3D எலும்புகள்!
உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்
எண்பதுகளில் 3டி பிரிண்டர் அறிமுகமானபோது அதைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற சார்லஸ் ஹல் கூட அதன் வளர்ச்சி இவ்வளவு வேகமாக அப்டேட் ஆகும் என நினைத்திருக்க மாட்டார். இன்று 3டி டிசைனில் உங்களுக்கு என்ன வேண்டும்? தங்கம், வெள்ளி, பீங்கான், துப்பாக்கி, வீடுகள், மெழுகுப்பொருட்கள்... என பட்டியல் வளர்ந்து மனிதர்களின் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உறுப்புகளை டிசைன் செய்து பொருத்துமளவு வளர்ந்துவிட்டது! கடந்தாண்டு அரியானாவின் குருகிராமில் முதல் 3டி உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, இவ்வாண்டிலும் அச்சிகிச்சை கென்ய நாட்டைச் சேர்ந்தவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு தனியார் டிவி சேனல் செய்த ஆய்வில் இந்தியாவில் ஆண்டுதோறும் சரியான உறுப்புகள் கிடைக்காமல் 5 லட்சம் பேர் மரணித்து வருவதாகவும், இரண்டு லட்சம் பேருக்கு மாற்று கல்லீரலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சிறுநீரகமும் அவசரத் தேவை என்பது தெரிய வந்துள்ளது. தானப் பட்டியலில் வரிசைப்படி காத்திருக்க நேர்ந்தும் பொருத்தமான உறுப்புகள் கிடைக்காமல் நோயாளிகள் பலரும் இறக்கும் அவலமும் நிகழ்கிறது. இச்சூழலில் கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவற்றை 3டி பிரிண்டர் மூலம் ஒருவரின் செல்களை வைத்தே உருவாக்கு வதால் இந்தச் சிகிச்சையில் வெற்றிவாய்ப்பு அதிகம். இப்போது சிறிய உறுப்புகளை மட்டுமே 3டியில் உருவாக்கி வருகிறார்கள்.
சிக்கலான உறுப்புகளான இதயம் போன்றவற்றை 3டியில் உருவாக்க சில ஆண்டுகள் தேவைப்படலாம். அரியானாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தாடையை உயர்த்திப் பிடித்தபடி வந்த இந்தி பேராசிரியை பெண்மணிக்கு கடும் கழுத்துவலி. ஒன்பது மாதங்களாக தூங்காமல் தடுமாறிய அவரை பரிசோதித்தபோது கழுத்திலுள்ள முள்ளெலும்புகள் காச நோய் பாதிப்பில் சிதைந்து காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. ‘‘குழந்தையின்மைக்காக பல்வேறு மருத்துவர்கள் பரிந்துரைத்த ஸ்டெராய்டு மாத்திரைகள்தான் முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காரணம். எங்களிடம் பேராசிரியை வந்தபோது முதுகெலும்புக்கும் கழுத்துக்கும் தொடர்பேயில்லை!’’ என்கிறார் எலும்பு வல்லுநரான மருத்துவர் நாயக்.
கடுமையான கழுத்து வலியால் இரவுகளில் அலறித் துடித்த பேராசிரியைக்கு இறுதியாக தீர்வு கிடைத்தது டைட்டானியம் உலோகத்தில் மூன்று செ.மீ அளவில் செய்த 3டி முள்ளெலும்புகள் மூலம்தான்! இதனை தில்லியிலுள்ள சஞ்சய்குமார் பதக், மருத்துவர் பதக்கின் வழிகாட்டுதலில் தயாரித்து அளித்தார். ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ் நாட்டுக்குத் தேவையான டைட்டானிய உறுப்புகளை உருவாக்கித் தரும் பதக், 2015ம் ஆண்டு மும்பையில் 3டி பிரிண்டிங் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். ‘‘புதிய மாற்று உறுப்பு டெக்னாலஜியை மருத்துவர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிவேன். 3டியில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பது சிரமம்தான்; முடியாத ஒன்றல்ல என்பதால் முயற்சித்தேன்!’’ என்கிறார் பதக்.
வெளிநாட்டில் 50 - 60 லட்சம் மதிப்பிலான 3டி உறுப்புகளை இந்தியாவில் 1.5 - 5 லட்சம் வரையிலான விலையில் அளிக்கிறார். இதில் துப்பாக்கி தோட்டாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மண்டையோட்டை முழுமையாக 3டியில் உருவாக்கி, சேதமடைந்த பகுதியையும் உருவாக்கித் தந்துள்ளது ஸ்பெஷல் சாதனை! பேராசிரியைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குலைந்து காசநோய் ஏற்பட்டது என்றால் கென்யாவைச் சேர்ந்த லகிதா வாங்கி என்ற ஜிம்னாஸ்டிக் சிறுமிக்கு இடது முழங்காலில் எலும்பு புற்றுநோய் தந்தையின் ஜீன் சொத்தாக வந்திருந்தது. இப்போது முழங்காலில் லகிதாவுக்கு செய்துள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினால் முழங்காலை வெட்டியெடுக்காமல் தவிர்த்திருப்பதோடு, நடப்பதில் சிரமம் ஏதுமில்லாமல் பொருத்தியிருக்கிறார்கள்.
