படத்தின் ஆதாரமே நிலம்தான்!அனைவரும் ‘காலா’வுக்காக காத்திருக்கும் காலம். ‘‘நாம் செய்கிற வேலையைச் செய்துட்டே இருந்தால், அதுவே ஒரு நல்ல இடத்துக்கு நிச்சயமா  கொண்டு போய்ச் சேர்க்கும். நான் எனக்கான பாதையில் நடந்துகிட்டே இருக்கேன். அந்த வகையில் முழு ஈடுபாட்டோடும், பிரியத்தோடும் செய்த படம்  ‘காலா’. மக்கள்கிட்டே பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அவங்களுக்கு பிடிக்கும்னு நம்புறோம். அதற்கான வேலைகளைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கோம்.  சில சமயம் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே பளிச்சுனு வந்து நிக்கும்ல, அப்படி ஒரு படமாக ‘காலா’ இருக்கும்...’’ கண்களில் புன்னகை  பூசிச் சொல்கிறார் டைரக்டர் பா.இரஞ்சித். தமிழின் நம்பிக்கையான இயக்குநராக நின்று காட்டியவர்.

எப்படி அமைஞ்சிருக்கு ‘காலா...’?

தமிழ் சினிமா பார்க்காத புதுக் கதையில்ல. ஏற்கனவே இதன் மேலான பரப்பை எடுத்துக்கிட்டு சில கதைகள் வந்திருக்கு. ஆனால், ‘காலா’வின்  வாழ்க்கை, கேரக்டர்களைக் கொண்டு வந்து வடிவமைச்ச விதம், அதிலிருக்கிற நிஜம், பேசும் பொருள் இதெல்லாம் வேறு விதம். அப்புறம் ‘காலா’வோட  அந்தக் குடும்பம், அதன் அழகுகள், குழந்தைகள் பெரிசா வந்து அவரை தாங்கிப் பிடிக்கிற விதம், காதலிக்கிற வயசில் நாம் தேடிக்கிற சந்தோஷம் கூட  இருக்கு. திடீர்னு வாழ்க்கை புரட்டிப் போடுறப்போ, எல்லாம் ஒரு கணத்தில் மாறிப்போகும். அப்படி ‘காலா’வுக்கு பிரச்னை வருது.

அவருக்கு எதிரே நானா படேகர். இந்தியா, நகரம் என்றான பிறகு நிலம் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. அப்படி இருக்கும்போது இங்கே  குடிசைப்பகுதி மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? Slum என்று சொல்லப்படுகிற, வாழவே தகுதியற்ற இடங்களில் இருக்கிற மக்களின்  நிலப்பறிப்பு எந்த விதத்தில் நடக்கிறது என்பதை அக்கறையாகச் சொல்லியிருக்கேன். அதை  இடர்ப்பாடுகளிலிருந்து எழுந்து மக்கள் எப்படி  எதிர்கொள்கிறார்கள் என்பதை விவரித்திருக்கிறேன். நானா படேகருடன் பிரச்னை தீவிரத்தன்மைக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது என்பது ‘காலா’வின்  விரிவாக்கம்.

ரஜினியின் படத்தில் நிலவுடைமை பற்றிய கதைக்களமா?

நிலம்தான் முக்கியமானது. நகரங்களில் இருக்கிற ஏழைகளின் நிலம் சூழ்ச்சிகளோடு திட்டமிட்டு பறிக்கப்படுகிறது. பெரிய பெரிய நீர்நிலைகளோடு  இருந்த கிராமங்கள் கூட காணாமல் போயிருக்கு. சுத்தப்படுத்துகிறோம் என்ற போர்வையில் எங்கோ அவர்களை அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள்  ஆதார வசதியின்றி விதியை நொந்துகொண்டு வாழ்கிற வாழ்க்கை நடக்கிறது. இந்தக் கேள்வியையும் முன் வைக்கிறது ‘காலா’. எனக்கான படங்களை  நான் கண்டு, கேட்டு உணர்ந்த விதங்களில் இருந்தே பெறுகிறேன். எளிய மக்கள் வாழ்வதற்கான அங்கீகாரத்தையும், இருத்தலுக்கான நியாயத்தையும்  கொண்டு போய் வைக்கிற இடத்தில் ‘காலா’ இருக்கும்.

சூப்பர் ஸ்டாரை உங்களின் மேலதிக உணர்வுகொண்ட கதைக்காக பயன்படுத்திக் கொள்ள முடிந்ததா?

ரஜினி இதில் நடித்திருக்கிறார். நாம் பார்க்கிற ஹீரோவாக வராமல் வேறு விதத்தில் நடித்திருக்கிறார். நான் நேரிடையாகப் பார்த்த, எளிமையான,  சாதாரண சந்திப்புகளில் பார்த்த அந்த ரஜினியே எனக்குப் போதுமானதாக இருந்தது. அந்தப் பகிர்தலில் அப்படியொரு சக்தியிருக்கு. அதையே இந்தப்  படத்துக்குரிய ஸ்டைலாக மாற்றினேன். என் விருப்பத்திற்கு அவர் கட்டுப்பட்டார். எனக்கு இதுதான் ரொம்ப ஒத்துழைப்பான தருணம். அவர்  குடிசைப்பகுதி மக்களோடு உறவாடுகிற விதம், நிலம் கைவிட்டுப் போகாமலிருக்க எடுக்கிற முயற்சிகள் என வேறு வகையான நடிப்பில் மிளிர்கிறார்.  ‘நிலம்தான் வாழ்க்கை’ என்ற பெருமுயற்சியில் அவர் நடிப்பு அவ்வளவு உண்மையானது.

