எவரெஸ்ட்டில் சாதனை சமையல்!



எவரெஸ்ட் சிகரத்தில் அமர்ந்தபடி உணவருந்த வேண்டுமா? உடனே வினீத் பாட்டியாவைத் தொடர்பு கொள்ளுங்கள். இவரது டார்கெட் எவரெஸ்ட்டில்  சமையல் செய்து பரிமாறுவதுதான்! லண்டனின் செல்வாக்கான மனிதர்களின் லிஸ்ட்டில் தவிர்க்க முடியாத சமையல் ஆளுமை, வினீத் பாட்டியா. தன்  30 ஆண்டுக்கால கிச்சன் அனுபவத்தில் பல பிரபலங்களின் நாக்குகளை தன் கைமணத்துக்கு அடிமையாக்கி இருக்கிறார். மிட்செலின் ஸ்டார் அந்தஸ்து  பெற்ற ஒன்பது ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இவரது சமையல் எக்ஸ்பரிமென்டுகளுக்கு வானமே எல்லை. அதன் விளைவுதான் முதல் பத்தி!

மும்பையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த வினீத்துக்கு விமானப்படையில் சேர்வதுதான் கனவு. எழுத்துத் தேர்வில் ஜெயித்தவருக்கு உடற்தகுதி  மைனஸாக, விரக்தி அடைந்தவரின் வாழ்க்கையை அவர் பிடித்த சமையல்கரண்டி கரையேற்றியது. 1985 - 1988 காலகட்டத்தில் சமையல் மற்றும்  வணிகம் படித்துவிட்டு வந்தவரை ஜூனியர் பயிற்சியாளராக ஓபராய் ஹோட்டல் ஏற்று பட்டை தீட்ட... 1993ம் ஆண்டு லண்டன் கென்சிங்டனிலுள்ள  ஸ்டார் ஆஃப் இந்தியா ஹோட்டலில் பணியாற்றத் தொடங்கினார்.

அங்குள்ள சமையல் சூழலை மாற்றி, பின் மெனுவை மாற்றியவர் அதன்பிறகு திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் விறுவிறுவென முன்னேறத்  தொடங்கினார். 2009ம் ஆண்டு லண்டனில் 1000 செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்தார் வினீத் பாட்டியா. தன் இரண்டு  ரசோய் ஹோட்டல்களுக்கும் மிட்செலின் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளதோடு சிறப்பான ரெசிபி, உபசரிப்பு மூலம் அதனைத் தக்கவைத்திருக்கிறார்.  ‘‘நல்ல நோக்கத்துக்கான இப்பயணத்தில் எவரெஸ்ட்டின் கீழே உணவு சமைத்து பரிமாறவிருக்கிறோம்.

மிட்செலின் ரேட்டிங் கொடுத்த தரத்தை நான் தயாரிக்கவிருக்கும் உணவில் மனப்பூர்வமாக உணர்வீர்கள்!’’ என நம்பிக்கை பெருக பேசுகிறார் வினீத்.  இந்திய உணவுகளை விதவிதமாகத் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வினீத்துக்கு நிராகரிப்பைக் கடந்து சுதந்திரச் சிறகு கொடுத்த நகரம்  லண்டன். 2001ம் ஆண்டு தனது ஸைகா உணவகத்துக்கும், பின்னர் ரசோய் ஹோட்டலுக்கும் அந்தக் கவுரவம் கிடைக்குமாறு தீவிரமாக உழைத்தார்.  லண்டனிலுள்ள ரசோய் உணவகத்தின் பட்டர் சிக்கன், கிரேவிக்கு ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் அடிமை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தன் மகன் வருல் மற்றும் சமையல் குழுவினருடன் விரைவில் 3,365 மீட்டர் தொலைவு பயணப்பட்டு லுக்வாவிலிருந்து நேபாளத்திலுள்ள எவரெஸ்ட்  கேம்புக்கு வினீத் செல்லப் போகிறார். சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கவே தடுமாறும் இடத்தில் அங்குள்ள பொருட்களை வைத்து கிரியேட்டிவ்வாக இவர்  சமைக்கப் போகிறார் என்பது கின்னஸ் சாதனையில் உள்ள மறைமுக சவால். இந்த நிகழ்வு மூலம் கிடைக்கும் நன்கொடையை பெண் குழந்தைகளின்  கல்வி, வேலைவாய்ப்புக்கு செலவிடப் போகிறார்.

