ஸோ வாட்..?



‘‘ஸோவாட்?’’ என்றார் எதிரில் அமர்ந்திருந்த பெண்மணி. எதிரில் இருப்பவர்களைப் பற்றி எந்த உணர்வுமில்லாமல் அலட்சியத்தில் எறியப்பட்ட வார்த்தைகள்.

அருகில் இருந்த நண்பரைப் பார்த்தேன். அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்வுகளின் ரேகைகள் அவரது முகத்திலும் பிரதிபலித்தன. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து விட்டு எதிரிலிருந்த பெண்மணியிடம், ‘‘நீங்க கொஞ்சம் தயவு செய்யணும். இவரோட நிலைமையைக் கொஞ்சம் கருணையோட பரிசீலிக்கணும்...’’ என்றார் கனிந்த குரலில்.

அவரையோ அவரருகில் இருந்த என்னையோ எதிரில் இருந்த பெண்மணி சட்டை செய்வது போலத் தோன்றவில்லை. மாறாக, ‘‘இன்னும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’’ என்பது போன்ற பாவனையில் தனது கைப்பையைத் திறந்து, கண்ணாடியை எடுத்து உதட்டுச்சாயத்தைத் தீட்டத் தொடங்கினார். நான் மெல்ல எழுந்து நடந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.

அந்தத் துரதிர்ஷ்ட ஆகஸ்டு மாதத்தின் முதல் நாளில் அப்படியொரு நிகழ்வுக்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை. சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை முடியாமலேயே போய்ச் சேர்ந்து விடுவாளென்பதை. ஒரு நிமிடத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையும் புரட்டிப் போடப்பட்டது. ஏழாவது படிக்கும் மகன், ஐந்தாவதில் இருக்கும் மகள் பற்றி எந்தக் கவலையுமின்றி மனைவி போய் விட்டாள். மொத்தக் குடும்பமும் அதிர்ந்து அழுகையில் மூழ்கியிருக்கும்போது அடுத்த நாட்கள் குறித்த வினாக்களில் விழி மூட முடியாமல் போனேன் நான்.

ஆறுதல்களும் அரவணைப்பும் துயரம் கனத்த இமைகளுமான சில நாட்களுக்குப் பின் துபாய் திரும்பியபோது மனதிற்குள் விடை தெரியாத ஆயிரம் கேள்விகள் முள்முனையாய் துருத்திக் கொண்டு நின்றனஒரே நேரத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு காண முடியாதென்பதால் ஒவ்வொன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம் என்று தீர்மானித்தேன்.

தனியாகக் குழந்தைகளை என்னுடன் தங்க வைக்க இயலாது. அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி, சமைத்து, பாடம் சொல்லிக் கொடுத்து... நினைக்கவே மலைப்பாக இருந்தது. ‘‘அவஸ்தைப்படு!’’ என்று விட்டுச் சென்ற ‘சண்டாளி’யின் மீது கோபமாகவும்.நல்ல வேளையாகத் தம்பியின் குடும்பமும் துபாயில் இருந்ததால் அவன் குழந்தைகளோடு வந்திருந்து தன் வீட்டிலேயே தங்கச் சொல்லி வற்புறுத்தினான். அவனுக்கு ஏன் சிரமமென்று கொஞ்சம் தயக்கமிருந்தாலும் வேறு வழி தெரியவில்லை எனக்கு.

தங்குமிடம் தம்பியின் வீடென்று முடிவு செய்தாகி விட்டது. அது நான் தங்கியிருக்கும் சார்ஜா வீட்டிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில். எனவே, தம்பி வீட்டில் தங்கியிருந்து மக்கள் தினமும் பள்ளிக்கூடம் சென்று வருவது சாத்தியமற்றது. வேறு பள்ளிக்கூடம் தேட வேண்டும். இன்னும் 15 நாட்களில் மக்கள் திரும்பி வருவார்கள். இதுதான் இப்போதைக்குத் தலையாய வேலை.

பள்ளிக்கூடம் நல்லதாகவும் இருக்க வேண்டும். என் நிதி நிலைக்குக் குந்தகம் வராததாகவும் இருக்க வேண்டும். தம்பியின் வீட்டிற்கு அருகாமையிலும் இருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, அனுமதி தேவைப்படுவது ஏழாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு. இருவரும் ஒரே பள்ளியிலேயே பயிலும் வண்ணம் மட்டுமில்லாது இருபாலரும் ஒரே நேரத்தில் படிக்கும் பள்ளியாகவும் இருக்க வேண்டும். ஒரு சிக்கலே ஆயிரம் சிக்கல்களுக்கு இணையாக இருக்கும்போது மீதி தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதும் துச்சமாகிவிடுகின்றன.

