குளிக்க மினரல் வாட்டர் கேட்ட கேத்தரின் தெரசா!



இது பார்ட்-2 படங்களின் சீஸன்! அந்தவகையில் 39 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘நீயா’ படத்தின் இரண்டாவது பாகமாக ‘நீயா 2’ ரெடியாகியிருக்கிறது. ராய்லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி என கலர்ஃபுல் ஹீரோயின்கள் ஜிலீரென கலகலக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் எல்.சுரேஷ்.

‘‘இந்த ‘நீயா 2’ உருவாக காரணமே சன் டிவிதான்! நான் பாலுமகேந்திரா சாரின் உதவியாளன். இடதுசாரி சிந்தனையாளன். அட்வகேட். நாத்திகவாதி. கும்பகோணத்துக்காரன். மழைக்குக் கூட கோயில் பக்கம் ஒதுங்க விரும்பாதவன்.
அப்படிப்பட்டவன் பாம்புக் கதையை இயக்கறது தெரிஞ்சதும் நண்பர்கள் ஷாக் ஆகிட்டாங்க! நம்ம ஒவ்வொருத்தர் பெயர்லயும் உலக வங்கில கடன் இருக்குனு உணர்த்தின ‘எத்தன்’தான் என் முதல்படம். அதையடுத்து விஷ்ணு விஷாலை வச்சு, ‘கலக்குறே மாப்ளே’ இயக்கினேன். முக்கால்வாசி படம் முடிஞ்சது. சில காரணங்களால் அது டேக்ஆஃப் ஆகல.

அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகி சோஷியல் மெசேஜோடு ஒரு கதை ரெடி பண்ணி தயாரிப்பாளர்களைத் தேடினேன். கிட்டத்தட்ட மூணு வருஷ போராட்டம். யாரும் அதை தயாரிக்க முன்வரல.அந்த டைம்ல சன் டிவில ‘நாகினி’ ஒளிபரப்பாச்சு. அதுதான் டாக் ஆஃப் த ஸ்டேட்! அப்பதான் நாமும் பாம்புப் படம் பண்ணினா என்னனு தோணுச்சு. அந்த நொடியே உருவான ஸ்கிரிப்ட்தான் இந்த ‘நீயா2’ படம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.

‘நீயா’வோட தொடர்ச்சியா..?

முதல் பார்ட்ல பாம்பு பழிவாங்கும். இதுல பாம்புகள் யாரையும் பழிவாங்காது! ‘நீயா’ டைட்டில், பாம்புக்கதை, அதில் இடம் பெற்ற ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...’ பாடல் இந்த மூன்றையும் தவிர இந்த ‘நீயா 2’ல வேறெந்த ஒற்றுமையும் இல்ல. முழுக்க முழுக்க ஃப்ரெஷ்ஷான ஸ்கிரிப்ட். ரொமாண்டிக் த்ரில்லரா கொண்டு வந்திருக்கேன்.

ஹீரோ, ஜெய். மதுரைல வசிக்கற கோபக்கார இளைஞர், சாஃப்ட் வேர் பையன்னு ரெண்டு கெட்டப்ல வர்றார். டபுள் ஆக்‌ஷன் இல்ல. ராய்லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமினு படத்துல மூணு ஹீரோயின்கள். தவிர பாலசரவணன், லோகேஷ், சத்துனு பலரும் இருக்காங்க.
‘நெடுஞ்சாலை’ ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘சங்குசக்கரம்’ சபீர், படத்துக்கு இசையமைச்சிருக்கார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ இணைத்தயாரிப்பாளர் தர் சார் இதை தயாரிச்சிருக்கார்.

படத்துல மூணு ஹீரோயின்கள்... எப்படி சமாளிச்சீங்க?

ஈகோ, போட்டினு எதாவது பிரச்னைகள் வருமோனு ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா, அப்படி ஒரு சூழல் ஏற்படல. மூணு பேரும் இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் பண்ணினவங்க. அதனால அவங்ககிட்ட ஒர்க் வாங்கறது ஈஸியாகிடுச்சு. இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் எழுதும் போதே, ஒரு கேரக்டருக்கு ராய்லட்சுமி மைண்ட்ல வந்துட்டாங்க.

