பாதை புரியாமல் பயணிக்கிறதா த.மா.கா?



பதிலளிக்கிறார் ஜி.கே.வாசன்

தமது ஐந்தாவது ஆண்டு விழாவை அரியலூரில் இம்மாத இறுதியில் கொண்டாட இருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. இந்த நீண்ட பயணத்தில் அது பெற்றது என்ன... இழந்தது என்ன... உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.மா.கா.வின் தலைவர் ஜி.கே.வாசன். அவருக்கேயுரிய பிடி கொடுக்காத பேச்சும், சுருக்கமான பதில்களும் பேட்டி முழுவதும் காண முடிந்தது.

நாடாளுமன்றத் தேர்தல், இருபது சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல் இரண்டுமே கூப்பிடு தூரத்தில் இருக்கும் நிலையில் த.மா.கா.வின் வியூகம் என்ன? எந்த பரபரப்பையும் காணோமே?

த.மா.கா.வைப் பொறுத்தவரை மக்கள் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். எதற்கு அனாவசிய பரபரப்பு? கடந்த ஒன்றரை வருடங்களாக எனது தொடர் சுற்றுப் பயணங்கள் இயக்கத்திற்கு பலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எங்கள் நோக்கமே உள்ளாட்சித்  தேர்தலில் பெருவாரியாக ஜெயிக்க வேண்டும். அப்புறம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு பலமான கட்சியாக கூட்டணிக் கட்சிகளிடையே செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய நிலைக்கு வர வேண்டும். இடையே இடைத்தேர்தல் வந்தால் தொகுதி மக்கள் எண்ணம் அறிந்து முடிவுகள் எடுக்கப்படும்.

பாதை புரியாமல் பயணிக்கிறதா த.மா.கா?

இப்போதெல்லாம் அரசியலில் அதிகமாகப் பணம் செலவழிப்பது, ஆடம்பரமாக அரசியல் செய்வதுதான் வெளிப்படையாக மக்களுக்கும் சரி, பத்திரிகைகளுக்கும் சரி, ஊடகங்களுக்கும் சரி தெரிந்ததாக இருக்கிறது. இந்த சூழல் வருங்கால அரசியலுக்கு நல்ல சூழல் அல்ல என்பது என் கருத்து. த.மா.கா.வைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் காட்டிய எளிமை, தூய்மை, நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற பணி என்ற நீதியில் மக்களைச் சந்திக்கிறோம். அதன் அடிப்படையில் இயக்கத்தை நகரம் முதல் கிராமம் வரை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ரோமில் இருக்கும்போது ரோமனாக இருக்கவேண்டும் என்பார்கள். மற்றவர்கள் உத்வேகமாக அரசியல் நடத்தும்போது நீங்கள் இப்படி மென்மையான பாதையில் போனால் கரை சேரமுடியுமா?

பொதுவாக அரசியலில் நல்ல கலாசாரம் இருக்க வேண்டும். அந்த கலாசாரம் என்றால் மத்திய, மாநில அரசுகளின் தவறான, மக்களுக்கு எதிரான செயல்பாடுகள், மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டங்கள் போன்றவற்றை எதிர்ப்பதோடு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை வலியுறுத்தி அதைப் போராடி, வாதாடி பெற்றுத் தருவது. இதுவே நல்ல அரசியல்.

இதுபோன்ற அரசியல் களத்தில் இருந்து செயல்படும்போது பத்திரி்கைகளில் முதல் பக்க விளம்பரத்திற்காகவோ, தொலைக் காட்சி பரபரப்புக்காகவோ
கடினமான, தடித்த வார்த்தைகளைப்  பேசி அதனால் பிரபலப்பட வேண்டும் என்பதைவிட முறையான, சரியான மக்கள் விருப்பத்தை எடுத்துக்கூறி அதன் அடிப்படையில் இந்த இயக்கம் படிப்படியாக வளர வேண்டும் என்பதே ஆரோக்கியமான அரசியல்!

அப்படியென்றாலும், பல நேரங்களில் மற்ற கட்சிகள் பிரச்னைகளை எடுத்து வைத்தபின்புதானே நீங்கள் விழித்துக் கொள்கிறீர்கள்?

