காரைக்குடி ஸ்ரீபிரியா மெஸ்லன்ச் மேப்

தமிழர் விருந்தோம்பலிலேயே பெயர் பெற்றவர்கள் செட்டிநாட்டுக்காரர்கள்தான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களால்  அரைக்கப்படும் செட்டிநாட்டு மசாலாவே முதன்மையான காரணம் என்கிறார்கள். எப்போதும் காரை வீடுகளில் குறைந்தது நான்கைந்து பெண்கள்  இருந்துகொண்டே இருப்பார்கள். அரைப்பது, புடைப்பது, இடிப்பது, சமைப்பது என வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். நகரத்தார் வரலாற்றில்  வணிகமும், விருந்தோம்பலும் மொத்த பக்கத்தையும் நிரப்பும். இந்தியாவில் எந்த நகரத்துக்குச் சென்றாலும், சின்ன ஹோட்டல் முதல் ஸ்டார்  ஹோட்டல் வரை ‘செட்டிநாடு உணவு கிடைக்கும்’ என்ற விளம்பரத்தைப் பார்க்கலாம்.

செட்டிநாட்டு உணவென்றாலே உணவுப்பிரியர்களுக்கு நாக்கு சப்புக் கொட்டத் தொடங்கிவிடும். செட்டிநாட்டு உணவுக்கென்று தனித்த வரலாறு உண்டு.  அந்த வகையில் காரைக்குடி கல்லுக்கட்டி சந்தில் இருக்கும் ‘ஸ்ரீபிரியா மெஸ்’ ஆதி ருசியை இன்னமும் தொடர்கிறது. தெருவில் நுழைந்ததுமே மசாலா  வாசம் வரவேற்கிறது. ஒரே நேரத்தில் 50 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிலான இடம். ஆனால், எப்போதும் கூட்டம். கடையின் உரிமையாளர்  சிவகுமாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெண்களே! கிச்சனில் ஆரம்பித்து சர்வீஸ் செய்வது வரை பெண்கள்தான்.

“தண்ணிய கம்மியா குடிங்க... நல்லா அள்ளிச் சாப்பிடுங்க...’’ என்று அன்பையும் சாதத்தையும் அள்ளி வைக்கின்றனர். கூடவே, ஹோட்டல்  உரிமையாளர் சிவகுமாரின் மனைவி ராஜாத்தி ஒவ்வொரு டேபிளாக வந்து கவனிக்கிறார். நகரத்தார் உணவு என்றாலே நாட்டுக்கோழி வறுவலும்,  செட்டிநாட்டு மசாலாவும்தான். அந்த வகையில் நண்டு கிரேவி இவர்களது ஸ்பெஷல். நாட்டுக்கோழி கிரேவியை அற்புதமான ருசியில் சுடச்சுட  தருகிறார்கள். கோழியிலிருந்து கிரேவியைத் தனியே பிரிக்க முடியவில்லை. கெட்டி பதத்தில் சுண்டக் காய்ச்சிய கிரேவியை சோற்றில் பிசைந்து  சாப்பிடும்போது அப்படி ஒரு ருசி. “இது எங்களுக்கு பொன்விழா ஆண்டு. 1968ல இந்தக் கடையை ஆரம்பிச்சோம்.

ஆனா, அதுக்கு முன்னாடியே எங்கம்மா சரஸ்வதி வீட்லயே மெஸ் நடத்தினாங்க. அப்பத்தான் இந்த கிரேவி பக்குவத்தை அறிமுகப்படுத்தினாங்க.  இந்தக் கடைக்கு ரொம்ப நாள் வரை போர்டு வைக்கலை. பழைய மடக்கு கதவுதான். மக்கள் தேடி வர்றாங்க. சிரமப்படக் கூடாதேனு சமீபத்துல போர்ட்  மாட்டினேன். அம்மாவோட கைப்பக்குவத்தை முழுசா கத்துக்க முடியலை. ஆனா, அம்மா கூடவே இருந்த காந்தியம்மா சரியா அதைக் கத்துகிட்டு  எங்களுக்கு பக்குவத்தை சொல்லிக் கொடுத்தாங்க. இப்பவும் காந்தியம்மா எங்க வீட்ல ஒருத்தரா இருக்காங்க...’’ என்று சிவகுமார் முடிக்க அவர்  மனைவி ராஜாத்தி தொடர்ந்தார்.

“வீட்ல அரைக்கிற மசாலாதான் முக்கியம். அப்புறம் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரல்ல இடிச்சு அப்படியே நல்லெண்ணெய்ல வதக்கணும்.  பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு... எல்லாம் தரமா வாங்கி உரல்ல இடிச்சு சமைக்கணுமே தவிர மிக்சில அரைக்கக் கூடாது. அப்படி செஞ்சா  வாசம் போயிடும். நாட்டுக்கோழி செய்யறப்ப எங்க ஃபார்முலாவைத்தான் கடைப்பிடிக்கறோம். கோழியை மஞ்சத்தண்ணீர்ல நல்லா சுத்தம் செஞ்சு  விறகடுப்பு கங்குல நல்லா கருக வாட்டுவோம். அப்புறம் அரிசி களைஞ்ச கழுநீர்ல 20 நிமிஷங்கள் வரை ஊற வைப்போம். பிறகு கிரேவி  சமைப்போம்...’’ என்கிறார் ராஜாத்தி. மதிய உணவு மட்டும்தான்.