‘‘இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை சென்னையிலுள்ள Heart for India Foundation அமைப்பு பராமரிக்கும் 2,500 குழந்தைகளுக்கு  செலவிடப்படுகிறது. எனவேதான் பயணம் கடினமாக இருந்தாலும் நல்ல நோக்கத்துக்காக நம்பிக்கையோடு முயற்சிக்கிறோம்...’’ புன்னகைக்கிறார்  வினீத். வெறும் நம்பிக்கையை வைத்து எவரெஸ்ட் அருகே கூட போகமுடியாது என்பதை இவரும் அறிவார். அதனால்தான் ஐம்பத்தி ஏழு வயதையும்  பொருட்படுத்தாது தினமும் மூன்று மணி நேரங்கள் பத்து கிலோ எடையை இடுப்பில் கட்டி இழுத்து பயிற்சி செய்து வருகிறார்.

‘‘வாழ்க்கை மீது புகார் சொல்லி புலம்புவதில் நம்பிக்கையில்லை. சமூகத்துக்கு என்னால் முடிந்ததைக் கொடுக்க விரும்புகிறேன்...’’ என்னும் வினீத்,  கின்னஸ் சாதனை என்பது நோக்கத்தின் ஓர் அம்சம்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். கடந்த ஆண்டு 83 நாட்கள் மட்டுமே வீட்டில்  தங்கியிருக்கிறார் வினீத். அந்தளவு பிசி! நேர்த்தியான ஹோட்டல்களைத் தொடங்குவதோடு, புதுமையான உணவுகளைச் சமைத்து அடுத்தடுத்த  சாதனைகளை நிகழ்த்தியபடியே செல்ல வேண்டும் என்பதுதான் வினீத் பாட்டி யாவின் லட்சியம். கலக்குங்க பாஸ்!

மிட்செலின் அங்கீகாரம்!

எட்வர்டு மற்றும் ஆண்ட்ரே மிட்செலின் சகோதரர்கள் 1900ம் ஆண்டு தொடங்கிய பிரெஞ்சு டயர் தயாரிப்பு நிறுவனமே மிட்செலின். வாகனங்கள்,  டயர்கள் குறித்த வழிகாட்டி நூலைத் தயாரித்தவர்கள் பின்னர் அதில் வரைபடம், மெக்கானிக்குகளின் கடை முகவரி, பெட்ரோல் பங்குகள்,  உணவகங்களையும் இணைத்த வழிகாட்டியை 35 ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகித்தனர்.

1904ம் ஆண்டு பெல்ஜியத்துக்கான வழிகாட்டியை வெளியிட்ட மிட்செலின் 1922ம் ஆண்டு முதல் தன் வழிகாட்டி நூலுக்கு 2.15 டாலர் விலையை  நிர்ணயித்தது. 1926 முதல் உணவகங்களை மதிப்பிட ரகசியக் குழுவை நியமித்து அவர்களின் விமர்சனத்தைப் பொறுத்து உணவகங்களுக்கு ரேட்டிங்  அளித்து வருகிறது மிட்செலின். மூன்று கண்டங்களில் 30 நகரங்களிலுள்ள 30 ஆயிரம் உணவகங்களை மதிப்பிட்டு ரேட்டிங் அளித்து வரும்  மிட்செலின் சிவப்புநிற வழிகாட்டி நூல்கள் 30 மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்று வருகிறது.

ஸ்டார் ரேட்டிங்!

உணவின் தரம், பணத்துக்கான மதிப்பு, நிலையான தரம் ஆகிய 3 அம்சங்களே மிட்செல் ஸ்டார் ரேட்டிங்குக்கானவை. தரமான, ருசியான, பர்சைக்  கடிக்காத உணவுகளைக் குறிப்பிட 1997ம் ஆண்டு முதல் R என்ற ரேட்டிங்கோடு நாக்கை சப்புக்கொட்டும் படத்தையும் மிட்செலின் வெளியிட்டு  வருகிறது.

ச.அன்பரசு