ஹோம் அக்ரி 32



ஜெர்மனியில் தோன்றிய இயற்கை உயிராற்றல் வேளாண்மை!

நாம் இதுவரை பார்த்த நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ‘ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு’ என்ற முறையைச் சார்ந்தவை. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது குறைந்த செலவில், நமக்கும், சுற்றுச் சூழலுக்கும், பயிர்களுக்கும், தோட்டத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சரியான பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு முறை. இதில் பொது அறிவையும், சரியான வளர்ப்பு முறைகளையும் பயன்படுத்தி தொடர் கண்காணிப்பால் பயிர்களை நோய் மற்றும் பூச்சிகளிலிருந்து காக்கிறோம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையின் முக்கியமான அம்சங்கள்:

பூச்சிகளின் குறைந்த பட்ச எண்ணிக்கை: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் நாம் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மட்டுமே முனைகிறோம். மொத்தமாக அழிக்க முயல்வதில்லை. குறைந்த பட்ச அளவுகளில் பூச்சிகளின் எண்ணிக்கை இருக்கும்போது சேதாரம் தாங்கிக்கொள்ளக் கூடிய அளவிலேயே இருக்கும்.

மொத்தமாக அழிக்க எண்ணும் போது பூச்சிகள் மிகக்குறைந்த அளவில் இருக்கும்போது, அவை மருந்துகளை எதிர்க்கும் தன்மையைப் பெற்று விடுகின்றன. குறிப்பாக ஒரே வகையான பூச்சிமருந்துகளை பயன்படுத்தும்போது அந்த மருந்தினை எதிர்த்து வாழ்வதற்கான சக்தியைப் பெறுமாறு மரபணு மாற்றங்கள் நடைபெறுகின்றன.

அதனால் மொத்தமாக அழிக்கும்படி நாம் பூச்சி மருந்து அடிக்கக்கூடாது. மேலும் நம்மை பாதிக்காத அளவிலான எண்ணிக்கையில் இருக்கும் போது, அவைகளை அழிக்கக்கூடிய நன்மை தரும் பூச்சிகளின் வருகை தானாக நிகழும். இந்த நன்மை தரும் உயிரினங்களை நிலத்தில் தக்க வைக்கவும் நாம் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பூச்சிகளை அழிக்காமல் இருக்க வேண்டும்.

வருமுன் காக்கும் முறைகள்: எதிர்ப்பு சக்தி நிறைந்த சரியான வகையை தேர்ந்தெடுப்பது, நோய் அல்லது பூச்சியால் பாதிக்கப்பட்ட செடியை அகற்றி அழிப்பது, நோய்களை தடுக்கக்கூடிய பாக்டீரியா மூலமாக விதை நேர்த்தி செய்வது, நன்மை தரும் சிலந்தி போன்ற பூச்சிகளை வளர்ப்பது, சரியான ஊட்டத்தினால் செடிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்படி செய்வது போன்ற நல்ல பயிர் வளர்ப்பு முறைகளால் பெரும்பாலான நோய்களிடமிருந்து செடிகளைப் பாதுகாக்கலாம்.

இந்த பழக்கங்களினால் பூச்சி மருந்துகள் உபயோகம் பெருமளவில் குறைகிறது.  

கண்காணிப்பு: நோய்த்தாக்குதல்களையும், பூச்சிகளின் வருகை மற்றும் எண்ணிக்கையையும் தினசரி கண்காணிப்பது அவசியம். மஞ்சள் ஒட்டும் அட்டை போன்ற முறைகளாலும், நேரடியாக செடிகளை பார்வையிடுவதன் மூலமாகவும் இதை செய்யலாம்.
நோய்களும், பூச்சித் தாக்குதல்களும் ஒருசில சாதகமான தட்ப வெப்ப சூழலில் திடீரென வெளிப்படுகின்றன. இந்த சமயத்தில் உடனடியாக நாம் செயல்படும்போது எளிதில் தடுத்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த கண்காணிப்பு அவசியமாகிறது.

நேரடி தடுப்பு முறைகள்: தடுப்பான்களை அமைப்பது, கையால் பாதிக்கப்பட்ட செடிகளை களைந்து அழிப்பது, ஒட்டும் அட்டை, ஒளிக்கவர்ச்சி, இனக்கவர்ச்சி பொறிகளை அமைப்பது, உழுது விடுவது, அதிக அழுத்த நீர்த்தெளிப்பான்களை உபயோகப்படுத்துவது போன்ற முறைகளால் கட்டுப்படுத்துவது நமது முதல் தேர்வாக இருக்கும்.

