1930 முதல் இன்று வரை... ஆயிரம் ரேடியோஸை சேகரித்திருக்கும் அபூா்வ சிந்தாமணி!கலெக்டர்ஸ்

‘‘சொந்த ஊரு தூத்துக்குடி பக்கத்துல அரிவான்மொழி கிராமம். எலக்ட்ரிக்கல் துறைல டிப்ளமா படிச்சுட்டு இன்சூரன்ஸ் துறைல வேலை பார்க்கறேன்...’’  என்று ஆரம்பிக்கும் ராஜா ஸ்டானிஷ், உண்மையிலேயே வித்தியாசமானவர். ஆம். இவர் ரேடியோ காதலர்! 1930 முதல் இன்று வரையிலான  ரேடியோக்களை சேகரித்து வருகிறார்!

‘‘நினைவு தெரிஞ்சதுலேந்தே எங்க வீட்ல ரேடியோ இருந்தது. அப்ப வால்வு ரேடியோ கிடையாது. டிரான்சிஸ்டர்தான். தொலைக்காட்சி இருந்தாலும்  மக்கள் ரேடியோ கேட்டாங்க. எனக்கும் ரேடியோ கேட்கப் பிடிக்கும். குறிப்பா காதுக்குப் பக்கத்துல ரேடியோவை வைச்சு கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்க!’’  என்று சொல்லும் ராஜா ஸ்டானிஷ், சிறு வயதில் பழைய காசுகளையும் பழைய பொருட்களையும் கலெக்ட் செய்திருக்கிறார். ‘‘ஒருமுறை பழைய  பேப்பர் கடைல வால்வு ரேடியோவை பார்த்தேன். செவ்வக வடிவுல இருந்த அதைப் பார்த்ததுமே ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

உடனே அதை வாங்கி வந்து வால்வுகளை ரிப்பேர் செஞ்சேன். இந்த வால்வு ரேடியோ, ஸ்விட்ச் போட்டதுமே செயல்படாது. குறைந்தபட்சம் 20  நிமிஷங்கள் கழிச்சுதான் அதுல இருந்து சத்தமே வரும். வால்வுகள் சூடானதும்தான் இயங்கும். அப்புறம் தேவையான சேனல்ஸை நாப்புகளால  மாத்தலாம். அலைவரிசைல அது செயல்படறதால குறிப்பிட்ட அலைவரிசைகள்லதான் பாட்டு கேட்கும். இதெல்லாம் ‘அட’ போட வைச்சது. இதுக்கு  அப்புறம்தான் பழைய ரேடியோஸை தேடித் தேடி சேகரிக்க ஆரம்பிச்சேன். எந்த ஊருக்குப் போனாலும் முதல்ல அங்க இருக்கிற பழைய  கடைகளுக்குத்தான் போவேன்.

‘பழைய ரேடியோ இருக்கா’னு கேட்பேன். சில ரேடியோஸ் 50 வருஷங்களானாலும் நல்லா இயங்கும். சிலதுக்கு சின்னச் சின்ன ரிப்பேர் செய்ய வேண்டி  வரும். ரிப்பேர் செய்யறதுக்காகவே ஒருத்தரை தேடிப் பிடிச்சேன். வயசானவர். இப்ப இருக்கிற தொழில்நுட்பங்கள் அவருக்குத் தெரியாது. ஆனா, பழைய  ரேடியோஸை ரிப்பேர் பண்றதுல அவர் கில்லாடி. 1930கள்ல இருந்து 70கள் வரை ஜெர்மனி,  இங்கிலாந்து, ஹாலந்து மாதிரியான நாடுகள்ல தயாரான  ரேடியோக்கள் நம்ம நாட்ல சக்கைப்போடு போட்டிருக்கு. இதுல ஹாலந்தோட சிறப்பு பார் ரேடியோ. வெளிய பார்க்க ரேடியோ பெட்டி மாதிரி இருக்கும்.  உள்ளுக்குள்ள சின்ன ரேக் அமைக்கப்பட்டிருக்கும்.

அதுல மது பானங்களை அடுக்கலாம்! இதனோட உயரம் 3 அல்லது 4 அடி. இரண்டாம் உலகப் போர் சமயத்துல தகவல் பரிமாற்றத்துக்கு, வாக்கி  டாக்கி மாதிரி, ரேடியோஸை பயன்படுத்தி இருக்காங்க. அப்படிப்பட்ட ஒரு ரேடியோவை பழைய பேப்பர் கடைல பார்த்து வாங்கினேன்!  60கள்ல  ரேடியோ, கிராமபோன், டேப்ரிக்கார்டர்னு மூணும் இயங்கக் கூடிய த்ரீ இன் ஒன் அறிமுகமாச்சு. இதுவும் என்கிட்ட இருக்கு!  1930 முதல் 80 வரை  அறிமுகமான ரேடியோஸ் கிடைக்கறது கஷ்டம். தொழில்நுட்பம் மாற மாற சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் தங்கள் தயாரிப்பை அப்டேட் செய்துகிட்டே  வருவாங்க.