எங்களோட டிஸிப்ளின், ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாமே படம் ரிலீஸானதும் புரியும். நிச்சயமாக அவருக்கு நல்ல பெயரை இன்னும்  கொடுக்கப்போகிற படம். அவரும், நானா படேகரும் சந்திக்கிற ஒரு முக்கியக் காட்சியை காட்சிப்படுத்தும்போது அதில் ஸ்டைல் இருந்தால்  நல்லாயிருக்கும் என யோசித்தோம். அவரே மறுத்து, என் கேரக்டரின் இயல்பின்படி இருக்கட்டும் என்றார். ‘என்னைத் திருப்திப்படுத்த வேண்டாம். உங்க  ரசனைக்கு படம் பண்ணுங்க. அதில் என் ரசிகர்களுக்கான அம்சங்களும் இருக்கற மாதிரி பார்த்துக்குங்க. அது எல்லாத்தையும் நீங்களேதான் முடிவு  பண்ணுங்க...’ என்றார். அதுதான் ரஜினி.

நானா படேகர், சமுத்திரக்கனி... ஹூமா குரேஸி...  ஏகப்பட்ட முக்கிய நடிகர்கள்...

கனி அண்ணன் இதற்கு முன்னாடி படங்களில் கருத்து சொல்கிற மாதிரிதான் பார்த்திருக்கிறேன். இதில் ரஜினியின் நண்பரா, சட்னு நடிப்பில் நம்  மனசைக் கொடுத்திட்டு நிற்கிற மாதிரி நடிச்சிருக்கார். அவருக்கான நல்ல இடம் இந்தக் கேரக்டர். நானா படேகர் இந்தி சினிமாவின் முக்கியமான  நடிகர். இவ்வளவு கமிட்மென்ட் உள்ள நடிகரை, இவ்வளவு கவனம் எடுத்துக்கொள்கிற ஒருத்தரை நான் பார்த்ததில்லை. ஈஸ்வரி ராவ் மனைவியாக,  அம்மாவாக பிரமிக்கிற வகையில் நடித்திருக்கிறார். அவரை இதுவரை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளாததை தமிழ் சினிமா உணரும்.

உங்களுக்கு என்றால் சந்தோஷ் நாராயணன் வேறுவிதம்தான்...

நட்பு. மேற்கொண்டு ஒரே அலைவரிசையில் இருக்கிறோம். ஒரு பாடல் அமைவதற்கான இடங்களில் எங்கள் ரெண்டு பேருக்கும் சிக்கல்களோ,  விவாதங்களோ எழுந்ததில்லை. நான் நினைப்பதை அப்படியே இசையில் கொண்டு வருவார். அவர் ‘காலா’வுக்காக இறங்கி அடித்தது  துடிப்பாக  இருந்தது அற்புதமான விஷயம். தடதடன்னு உள்ளே போய் அவர் ட்யூன்களை அள்ளித்தருகிற விதம் இருக்கு பாருங்க, அது ஆனந்தம். கதையின்  பின்புலத்தை பாடல்களே உணர்த்தும்.

இதற்கு முன்னால் ரஜினி ‘போராடுவோம், போராடுவோம், உரிமை மீட்பு’ என்றெல்லாம் எழுதி பாடியதில்லை. கடைசியாக வெளிவந்த டீசரில் கூட  ‘நிலம் உனக்கு அதிகாரம், எனக்கு உரிமை’ என்ற வசனங்கள் வருகின்றன. இந்த சினிமாவிற்கான அத்தனை புரிதல்களோடும் மக்கள் வருவார்கள்.  அதற்கான முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கு. கேமராமேன் முரளி நான் நினைப்பதை வண்ணமயமாகக் கொண்டு வந்திருக்கிறார். கதையின்  உள்ளீடாக இருக்கிற தத்துவத்தை புரிந்து கொண்டவர்.

மக்களின் மன விடுதலையைக் குறித்துப்பேசும் இந்தக் கதையில் அதைப் புரிந்தவர் தேவைப்படுகிறது. நான் என்னதான் எழுதினாலும், மக்களிடம் என்  கனவைக் கொண்டு நிறுத்தியது அவர்தான். குடும்பச்சூழலோடு இருக்கிற எமோஷனல் ஃபேமிலி ட்ராமாவும் இதில் உள்ளது. படத்தில் மானுட  விடுதலைக்கான இடங்களும் இருக்கிறது. மனம் விட்டு அகலாத வாழ்க்கையும் இருக்கிறது. இழுத்துப் பிடித்த ரப்பர் பேண்ட் போல தொடர்ந்த அதிர்தல்  படம் முழுவதும் நிறைகிறது. நான் என் சமூகத்துக்கான நம்பிக்கைக் கனவுகளைத் தந்திருக்கிறேன். அதற்கான முன்னோட்டம் ‘காலா’.

நா.கதிர்வேலன்