தல புராணம்



மெட்ராஸ் ரிக்கார்டு ஆபீஸ்

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் எல்லோருக்குமே தெரிந்த அடையாளம். ஆனால், இதன் எதிரே நூற்றாண்டைக் கடந்து அமைதியாக வீற்றிருக்கும் அந்தச் சிவப்பு வண்ண அலுவலகத்தைப் பார்த்திருப்போமா?

மரங்கள் சூழ அமைந்திருக்கும் மெட்ராஸ் ரிக்கார்டு ஆபீஸ் என ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு இப்போது வயது 109. ஆனால், உண்மையில் இது செயல்படத் துவங்கி முந்நூற்று ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன! ஆம்; 1639ம் வருடம் ஆங்கிேலயர்கள் இங்கே காலூன்றியதில் இருந்தே எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்தி வந்துள்ளனர்.

பூந்தமல்லியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து பிரான்சிஸ் டே மெட்ராஸைப் பெற்றபோது போட்ட ஒப்பந்தம், பின்னர் கம்பெனிக்கு அவர் எழுதிய கடிதங்களை, ‘Vestiges of old Madras’ நூலில் கர்னல் லவ் தந்துள்ளார். மட்டுமல்ல. ஆரம்பத்தில் நடந்த கொலைச் சம்பவங்களைக் கூட பதிவு செய்துள்ளனர்.

தவிர, 1680ம் வருடம் கோட்டையில் புனித மேரி ஆலயம் கட்டப்பட்டதும் பிறப்பு, இறப்பு, திருமண நிகழ்வுகளும் அங்கே பதிவு செய்யப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன. இதிலிருந்து அன்று ஆவணங்களை எவ்வாறு பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்தனர் என்பதை அறியலாம்.

1672ம் வருடமே ஆவணங்களைப் பத்திரமாகப் பராமரிக்கும் முறை ஏற்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையகம் முதன்முதலாக சர் வில்லியம் லாங்ஹோர்ன் என்பவரை மெட்ராஸ் கவர்னராக நியமித்தது. இவரே, அரசின் கடிதப் பரிவர்த்தனைகள், அறிக்கைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியவர்.

இதற்கிடையில் 1670ல் லண்டனிலுள்ள கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர்களிடம் இருந்து வரும் ஆலோசனைகளும், கடிதங்களும் மற்றும் இங்கிருந்து அங்கே அனுப்பப்படுபவைகளும் பாதுகாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இதன்பிறகு, வந்த ஸ்டேரேன்ஷாம் மாஸ்டர் காலத்தில் இன்னும் முன்னேற்றம் கண்டது. ஆவணங்கள் எல்லாம் கோட்டையிலிருந்த கவுன்சில் ஹவுஸில் பாதுகாக்கப்பட்டன.

18ம் நூற்றாண்டில் ஆவணங்கள் அதிகரிக்க இதற்கெனத் தனியிடமே தேவைப்பட்டது. 1803ம் வருடம் மெட்ராஸின் கவர்னராக வந்த லார்டு வில்லியம் பென்டிங்கின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியது. இதனால், 1805ம் வருடம் ஒவ்வொரு துறையிலிருந்தும் வரும் அனைத்து ஆவணங்களையும் ஒரு பொதுவான இடத்தில் வைத்து பராமரிக்கும்படி செய்தார்.

இப்படியாக கவுன்சில் ஹவுஸின் வடக்குப்பக்கமாக இருந்த இடத்திற்கு ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது துபாஷாக (இருமொழிகள் தெரிந்தவர்) இருந்த முத்தையா என்பவர் ஆவணக் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 1837ம் வருடம் சிவில் சர்வீஸில் பணியாற்றி வந்த ஜார்ஜ் கேரோவ் என்பவரை ஆவணங்களை ஆய்வுசெய்து ஒழுங்குபடுத்தும்படி அரசு நியமித்தது. இவர், தேவையில்லாத ஆவணங்களை நீக்கிவிட்டு, முக்கியமானவற்றை மட்டும் பத்திரப்படுத்தினார். அதிக வேலைப்பளுவால் 1677ம் வருடம் முதல் 1710ம் வருடம் வரை உள்ள ஆவணங்களை மட்டும் இவரால் ஆய்வு செய்ய முடிந்தது.

