ஐஏஎஸ் கனவு வேண்டாம்... மக்கள் பணியே போதும்!



சாதிக்கும் குஜராத் இளம்பெண்

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். சிறு வயதில் பெற்றவர்களும் பெரியவர்களும் சொல்லிச் சொல்லி விதையாக விழுந்து விருட்சமாக வளரும் கனவுகள் சில. யாருமே சொல்லித் தராமல் தானாகவே உள்ளுக்குள் துளிர்த்துவிடும் சுயம்பான கனவுகள் சில.
எந்தக் கனவாக இருந்தாலும் எல்லோருக்குமே அது நனவாகிவிடுவதில்லை. வாழ்க்கையின் நம்ப முடியாத மாயம் அது. மழையைக் கேட்டவருக்கு இடியைத் தருவதும்; வசந்தம் கேட்டவர்க்கு பாலையைப் பரிசளிப்பதும் அதற்குப் புதிதல்ல.

ஆனால், மிட்டலுக்கு வாழ்க்கை வேறு ஒரு விநோதமான ஆசிட் டெஸ்ட் வைத்தது. ‘நீ விரும்பிய ஐ.ஏ.எஸ் கனவு நனவாகி; விரும்பிய வண்ணம் வாழலாம் அல்லது அதைவிடவும் அர்த்தபூர்வமான இன்னொரு வாழ்க்கை வாழலாம். பின்னதில் உன் ஐஏஎஸ் கனவு நனவாகாது. எது வேண்டும்?’ என்று கேட்டது. எனக்கு எதைவிடவும் என் ஆசையும் தேவையும்தான் முக்கியம் என்றுதானே சொல்லியிருப்போம்?

இங்குதான் மிட்டலின் அறிவான மூளையைவிட அழகான இதயம் உயர்ந்து நிற்கிறது! என் ஐஏஎஸ் கனவைவிட இந்த மக்களுக்காக உழைப்பதுதான் முக்கியம் என்று சொன்னதுடன் தன் கனவைத் தூர வைத்துவிட்டு பழங்குடியினர், மலைவாழ் மக்களுக்காக ஓடியோடி பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் முப்பத்தைந்து வயது மிட்டல் பட்டேல்!

குஜராத்தின் மேஹ்சானா மாவட்டத்தின் சங்கல்பூர் என்ற கிராமம்தான் மிட்டலின் பூர்வீகம். சிறுவயது முதலே கலெக்டர் ஆகவேண்டும் என்பது இவர் கனவு. விவசாயக் குடும்பத்தில் பிறந்த மிட்டலுக்கு அது கொஞ்சம் பெரிய கனவுதான். மனம் தளராமல் அதற்காக உழைத்தார். தன் கனவை நனவாக்க குஜராத் வித்யாபீடத்தில் ஊடகவியல் படிப்பில் சேர்ந்தார் மிட்டல்.

அதுதான் அவர் வாழ்வை வழி மாற்றிய முக்கியத் திருப்பமாக அமைந்தது. அந்த நாட்களில் இரண்டு மாதங்கள் சர்க்கா பவுண்டேஷன் என்ற நிறுவனத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார்.

கல்லூரியில் படிப்புக்காக தங்கப் பதக்கம் பெற்ற தங்கத் தாரகையான மிட்டல் இந்த சர்க்கா பவுண்டேஷனில் இணைந்து பணியாற்றிய காலத்தில் குஜராத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அதில் சில கிராமங்கள் அடிப்படை வசதி கூட இல்லாதவை.

அப்படி

யான பயணம் ஒன்றில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றுக்குச் செல்ல நேர்ந்தது. தங்களின் வயிற்றுப்பாட்டுக்காக கரும்பை பயிரிட்டு வளர்த்து வந்தனர் அந்த எளிய மக்கள். அவர்கள் வாழ்வில் நிறைய சிரமங்கள் இருந்தன. அவர்களிடம் இருந்த அறியாமை ஒருபுறம் என்றால் அவர்கள் பற்றி அரசுக்கு இருந்த அறியாமை இன்னொருபுறம். சொல்லப்போனால் அப்படி ஒரு மக்கள் திரள் இருப்பதே அரசுக்குத் தெரியவில்லை என்பதுதான் அவலம்.

