முன் பின் தெரியாதவர்களிடம் பெண்கள் எப்படிப் பழக வேண்டும்..?



இரவுக்கு ஆயிரம் கண்கள் தரும் டிப்ஸ்

‘‘சின்ன வயசுலயே க்ரைம் நாவல்கள் படிக்க ஆரம்பிச்சுட்டேன். கிண்டில டிப்ளமோ இன் மெக்கானிக்கல் படிக்கிறப்ப பக்கத்துலயே எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆபீஸ் இருந்தது வசதியா போச்சு! மார்க்கெட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே புது நாவல்களை வாங்கிப் படிச்சுடுவேன். படிப்பு முடிஞ்சதும் அவங்க நடத்தின ‘சூப்பர் நாவல்’லயே உதவி ஆசிரியர் வேலை கிடைச்சது. அப்புறம் ‘குமுதம்’, ‘விகடன்’, ‘கல்கி’னு பத்திரிகையாளரா வலம் வந்தேன். இதெலாம் கிரேஸிமோகன் சாரை சந்திக்கிறவரைதான். எனக்கு சினிமா வரும்னு அவருக்கு தோணியிருக்கு.

சுரேஷ் கிருஷ்ணா சார்கிட்ட சேர்த்துவிட்டார். அப்புறம் கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட டிஸ்கஷன், கே.வி.ஆனந்த் சார், ராகவா லாரன்ஸ் மாஸ்டர்னு ஒர்க் பண்ணினேன். இந்த அனுபவத்தோடு என் முதல் படத்தை க்ரைம் த்ரில்லரா கொண்டு வந்திருக்கேன்!’’ உற்சாகமாகப் பேசுகிறார் மு.மாறன். அருள்நிதி, மகிமா நம்பியார் நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் அறிமுக இயக்குநர். ‘‘ஒரு க்ரைம் நாவல் படிக்கிறப்ப எப்படி பரபரப்பா இருக்குமோ அப்படி ஒரு விறுவிறுப்பையும் வேகத்தையும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ கொடுக்கும். இந்தப் படத்தோட கதையை ‘உறுமீன்’, ‘மரகத நாணயம்’ படத் தயாரிப்பாளர் டில்லிபாபு சார்கிட்ட சொன்னேன்.  

முழுக் கதையையும் அவர் சிரிச்சுக்கிட்டே கேட்டதும் எனக்கு பயம் வந்துடுச்சு. ஏன்னா நான் சொன்னது க்ரைம் த்ரில்லர்! ஒருவேளை அவருக்கு கதை பிடிக்கலையோனு நினைச்சேன். ஆனா, ‘ஸ்கிரிப்ட் நல்லா இருக்கு... ஹீரோவா யாரை மைண்ட்ல வச்சிருக்கீங்க’னு அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனார். இந்தக் கதைக்கான ஹீரோ ஒரு சாதாரண ஆள்... கொஞ்சம் சீரியஸ் மூட்...னு எழுத ஆரம்பிச்சதும் டக்குனு அருள்நிதி சார்தான் மனசுக்குள்ள வந்தார். அதை தயாரிப்பாளர்கிட்ட சொன்னதும் உடனே நிர்வாகத் தயாரிப்பாளர் அரவிந்தன் கிட்ட பேசினார். அவர் அருள்நிதி சாரை கதைக்குள் கொண்டு வந்துட்டார்...’’ மகிழ்கிறார் மு.மாறன்.

எப்படி வந்திருக்கு படம்..?

அருள்நிதி சார் உட்பட பலரும் படத்தை பார்த்துட்டாங்க. எல்லாருக்குமே மகிழ்ச்சி. இந்தக் கதைக்குள்ள அருள்நிதி சார் வந்ததும் படத்துக்கு புது பிளாட்ஃபார்ம் கிடைச்சது. ரொம்ப தெரிஞ்ச முகங்களான ஆர்ட்டிஸ்ட்கள் அமைஞ்சது. க்ரைம் தில்லர். அதனால பெரும்பாலான சீன்ஸை நைட்லதான் ஷூட் பண்ணியிருக்கோம். படத்துல மழைக்கும் முக்கிய பங்கு இருக்கு. ஒரு கால் டாக்சி டிரைவர் சில பிரச்னைகளை சந்திக்கறார். அதுல இருந்து எப்படி மீண்டு வர்றார்? இதுதான் கதை. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட பெண்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையா இருக்கணும்னு அழுத்தமா இதுல பதிவு செய்திருக்கோம்.

