புதிய இசையமைப்பாளர்களால் ஏன் புகழ் பெற முடியவில்லை?



75வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி  இளையராஜாவுடன் நடந்த உரையாடலின் சென்ற வாரத் தொடர்ச்சி...

காவியக் கவிஞர்களான கண்ணதாசன், வாலி இவர்களோடு இருந்த நெருக்கம்...


கவிஞர் கண்ணதாசனை எப்போது பார்த்தாலும் அனுபவம்தான். அவரோடு அமர்ந்து இசையமைத்த நாளெல்லாம் சந்தோஷம் கூடும். ஜி.கே.வெங்கடேஷோடு ‘சபதம்’ படத்தின் பாடல் கம்போஸிங்கின்போதுதான் அவரைப் பார்த்தேன். அருண்பிரசாத் மூவிஸ், பி.மாதவன் படம்.  ‘சுடுவதென்ன தென்றலோ, மலர்களோ...’ பாட்டு. அப்படியே வார்த்தைகளைக் கொட்டுவார். எதையும் தள்ளி வைக்க முடியாதபடிக்கு இருக்கும்.

பல இடங்களில் தன்னை மீறி எழுந்து எழுதுவார். மனங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து சொல்வது மாதிரி இருக்கும். அதற்காக அவர்  கஷ்டப்படுவது மாதிரியும் தெரியாது. அவரது வார்த்தைகளில் அனுபவம், கற்ற பாடம், பெற்றது எல்லாமே சேர்ந்து வரும். வாலியோட என் சந்திப்பு  சின்ன சண்டையில் ஆரம்பித்தது. நான் அப்படி நினைக்கலை. அவர் அப்படி நினைச்சிருக்கார்.

பின்னாடி ராத்திரி நடந்த சந்திப்பில் ஜி.கே.வெங்கடேஷிடம் ‘என்ன உன் அசிஸ்டென்ட் திருத்தம் எல்லாம் சொல்றானே, கேட்டியா...’னு  சொல்லியிருக்கார். ‘அவனுக்கு சொல்லத் தோணியிருக்கு. பாட்டு நல்லா வரணும்னு நினைச்ச விஷயம் தானே...’னு ஜி.கே.வி  சமாதானப்படுத்தியிருக்கார். அப்புறம் வாலியோட நான் இணைந்து படங்கள் நிறைய செய்தேன். சொல்லப் போனால் என் இசையமைப்பில் அதிகப்  பாடல்கள் எழுதினதே அவர்தான். எங்ககிட்டே கடைசி வரைக்கும் நல்ல நட்பு, புரிதல் இருந்தது.

எப்போதும் உங்ககிட்டே இருந்து கொண்டேயிருக்கிற மகோன்னதமான கணம் எது?

இப்போது இந்த நொடி என்று சொல்கிறபோது இந்த நொடி போவதற்கு எத்தனை நொடி, யுகங்கள் பின்னால் போகவேண்டும்? இந்தக் கணத்தை அடைய  எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டுமல்லவா? ஒரு பூ பூக்கிறது. முன்னர் அதுவே செடியாக, மொட்டாக கிளையில் இருந்திருக்கும். அதுவே  இலையாக கீழே விழுந்திருக்கும். அதுவே விதையாக இருந்திருக்கும். மண்ணாக இருந்திருக்கும். இவ்வளவு நடந்து முடிந்து இந்த நொடியில் மலராகி  நான் பூத்திருக்கிறேன். எத்தனையோ பாடல்கள் இவ்விதம் வெளிவந்திருக்கின்றன. எனக்கு எல்லா நொடிகளும், கணங்களும் பயனுடையவை.

மாதத்துக்கு புதிதாக பத்து இசையமைப்பாளர்கள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் உங்களை மாதிரியானவங்க ஒருவர் கூட கண்ணில்  படவில்லை. என்ன காரணம்?

ஊரையெல்லாம் பாலைவனம் ஆக்கிவிட்டு, தண்ணீருக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டு, நிழல் இல்லாமல் வெயில் கூடமாக ஆக்கி விட்டு... இதில்  ஒன்றும் கிடைக்கவே இல்லையே, நீர் குடிக்க முடியவில்லையே என்கிறீர்கள். நான் என்ன பதில் சொல்ல... நடப்பது பாலைவனத்தில் அல்லவா!

உங்கள் பாடல்களில் அவ்வளவு ரொமான்ஸ் இருக்கு. உங்களைப் பார்த்தால்... இப்படி இருந்துகிட்டு இப்படி பாடல் போடுவதெல்லாம் எப்படி  சாத்தியமாச்சு?