உயிரியல் முறைகள்: சிலந்தி, சில வண்டுகள், தேனீக்கள் போன்ற நன்மை தரும் உயிரினங்களை வளர்த்து பாதுகாப்பது, டிரைக்கோடர்மா, பேசில்லஸ் போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்களை உபயோகப்படுத்துவது போன்ற இந்த வகைகள் முதலாவது தேர்வோடு கூடவே பயன்படுத்தக்கூடியவை. இந்த தேர்வு செலவு குறைவானது மற்றும் திறனானது.

மிகக்கவனமாக பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்துவது: இயற்கை பூச்சி மருந்துகளாக இருந்தாலும் இவைகளை பயன்படுத்துவது நமது கடைசியான தேர்வாகவே இருக்கும். பூச்சி மருந்து பிரயோகம் பெரும்பாலும் நமக்கு பாதகமாகவே அமைகிறது. இதனால் அடுத்த தலைமுறை பூச்சிகள் மேலும் திறன் மிக்கவையாக ஆகின்றன.

இந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தும் போது நமக்கும் குறைவான செலவும், பாதுகாப்பான உணவும் கிடைக்கிறது. இந்த முறைகள் வீட்டுத்தோட்டத்திற்கும், பெரும் வணிகரீதியான தோட்டங்களுக்கும் பொருந்தும். இனி நாம் ‘Bio-dynamic’என்ற ஜெர்மனியில் தோன்றிய ‘இயற் கை  உயிராற்றல் வேளாண்மை’ பற்றி பார்ப்போம்.

இந்த முறை பெருமளவில் நம் பாரம்பரிய பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தைப் போலவே உள்ளது. கோள்களின் சக்தி, விலங்குகளின் உயிறாற்றல் சக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முறையாக 1922ல் ருடால்ப் ஸ்டைனர் என்பவரால் அறிமுகப்பட்டது.

அதிகப்படியான ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்திய விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைச்சல் குறைந்து கொண்டே வருவதையும், செலவு அதிகரித்துக்கொண்டே போவதையும் பற்றி இவரிடம் முறையிட, இந்த முறையை இவர் அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

இந்த முறையில் சில இடுபொருட்களைத் தயாரித்து மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தும் போது, நிலங்கள் இயற்கை சக்தியை பெருமளவில் பெற்று இரசாயனங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு நல்ல விளைச்சலை தருவதாக இருக்கிறது.

இதுவும் ஒரு இயற்கை விவசாய முறைதான். இப்போது உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்த முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உலக அளவிளான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த முறையில் வளர்க்கப்பட்டு, சான்றிதழ் பெற்ற விளைபொருட்களுக்கு விசேஷமான விலையும் கிடைக்கிறது. தமிழ் நாட்டின் கொடைக்கானல் பகுதியில் சில விவசாயிகளால் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்த முறையில் பயன்படுத்தப்படும் இடுபொருட்கள் வித்தியாசமானவை. மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தக்கூடியவை. கொம்பு சாண உரம்: இதில் கன்று ஈன்ற நல்ல ஆரோக்கியமாக இருந்த பசுமாட்டின் கொம்பு தேவைப்படுகிறது. இந்த வகையான கொம்புகளில் சிலவற்றை சேகரித்துக் கொள்ள வேண்டும். கொம்பின் கூரிய பகுதி திடமானதாக இருக்கிறதா என்று பார்க்கவும்.

காளை மாடுகளின் கொம்பு களில் திடப்பகுதி இருக்காது. மேலும் கொம்பின் அடிப்பகுதியில் இருக்கும் வளையங்களின் மூலம் எத்தனை கன்றுகளை ஈன்றிருக்கிறது என்பதும் தெரிந்து விடும். பசுமாட்டின் கொம்பு பிரபஞ்ச சக்தியை சரியாக ஈர்ப்பதாகவும், மண்ணில் இருக்கும் சத்துகளை ஈர்ப்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இந்த கொம்புகளில் இப்போது பால்கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பசுமாட்டின் சாணத்தை நிரப்ப வேண்டும். பின்னர் இந்த கொம்புகளை மண்ணில் தோண்டப்பட்ட ஒன்றரை அடி ஆழமான குழியில் அடிப்புறம் கீழே இருக்குமாறு வைத்து மண்ணால் குழியை மூடிவிடவேண்டும்.