அருள்நிதி சார் தவிர, மகிமா நம்பியார், சாயாசிங், ஆனந்தராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன்னு 12 நட்சத்திரங்களுக்கு மேல இருக்காங்க. ஆனந்த்ராஜ் வரும் இடங்கள்ல காமெடி கலகலக்கும். லட்சுமி ராமகிருஷ்ணன் மேம் நடிப்பு பேசப்படும். சாயா சிங்குக்கு பவர்ஃபுல் ரோல். அஜ்மல் சாருக்கு இந்தப் படம் நல்ல ரீ என்ட்ரியைக் கொடுக்கும். பொதுவா எந்தவொரு படத்துக்கும் வில்லன் ரோல் வலுவா இருந்தா அது பேசப்படும், வெற்றியடையும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த வகைல அஜ்மல் இந்தப் படத்துல பேசப்படுவார். ‘கோ’ படத்துல நான் ஒர்க் பண்ணும் போதே அவர் பழக்கம். ‘தனி ஒருவன்’ல அரவிந்த்சாமிக்கு முன்னாடி அவரைத்தான் அப்ரோச் பண்ணியிருக்காங்க.

அஜ்மல்தான் மறுத்துட்டார். நடிச்சா ஹீரோதான்னு பிடிவாதமா இருந்தார். இந்த ஸ்கிரிப்ட் அவரோட பிடிவாதத்தை தளர்த்தியிருக்கு!  நல்ல டெக்னீஷியன்ஸ் அமைந்தது பலம். ‘டிமான்டி காலனி’ அரவிந்த்சிங் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். வழக்கமா நைட் ஷூட் பண்ணும் போது ப்ளூ டோன் டெக்னிக்கை பயன்படுத்துவாங்க. இதுல நாங்க புது டோன் யூஸ் பண்ணியிருக்கோம். இரவும் மழையும் கதையோடு பயணிச்சிருக்கு. இதுக்கு கேமராமேனும் ஒரு காரணம். ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ்., இசையும்; ஷான் லோகேஷின் எடிட்டிங்கும் படத்துக்கு ப்ளஸ்.

என்ன சொல்றாங்க அருள்நிதியும், மகிமாவும்..?

அருள்நிதி சார் இதுல கால் டாக்ஸி டிரைவர். அவரோட ‘மௌன குரு’, ‘டிமான்டி காலனி’, ‘ஆறாவது சினம்’ எல்லாமே எனக்கு பிடிச்ச படங்கள். என்னை மாதிரி ஓர் அறிமுக இயக்குநர்கிட்ட அவரோட ஃப்ரெண்ட்லி அப்ரோச் பார்த்து பிரமிச்சிட்டேன். சரியோ, தவறோ எதையும் நம்ம முகத்துக்கு நேரா சொல்லிடுவார். ஒரு சீன்ல அவர் போலீசை அடிக்கணும். ‘சார் நான் ஒரு சாதாரண கால் டாக்சி டிரைவர். எப்படி போலீசை அடிக்க முடியும்? அது லாஜிக்கா இருக்காதே?’ன்னார். விளக்கத்தை சொன்னதும் கன்வின்ஸ் ஆனார்.

இப்படி நுட்பமா, யதார்த்தமா ஹேண்டில் பண்ணணும்னு எதிர்பார்ப்பார். அவர்கிட்ட ஒரு நேர்மை இருக்கு. அதே நேர்மை நம்மகிட்டயும் இருக்கணும்னு எதிர்பார்ப்பார். ஹீரோயின் மகிமா இதுல நர்ஸ். இயக்குநர் அறிவழகன் என் நண்பர். ஒருமுறை அவர்கிட்ட பேசறப்ப ‘குற்றம் 23’ல மகிமாவோட ஆக்ட்டிங் பத்தி ஆச்சரியமா சொன்னார்.  இந்தக் கதைக்குள்ள மகிமா வர அவரது பக்கத்து வீட்டுப் பெண் லுக்கும், அறிவழகனும் காரணம். அடுத்த படத்துக்கான கதையை ரெடி பண்ணியிருக்கேன். அதுவும் க்ரைம் சப்ஜெக்ட்தான்!

மை.பாரதிராஜா