சினிமாவில் ஹீரோயின்களுக்கு டிமாண்ட்... சீரியலில் ரைட்டர்களுக்கு டிமாண்ட்!



நம்பிக்கை கொடுக்கிறார் மருதுசங்கர்

‘‘சீரியல்களுக்கு டயலாக் எழுதற வேலைனா அது ஏதோ புரணி பேசறதுனு பலரும் நினைக்கறாங்க. அப்படியில்ல. இது ரசனையான துறை. இங்க இளம் எழுத்தாளர்கள் நிறைய பேருக்கு வேலையிருக்கு.
எப்படி சினிமால நடிக்கத் தெரிஞ்ச ஹீரோயின்களுக்கு டிமாண்ட் இருக்கோ, அப்படி நல்ல ரைட்டர்ஸுக்கு சீரியல்ல டிமாண்ட் இருக்கு. உழைக்கத் தயங்காத உள்ளமும், பொறுப்போடு எழுதும் ஆர்வமும் இருந்தா போதும். இந்தத் துறைக்கு வந்து பிரகாசிக்கலாம்...’’

புதியவர்களை புன்னகையுடன் வரவேற்கிறார் மருதுசங்கர். ‘அழகி’, ‘அழகு’ உட்பட பல மெகா தொடர்களுக்கு வசனம் எழுதியவர்; எழுதி வருபவர். ‘‘விகடன் டெலிவிஸ்டாஸின் ‘அழகி’ சீரியலின் 80வது எபிசோடுல இருந்து அது முடியற வரைக்கும் டயலாக் எழுதியிருக்கேன். அந்த டைம்ல மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய கிடைச்சது.
ஒருநாள் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போயிருந்தேன். அந்தக் கடைக்காரர், தன் நண்பர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். ‘அழகி’க்கு வசனம் எழுதறது நான்னு தெரிஞ்சதும் உடனே தன் வீட்டுக்கு போனைப் போட்டு, ‘எங்க அம்மாகிட்ட பேசுங்க... என் தங்கச்சிகிட்ட பேசுங்க’ன்னு பாசமழை பொழிஞ்சார்.

எதிர்பாராத பாராட்டுல நெகிழ்ந்துட்டேன். ஒரு ரைட்டருக்கு இப்படி பாராட்டுகள் கிடைக்கறது பாக்கியம்...’’ உருகும் மருதுசங்கர், சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்திருக்கிறார்.

‘‘பூர்வீகம், சமயபுரம் பக்கம் புறத்தாக்குடி. அப்பா, சீனிவாசன். அம்மா, ஜானகி. அவங்க ஊர்ல சுண்ணாம்பு வியாபாரம் செய்துட்டிருந்தாங்க. சாதாரண குடும்பம். ஒரே அண்ணன். அசோகராஜன். வீட்ல அப்ப வசதி இல்லாததனால மூணாவது வரை புதுக்கோட்டைல பெரியம்மா வீட்ல இருந்து படிச்சேன். அப்புறம் இருங்களூர், புறத்தாக்குடி, புலாங்குறிச்சினு சில ஊர்கள்ல படிப்பை முடிச்சேன்.

பி.ஏ. இலக்கியம் படிக்க ஆசை. ஆனா, அண்ணன் சொன்னதால பி.எஸ்சி பிசிக்ஸ் படிச்சு முடிச்சேன். காலேஜ்ல நடந்த கவிதைப் போட்டில முதல் பரிசு கிடைச்சது. அப்ப கவர்னரா இருந்த சென்னாரெட்டி கையால பரிசு வாங்கினேன்.

கவிதைக்கு பரிசு கிடைச்சதும், ‘சினிமால பாட்டெழுது’னு நண்பர்கள் உசுப்பேத்தினாங்க. நானும் அதை நம்பினேன்! என் கவிதைகளை ‘செல்லுலாயிட் சிறகுகள்’னு தொகுப்பாவும் கொண்டு வந்திருக்கேன்! இடைல பி.எட் முடிச்சேன். ஏதாவது ஸ்கூல்ல வாத்தியாரா போவேன்னு வீட்ல நினைச்சாங்க.

ஆனா, பி.எட் முடிச்ச மறுநாளே சென்னைக்கு வந்துட்டேன். மேற்கு சைதாப்பேட்டைல நண்பர் இருந்தார். அவர் ரூம்ல தங்கினேன். அப்ப சினிமா ஸ்டிரைக். படைப்பாளிகள் சங்க பிரச்னை போயிட்டிருந்தது. எங்கயும் படப்பிடிப்பு நடக்கலை. கடுமையான போராட்டக் காலமா இருந்தது...’’ பெருமூச்சுவிட்ட மருதுசங்கர், சின்னத்திரைக்கு வந்தது சுவாரஸ்யமான கதை.

‘‘என் நண்பர் டிவி சேனல்ல வேலை பார்க்கிறார்னு கேள்விப்பட்டு அவரைப் பார்க்கப் போனேன். சேனல்ல அவர் இல்ல. மறுநாளும் போனேன். அவரைப் பார்க்க முடியலை. அவரை எதிர்பார்த்து சேனல் ரிசப்ஷன்லயே வெயிட் பண்ணுவேன். இப்படியே நாட்கள் போச்சு.