கிடையாது. தமிழகத்தின் நிகழ்வுகள், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள், அறிவிப்புகள் வெளிவரும் சமயங்களில், தொலைக்காட்சி மற்றும் மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கட்சியில் முதல் வரிசையில் அமர்ந்துள்ளது த.மா.கா. அதற்கான ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் எல்லாவற்றிலும் எந்த கட்சிக்கும் எங்கள் கட்சி சளைத்ததில்லை!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் கருத்துக்கள் பொருளாதார வசதி காரணமாக பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வரலாம்! எங்களுடையது மூன்றாவது, நான்காவது பக்கங்களில் வரலாம், அவ்வளவே!

அறிக்கைவிட்டால் போதுமா? ஆளுங்கட்சியின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் குட்கா உள்ளிட்ட வெவ்வேறு ஊழல்களைத் தோண்டி எடுத்து கோர்ட்டுக்குப் போய் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் அளவுக்கு மிரட்டுகிறது திமுக. உங்களிடம் அந்த வேகம் துளியும் இல்லையே?
நாங்களும் இதற்காக போராடியிருக்கிறோம். குட்கா உயிருக்கு ஆபத்தான பொருள்; தடை செய்யப்பட்ட பொருளை விற்பது ஆபத்தானது; இது கண்டிக்கத்தக்கது என நாங்களும் போராடியிருக்கிறோம்.

திமுகவைப் பொறுத்தவரை திரும்பத் திரும்ப ஆட்சிக்கு வந்தவர்கள். 89 சீட்கள் வைத்துள்ளார்கள். இயற்கையாக அவர்கள் செயல்பாடு மற்றவர்களைவிட அதிகமாகத்தான் இருக்கும்.கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ், திமுகவோடு உள்ளது! நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்?

தேர்தல் கூட்டணி என்பது சரியான நேரத்தில் அதிகாரபூர்வமாக முடிவெடுப்பது. தேர்தல் நெருங்கும்போது, கூட்டணிக்கான அவசியம் ஏற்படும்போது ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிகாரபூர்வமாக கூட்டு சேரும் காலகட்டம் வரும். அப்போது மக்கள் எண்ணங்களை கேட்டு முடிவெடுப்போம்!
பாரதீய ஜனதாவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதா?

நாங்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகச் செயல்படுகிறோம். இது ஊருக்கே தெரியும். மூப்பனார் காலத்திலிருந்து எங்கள் நிலை ஒரே நிலை. தமிழகத்தில் இதுவரை இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளில் எந்த கட்சி பாஜகவுடன் சேரவில்லை? 1996ம் ஆண்டு மூப்பனார் த.மா.கா. ஆரம்பித்த காலத்திலிருந்து நாங்கள் மட்டுமே சேரவில்லை!

அப்போது ரஜினியும் மூப்பனாருடன் கை கோர்த்தார் என்ற முறையில், பழைய பாசத்தில் அவருடன் இப்போது கூட்டு வைப்பீர்களா?
ரஜினி தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றியிருக்கிறார் என்பது ஊடகச்செய்தி. அவர் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்தால்தான் பேச முடியும்!

த.மா.கா. ‘ஒன் மேன் ஷோ’வாகிவிட்டதே? உங்களிடம் இருந்த பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன் போன்றவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கே போய்விட்டனர். உங்களிடம் இரண்டாம் கட்டத் தலைவர்களோ, நெருப்பான மேடைப் பேச்சாளர்களோ இல்லையே?

ஒரு கட்சியின் வெற்றிக்கு அடித்தளம் அந்தக் கட்சியின் மூத்த முன்னணி தலைவர்களும், மாவட்டத் தலைவர்களும், தொண்டர்களும்; அவர்களது செயல்பாட்டுக்கு ஏற்ப வாக்களிக்கும் வாக்காளரும்தான். பேச்சாளர்கள் உள்ள கட்சிகள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை; நிறைய தலைவர்கள் உள்ள கட்சிகள் எப்போதும் வெற்றி பெறவும் இல்லை.

எங்கள் கட்சிக்கு பின்புலம் காமராஜர், மூப்பனார். அதன் தத்துவம் நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற பணி. இதை வைத்தே மக்களிடம் பேசிவருகிறோம். எங்கள் செல்வாக்கு மக்களிடம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது! மேலும் வளரும் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள பிரச்னை கொள்கை வேறுபாடா, தனிப்பட்ட ஈகோவா?

நான் காங்கிரஸைவிட்டு வெளியே வந்தபோது சொன்னது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ரொம்ப நாட்களாக ஆட்சியில் இல்லை. அதற்கு காங்கிரஸ் செயல்திட்டம் போதுமானதாக த் தெரியவில்லை. அதனால் த.மா.கா.வின் தோற்றம் என்பது ஒரு செயல்பாட்டில் மாறுபட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே. அதற்கு முயற்சிக்கிறேன்.