ஸோ, பழைய மாடல் புழக்கத்துல இருக்காது. அதன் பாகங்களும் கிடைக்காது. இதையெல்லாம் மீறித்தான் கலெக்ட் பண்ணியிருக்கேன். என் கிட்ட  இருக்கிற சில ரேடியோக்களுக்கான பாகங்கள் இப்ப எங்கயும் கிடைக்காது. ஆனாலும் அதை வைச்சிருக்கேன்...’’ என்று சொல்லும் ராஜா ஸ்டானிஷ்,  தனது சேகரிப்பை அறிந்து நண்பர்களே தங்களிடம் இருக்கும் ரேடியோக்களை தருவதுண்டு என்கிறார். ‘‘பழங்கால ரேடியோவை சீர் செய்ய ஆயிரம்  ரூபாய்ல இருந்து ரூ.20 ஆயிரம் வரை ஆகும். என்கிட்ட இருக்கிற நூத்துக்கும் மேற்பட்ட ரேடியோஸ்ல இருவது நல்ல கண்டிஷன்ல இருக்கு!

அதுக்காக கண்ல படற எல்லா ரேடியோஸையும் வாங்கமாட்டேன். அதனோட அமைப்பு, பயன்படுத்தின காலம்... இப்படி நிறைய பார்த்து வாங்குவேன்.  உடைஞ்ச ரேடியோஸை வாங்க மாட்டேன். ஏற்கனவே என்கிட்ட இருக்கிற மாடல்ஸையும் தொட மாட்டேன். பொதுவா ரேடியோனா செவ்வக வடிவுல  இருக்கும்னு நினைக்கறோம். ஆனா, வட்ட வடிவுலயும் வந்திருக்கு! அதெல்லாமே பொக்கிஷங்கள். 1930கள்ல வந்த ரேடியோவோட எடை 20 கிலோ.  குறைந்தபட்சம் இரண்டடி உயரமும் நல்ல அகலமும் இருக்கும். கிட்டத்தட்ட மினி பீரோதான். காலம் மாற மாற எடையும் குறைய ஆரம்பிச்சது. 50,  60கள்ல டிரான்சிஸ்டர் வந்தது.

80, 90கள்ல பாக்கெட் ரேடியோ. இப்ப நம்ம மொபைல்லயே appஆக இருக்கு!’’ என்று சொல்லும் ராஜா ஸ்டானிஷ், ரேடியோ சம்பந்தமான  பொருட்களையும் சேகரித்து வருகிறார். ‘‘30கள்ல ரேடியோ வைச்சுக்க லைசன்ஸ் தேவை. ஒவ்வொரு வருஷமும் அதை புதுப்பிக்கணும். தவறினா  செக்கிங் இன்ஸ்பெக்டர் ரேடியோவை எடுத்துட்டு போயிடுவார்! மின் கட்டணத்துக்கு மானியம் உண்டு. ரேடியோ வைச்சிருந்தா ஒரு யூனிட்டுக்கு 5  அணாதான். மத்ததுக்கு 9 அணா சார்ஜ் பண்ணுவாங்க! ரேடியோ வைச்சிருந்தா சிறப்பு குடும்ப அட்டை உண்டு! இதையெல்லாமும் கலெக்ட் பண்றேன்.

ரேடியோக்களின் ஆண்டனா, ரேடியோ சார்ந்த பத்திரிகைகள்... என்ன அப்படிப் பார்க்கறீங்க... அகில இந்திய வானொலி நிலையம் ‘வானொலி’ என்ற  பெயர்ல பத்திரிகை வெளியிட்டிருக்கு!  இப்படி ரேடியோ சார்ந்த எதையும் விடாம சேகரிக்கறேன்...’’ என்ற ராஜா ஸ்டானிஷ், ரேடியோ  சேகரிப்புக்காகவே தன் பரம்பரை வீட்டை பராமரித்து வருகிறார். ‘‘இப்ப இருக்கிற வீட்ல என் கலெக்‌ஷன்ஸை வைக்க முடியாது. ஏன்னா, என்கிட்ட  இருக்கிற ரேடியோஸ் எல்லாமே சைசுல பெருசு. அதனால விஸ்தாரமா, அகலமா இருக்கிற பரம்பரை வீட்ல ரேடியோக்களை வைச்சிருக்கேன்.  வருங்காலத்துல ரேடியோக்களுக்குனு ஒரு மியூசியம் வைக்கிற எண்ணம் இருக்கு!’’ என்கிறார் ராஜா ஸ்டானிஷ்.

ப்ரியா
படங்கள்: பரமகுமார்