இவருக்குப்பின், வில்லியம் ஹடில்ஸ்டன் என்பவர் சிறிதுகாலம் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இவராலும் பெரிதாகச் செய்ய முடியவில்லை. பின்னர், 1860ம் வருடம் மெட்ராஸ் மாகாணக் கல்லூரியின் (சென்னை மாநிலக் கல்லூரி) பேராசிரியர் டால்பாய்ஸ் வீலர் இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர், 1670ம் வருடம் முதல் 1854ம் வருடம் வரை எல்லா ஆவணங்களையும் சரிசெய்து ஒழுங்குபடுத்தினார். இதனாலேயே, ‘Madras in the olden times’ என்ற மூன்று பாகம் கொண்ட நூல்களும், ‘Handbook to the Madras records’ கையேடும் அவரால் கொண்டு வர முடிந்தது.

இப்படியான சமயத்தில் ஆவணங்களைப் பாதுகாக்கும் பொருட்டு புது கட்டடம் கட்டும் எண்ணம் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. 1906ம் வருடம் கவர்னர் கவுன்சில் உறுப்பினர்கள் எழும்பூர் ரயில்நிலையத்தின் எதிரே புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட முடிவெடுத்தனர்.

அப்போது பொதுப்பணித்துறையில் பொறியியல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.எஸ்.டி ஹாரிஸ் இதற்கான திட்டத்தையும் வடிவமைப்பையும் செய்ததுடன், சுமார் 3 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கணக்கீடும் கொடுத்தார். இந்தத் தொகைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க, ஒப்பந்ததாரர் லோகநாத முதலியார் கட்டடத்தைக் கட்டினார்.

1907ம் வருடம் தொடங்கப்பட்டு 1909ல் முடிக்கப்பட்டது. இதுவே, இன்று எழும்பூரில் இருக்கும் ஆவணக் காப்பகத்தின் தோற்றம். அன்றிலிருந்து இன்று வரை ஆவணங்களைப் பராமரித்து பாதுகாத்து வருகிறது இந்த அலுவலகம். அப்போது இதற்கு, ‘மெட்ராஸ் ரிக்கார்டு ஆபீஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து பதிவுத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த சி.எம்.ஸ்மித் என்பவர் இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

முழுநேர அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழ, ‘curator’ அதாவது காப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி வந்த ெஹன்றி டோட்வெல் 1911ம் வருடம் காப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரே ஆவணக் காப்பகத்தின் முதல் காப்பாளர்.

இவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் சம்பளம் வழங்கப்பட்டது.இவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட சேகரமேனன் காப்பாளராக வந்த முதல் இந்தியர். தொடர்ந்து அடுத்தடுத்து வந்த காப்பாளர்களால் ஆவணக் காப்பகம் நன்கு வளரத் தொடங்கியது. இருந்தாலும், முனைவர் பி.எஸ்.பாலிகா என்பவர் காலத்திலேயே வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது.

கிட்டத்தட்ட இருபத்தி மூன்று ஆண்டுகள் காப்பாளராக இருந்தவர் பல்வேறு ஆவணங்களை வெளிக்கொணர்ந்தார். மட்டுமல்லாமல், சுதந்திரத்திற்குப் பிறகு நான்கு மாவட்ட ெகஜெட்டர்களையும் கொண்டு வந்தார். அதாவது, அந்தந்த மாவட்ட ரீதியாக அரசு சார்ந்த அனைத்து தகவல்களும் அடங்கிய அகராதி.

1942ம் வருடம் இரண்டாம் உலகப் போரின் காரணமாக எழும்பூரில் இருந்த ரிக்கார்டு ஆபீஸ் இன்றைய ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்றப்பட்டது. 1857க்குப் பிறகான ஆவணங்கள் எல்லாம் சித்தூரில் இருந்த சப்-கோர்ட் கட்டடத்திலும், வருவாய் கோட்ட அலுவலகக் கட்டடத்திலும் வைக்கப்பட்டன. அதற்கு முன்பான கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்கள் அனைத்தும் சித்தூர் அருகே உள்ள பலமனேறு என்ற ஊரின் பொதுப் பணித்துறை அலுவலகக் கட்டடத்தில் பாதுகாக்கப்பட்டன.

அன்று ரிக்கார்டு ஆபீஸிலிருந்த ஆவணங்கள் தினமும் தலைமைச் செயலகத்திற்கும், வருவாய் வாரியத்திற்கும் மற்ற துறைகளின் தலைமை இடங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம். சித்தூருக்கு மாற்றப்பட்டதால் தினமும் அனுப்ப முடியாத சூழல். ரயில்வே மூலம் அனுப்பினால் செலவு அதிகம். இதனால், காப்பாளர் பாலிகா ஒரு முடிவெடுத்தார்.

