் கட்டி வைக்க சிலர் துளையிட்டுக் கொண்டிருந்தார்கள். நீளம் குறைவான ஓலைகளின் மத்தியில் அல்லது இடது ஓரத்தில் ஒரு துளை. ஓலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இரு துளைகள். மொத்தத்தில் 2:3:2 என்ற கணக்கில் துளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்படி கட்டப்பட்ட ஓலைகளை மறுபுறத்தில் வாங்கி பழைய ஓலைச்சுவடிகளில் இருப்பவற்றை பார்த்துப் பார்த்து இந்தப் புதிய கட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதுவும் கீறலெழுத்து முறை, மையெழுத்து முறை என இரு வகைகளில்.பனையோலையின் மீது கூர்மையான எழுத்தாணி கொண்டு கீறி உருவாக்கும் எழுத்து முறை கீறலெழுத்து முறை. தூரிகை அல்லது நாணல் குச்சி கொண்டு மையால் சுவடியின் மேற்புறத்தில் எழுதும் எழுத்து முறை மையெழுத்து.

அதற்காக பனையோலைகளை அளவாக வெட்டியதுமே அதில் எழுதிவிட முடியாது. கீறல் எழுத்து எழுத முதலில் பதப்படுத்தப்பெற்ற வெள்ளோலைகளைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ஓலைகளின் மேற்புறம் எழுத்தாணியால் எழுதுவதற்கேற்ப அமையும். பதப்படுத்தாமல் எழுதினால் ஓலைகளில் உள்ள நரம்புகள் சேதமடையும்.

பதப்படுத்துவதற்கு சில முறைகள் இருக்கின்றன. ஓலைகளை நீராவியில் வேக வைத்தல்; ஓலைகளை அதிகம் காயாத வைக்கோல்போரினுள் வைத்தல்; தண்ணீர் அல்லது பாலில் ஓலைகளை வேக வைத்தல்; ஓலைகளின் மேல் நல்லெண்ணெய் பூசி பதப்படுத்துதல்; ஈர மணலில் ஓலைகளைப் புதைத்து வைத்தல்; மண்ணில் புதைக்கப்பட்ட ஓலைகளை நான்கைந்து நாட்களுக்குப் பின் சுத்தம் செய்து தானியங்கள் பாதுகாக்கும் குதிரினுள் நெல்லுடன் வைத்தல்; மஞ்சள்நீர் அல்லது அரிசிக் கஞ்சியுடன் ஓலைகளை அரை அல்லது ஒரு நாழிகை வேக வைத்தல்...

இவற்றில் காஞ்சி கடிகையில் பெரும்பாலும் நீராவியில் வேக வைத்தல் முறையை கடைப்பிடிக்கிறார்கள் என்பது கரிகாலனுக்குத் தெரியும். அன்றும் அதுவேதான் நடந்துகொண்டிருந்தது.

தங்கம், பித்தளை, தாமிரம், இரும்பு, தந்தம், எலும்பு ஆகியவற்றாலான மடக்கெழுத்தாணி, குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி ஆகிய எழுத்தாணிகளில் எலும்பாலான மடக்கெழுத்தாணியையே அங்கிருந்த மாணவர்கள் பயன்படுத்தினர். மரம் அல்லது தந்தத்தாலான பிடியுடன் எழுதுவதற்கு சுலபமாக இந்த மடக்கெழுத்தாணியே இருக்கும்.

இப்படி வெள்ளோலைகளில் எழுதப்பெற்ற எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய இன்னொருபுறத்தில் சிலர் மையாடல் செய்து கொண்டிருந்தனர். அதாவது வெள்ளெழுத்தின் மீது மை தடவுதல்.

பூஜை அறையில் வைக்கப்படும் மகாபாரதம், ராமாயணம் மாதிரியான சுவடிகள் எனில் மஞ்சள் அல்லது வசம்பு அரைத்து அந்த மையைத் தடவுவார்கள்.படிப்பதற்கான சுவடிகள் எனில், மணித்தக்காளிச் சாறு, கோவையிலைச் சாறு, ஊமத்தையிலைச் சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒரு சாறுடன் மாவிலைக்கரி, தர்ப்பைப்புல் கரி, விளக்கெண்ணெயில் ஏற்றப்பட்ட விளக்குக் கரி ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு கரியைச் சேர்த்துத் தடவுவார்கள்.

இப்படிச் செய்தால்தான் எழுதப்பட்ட எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும். பூச்சி, பூஞ்சைக் காளானும் நெருங்காது.ஏற்கனவே, தான் பார்த்ததுதான் என்றாலும் யாருக்கும் எந்த சந்தேகமும் எழக் கூடாது என்பதற்காக இவற்றை எல்லாம் வியப்புடன் பார்ப்பவன் போல் கண்டுவிட்டு மெல்ல சுவடிகள் வைக்குமிடம் நோக்கி கரிகாலன் சென்றான்.

பிரபஞ்சத்தில் வெப்பமண்டல நாடுகளில் உள்ள சுவடிகள்தான் வேகமாக அழிவுக்கு உள்ளாகும் என்பது அனுபவரீதியாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மாறுபட்ட தட்பவெப்ப நிலையில் சுவடிகள் விரிந்து சுருங்குமல்லவா..?

எனவே, மரம் அல்லது தந்தத்தாலான ஜாடிகளுக்குள் சுவடிகளை காற்றுப்புகாதபடி பாதுகாப்பார்கள். முக்கியமான சுவடிகள் பித்தளை, தாமிரம், தந்தம் ஆகியவற்றாலானதால் பட்டாடைகள் சேர்த்து அலங்கரிப்பார்கள்.

தூசு, ஒளி, காற்றிலுள்ள ஈரம் மற்றும் வெப்பநிலை சுவடிகளைத் தாக்காமல் இருக்க பட்டு அல்லது பருத்தித் துணிகளால் கட்டி வைக்கும் வழக்கமும் உண்டு. இதுதவிர முக்கியத்துவம் வாய்ந்த சுவடிகளை மான் தோலினால் சுற்றுவார்கள் அல்லது மற்ற விலங்கின் தோலினாலான பைகளில் அடைத்து வைப்பார்கள்.

காஞ்சி கடிகையில் இந்த முறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றன. சகலத்தையும் நிலவறையில் வைப்பார்கள் என்பதால் அதை நோக்கி கரிகாலன் சென்றான்.யாரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்தபின் நிலவறைக்குள் இறங்கினான்.இறங்கியவனை வரவேற்கும் விதமாக அவன் முகத்தில் குத்து விழுந்தது!சுதாரித்து நிமிர்ந்த கரிகாலனை நான்குபேர் சுற்றி வளைத்தார்கள்!

டெங்கு அச்சம் வேண்டாம்!

பப்பாளி இலைச்சாறு, நிலவேம்புச் சாறு உட்பட பல்வேறு முக்கியமான மூலிகைகள்கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்ட மருந்து Clevira Tabs/Syrup. நாடெங்கும் டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடும் சூழலில் நம் உயிர்காக்கும் அருமருந்தாய், அமுதமாய் வந்திருக்கும் கிளேவிராவை எடுத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வரும். ரத்தத்தின் தட்டணுக்கள் எண்ணிக்கை (Platelet Count) அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். உடல் ஆரோக்கியமாகும். apexlab நிறுவனம் இந்த மாத்திரை மற்றும் சிரப்பை வெளியிட்டுள்ளது.

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்