ஒருவகையாக எனது எல்லா நிபந்தனைகளுக்கும் இணக்கமான இரண்டு இந்தியப் பள்ளிகளை அணுகி அனுமதி தேட முயற்சி செய்தேன். நினைத்த நேரத்தில் வெளியில் சென்று வர அலுவலகம் அனுமதி தந்திருந்தும் பள்ளியின் தாளாளர் இருந்தால் மட்டுமே அனுமதி தொடர்பாகப் பேச முடியுமென்பதால் பள்ளிக்குச் செல்வதும் வெறுமனே காத்திருப்பதுமாகப் பொழுதுகள் நீண்டு கொண்டேயிருந்தன.

இதுவேறு மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. முதல் பள்ளியில் தாளாளரைச் சந்திக்க அவசியமேயில்லாமல் ‘இடமில்லை’ என்று சொல்லி விட்டார்கள்.ஓரிருநாட்கள் அலைக்கழிப்புக்குப் பின் ஒரு வகையாக அந்த இரண்டாவது பள்ளியின் தாளாளரைச் சந்தித்தேன். என்னுடன் நண்பரும் வந்திருந்தார். அவர் மூலமாக ஒருவரின் சிபாரிசோடுதான் அந்தப் பள்ளிக்குச் சென்றிருந்தோம்.

தாளாளர் ஒரு பெண். உள்ளே நுழைந்து முகமன் சொன்னதுமே ஒரு வெற்றுப்பார்வை பார்த்துவிட்டு ‘‘என்ன?’’ என்றார். பள்ளியில் சேர்வதற்கான அனுமதிக்காக வந்திருப்பதைப்பற்றிச் சொன்னார் நண்பர். அவர்தான் முகத்திலறைந்தது போல ‘‘இடமில்லை. நீங்க போகலாம்...’’ என்றவர்.

நான் நண்பரைப் பார்த்தேன். அவர் என்னிடம் பொறுமையாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு ‘‘கொஞ்சம் தயவுசெய்ங்க மேடம். இங்க இடம் இருக்குன்னு தெரியும். உங்களால நிச்சயம் ஏதாவது செய்ய முடியும்...’’ என்றார்‘‘யார் சொன்னாங்க இங்க இடம் இருக்குன்னு?’’

நண்பர், சிபாரிசு செய்தவரின் பெயரைச் சொன்னதும், ‘‘ஆனாலும் எங்களுக்குன்னு கமிட்மென்ட் இருக்கு...’’ என்றவரிடம், நண்பர், ‘‘இருக்கட்டுங்க. ஆனா, இவர் மனைவி இறந்து 15 நாள்தான் ஆகுது மேடம். அதனாலதான்...” என்று சொல்லி முடிப்பதற்குள்தான் ‘‘ஸோ வாட்?’’ என்றார் அந்தப் பெண்மணி.

அதற்கு மேல் நான் அங்கு நிற்கவில்லை. நிற்கப் பிடிக்கவில்லை. இடம் இருக்கிறது இல்லையென்பது இரண்டாவது விஷயம். பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வருபவர்களை அமர வைத்துப் பேசக் கூட அறிவற்ற பெண்மணியின் பள்ளியில் என் குழந்தைகள் படிக்காமல் இருப்பதே நல்லதென்று நான் முடிவு செய்திருந்தேன். ஆனால், சுயமரியாதையை எல்லாம் மூட்டை கட்டி விட்டு அவர் முன்னால் கெஞ்சிப் பார்க்கலாமா என நினைக்கையில் உள்ளே நுழைந்தவரிடம் இணக்கமாகப் பேசத் துவஙகி விட்டார் அவர்.

உண்மையிலேயே அந்தப் பள்ளியில் இடம் இல்லாமல் இருந்திருக்கலாம். மனைவி இறந்து போய்விட்டார் என்பதற்காகவெல்லாம் அனுதாபப்பட்டு பள்ளியில் சேர்க்க வகையுமில்லாமல் இருக்கலாம். ஆனால், “ஸோ வாட்?” என்பது எம்மாதிரியான கேள்வி. மிகத் தளர்ந்து போக வைத்த கேள்வி அது. என் மனைவியின் இறப்பு என்பது எனக்கு வேண்டுமானால் எதிர்காலம் குறித்த ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கிய, என் குழந்தைகளின் கல்வி குறித்த கவலைகளடங்கிய பெரும் இழப்பாக இருக்கலாம்.