இதன்படி இரண்டுபணியாளர்கள் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவர் தினமும் காலை 8.30 மணிக்கு சித்தூரில் இருந்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு ரயிலில் மெட்ராஸிற்கு வருவார். எல்லாத் துறையிலும் ஆவணங்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் அதை இரவுக்குள் பெற்று மறுநாள் காலை 6 மணிக்கு சித்தூர் வந்து சேர்வார்.

அதேநேரம் இன்னொரு அலுவலர் ரயில்நிலையத்தில் தயாராக இருந்து இதே பணியைத் தொடர வேண்டும். இதனால், அரசிற்கு செலவினங்கள் குறைந்தன. பாலிகாவின் இந்தப் பணியைக் கண்டு மெச்சி, அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் லார்டு லின்லித்கோ இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளித்து கௌரவப்படுத்தினார்.

1950ம் வருடமே சித்தூரில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் எழும்பூர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன. பின்னர், 1968ம் வருடம் மெட்ராஸ் மாநிலம், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றமானதும் மெட்ராஸ் ரிக்கார்டு ஆபீஸும் தமிழ்நாடு ஆவணக் காப்பகமாக பெயர் மாறியது.

1973ம் வருடம் இந்த ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட்டார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. தொடர்ந்து தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை என பெயரிட்டு புதிதாகத் துறையின் தலைமைக்கு ‘கமிஷனர்’ என்ற பதவியையும் உருவாக்கினார்.

கூடவே, தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சிக் குழுவும் உருவாக்கப்பட்டது. இக்குழு உயர்கல்வித் துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் ஒன்று. இதன் நோக்கம் வரலாற்று ஆய்வுகளையும், ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்களையும் ஊக்கப்படுத்துவதே! இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் ஆய்வு மாணவர்களுக்கு ஃபெல்ேலாஷிப் வழங்கி வருகிறது.

1996ம் வருடம் இந்த ஆவணக் காப்பகம் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நவீன வரலாற்றின் ஆய்வு மையமாகவும் திகழ்கிறது. 2009ம் வருடம் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய தமிழ்நாடு ஆவணக் காப்பகம் வரலாற்றின் பொக்கிஷம்!

முக்கிய நூல்கள்

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் பல்வேறு முக்கிய நூல்களும், அறிக்கைகளும், குறிப்புகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மெட்ராஸ் பொது மருத்துவமனை உருவான விதம், மெட்ராஸ் கண் மருத்துவமனை, கால்நடைக் கல்லூரி அமைக்கப்பட்ட குறிப்புகள், சடங்குகள் சம்பந்தமான தகவல்கள், திருப்பதி கோயிலும் அங்கு வழிபடும் திருவுருவச் சிலையும், கோயில் வருமானம் பற்றி 1803ம் வருடம் வட ஆற்காடு மாவட்ட ஆட்சியரின் அறிக்கை, 1821ம் வருடம் நிகழ்ந்த சதி (உடன்கட்டை ஏறுதல்) தொகுப்பு, கட்டபொம்மன் தூக்குத் தண்டனை குறித்த பதிவுகள், ஆஷ் கொலை வழக்கு எனப் பல்வேறு ஆவணங்கள் உள்ளன.

1923ம் வருடம் ஆவணக் காப்பகத்தின் நூலகம் திறக்கப்பட்டது. இங்கே 1633ம் வருடம் வெளியான நூல் முதல் அரிதான குறிப்புகளும், பருவ இதழ்களும் இருக்கின்றன. தவிர, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1917 முதல் 1948வரை நடந்த விவாதங்கள், மெட்ராஸ் மேலவை நடைமுறைகள், தமிழ்நாடு சட்டசபை விவாதங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதனுடன் 1696ல் வெளியான அரிய பயண நூலான ‘VOYAGE TO SURATT’, மெட்ராஸ் மாகாண நிர்வாகத்தின் வருடக் குறிப்புகள், புதுக்கோட்டை, திருவிதாங்கூர், கொச்சின், மைசூர் போன்ற பகுதிகளின் நிர்வாக அறிக்கைகள், திப்புசுல்தானுடன் நடந்த போர் பற்றிய நூல், தென்னிந்திய நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய நூல், மாவட்ட கெஜட்டர்கள், இந்திய அரசின் சட்டங்கள், விதிமுறைகள் உள்ளிட்ட வரையறைகள் போன்றவையும் உள்ளன. இவையெல்லாம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பேராச்சி கண்ணன்

ராஜா