சர்கார்



தீவிரவாதிகளையும் குடிநீர்க் கொள்ளையையும் தட்டிக்கேட்ட விஜய், இந்தத்தடவை ‘சர்காரி’ல் சுளுக்கெடுப்பது தேர்தல் முறைகேடுகளை.ஓட்டுப்போட வேண்டிய ஒரே காரணத்திற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் கார்ப்பரேட் சிஇஓ விஜய். ஓட்டுப்போட்டு விட்டு அழகாக திரும்ப வேண்டிய அவசியத்தில் வருகிறவருக்கு அதிர்ச்சி.

அவரின் ஓட்டை இன்னொருவர் போட்டுவிட கோபத்தின் உச்சிக்குப் போகிறார். தன்னையே ஏமாற்றி விட்டார்கள் என்ற ஆத்திரம் வர சூடேறுகிறார். நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் ஏறுகிறார். முழு தேர்தலுக்கே தடை வாங்கி அரசியல்வாதிகளுக்கு சவால் விடுகிறார். உடன் தமிழகத்தின் சூழல், வறுமை, நிர்வாகப் பிரச்னைகள் என பலவற்றை உணர்ந்த விஜய் அனலாகிறார். அவரது அடுத்த கட்ட காய் நகர்த்தலில் அரசியல் எதிரிகளை சாய்த்தாரா? என்பதே பரபர திரைக்கதையின் மீதிக்கதை.

சுந்தர் ராமசாமியாக அழகும், திறமையும் கொண்டு மேனரிசத்தில் அள்ளுகிறார் விஜய். விறைப்பும், முறைப்புமாக கேரக்டருக்கு அட்டகாசமாக உயிர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அரசியல் வில்லன்களை கடுப்பேற்றும் ஒவ்வொரு தருணமும் இதுவரை பார்க்காத உடல்மொழி.

அத்தனை அராஜகப் போக்கை பின்பாதியில் ஆவேசமாகப் புரட்டி எடுக்கிறார். அவருக்காகவே கட்டிய கதையில் மின்னுகிறது முருகதாஸின் இயக்கம்.குறைவான நேரமே வந்தாலும் கீர்த்தி நெஞ்சை அள்ளுகிறார். விஜய்யை நெருங்கி, நெருங்கி நட்பு வளர்ப்பதெல்லாம் பரபரப்பு அரசியல் கதையில் இதம், பதம்.

அயல் தேசத்திலிருந்து அப்பாவுக்கு அலைபேசியில் அரசியல் வகுப்பெடுக்கும் வரலட்சுமி ஊருக்கு வந்தவுடன் திரைக்கதை வேகம் பிடிக்கிறது. வார்த்தை குறைத்து, மிடுக்கில் வெளியே வருகிறார் அவர்.

முதலமைச்சராக அத்தனை பொருத்தமாக பழ.கருப்பையா. கூட்டத்துக்கு வந்த விஜய்யிடம் பொரிந்து தள்ளிவிட்டு திரும்புவது அவ்வளவு எதார்த்தம். பக்கத்திலேயே இருந்து பக்குவ நடிப்பு தருகிறார் ராதாரவி. நிறைய இடங்களில் அனுபவம் பேசுகிறது.

சூடு பறக்கும் அரசியல் களத்தில் யோகி பாபுவின் காமெடி கலகல. ஹீரோயிச பின்னணியில் மாஸ் கூட்டுகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. ‘ஒரு விரல் புரட்சி’, ‘சிம்டாங்காரன்’ பாடல்கள் வீறு நடை.கிரிஷ் கங்காதரனின் கேமரா வேகமும், பரபரப்புமாக படத்திற்கு ஃப்ரெஷ் லுக் தருகிறது. ராம் - லட்சுமணனின் மேற்பார்வையில் அதிரடி சண்டைக்காட்சிகளில் குத்தி எடுக்கிறார் விஜய்.

சாமர்த்தியமான எடிட்டிங்கில் ஆழம் காட்டுகிறார் ஸ்ரீகர் பிரசாத். ‘‘இங்கே பிரச்சினைகளுக்குத் தீர்வு தேவையில்லை. இன்னொரு பிரச்சினைதான் தேவை...’’, ‘‘நீ கார்ப்பரேட் கிரிமினல்னா, நான் கருவிலேயே கிரிமினல்...’’ என வரலட்சுமி மோதும் இடங்களில் ஷார்ப் காட்டுகிறது ஜெயமோகன் - முருகதாஸ் வசனக் கூட்டணி. அனைத்து தரப்புக்குமான அரசியல் ஆக்‌ஷன் ‘சர்கார்’.

குங்குமம் விமர்சனக்குழு