நியூஸ் வியூஸ்



இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!

ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்...

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.தேர்வுத் தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வி:

“திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?”இதற்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு எழுதுபவர் தேர்வு செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருந்த நான்கு பதில்கள் :

இ.வெ.ராமசாமி நாயக்கர்

ராஜாஜி

காந்திஜி

சி.என்.அண்ணாதுரை

தந்தை பெரியாரின் இனிஷியலில் இடம்பெறும் ‘ஈ’ என்பது ஈரோட்டைக் குறிக்கும். அதையேகூட கேள்வித்தாள் தயாரித்த மேதாவி அதிகாரிகள் ‘இ’ என்று தவறாகக் குறிப்பிட்டதைக் கூட விட்டுவிடலாம்.
ஆனால் - பெரியாரின் பெயருக்குப் பின்னால் அவரது சாதியைக் குறிப்பிட்டிருப்பதுதான் தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.தந்தை பெரியார் யார் என்பதை உணர்ந்தவர் யாவருமே உள்ளம் கொதித்துப் போய்விடக்கூடிய அடாத செயல்பாடு இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் சாதிய இறுக்கத்தில் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்த சூழலில் பிறந்தவர் தந்தை பெரியார். 94 வயதில், தான் இறுதிமூச்சை விடும் நொடி வரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மிகவும் கடுமையாக விமர்சித்து, சாதியை விட்டொழிக்க வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை நடத்தி வந்தவர்.

அவர் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் சாதி ஒழிப்புச் சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.தந்தை பெரியார், சாதி ஒழிப்பு லட்சியத்துக்காகவே கடவுளை, மதத்தை எதிர்க்கும் கடுமையான நிலைப்பாட்டுக்குச் சென்றார்.

“அவருக்கு முன்பான தலைவர்களில் இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களே சாதியமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் செயல்பட்டவர்கள். பெரியார்தான் சாதிஒழிப்பைப் பேசிய ஒடுக்கப்பட்டோர் அல்லாத முதல் தலைவர்...” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிடுகிறார்.

பெரியார், ஈரோட்டில் விவசாயிகளும் வியாபாரிகளும் நிறைந்த இடைநிலைச் சாதியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஈரோட்டிலேயே வணிகத்துக்கு பிரசித்தி பெற்றிருந்த பணக்காரக் குடும்பம். சிறுவயதிலிருந்தே சாதிரீதியிலான ஒடுக்குதலை அவர் எதிர்கொண்டதில்லை.

தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் ஒருமுறை கோபித்துக்கொண்டு காசிக்குச் செல்கிறார். தான் பிறந்த சாதியின் காரணமாக அங்கே சில அவமானங்களை எதிர்கொள்கிறார். சாதி ஒரு கொடிய நோய் என்கிற புரிதலை அச்சம்பவங்கள் அவருக்கு ஏற்படுத்துகின்றன.

இங்கே நீதிக்கட்சி வலுப்பெற்று திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எல்லாம் பெரியார், முற்போக்குப் பிரச்சாரங்கள் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அவர் ஈரோட்டின் நகராட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பொதுவான மக்கள் சேவையில்தான் ஈடுபட்டிருந்தார். அதன் மூலமாக கொங்குப் பகுதியில் மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக உருவெடுத்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தந்தை பெரியாரை தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டது. தீண்டாமைக்கு எதிராக கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் தலைமை தாங்கிப் போராட பெரியாரைப் பணித்தது.

‘வைக்கம் கோயில் கதவுகள் ஒடுக்கப்பட்டோருக்கும் திறக்கப்பட வேண்டும்’ என்று களமிறங்கிய பெரியாரை நசுக்க அன்றைய திருவாங்கூர் அரசாங்கம் சாம, பேத, தான, தண்டங்கள் அத்தனையையும் பயன்படுத்தி தோல்வியடைந்தது.வைக்கம் வீரராக பெரியார் பெற்ற வெற்றி, இந்திய வரலாற்றிலேயே சமத்துவத்துக்கான போராட்டங்களுக்கு சரியான பாதையை அடையாளம் காட்டியது.

எனினும், பெரியாரின் வழிமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு சில பிரச்சினைகள் இருந்தன. ‘சத்தியாக்கிரகம்’ மாதிரியான அகிம்சை முறை போராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான மென்மையான எதிர்ப்பு ஆகியவை காங்கிரஸுக்கும், பெரியாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தின.

இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார் பெரியார். காங்கிரஸார், தங்கள் அடையாளமாக வெள்ளைச்சட்டை அணிய, பெரியாரோ தன்னுடைய தொண்டர்களை கறுப்புச்சட்டை அணியச் சொன்னார்.

1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு நகரில் பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முதன்முறையாக சுயமரியாதை மாநாடு நடத்தினார். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ப.சுப்பராயன், இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.தமிழக அரசியலில் பெரியார் என்ன செய்யப் போகிறார் என்பதற்கான கொள்கை விளக்க அறிவிப்புகள், அம்மாநாட்டில்தான் தீர்மானங்களாக வரையறுக்கப்பட்டன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், மதம் மற்றும் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு குறித்தும் பேசினார்கள். சுயமரியாதைத் திருமணத்துக்கு ஆதரவாகவும், விதவை மறுமணத்தை ஊக்குவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் பங்களிப்பு செய்த மாநாடு அது. இந்த மாநாட்டின் விளைவாகவே திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாலு கால் பாய்ச்சலில் அமைந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் பேசியதை, சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ திரைப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.“ஒரு சமத்துவ உலகத்தை நிர்மாணிக்கிறதுக்காக நான் உங்களையெல்லாம் அழைக்கிறேன். இனிமேல் இந்த சமூகத்துலே பிராமணன், சூத்திரன், பஞ்சமன்னு யாருமே இருக்கக்கூடாது.

அதனாலே.. இன்னையிலிருந்து நம்ம பேர்களுக்குப் பின்னாடி இருக்கிற சாதி அடையாளங்களை நாம எல்லாம் நீக்கிடறோம். ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஆகிய நான், இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!”பெரியார் இவ்வாறு முழங்கியதைத் தொடர்ந்து, மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பெயருடன் இருந்த சாதி அடையாளத்தை மேடையிலேயே துறந்தார்கள்.

அவ்வாறாக தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தந்தை பெரியார் துறந்த சாதிப்பட்டத்தைத்தான் தமிழ்நாடு தேர்வாணையக் குழு அதிகாரிகள், மீண்டும் அவரது பெயரோடு சேர்க்கும் முயற்சியை குரூப்-2 தேர்வு வினாத்தாள் மூலமாகச் செய்திருக்கிறார்கள்.

சாதியைக் கடந்து வரும் தமிழகத்தின் முற்போக்கு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, மீண்டும் ஓர் நூற்றாண்டுக்கு முந்தைய சாதிய, சனாதன அடக்குமுறை நிலையை ஏற்படுத்த விரும்பும் விஷமனம்தான் இவ்வளவு வக்கிரமாக சிந்தித்திருக்க முடியும்.

பெரியார் மறைந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்துக்கு தமிழக அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. இதற்குக் காரணமான கறுப்பு ஆடு யார் என்பதையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதே சரியான செயல்பாடு ஆகும்.

யுவகிருஷ்ணா