ஆனால், இந்தப் பரந்த உலகிற்கு அது ‘ஸோ வாட்’தான் என்பது புரிந்தபோது ஏற்பட்ட மனச்சோர்வில் எதிர்காலம் உறைந்துபோய் விட்டது போலத் தோன்றியதுஅடுத்தவர்களின் மனதைப் புரிந்து கொள்ளவோ பெயரளவில் கூட கருணை காட்டவோ முடியாத இவரது பள்ளியில் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்குமென்றொரு சிந்தனை உள்ளுக்குள் ஓடியது. பெரிய அறிவிப்புப்பலகையில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து நூறு சதவீத வெற்றி குறித்த பெருமிதம் தொங்கிக் கொண்டிருந்தது. தேர்வு சதவீதத்தை வைத்துத்தான் கல்வியின் தரமும் மதிப்பிடப்படுகிறது. மற்றவையெல்லாம் அனாவசியம்.

இரண்டு பள்ளிகளிலும் இடம் இல்லை. ஆனால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தேயாக வேண்டும். என் நிதிநிலைதான் அடுத்த கட்டம். இனி இது குறித்துக் கவலைப்பட வழியில்லை. கட்டணம் அதிகமானாலும் பரவாயில்லை என்று தீர்மானிக்க வேண்டிய நிலை.மிகுந்த சோர்வுடன் இருந்த என்னைப் பார்த்து என் நிறுவனத் தலைவர் விஷயமென்ன என்று கேட்டறிந்தார்.

‘‘வேறு பள்ளிகளே இல்லையா?’’ என்றவரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘‘பிறகேன் தயங்குகிறாய். கட்டணம் பற்றி உனக்கென்ன கவலை? நானே தருகிறேன்...’’ என்றார். நுழைவு வாசலை இழுத்து மூடிய இறைவன் ‘வெண்டிலேட்டரை’த் திறப்பான் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

தம்பி வீட்டருகில் ‘கார்டனில்’ ஓர் இந்தியப் பள்ளி இருந்தது. உயர் நடுத்தரவர்க்கத்தினர் படிக்கும் புகழ் பெற்ற பள்ளி. இரட்டைக் கட்டணம். தனியாக என்றால் சமாளிக்க முடியாதுதான். நிறுவனத் தலைவரே பணம் தருவதால்தான் பள்ளி வளாகத்திற்குள்ளேயே நுழைந்தேன்.

மெர்சிடஸ் பென்ஸுகளுக்கும், ரேஞ்ஜ் ரோவர்களுக்கும், லேண்ட் க்ரூஷர்களுக்கும், ஜீப் செரோக்கிகளுக்கும் நடுவில் எனது லேன்சர் பரிதாபமாக நின்றது.விசாலமான தோட்டம். மிகப்பெரிய விளையாட்டுத் திடல். மிகப் புதிய கட்டடம். மத்திய வர்க்கத்திற்கேயுரிய தவிர்க்க முடியாத கூச்சத்துடன் பள்ளிக்குள் நுழைந்தேன்.

பள்ளிக்குள் மிடுக்கான சீருடையில் குழந்தைகளைப் பார்த்தபோது மனதுக்குள் லேசாக எட்டிப் பார்த்த உற்சாகம் அங்கும் பதிவாளராக ஒரு பெண்மணியைப் பார்த்ததும் மனது விட்டுப் போயிற்று. இன்னொரு ‘ஸோ வாட்’ வந்து விடக் கூடாதென்பதால் என் மனைவியின் இழப்பைப் பற்றிச் சொல்லப் போவதில்லையென்று தீர்மானித்துக் கொண்டேன்.

எதிர்பார்த்தது போலவே அறைக்கு வெளியில் காத்திருக்க வைத்து விட்டு அவர் ஏதோ வேலையாக இருந்தார். அரைமணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னர் என்னை அழைத்தவர் உட்காரச் சொன்னார். அதுவே அனுமதி கிடைத்த உணர்வை ஏற்படுத்தியது அப்போதைக்கு. ஆனால், உட்காரச் சொல்லி விட்டு அவர் எழுந்து போய் விட்டார்.

