இருளில் மட்டுமே ஒளிரும் டாட்டூ!



வாவ்... என துள்ளிக் குதிப்பது தெரிகிறது! அதேதான். டாட்டூவில் இது லேட்டஸ்ட். இருட்டில் ஜொலிக்கும் க்ளோயிங் டாட்டூ! சென்னை அண்ணா நகர்  ஜியோ டாட்டூ ஸ்டூடியோ ஜார்ஜுக்கு ஹாய் சொன்னோம். “இதை UV டாட்டூனு சொல்வோம். இதுல எந்த அளவுக்கு ஸ்பெஷலோ அதே அளவுக்கு  சிக்கல்களும் இருக்கு...’’ என்று ஆரம்பித்தார் சென்னை அண்ணாநகர் ஜியோ டாட்டூ ஸ்டூடியோ ஜார்ஜ். ‘‘முதல்ல என்ன ஸ்பெஷல்னு சொல்லிடறேன்.  ‘நான் என்ன டாட்டூ போட்டிருக்கேன்னு யாருக்கும் தெரியக் கூடாது.

முக்கியமா வீட்ல...’ இப்படி நினைக்கறவங்களுக்காகவே உருவானதுதான் இந்த க்ளோயிங் டாட்டூ! பகல்ல டாட்டூ போட்டிருக்கறதே தெரியாது. இரவுல  கூட UV லைட், அதாவது நியான் லைட் வெளிச்சத்துல மட்டும்தான் தெரியும். பப், பார்ட்டிகள்ல பளிச்சுன்னு மின்னும். காரணம், பயன்படுத்தற இங்க்.  அமெரிக்கா மாதிரியான நாடுகள்ல இருந்து ஸ்பெஷலா இந்த இங்க்கை வரவழைக்கறோம். தைரியமா எந்த டிசைனை வேணும்னாலும்  வரைஞ்சுக்கலாம். இந்த டாட்டூஸ் நிரந்தரமில்ல.

ஆறு மாதங்கள், இல்ல ஒரு வருஷத்துல மறைஞ்சுடும். வெள்ளை, ஆரஞ்ச், நியான், பிங்க், ப்ளூ, வயலெட்னு ஆறு நிறங்கள்ல இருக்கு...” என்ற ஜார்ஜ்,  சிக்கல்களைப் பட்டியலிட்டார். ‘‘ஒரு பாட்டில் இங்க் விலை ரூ.2 ஆயிரம். அதனால சின்ன சைஸ் டாட்டூ வரைய ரூ.4 ஆயிரத்துல இருந்து சார்ஜ்  பண்றோம். இவ்வளவு செலவு செய்தும் யாருக்கும் டாட்டூ தெரியாது; இரவுலயும் குறிப்பிட்ட லைட் வெளிச்சத்துலதான் தெரியும்; நிரந்தரமும் இல்ல.

இதனாலயே இந்திய இளைஞர்கள் அதிகமா க்ளோயிங் டாட்டூல ஆர்வம் காட்டறதில்ல. எல்லாத்துக்கும் மேல கொஞ்சம் டஸ்கி ஸ்கின் டோன்  உள்ளவங்களுக்கு இந்த டாட்டூ எடுப்பா தெரியாது. சிவப்பான ஸ்கின்லதான் நல்லா தெரியும். இதெல்லாம் போக UV டாட்டூ ஸ்டூடியோ ரொம்பவே  குறைவு. பொதுவா டாட்டூ ஆர்ட்டிஸ்ட்ஸ் சாதாரண வெளிச்சத்துலதான் வரைவாங்க. இதனாலயும் இதுக்கு வரவேற்பு இல்லைனு சொல்லலாம்...’’  என்கிறார்.

UV டாட்டூ டிப்ஸ்

நல்ல ஸ்டூடியோவை தேர்வு செய்ய வேண்டும். இருளில் உங்கள் டாட்டூ நன்றாகத் தெரிகிறதா என்று அறிவதற்கான லைட்ஸ் குறிப்பிட்ட  ஸ்டூடியோவில் இருக்க வேண்டும். இருளில் ஒளிர்வதற்கு ஏற்ப டிசைனை தேர்வு செய்வது முக்கியம். சாதாரண டாட்டூ டிசைனர்ஸுக்கும் UV டாட்டூ  டிசைனர்ஸுக்கும் வித்தியாசங்கள் உண்டு. ஏற்கனவே UV டாட்டூ போட்டுக்கொண்ட நண்பர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஸ்டூடியோவை நேரில்  சென்று பார்வையிட்டு, பின்னர் போட்டுக் கொள்ளவும்.

ஷாலினி நியூட்டன்