புதைப்பதை கீழ்நோக்கு நாட்களில் மட்டுமே செய்யவேண்டும். வெப்பமான பகுதியென்றால் நான்கு மாதத்திற்குப் பிறகும், குளிரான பகுதியென்றால் ஆறு மாதத்திற்குப் பிறகும் இதை வெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

கொம்பிற்கு உள்ளே இருக்கும் சாணம் நன்றாக மக்கி குருணை குருணையாக மாறி இருக்கும். இதை ஒரு பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த கொம்பு சாணத்தை ஒரு ஏக்கருக்கு 25 கிராம் மட்டுமே நீரில் கலந்து உபயோகிப்பது போதுமானது. நிலம் இழந்த உயிராற்றலை இது மீட்டுத்தரும். இதோடு கூட கொம்பு சிலிக்கா மற்ற மூலிகை மருந்துகளை உபயோகிக்கும் போது கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன.

Q & A

செடிகளில் கரையான் தொல்லையை தவிர்க்க என்ன செய்யலாம்?

- வெங்கடேசன், சிவகங்கை.

பொதுவாக இறந்த செடிகளைத்தான் கரையான் தாக்கும். கரையான் எளிதில் அதன் உணவுகளை ஜீரணிக்கக் கூடியது; சில சமயங்களில் மிகவேகமாகப் பெருகி பெரும் சேதாரத்தை உண்டுபண்ணக்கூடியது. நெல் வயல்களில் பெருகும் சில கரையான்கள் ஒரு வாரத்தில் ஒரு ஏக்கர் பயிரை முழுவதுமாக வெட்டி அவைகளின் கூட்டுக்கு கொண்டு செல்லக் கூடியவை. கரையான்கள் வராமல் பாதுகாத்துக்கொள்வது நலம்.

அதிக அளவில் பெரும் சேதாரத்தை உண்டுபண்ணக்கூடிய கரையான்களை இயற்கை முறையில் அழிப்பது கடினம். ஆரம்பகாலத்தில் தவிர்க்க எருக்க இலைச்சாறை உபயோப்படுத்தலாம். இது நன்றாக வேலை செய்யும். சில கரையான்களுக்கு வேப்பங்கொட்டை சாறும் கேட்கும்.

எனது வீட்டின் செம்பருத்தி செடியில் வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் மாவுப்பூச்சி போன்று ஒன்று இருக்கிறது. இது மொத்த செடிக்கும் பரவி ஒரு பூ கூட பூக்கவிட மறுக்கிறது. பூ மொக்குகள் தோன்றிய மறுநாளே மொத்தமாக ஆக்ரமித்துக்கொள்கிறது.

நீங்கள் சொல்லிய மூலிகை பூச்சிவிரட்டியை உபயோகித்தும் போகவில்லை. என்ன செய்யலாம்?
- செங்கமலம், மன்னார்குடி.

ஈரமான சூழலில் இது ஏற்படும். மிக அதிகமான தாக்குதலில் மூலிகை பூச்சிவிரட்டி வேலை செய்யாது. பூச்சி விரட்டிக்கும் பூச்சி கொல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதிகமான தாக்குதலில் நீங்கள் பூச்சி கொல்லியை பயன்படுத்த வேண்டும். இதற்கு இரண்டு முழு பூண்டை எடுத்து, இடித்து இரண்டு லிட்டர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இதை வடிகட்டி, இரண்டு ஸ்பூன் பாத்திரம் கழுவும் விம், இரண்டு ஸ்பூன் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் (எரித்த எண்ணெயும் உபயோகப்படுத்தலாம்) இவற்றோடு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை அப்படியே கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். ஒரு வாரத்தில் எல்லாமே அழிந்துவிடும். தேவைப்பட்டால் இன்னொருமுறை தெளிக்கலாம். இந்த மருந்தில் எந்த விதமான மாவுப்பூச்சியும் அழிந்து விடும்.

(வளரும்)

 மன்னர் மன்னன்