இன்னுமொரு பதினைந்து நிமிடங்கள். திரும்பி வந்தவர் தாமதத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். வந்த விசயம் கேட்டவரிடம் என் சிக்கலைச் சொன்னேன்அவர் தனது கணினியில் ஏதோ தேடி முடித்துவிட்டு, ‘‘இடம் இருக்கிறது. ஆனால், நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறீர்களா?’’ என்றார்.

‘‘இல்லை. அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில்தான் வருவார்கள்...’’‘‘ஓ! அவர்கள் அம்மாவோடு வருகிறார்களா?’’ என்றார் சிரித்துக் கொண்டே.ஏதோ நினைப்பில் சுயம் மறந்து சட்டென்று அந்த உண்மையைச் சொல்லி விட்டேன். ‘ஐயோ’ என்று நான் மனதிற்குள் பதறுவதற்குள் பதறி எழுந்தார் அவர். ஏதோ தவறுதலாகக் கேட்டு விட்டோம் என்பது போலப் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எனக்கே அவரைப் பார்க்க தர்மசங்கடமாக இருந்ததுதொடர்ந்து அவரது பேச்சு, செயல் எல்லாமே மாறிவிட்டன.

நீண்ட உரையாடல்களில் என் நிலையை அறிந்து கொண்டவர், ‘‘இந்தச் சூழலில் உங்கள் பிள்ளைகள் நுழைவுத்தேர்வு எழுதுவது கடினமாகத்தான் இருக்கும். நான் பள்ளி முதல்வரிடம் பேசுகிறேன்...’’ என்று தொடங்கி, அனுமதிக்காக நான் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டவர் அவர் தரப்பில் என்ன செய்யப் போகிறார் என்று விரிவாக எடுத்துச் சொல்லச் சொல்ல, இறைவன் ஜன்னலையும் திறப்பான் போலிருக்கிறதே என்று நம்பிக்கை வரத் தொடங்கியதுஓரிரு நாட்களில் என் குழந்தைகள் வந்ததும் பள்ளிக்கு அழைத்துச் சென்று தாளாளரையும் அவர் மூலமாக பள்ளியின் முதல்வரையும் சந்தித்தேன்.

தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக பள்ளியில் சேர்வதற்கான எல்லா நடவடிக்கைகளும் என்னை ஆட்கொள்ள, ஒருவகையாக சில நாட்களில் அதிகாரபூர்வமாகப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டதற்கான கடிதத்தைக் கைகளில் பெற்றுக் கொண்டேன்.

பள்ளி துவங்கிய முதல்நாளில் மக்களை அவரவர் வகுப்பறைகளில் விட்டு விட்டு தாளாளரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தேன். பள்ளியின் முதல் நாள் என்பதால் மிகுந்த பரபரப்பில் இருந்தார் அவர். என்னைக் கண்டதும் கையசைத்துவிட்டு தனது சகாக்களுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் அவரைக் காணவில்லை. அவரது அறைக்கு வெளியே வழக்கம் போலக் காத்திருந்தேன் நான்.

‘போய் விடலாமா?’ என்று முனங்கிய மனசாட்சியை, ‘தேவைக்காக மட்டும் காத்திருக்க முடிந்த உனக்கு, இத்தனை உதவிகளைச் செய்து தந்தவருக்கு நன்றி சொல்வதற்குக் காத்திருக்க மட்டும் நேரமில்லையா?’ என்று இன்னொரு குரல் பலமாக அதட்டி அடக்கியது.ஒருவகையாக அவர் வந்தார். அதே சிரிப்பு. எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொல்லி விட்டு வழக்கம் போல தாமதத்திற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, ‘‘இப்போது மகிழ்ச்சியா? குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் பிடித்திருக்கிறதா?’’ என்று கேட்டார்.

நான் உண்மையாகவே நிறைந்த மனதுடன் அவருக்கும் அவரது உதவிகளுக்கும் நன்றி சொல்லி விட்டு, ‘ஸோ வாட்?’ என்னைப்படுத்திய பாட்டைப்பற்றியும் அவரிடம் சொல்லி விட்டு விடைபெறப் போகும்போது அவர் சொன்னார்‘‘எல்லாத்தையும் விடுங்க சார். நீங்க எப்படி இருக்கீஙக?’’

அத்தனை நாளும் சேர்த்து வைத்திருந்த மன இறுக்கமும் அழுத்தமும் வடிந்து போய் என் மீதான கழிவிரக்கம் தன் உச்சத்திற்குச் சென்று விட வெடித்துக் கிளம்பிய என் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பத் தொடங்கினேன்.            

ஆசிப் மீரான்