ரொமான்ஸ் உள்ளே இருக்கிற சமாசாரம். அது வெளியே எப்படித் தெரியும்! அது உங்ககிட்ட பேசும்போதா வரும்! அதற்கு உரியவர்கள் வரும்போது அது  வெளியாகும் (கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சிரிக்கிறார்). ரொமான்ஸ் என்பது உணர்வு. நீங்க என் பாட்டை ரொமான்ஸாக எடுத்துக்கிட்டால்  ரொமான்ஸ், பக்தியாக எடுத்துக்கிட்டால் பக்தி. அது உங்களைப் பொறுத்த விஷயம். என் ரொமான்ஸ் உங்கள் கற்பனையில் இல்லை. அது எனக்கே  எனக்கானது.

வெண்பா, உரைநடைகள் எழுதியவர் நீங்கள். இப்போது உங்கள் வரலாற்றைப் பதிவு செய்கிற எண்ணம் இருக்கா?

என்னங்க, பண்ணைபுரத்தில் பிறந்து எங்கெங்கோ சுத்திட்டு, சென்னைக்கு வந்து சேர்ந்தால் அது வரலாறு ஆகிடுமா! அது ட்ராவல்தானே. இது ஒரு  வரலாறா! உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசவாகிட்டே எல்லோரும் ‘உங்களைப்பத்தி டாக்குமென்டரி வரவேயில்லையே...’னு கேட்டாங்க.  ‘டாக்குமென்டரி முடிஞ்சு பார்த்தால் அது என் பேச்சாகத்தான் இருந்திருக்கும். அது எதுக்கு! என் படங்கள் பாருங்க, அது என்னப்பத்தி உங்ககிட்டே  சொல்லும்...’ என்றார்.

அது மாதிரியே என் இசைதான் என் வாழ்க்கை. என் வாழ்க்கையே என் இசைதான். என் இசைதான் உங்கள் வாழ்நாள் முழுக்க என்னைப் பற்றி  பேசிக்கொண்டே இருக்கும். உலகத்தின் வேறு எங்கோ ஒரு மூலையில் நான் பிறந்திருக்கலாம். அப்படியில்லாமல் பண்ணைபுரத்தில் பிறந்து வந்த  என்னை இத்தனை நாளும் தாங்கி வந்திருக்கிற மக்களுக்கு என் வந்தனம். அவர்களுக்காக தொடர்ந்து இசையைத் தொடர்வதே என் விருப்பம்.

கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடிய அனுபவம் உங்களுடையது. ஆனால், இசையமைப்பாளர் ஆன பிறகு உங்களிடம் ஆன்மீக மாற்றம்.. அந்த வாசல்  திறந்தது எப்படி?

முதல் படத்திலேயே பெரிய பெயர் கிடைச்சது. அது என்னால் நிகழவில்லை எனத் தோன்றிவிட்டது. முடிவு தெரியும் வரை எலெக்‌ஷனில் அடுத்த  நாள் யார் ஜெயிக்கப் போறாங்கன்னு யாருக்குமே தெரியாது. மக்கள் எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் பேசிவைத்த மாதிரி ஓர் ஆளை எப்படி  தேர்ந்தெடுக்கிறார்களோ, அப்படி என் இசையை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கு நான் காரணமேயில்லை.

வேறு எதுவோ இடையில் நடந்திருக்குன்னு புரிந்து போச்சு. மூகாம்பிகை கோயிலுக்கு போய் வந்த பின் இந்த மாற்றங்கள் எல்லாம் நடந்தேறியது.  அப்படித்தான் ஆன்மீக மாற்றம் வந்தது. அதை மாற்றம்னு கூட சொல்லக்கூடாது. இதுவரை மறைந்திருந்த திரை விலகி உண்மை தெரியுது. உண்மை  தெரிஞ்சதும், பிறகு இந்தப் பொய்யெல்லாம் கழட்டி விட வேண்டியதாயிற்று. அப்புறம் இந்த நடை, உடை, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் தூக்கி  எறியணும்னு தோன்றியது.

அப்படி எறிந்ததுதான் கூலிங்கிளாஸ், பேண்ட், சட்டை. இந்த உடலுக்கு போர்த்திக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த உடை. இதையெல்லாம்  விடுங்க. எல்லா கணத்திலும் தெரிந்த ஒண்ணும், தெரியாத ஒண்ணும் இருந்துகிட்டே இருக்கு. மாயை மெய்ம்மையாகவும், மெய்ம்மை மாயையாகவும்  இருந்துகிட்டே இருக்கு. இந்த இரண்டையும் சேர்த்து பிடிக்க முடியுமான்னு பார்க்கிறேன். அவ்வளவு எளிதில் ஆகாது போல... பார்க்கலாம்!

நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்