12 மணிக்கே ஆட்கள் வரத் தொடங்கி விடுகிறார்கள். மாலை 4 மணி வரை சுடச்சுட பொன்னி அரிசி சாதத்தில் தொக்கு வகைகளைத்  தந்துகொண்டேயிருக்கிறார்கள். ராமேஸ்வரம், தொண்டியில் பிடிக்கப்பட்ட கடல் மீன்களை வாங்குகிறார்கள். மட்டன், சிக்கன், இறால் ஆகியவற்றுக்கு  தேங்காய்ப்பால் சேர்த்து கிரேவி செய்கிறார்கள். சொல்லப்போனால் தங்கள் அனைத்து உணவிலும் தேங்காய்ப்பாலை பிரதானமாக சேர்க்கிறார்கள்.  இவர்கள் சமைத்த நண்டை எளிதாக உடைக்க முடிகிறது. மிளகு, சீரகத்தில் சுண்டப்பட்ட ஆட்டு ஈரல் சுண்டி இழுக்கிறது. அரிதாகவே பச்சை மற்றும்  காய்ந்த மிளகாயைப் பயன்படுத்துகிறார்கள்.

மற்றபடி காரத்துக்கு மிளகுதான். மீன் வறுவலைத் தவிர எதையும் எண்ணெய்யில் பொரிப்பதில்லை என்பது சாப்பிடும்போதே தெரிகிறது. “அப்பா  வேணுகோபால் அடிக்கடி சொல்வார், ‘பசி மாதிரி ஒரு கொடுமையான மிருகம் எதுவுமே இல்ல’னு. ஒரு முறை கேரியர்ல ஒருத்தர் வாங்கிட்டுப்  போயிருக்கார். ‘சாப்பாடு ருசியா இருந்தது. ஆனா, பத்தலை’னு மறுநாள் அவர் சொன்னதும் அப்பா அதிர்ந்து அழுதுட்டார். ‘இதுக்கு ஏன்  கவலைப்படறார்’னு நாங்க நினைச்சோம். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் காலம் வரை பார்சல் உணவு கட்டுனதே இல்ல. நாங்க கட்டுனா கூட  கோவப்படுவார். ‘நேர்ல வரச் சொல்லு. வயிறார சோறு போட்டு அனுப்புவோம்’பார்...’’ என்கிறார் சிவகுமார்.

செட்டிநாடு நண்டு வறுவல்

சுத்தம் செய்த நண்டு - 8.
இடித்த சின்ன வெங்காயம் - 1.
பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
கறிவேப்பிலை - 1 கொத்து.
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்.
கசகசா - 1 டீஸ்பூன்.
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் - 7.

பக்குவம்:

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது...  என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு:

நண்டு விரைந்து வெந்துவிடும் என்பதால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். எப்பொழுதும் சமைக்கும் நேரத்தில்தான் நண்டை சுத்தம்  செய்யவேண்டும். முன்பே சுத்தம் செய்தால் சுவை மாறும். கிருமிகள் சேரும். நண்டுக்கு மிளகுக்கு பதில் மிளகாயைப் பயன்படுத்த வேண்டும்.  ஏனெனில் நண்டு, மிளகு இரண்டுமே சூட்டை அதிகப்படுத்தும்.

திருமண மெனு

காரைக்குடியைச் சுற்றி 96 ஊர்களில் நகரத்தார் வசிக்கிறார்கள். இங்கு அசைவத்தைவிட சைவ உணவில் அதிகமான வகைகள் வைத்துள்ளனர்.  காரைக்குடி பக்கம் ஓர் ஊரில் இறங்கி ஒருவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றால் செட்டியார் பெயரைச் சொல்லி கேட்பதைவிட ஆச்சியின்  பெயரைச் சொன்னால் உடனே வீட்டை அடையாளம் காட்டுகிறார்கள். அந்தளவுக்கு பெண்களுக்கே இச்சமூகத்தில் உறவு படி நிலைகள் இருக்கின்றன.  காரைக்குடி வீடுகளில் எப்போதும் பெண்கள் கூட்டாக இருப்பார்கள்.

வேலையைப் பகிர்ந்து செய்வார்கள். வீட்டின் சமையலறை முற்றத்துடன் மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும். பொதுவாக திருமணங்களில் காலை  ஏழுமணிக்கே காலை பலகாரம் இருக்கும். காலை பத்து மணிக்கு ரொட்டி, மிட்டாய், நன்னாரி சர்பத் கொடுக்கப்படும். பதினோரு மணிக்கு 51 வகை  சாப்பாட்டை பரிமாறுவார்கள். மூன்று மணிக்கு பணியாரம், கந்தரப்பம், பாசிப்பருப்பு பணியாரம், மசாலா சீயம் ஆகியவற்றை ‘இடைப்பலகாரம்’ என்ற  பெயரில் தருவார்கள். இரவு மாப்பிள்ளை வீட்டு சாப்பாட்டுடன் மணக்கோல படி முறுக்கு சாப்பிட்டுவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

திலீபன் புகழ்
படங்கள்: ஆர்.குழந்தைசாமி