மிஸ்டர் வேர்ல்டு ஆப்!



பாலிவுட்டின் புது ரோமியோ ரோஹித் கண்டெல்வால். சிக்ஸ் பேக் உடற்கட்டு, ஆறடி உயரம், மாடல், தொலைக்காட்சி ஆளுமை, நடிகர், ஃபிட்னஸ் ஆலோசகர், மிஸ்டர் இந்தியா என நாலாப் பக்கமும் சிக்ஸர் விளாசும் உலக அழகன் இவர்.
ரோஹித் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே ஹைதராபாத்தில். 22 வயதில் நடிகனாக வேண்டும் என்ற கனவில் வேலையை உதறிவிட்டு மும்பையில் குடியேறினார். வாய்ப்புக்காக அலைந்துகொண்டிருந்த நேரத்தில் விளம்பரத்துறை அவருக்குக் கைகொடுத்தது.

ஆங்காங்கே இந்தி சீரியல்களிலும் தலைகாட்ட ஆரம்பித்தார். இத்தனைக்கும் இந்தி தெரியாத தென்னிந்தியர் இவர்!சினிமாவுக்காக சிக்ஸ் பேக் வைத்தவரை பாடி பில்டிங் துறை அரவணைத்துக்கொண்டது. 2015ல் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம். அதற்கு அடுத்த வருடமே இங்கிலாந்தில் நடந்த ‘மிஸ்டர் வேர்ல்டு’ போட்டியில் களமிறங்கி பார்வையாளர்களை மிரள வைத்தார்.

உலகம் முழுவதும் இருந்து 46 கட்டுடல் வேங்கைகள் பங்கேற்ற அப்போட்டியில், 30 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் ‘மிஸ்டர் வேர்ல்டு’ பட்டத்தையும் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையைத் தன்வசமாக்கினார் ரோஹித்.

புஜத்தை நிமிர்த்தி கட்டுடலை அப்படியும் இப்படியும் அசைத்து பட்டத்தை வெல்லும் போட்டியல்ல ‘மிஸ்டர் வேர்ல்டு’. ஃபேஷன் மீதான காதல், நுண்ணுணர்வு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனத்திறன், விளையாட்டு மற்றும் மல்டிமீடியா திறன் என சகல ஆளுமைத் திறன்களையும் நடுவர்கள் சோதிப்பார்கள். இவை அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து அந்தப் பட்டத்தை தட்டி வந்தவர் ரோஹித்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்த முதல் மிஸ்டர் வேர்ல்டும் இவரே.இப்போது உலகச் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ரோஹித். பாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இவரது கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கிறார்கள்.விஷயம் இதுவல்ல.கடந்த வாரம் ரோஹித் தனது பெயரில் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அதில் டயட் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸைகளை இலவசமாக அள்ளி வழங்குகிறார். அத்துடன் ரசிகர்கள் இவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாட முடியும். ஆப் அறிமுகமான ஒரு வாரத்திலேயே இரண்டு லட்சம் பேர் அதை டவுன்லோடு செய்ததுதான் இதில் ஹைலைட்!    

த.சக்திவேல்