இது தவிர, காங்கிரஸ் தலைமையைப்பற்றி மாநிலத்திலோ, மத்தியிலோ, அவதூறாகப் பேச எந்த அவசியமும் இல்லை. அந்த நினைப்பே இல்லை. அப்படியிருந்தாலே எங்களுக்கு ஓட்டு விழும் என்று நினைக்கிறேன்.பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஒரு பெரிய அணியைத் திரட்டுகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கூட சந்தித்துள்ளனர். நீங்களும் ராகுல் தலைமையை ஏற்பீர்களா?

இன்று பிராந்திய கட்சித் தலைவர்களை அகில இந்தியாவும் கவனிக்கிறது. சிலசமயம் ஒட்டுமொத்த பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி ஒரு முடிவாக இருக்கலாம். தலைமை கூட ஒரு முடிவாக இருக்கலாம். இன்று வரை யாரும் ஒத்த கருத்தாக அறிவிக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சியே பி.ஜே.பியை எதிர்ப்பதில் இந்தியா முழுக்க வலிமையான கட்சியாக உள்ளது. ஆக, தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவாகும்.

காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்ததற்காக என்றைக்காவது தனிமையில் வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இல்லை. கட்சி ஆரம்பித்த பிறகு வருடா வருடம் முழுப் பரீட்சை மாதிரி மார்க் போட்டு ரிஸல்ட் பார்த்தால் நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என்பதே உண்மை. த.மா.கா.வின் 5வது ஆண்டு தொடக்க விழா நவம்பர் 25ம் தேதி மாலை அரியலூரில் மாபெரும் பொதுக் கூட்டமாக நடக்கவுள்ளது. நாங்கள் நல்லபடியாக வளர்ந்திருப்பதில் எனக்கு சந்தோஷம்தான்.

இந்த 5 வருடத்தில் வாசன் பெற்றது என்ன? இழந்தது என்ன?

படிப்படியாகத்தான் வளர முடியும். இன்றைய அரசியல் சூழலில், பணபலம் உள்ள கட்சிக்கு அனுகூலம் அதிகம். அது இல்லாத கட்சிக்கு அனுகூலம் குறைவு.

கும்பகோணம் பக்கம் பரம்பரை பணக்காரர் நீங்கள். உங்களிடம் பணம் இல்லையா?

அதன் அடிப்படையில்தான் கட்சி நடத்திட்டு இருக்கோம். நான் இழந்தது, சில நேரங்களில் அரசியல் போட்டியாலும், கூட்டணி தர்மத்தாலும் நஷ்டம் அல்லது பாதிப்பு ஏற்படுகிறது. தோல்வி சூழல் ஏற்பட்டாலும் தமிழகத்தின் மரியாதைக்குரிய கட்சி என முதல் வரிசையில் இடம் தருகிறார்கள் மக்கள். அதுவே எங்கள் பலம்.

உங்கள் பார்வையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு எப்படியுள்ளது?

மக்களின் மனநிலை, எண்ணங்களைப் புரிந்துகொள்ளவில்லை. பிரதிபலிக்கவில்லை. தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளன. மக்கள் மீது திட்டங்களைத் திணித்தால் மக்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. இந்த ஆட்சியை பாரதீய ஜனதாவே காப்பாற்றுகிறதா?

ஆட்சியைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ, மத்திய அரசின் அழுத்தம் தமிழக ஆட்சியில் இருப்பதாகவே எல்லோருக்கும் தெரிகிறது. தமிழகத்தில் பல சோதனைகள் நடந்துள்ளன. அதற்கெல்லாம் விடை தெரியாமல் மக்கள் காத்திருக்கிறார்கள். அது சி.பி.ஐ. சோதனையாக இருந்தாலும், ஏன், எதற்கு நடந்தது எனத் தெரியவில்லை. மக்களுக்கு சந்தேகம் இருந்து அதற்கு விடை தீர்க்கும் நிலையில் அரசு இல்லாவிட்டால், தேர்தலில் மக்கள் மனதிலிருந்து நீங்கும் நிலையே ஏற்படும்.காமராஜர் ஆட்சி என்பது கனவாகிப் போய்விடுமா?எங்கள் பயணம் அதை நோக்கித்தான்.                            

வி. சந்திரசேகரன்

ஆ.வின்சென்ட் பால்