இதை கவனிச்ச சேனல் ஓனர்கள்ல ஒருத்தர் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சார். டிகிரி படிச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் அங்கயே வேலை கொடுத்துட்டார்! ஒரு வருஷம்கிட்ட அங்க திரை விமர்சனம் எழுதினேன். அப்புறம் இன்னொரு சேனல்ல ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டெலிஃபிலிமை இயக்கினேன்.

இதுக்குக் கிடைச்ச வரவேற்புல ‘உயிரோட்டம்’ சீரியல் கிடைச்சது. அதுக்கு திரைக்கதை எழுதினேன். இடைல ஜெமினி டி.விக்காக ‘அம்சவிருட்ஷம்’, ‘காரலபுத்தரரு’னு ரெண்டு தெலுங்கு சீரியல்கள் எழுதி, இயக்கினேன்.

சினிமா கனவுகள் அப்படியே இருந்ததால சினிமாவில் இயக்குநராகும் முயற்சியைத் தொடர்ந்தேன். ஆனா, சீரியல் வாய்ப்புதான் தேடி வந்துச்சு. சன் டி.விக்காக ‘மணிக்கூண்டு’ சீரியலுக்கு திரைக்கதை எழுதினேன். அடுத்து ‘அவளுக்கென்று ஒரு மனம்’ தொடர் கிடைச்சது.  

இந்த டைம்லதான் விக்கிரமாதித்தன் சார் ‘அழகி’க்கு டயலாக் எழுத வச்சார். அதோட திரைக்கதை ரைட்டர் முத்துச்செல்வன் சார் எனக்கு பக்கபலமா இருந்தார். எப்படி டயலாக் எழுதணும்னு புரிய வச்சார். ஒரு சீரியலுக்கு எப்படி எழுதணும் என்பதை விட
எப்படியெல்லாம் எழுதக் கூடாதுனு தெளிவுபடுத்தினார்.

‘ஒரு சீன்ல நாலு பேர் ஃப்ரேம்ல இருந்தா, அந்த நாலு பேரும் டயலாக் பேசணும்னு அவசியமில்ல. கதையை நகர்த்துற கேரக்டர் பேசுற வசனம்தான் முக்கியம்...’ இப்படி பல சூட்சமங்களை கத்துக்கொடுத்தார்.

முத்துச்செல்வன் சார் ‘அழகு’ எழுதறப்ப அதுக்கு டயலாக் எழுதினேன். அதோட இயக்குநர் ஒ.என்.ரத்னம், ஒரு ரைட்டருக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுப்பார். அப்புறம் இப்ப ‘கல்யாணம் முதல் காதல்வரை’ (வசனம்), ‘ராஜா ராணி’ (திரைக்கதை, வசனம்) சீரியல்களுக்கு எழுதிட்டிருக்கேன்...’’ என்றவர் காதல் திருமணம் செய்து கொண்டவர்!

‘‘அதாவது லவ் கம் அரேஞ் ஜ்டு மேரேஜ். பொண்ணு பாக்குற இடத்துல என் ஜாதகத்தை எங்க அண்ணி கொடுத்து வச்சிருந்தாங்க. அங்கிருந்த அஞ்சு பேரோட போன் நம்பர்ஸ் கொடுத்திருந்தாங்க. அண்ணிக்கு தெரியாம அதுல ஒரு நம்பரை எடுத்துட்டு வந்து பேசினேன். எதிர்முனைல கலா பேசினாங்க. அவங்க பெரம்பலூர்ல ஒரு ஆஸ்பிட்டல்ல ரிசப்ஷனிஸ்ட்டா ஒர்க் பண்ணிட்டிருந்தாங்க.

சாதாரணமா பேச ஆரம்பிச்சு அப்படியே காதலர்களானோம். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கலை. போன்லயேதான் காதல் வளர்ந்தது. திடீர்னு ஒருநாள் அவங்களைப் பார்க்கணும்னு தோணிச்சு. அவங்க வேலை பார்க்கிற ஆஸ்பிட்டலுக்கு போய், ‘மருதுவை உங்களுக்குத் தெரியும்னு சொன்னாங்க. நான் சிபிஐல இருந்து வர்றேன். அவன் ஒரு தீவிரவாதி’னு சொன்னதும் கலா பயந்துட்டாங்க!

சட்டுனு அவங்க கண்ணுல இருந்து பொலபொலனு கண்ணீர் வந்துடுச்சு. தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சமாதானப்படுத்தி, ‘நான்தான் மருது’னு சொன்னேன்! தெலுங்குல சீரியல் இயக்கிட்டிருந்தப்ப கலாவை கைப்பிடிச்சேன்...’’கண்சிமிட்டும் மருதுசங்கர், சுந்தர் சி.யின் ‘லண்டன்’, ‘வீராப்பு’ படங்களில் வசன உதவியாளராக இருந்திருக்கிறார். மருதுசங்கர் - கலா தம்பதியினருக்கு யாழினி, குழலினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.      
                  
மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்