இதனால், அரசிடமிருந்து இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உதவிகள், சலுகைகள் எதுவுமே கிடைக்கவில்லை. இப்படி ஒன்றிரண்டு கூட்டம் இல்லை. பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் எந்த அடிப்படையான சலுகையும் கிடைக்காமல் அன்றாட வாழ்வுக்கே தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

இம்மக்களின் நிலைமையைக் கண்டு பரிதாபம் கொண்ட மிட்டல் இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தார். இதைத் தொடர்ந்து மிட்டல் செய்ததுதான் அதிரடியான காரியம். ஆமாம்! அதுவரை, தான் பார்த்துவந்த வேலையை தடாலடியாக ராஜினாமா செய்தார். இம்மக்களுடனேயே இரண்டு ஆண்டுகள் தங்கி அவர்களின் சுக துக்கங்கள், வாழ்க்கைப்பாடுகள், பிரச்னைகள், சவால்கள், வாய்ப்புகள் அனைத்தையும் கண்டுகொண்டார்.

ஏற்கெனவே, வெளி சமூகத்தால் சூறையாடப்பட்டுக் கிடக்கும் இந்தப் பழங்குடிப் பெண்களின் வாழ்வு ஆண்களால் மேலும் சீரழிக்கப்படுவதையும், குழந்தைகள் வறுமையும் துயருமான சூழலில் எந்த எதிர்கால உத்தாரவாதமும் இன்றி வளர நேர்வதையும் புரிந்துகொண்டார்.

ஐஏஎஸ் படித்து மாவட்ட ஆட்சியாளராகி எங்கோ நகரத்தில் அமர்ந்துகொண்டு ஓரளவு அடிப்படை வசதிகள் கொண்ட மக்களுக்கு அடுத்தகட்ட வளர்ச்சிக்காக உதவுவதை விடவும் எந்த அடிப்படை வசதியும் இல்லாத இம்மக்களுக்கு உதவுவதுதான் இன்றியமையாதது என்று நினைத்தார். தன் கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டு களத்தில் இறங்கினார்.

விச்சார்த்தா சமுதாய சமர்தான் மன்ச் ‘Vicharta Samuday Samarthan Manch’ (VSSM) என்ற பெயரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு டென்ட் அமைத்து கல்வி தருவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கித் தரப் போராடுவது, நல்ல தொழில் அமைத்துத் தரப் போராடுவது என கடகடவென காரியமாற்றினார். இன்று இம்மக்களில் இருபதாயிரம் பேருக்கு வாக்குரிமை கிடைத்திருக்கிறது. ஐந்தாயிரம் பேருக்கு ஏதேனும் ஒரு பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

உண்மையில் மிட்டல் ஏதோ ஒரு பழங்குடி இனத்தவருக்காக மட்டுமே இந்தப் பணியில் இறங்கவில்லை. இதுவரை இருபத்தெட்டு நாடோடி இனத்தவர்கள், பனிரெண்டு பட்டியலின மலைவாழ் மக்கள் ஆகியோருடன் கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இவரின் தொடர்ச்சியான, இடையறாத பங்களிப்பால்தான் இந்த எளிய மனிதர்களின் இருப்பு அரசின் கண்களுக்குப் புலப்படத்தொடங்கியுள்ளது. இவர்களின் குரல் அரசின் செவிகளில் விழுந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் அந்த மக்களுக்கு என அரசு சில பிரத்யேகத் திட்டங்களையும் அமலாக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.CNN-IBN இவருக்கு ‘ரியல் ஹீரோஸ்’ அவார்டு வழங்கி கவுரவித்துள்ளது.                        

இளங்கோ கிருஷ்ணன்