ஆரம்பத்துல சின்ன பட்ஜெட் படமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நல்ல தயாரிப்பாளர் அமைஞ்சதால, ஜெய், கேத்தரின், வரலட்சுமினு நல்ல ஆர்ட்டிஸ்ட்கள் அமைஞ்சிட்டாங்க. என் குருநாதர் பாலுமகேந்திரா சார் அடிக்கடி ஒரு விஷயத்தை சொல்லுவார், ‘ஒரு நல்ல கதை தனக்கான விஷயங்களை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்!’னு  இந்த ஸ்கிரிப்ட் அதை எனக்கு உணர்த்துச்சு. 

எல்லா ஹீரோயின்களுக்கும் தனித்தனியா ஸாங் இருக்கு. காம்பினேஷன் சீன்களும் உண்டு. சாலக்குடி, தலக்கோணம், கொடைக்கானல்ல ஷூட்டிங் நடந்திருக்கு. அங்கெல்லாம் நாங்க ஸ்பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனா, ‘ஆக்‌ஷன்’னு குரல் கொடுத்ததும் சட்டுனு மழை பெய்ய ஆரம்பிச்சிடும்!

சாலக்குடில பாட்டு சீன் எடுக்கிறப்ப ராய்லட்சுமி சின்ன காஸ்ட்யூம்தான் போட்டிருந்தாங்க. அங்க கொளுத்தின வெயில்ல அவங்க ஸ்கின் எல்லாம் சன் ஸ்ட்ரோக்ல பாதிக்கற மாதிரி ஆகிடுச்சு. அருவி பக்கம் இருந்த பாறைல வெயில் பட்டு, சுளீர்னு கொதிச்சது. இதையெல்லாம் பொருட்படுத்தாம பாறைல வெறுங்கால்ல நின்னு நடிச்சுக் கொடுத்தாங்க.  

வரலட்சுமியும் டெடிகேஷனான பொண்ணு. ஸ்பாட்டுக்கு அவங்க வந்தாலே கலகலனு இருக்கும். ஆனா, ‘டேக்’னு குரல் கொடுத்ததும், கேரக்டராகவே மாறிடுவாங்க. அப்படி ஒரு சின்ஸியர் பொண்ணு. கேத்தரின் தெரசா, நீச்சல் குளத்துல குளிக்கறதுக்கு மினரல் வாட்டர் கேட்டாங்களாமே?

இப்படி ஒரு வதந்தி எப்படி பரவிச்சுனே தெரியல. படத்துல கேத்தரினுக்கும் ஒரு ஸாங் இருக்கு. ஆனா, குளிக்கற காட்சிகளே படத்துல கிடையாது. அப்படி இருக்கிறப்ப எப்படி இப்படி தகவல்கள் வருதுனு புரியல. கேத்தரின் டைமிங் ஃபாலோ பண்ற பொண்ணு. காலைல ஆறு மணிக்கு ஷாட்னா, அவங்க ஐந்தரைக்கே வித் மேக்கப்போடு ஸ்பாட்டுக்கு வந்திடுவாங்க.

படத்தின் பெரும்பாலான காட்சி களை காட்டுக்குள்ளதான் ஷூட் பண்ணினோம். கேத்தரினுக்கு பாம்புனாலே பயம். ராய் லட்சுமியும், வரலட்சுமியும் தைரியமானவங்க. படத்துல கிராபிக்ஸுக்கும் முக்கிய பங்கு இருக்கு. ஹீரோயின்கள் ஒவ்வொருத்தரும் பாம்பாக உருமாறும் காட்சிகள் மிரட்டும்.

13 அடி நீளமுள்ள ஒரு ராஜநாகம் வரும் காட்சிகள்ல எல்லாம் ஆடியன்ஸ் மிரளுவாங்க. அதுக்காகவே பாங்காக் போய் நிஜ பாம்பை மாடலா ஷூட் பண்ணி கிராபிக்ஸ்ல பின்னியெடுத்திருக்கோம்.

விஷ்ணு, பிந்துமாதவி நடிச்ச ‘கலக்குறே மாப்ளே’ மறுபடியும் டேக் ஆஃப் ஆகுமா?

அந்தப் படத்து தயாரிப்பாளர் ‘கலக்குறே மாப்ளே’வையும், கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘சிப்பாய்’படத்தையும் ஒரே நேரத்துல தயாரிச்சார். சில சூழல்களால அப்படியே டிராப் ஆச்சு. இப்ப மறுபடியும் விஷ்ணுகிட்ட பேசிட்டிருக்கோம். விரைவில் அதோட படப்பிடிப்பு ஆரம்பிச்சாலும் ஆச்சரியமில்ல.

மை.பாரதிராஜா