பகவான்-3



குச்வாடா என்றொரு குக்கிராமம்.மத்தியப் பிரதேசத்தில், தலைநகர் போபாலில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் ராய்சென் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமப் பஞ்சாயத்து.ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இப்படியொரு பட்டிக்காடு, வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறது என்று சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். இன்று உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குச்வாடாவுக்கு வந்து தியானம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

காரணம்?

பகவான் பிறந்த மண் இதுதான்.இன்னமும் பகவான் பிறந்த வீடு அங்கே புதுப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.ரஜ்னீஷ் பிறந்த அறைக்கு வந்து ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்துவிட்டுச் செல்வது என்பது அவரது பக்தர்களின் வாழ்நாள் கடமையாகி விட்டது.குச்வாடாவில் படிப்பு வாசனையே யாருக்கும் பிடிக்காது.
சிறு வயது நண்டு சிண்டுகள் கூட வியாபாரம், வியாபாரம் என்றுதான் மூச்சு விடும். வியாபாரம் செய்வதற்குத் தேவையான எழுத்தறிவை மட்டும் கற்றுக்கொண்டு தனிக்கடை போட்டு விடுவார்கள். பெரும்பாலானோர் சமண மதத்தைச் சார்ந்தவர்கள். வரலாற்றை உற்று நோக்கினோம் என்றால், சமண சமூகம் என்பதே வணிகர்களுக்காக உருவான மதம்தானே?

அந்தக் காலத்தில் அப்பகுதியில் பால்யவிவாகம்தான் நடைமுறையில் இருந்தது.திமார்னி என்கிற சிறுநகரத்தைச் சார்ந்த ஓஷோவின் அப்பா பாபுலாலுக்கு கல்யாணம் ஆகும்போது வயது 10தான். ஆனால், அப்போதே அப்பாவுடன் சேர்ந்து துணி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். அவரை அந்தக் காலத்தில் தாதா என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.அம்மா சரஸ்வதிக்கு திருமணத்தின்போது வயது 7தான். பிற்காலத்தில் ஒருமுறை ஓஷோவிடம் தன்னுடைய திருமணம் பற்றி சரஸ்வதி அம்மாள் சொல்லியிருக்கிறார்.

“அன்று குச்வாடாவே திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. குறிப்பாக எங்கள் வீடு அமளிதுமளிப்பட்டது. என் வயதில் இருந்த சிறு குழந்தைகளுக்கு எல்லாம் புதுத்துணி எடுத்துக் கொடுத்திருந்தார்கள். சுவையான பலகாரங்கள் அடுப்பில் சுடச்சுட தயாராகிக் கொண்டிருந்தன.

தெருவில் திடீரென்று மங்கல வாத்திய கோஷம் கேட்டது. எல்லாக் குழந்தைகளையும் போல நானும் ஓடிப்போய் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

மணக்கோலத்தில் ஒரு சிறுவனை குதிரையில் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். ‘அவன்தான் உன் மாப்பிள்ளை. இன்று உனக்கு கல்யாணம்’ என்று எங்கள் அத்தை சொன்னார். அப்போதுதான் ஊரின் அந்த விழாக்கோலம் எனக்காகத்தான் என்று தெரிந்துகொண்டேன்...”
சரஸ்வதி அம்மாளின் குடும்பம் செல்வச் செழிப்பானது.

ஆனால் - அவர் வாழ்க்கைப்பட்டுப் போன குடும்பமோ கொஞ்சம் நடுத்தரக் குடும்பம்தான்.திருமணம் ஆன சில காலத்திலேயே பாபுலாலின் தாயார் நோயுற்று மறைந்தார். எனவே, பாபுலாலின் தந்தையார் மனம் வெறுத்துப் போய் வியாபாரத்தையெல்லாம் பாபுலாலிடமே ஒப்படைத்துவிட்டு சொந்தக் கிராமமான பரோடாவுக்குச் சென்று விவசாயம் பார்க்கத் தொடங்கினார்.

பாபுலாலின் அண்ணன் அமிர்தலால் மற்றும் தம்பி ஷிகார்சந்த் இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். எனவே, குடும்பப் பொறுப்பை முற்றிலுமாகத் துறந்தனர். பாபுலாலுக்கு மேலும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

அந்த இளம் வயதிலேயே பாபுலால் - சரஸ்வதி தம்பதியினரின் தலையில்தான் ஒட்டுமொத்தக் குடும்பச் சுமையும் விழுந்தது. சகோதரர்களை கவனித்துக் கொள்வது, சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது என்று தன்னுடைய இளமைக் காலம் முழுவதையும் குடும்பத்துக்காகவே அர்ப்பணித்தார் பாபுலால்.

சரஸ்வதியும் கணவரின் குடும்பநிலையை அனுசரித்து நடந்துகொண்டார். கணவரின் சகோதரர்களும், சகோதரிகளும் அவரை அன்புடன் ‘பாபி’ (அண்ணி என்று பொருள்) என்று அழைக்க, அவர் வாழ்க்கைப் பட்டுப்போன திமார்னி நகரவாழ் மக்களும்கூட ‘பாபி’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். பின்னாளில் தன்னுடைய அம்மாவை ஓஷோவேகூட ‘பாபி’ என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
உரிய வயது வந்தபோது சரஸ்வதி கருத்தரித்தார்.

அவர்களது குடும்ப வழக்கப்படி கருத்தரித்த ஆறாவது மாதமே, பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். பிரசவம் முடிந்து ஆறு மாதங்களுக்குப் பிறகே மீண்டும் புகுந்த வீட்டுக்கு வரவேண்டும்.போக்குவரத்து வசதியெல்லாம் பெரிதாக இல்லாத காலம் அது.சரஸ்வதியை குச்வாடா நகரத்துக்கு அழைத்துச் செல்வதற்காக அவருடைய அண்ணன் மகன் வந்திருந்தான்.மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு திர்மானியில் இருந்து கிளம்பினார்கள்.