பதக்கின் 3டி பிரிண்டிங் நிறுவனத்துக்குப் போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இம்முறையில் உணவைக்கூட தயாரிக்க நாசா ஆராய்ச்சி செய்து வருகிறது! 3டி பிரிண்டிங் மாற்று உறுப்புகளை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றுக் கொள்ள தயங்கினாலும், பின்னர் அது தலைகீழாக மாறியது. உடலின் செல்களிலிருந்தே உறுப்புகளை உருவாக்கத் தொடங்கி ஆய்வில் சாதித்துள்ளனர் அமெரிக்காவின் நார்த் கரோலினாவிலுள்ள வேக் ஃபாரஸ்ட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
‘‘லகிதாவுக்கு வளரிளம் பருவம் என்பதால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை முழங்கால் எலும்புகளை 5 மி.மீ நீளத்துக்கு சீரமைத்து வளரும்படி செய்தால்தான் உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப கால்களும் சமமாக வளரும்...’’ என்கிறார் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் நிஷாந்த் சோனி. புற்றுநோய் என்றால் நோய் தாக்கிய உறுப்பை வெட்டியெறிவது என்ற எண்ணமுள்ள கென்யாவிலிருந்து லிகிதாவின் அம்மா தில்லிக்கு வந்ததே மகளின் கால்களை வெட்டாமல் காப்பாற்றத்தான்! உறுப்பு மாற்று சிகிச்சை என்பது நோயாளிக்கு மருத்துவரின் ஆலோசனையாக இருக்கலாமே ஒழிய இதனை வலியுறுத்தக் கூடாது. ஏனெனில் 3டி முறையில் செய்யப்படும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் வெற்றி உள்ளது போல தோல்வியும் உண்டு.
‘‘3டி உறுப்புகளை பல்வேறு கம்பெனிகள் தயாரிப்பதால் இதிலுள்ள தரத்தை உறுதி செய்வது யார் என்ற கேள்வி உள்ளது...’’ என்கிறார் ஆஸ்டின் மெடிக்கல் பிரிண்டிங் லேபைச் சேர்ந்த ஆஸ்டின் சுவான். தரத்தையும் பாதுகாப்பையும் உலக சுகாதார நிறுவனமும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஆணையமும் உறுதி செய்யும் வகையில் விதிகள் வருங்காலத்தில் இயற்றப்படலாம். கென்யா நாட்டுச் சிறுமி லகிதா போன்றோருக்கு மாற்று சிகிச்சை கிடைக்கலாம். ஆனால், வளரிளம் பருவத்தைக் கடந்த எலும்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தருவது 3டி முறை உறுப்புகளே என்பது மறுக்க முடியாத உண்மை.
ச.அன்பரசு
3டி பிரிண்டிங்!
3டி முறையில் CAD வடிவிலான கோப்பு, பல்வேறு அடுக்குகளாக உருவாக்கப்பட்டு... ஒன்றிணைக்கப்பட்டு பொருள் உருவாகிறது. திரவ வடிவில் அல்லது பவுடர் வடிவிலான பாலிமரோடு அதனை ஒட்டும் பொருளும் இணைந்திருப்பது 3டி ஸ்பெஷல். இதில் மாற்றங்களை எளிதாக உருவாக்க முடிவது இதன் பிளஸ் பாய்ண்ட். நோயாளிகளின் உடல் அமைப்புக்கு ஏற்ப உறுப்புகளைத் தயாரிக்க முடிவது 3டி பிரிண்டிங் முறை பிரபலமாக முக்கியக் காரணம். உணவு, வீட்டு உபயோகம், வாகன உதிரிப்பாகங்கள், உடல் உறுப்புகள் (எலும்பு, மூளை, பல்...) இம்முறையில் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வளர்ச்சி!
ஜப்பானின் முனிசிபல் கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹைடியோ கொடாமா, 1981 ஆம் ஆண்டு பாலிமரோடு, புற ஊதாக்கதிர்களைப் பயன்படுத்தி முப்பரிமாணவடிவத்தில் இணைக்க முயற்சித்தார். பின்னர், 1984 ஜூலை 16 அன்று பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்களான அலெய்ன் லெ மெகாடே, ஆலிவர் டெ விட்டே, ஜீன் கிளாட் ஆன்ட்ரே ஆகியோர் ஸ்டீரியோலித்தோகிராபி என்னும் அச்சிடும் முறையைக் கண்டறிந்து பேடன்ட்டுக்கு விண்ணப்பித்தனர்.
வணிகத்துக்கு உதவாது என அதனை பிரெஞ்சு ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும், சிலாஸ் (CILAS) நிறுவனமும் நிராகரித்தன. மூன்று வாரத்துக்குப் பிறகு சார்லஸ் ஹல் (3D systems Corporation) விண்ணப்பித்த பிரிண்டிங் முறை இன்றுவரை பயன்பாட்டிலுள்ளது. போட்டோபாலிமரில் புற ஊதா லேசர் கதிர்களை பயன்படுத்துவது இதில் தனித்துவமானது. 1993ம் ஆண்டு எம்ஐடி, 3டி பிரிண்டிங் என்பதை வணிகப்படுத்தி வெற்றி கண்டது.
|