LKGக்கு தயார் செய்யலாம் வாங்க!



பாடப் பயிற்சி

ஃபீஸாக எவ்வளவுதான் பணம் க(கொ)ட்டினாலும் குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு டீச்சருடையது அல்ல; உங்களுடையது. எனவே, டிவி பார்த்துக்கொண்டே மறந்துபோன பாடங்களை குழந்தைக்காக மீண்டும் மீண்டும் படிக்கத் தொடங்குங்கள். அப்போதுதான் குழந்தையின்  ஹோம் ஒர்க்கை தவறில்லாமல் செய்து அனுப்ப முடியும்!  

பளு சுமக்கும் பயிற்சி

பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை, ‘எண் சாண் உடம்புக்கு முதுகே பிரதானம்!’ என்பதைப் புரிந்துகொண்டு பெற்றோர் களத்தில் இறங்குவது அவசியம்!  மூளையை விட முதுகே முக்கியம் என்பதால் குழந்தையைக் குனிய வைத்து, ஒவ்வொரு நாளும் அதன் முதுகில் படிப்படியாக பளுவை அதிகரித்து  பயிற்சி அளிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக மாதாந்திர மளிகை சாமான்களை குழந்தைகளை சுமக்கச் சொல்ல வேண்டும். பயிற்சி மேம்பாட்டில்  அம்மிக் கல்லை ஸ்கூல் பேக்கில் திணித்து அதை சுமக்கும்படி செய்யலாம்!

போர்க்கள பயிற்சி

காலை ஆறு மணிக்கு அலாரம் செட் செய்து, ஏழு மணிக்கு பூகம்பம் வந்ததுபோல் அலறி அடித்து எழவேண்டும். போர் முழக்கத்தைக் கேட்டு அலறும்  குழந்தையை குண்டுக்கட்டாகத் தூக்கி, தண்ணீரில் நனைய வைத்து, அதன் வாயில் இட்லியைத் திணித்து, டிரெஸ் மாட்ட ஒரு குழு தயாராக இருக்க  வேண்டும். தெரு முனையில் ஆட்டோ வருகிறதா என இன்னொரு குழு கண்காணிக்க வேண்டும். அழும் குழந்தையைத் தர தரவென்று இழுத்து  குடும்பமே தெருவுக்கு வரவேண்டும். பள்ளி திறப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே இந்தப் பயிற்சியைத் தொடங்கினாலும் ஸ்கூல் திறந்தபிறகும்  இதுவே தொடரும் என்பதை குடும்பத்தினர் மறக்கக் கூடாது!

கழுத்து நெரிப்பு பயிற்சி

குழந்தையைக் குளிக்கவைத்து துடைத்துவிடும்போது மேற்கொள்ள வேண்டிய பயிற்சி இது. முதல் கட்டமாக குழந்தையின் கழுத்தில் துண்டைச் சுற்றி  மென்மையாக இறுக்கலாம். ஒவ்வொரு நாளும் மென்மையைத் தளர்த்தி, வன்மையைக் கூட்டலாம். குழந்தையின் கண்கள் பிதுங்கி, நாக்கு வெளியே  தள்ளும் கட்டம் வரை இந்தப் பயிற்சி தொடரவேண்டும். மூச்சிழக்காமல் குழந்தை சமாளித்தால் அதன் கழுத்தில் டையை இறுக்கக் கட்டினாலும்  சமாளித்துக் கொள்ளும்!

இடப் பயிற்சி

இந்தப் பயிற்சிக்கு அக்கம் பக்கத்து சீனியர் குழந்தைகளை முதலில் ஓர் இடத்தில் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கான சாக்லெட், பிஸ்கெட்  போன்ற வரவேற்பு செலவுகளுக்கு மாதாந்திர பட்ஜெட்டில் இடம் ஒதுக்க மறந்துவிட வேண்டாம். மூவர் அமரக் கூடிய சோஃபாவில் பத்து பேரை  அட்ஜஸ்ட் செய்து ஒருவர் மடிமேல் இன்னொருவரைத் திணித்து, பதினொன்றாவதாக உங்கள் குழந்தையையும் திணிக்க வேண்டும். முரண்டு பிடிக்கும்  குழந்தை ஒரு கட்டத்தில் இதுவும் ஒரு விளையாட்டு என நினைக்கும். அதுதான் ஃபைனல். இனி நம்பிக்கையுடன் குழந்தையை ஆட்டோவில்  ஏற்றலாம்!

எஸ்.ராமன்