ஆறு மாதக் கர்ப்பிணியான சரஸ்வதியை ஒரு மட்டக்குதிரையில் உட்காரவைத்து, அந்தச்  சிறுவன் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.திடீரென்று வானம் இருண்டது.கருமேகங்கள் பேரணியாகத் திரண்டன.கடுமையான மழை பெய்யப் போகிறது என்பதை உணர்ந்து வேகமாகப் பயணிக்கத் தொடங்கினார்கள்.

ஏனெனில் - திமார்னி நகரத்திலிருந்து குச்வாடா கிராமத்துக்குச் செல்ல நர்மதை நதியைக் கடந்தாக வேண்டும்.பாலம் எதுவுமில்லை. படகுப் போக்குவரத்து மட்டுமே.பெரும் மழை பெய்யும்போது யாரும் படகு ஓட்ட வரமாட்டார்கள்.சூறாவளியாய் சுழன்றடித்த காற்று, மழைக்கு இடையே எப்படியோ நர்மதை ஆற்றங்கரைக்கு வந்துவிட்டார்கள்.நதியில் வெள்ளம் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.எந்த படகோட்டியும் படகை எடுக்க சம்மதிக்கவில்லை.

ஆற்றோரத்தில் இருந்த மண்டபத்தில் சரஸ்வதியும், அவரது அண்ணன் மகனும் ஒதுங்கியிருந்தார்கள்.இவர்களைப் போலவே கரை கடக்க வந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள்.மூன்று நாட்கள் அந்த மண்டபத்திலேயே கழிந்தது. மழை நிற்கவே நிற்காதோ என்று கருதும்படியாக வானத்தைக் கிழித்துக்கொண்டு இடைவெளியின்றி பெய்துகொண்டே இருந்தது.

டீன்ஏஜ் வயதில் கர்ப்பம் தரித்திருந்த சரஸ்வதிக்கு, கர்ப்ப காலத்துக்கே உரிய அவஸ்தைகள் ஏற்படத் தொடங்கின.அப்போது அந்த மண்டபத்துக்கு காவி உடையில் ஞானி ஒருவர் வந்தார்.சரஸ்வதியைக் கண்டதுமே கைகூப்பி வணங்கினார்.அருகிலிருந்த படகோட்டி ஒருவனை அழைத்தார்.“இந்தப் பெண்ணுக்காக மறுகரைக்கு படகைச் செலுத்து. உன் படகுக்கு எந்தவித ஆபத்தும் வராது...”

“சாமி, ஆத்து வெள்ளம் அசுரவேகத்தில போவுது சாமி. படகுலே போனா மொத்தமா எல்லாரும் அடிச்சிக்கிட்டுப் போயிடுவோம்...”

“மடையா. இவளது வயிற்றில் வளர்பவன் தெய்வாம்சம் பொருந்தியவன். கருவிலேயே அற்புதம் நிகழ்த்துவான். நான் சொல்வதைக் கேள். படகை எடு!”
அந்த ஞானி கண்டிப்பான குரலில் சொன்னதுமே, அரைகுறை மனதோடு படகை எடுத்தான் அந்தப் படகோட்டி.அதில் சரஸ்வதியும், அவரது அண்ணன் மகனும் ஏறி அமர்ந்தார்கள்.

ஆக்ரோஷமான ஆற்றில் அச்சப்பட்டபடியே படகைச் செலுத்தினான் படகோட்டி.என்ன ஆச்சரியம்!கொந்தளித்துக் கொண்டிருந்த நர்மதை, இவர்களது படகுக்காக மட்டும் அமைதியாக வழிவிட்டது.மூன்று நாட்களாக ஊண், உறக்கமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி, அதிசயப்பட்டுப் போய் தன்னுடைய அடிவயிற்றைத் தடவிக் கொடுத்தார்.உள்ளே ஓஷோ சிரித்துக் கொண்டிருந்தார்!

அதிகாலை ஆனந்தம்!

ஓஷோ, தன் சீடர்களிடம் பெரிதும் எதிர்பார்த்தது அதிகாலை கண்விழிப்பு.பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய இந்த வேளையில் மனிதர்கள் விழித்திருக்க வேண்டும், அதிகாலை ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்பார்.

அவருடைய அப்பாவிடமிருந்து ஓஷோவுக்கு தொத்திக்கொண்ட பழக்கம் இது.ஓஷோவின் அப்பா, பெரியதாகப் படிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு ஆன்மீகத்தில் நல்ல பிடிப்பு இருந்தது. மதம் தொடர்பான நூல்களை வாசித்து நிறைய விஷயங்களைப் தெரிந்து வைத்துக் கொண்டார்.

பெரிய இயற்கை ஆர்வலரும் கூட. வியாபாரத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கு அவர் விடியற்காலை அமைதியில்தான் தீர்வுகளைக் கண்டார். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ஆற்றோரமாய் நடை பழகுவார். நடைப்பயிற்சி அலுத்தால், நேரம் போவதே தெரியாமல் ஆற்றில் நீந்திக் கொண்டிருப்பார்.

சிறுவனாக இருந்த ரஜ்னீஷையும் காலையில் எழுப்பி ஆற்றுக்கு அழைத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த வேளையில் எழுந்துகொள்வது தனக்கு சிரமமாக இருக்கிறது என்று, ஆரம்பத்தில் முரண்டு பிடித்தவர், அதிகாலை ஆனந்த அனுபவத்தை உணர்ந்தபிறகு, அப்பாவோடு ஆர்வமாகச் செல்ல ஆரம்பித்தார்.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்