வடு



சூரியன் மறையும் மாலைவேளை. சாலையெங்கும் ஒரே வண்ணத்திலான பூக்கள் பூக்க ஆரம்பித்ததைப் போல் பள்ளியிலிருந்து சீருடை அணிந்த குழந்தைகள் வெளிவரத் தொடங்கினர். அன்று புதிதாகப் பூத்த மலரைப் போல் மிகவும் பிரகாசமாகத் தென்பட்டாள் சரயு. தோழிகளுடன் சிரித்துப் பேசியபடி வரும் அவள், ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். ‘‘எப்பதான் முதல் பத்து ரேங்குக்குள்ள வரப்போற?’’ என ஒவ்வொருமுறையும் மார்க் கார்டில் கையெழுத்து வாங்கும்போது அம்மாவிடம் திட்டு வாங்குவாள். எதிர்த்து பதில் பேச மாட்டாள். அண்ணனை விட நிறம் சற்று குறைவு என்பதால் அம்மாவின் அன்பும் குறைவாகவே தனக்குக் கிடைப்பதாக சரயு நினைத்துக் கொள்வாள்.

அப்படிப்பட்ட சரயு அன்று மகிழ்ச்சியாக பள்ளியிலிருந்து வெளியே வந்ததற்கான காரணம், நடந்து முடிந்த தேர்வில் அவள் மூன்றாவது ரேங்க் வாங்கியிருந்ததுதான். அம்மா அவளுக்கு தினமும் கொடுக்கும் காசை ஒரு வாரமாக மிச்சப்படுத்தி இருந்தாள். அந்தப் பணத்தில் வீடு திரும்பும் வழியில் ஜிகர்தண்டா வாங்கிக் குடித்து, பசித்த வயிற்றை கொஞ்சம் சாந்தப்படுத்தினாள்.  உடன் வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவரவர் வீடுகளை அடைந்தனர். கடைசி ஐந்து நிமிடங்கள் சரயு தனியாக நடக்க வேண்டி இருக்கும். அப்பொழுது அவள் மனதில், அன்றைக்கு வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாக  ஓடும். அன்றும் அதேபோல் ஓடின. அவளது ரேங்க் கார்டைப் பார்த்துவிட்டு அம்மா கட்டியணைத்து முத்தம் கொடுப்பாள்.

அவளுக்குப் பிடித்த தக்காளி சாதத்தை இரவு உணவுக்காக சமைப்பாள். வார இறுதியில் வீட்டுக்கு அப்பா வரும்போது அவளைப் பற்றி பெருமையாக அம்மா பேசுவாள்... விரிந்த காட்சிகளை ரசித்தபடியே வீடு வந்த சரயுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உறவினர் வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு அண்ணனை அழைத்துக்கொண்டு அம்மா சென்றிருந்தாள். பாட்டி தட்டில் பிசைந்து கொடுத்த சாதத்தை சாப்பிட்டாள். வீட்டுப்பாடத்தை முடிக்க புத்தகப் பையை தன் பக்கமாக இழுத்தாள். மறுபடியும் ஒருமுறை மார்க் ஷீட்டை எடுத்து ஆசையாகப் பார்த்தாள். அம்மா வந்தவுடன் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்! இரவு எட்டு ஆகியும் அம்மாவும் அண்ணனும் திரும்பவில்லை. மெல்லியதாக சரயுவின் மனதில் சோகம் படர ஆரம்பித்தது.

மறுநாளைக்கான வகுப்பு அட்டவணையின் படி புத்தகங்களை பைக்குள் அடுக்கினாள். மணி 8:45. தூக்கம் மெது மெதுவாக அவள் கண்களில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. பிடித்த பொம்மையை படுக்கையில் தன்னருகில் வைத்துக் கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தாள். எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. விழிப்பு வந்தபோது மணி காலை ஆறு. அவசரமாக எழுந்தவளுக்கு பக்கத்தில் படுத்திருந்த அம்மாவையும், அண்ணனையும் கண்டதும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. புத்தகப் பையிலிருந்து மார்க் ஷீட்டை வேகமாக எடுத்து அம்மாவை எழுப்பினாள். ‘‘நான் தேர்ட் ரேங்க் வாங்கியிருக்கேன்மா...’’ மகிழ்ச்சியுடன் கத்தினாள். தாமதமாக வீடு திரும்பியதால் களைத்திருந்த அம்மாவின் செவிகளில் இது எதுவும் விழவில்லை.

‘‘சீ... தள்ளிப் போ! கொஞ்ச நேரம் தூங்க விடறியா? சும்மா நை நைனு...’’ என கைகளால் சரயுவைத் தள்ளி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். இனம்புரியாத உணர்வுகளில் தத்தளித்த சரயு, மெல்ல பள்ளி செல்லத் தயாரானாள். குளித்து முடித்து கிளம்பும் சமயத்தில் எதுவும் பேசாமல் அம்மாவிடம் மார்க் ஷீட்டை நீட்டினாள். வழக்கம்போல் அம்மா அவளைத் திட்டவும் இல்லை; பாராட்டவும் இல்லை. அவசரமாகக் கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றாள். இந்த ஏமாற்றத்தை சரயுவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வருடங்கள் கடந்து, சரயுவும் வளர்ந்து இரு குழந்தைகளுக்கு அவளே தாயான பிறகும் அந்த வடு அவள் மனதை விட்டு அகலவில்லை.

இந்நிலையில் அதே மாதிரி யான நிகழ்வு தன் வாழ்வில் மற்றொரு முறை எட்டிப் பார்க்கும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. அதே நிகழ்வுதான். ஆனால், இம்முறை மதிப்பெண் கார்டை நீட்டியது அவள் குழந்தைகளில் ஒருவரல்ல. மாறாக, அவளிடம் டியூஷன் படித்த சரளா. பத்தாவது படிக்கும் சமயத்தில்தான் சரயுவிடம் வந்து சேர்ந்தாள் சரளா. எந்தப் பாடத்திலும் பாஸ் மார்க் வாங்காதவள் என்ற பெயர் சரளாவுக்கு உண்டு. அதனாலேயே ‘‘நீ பத்தாவது பாஸ் பண்றதே கஷ்டம்தான்!’’ என்ற நம்பிக்கையில்லா வார்த்தைகளை டீச்சர்களிடம் எதிர்கொண்டாள். ‘ஒருவேளை அப்படி ஆகிவிடுமோ’ என்ற பயம் சரளாவைப் பிடித்துக் கொண்டது.

வீதிகளைத் துப்புரவு செய்து தன்னைப் படிக்க வைக்கும் அம்மாவை ஏமாற்றப் போகிறோமா... தன்னைப் பற்றி அம்மா காணும் கனவைச் சிதைக்கப் போகிறோமா...நம்பிக்கையிழந்திருந்த சரளாவுக்கு மாலைவேளையில் இலவசமாக பாடங்களைக் கற்றுக் கொடுத்து நம்பிக்கை அளித்தது சரயுதான். ‘‘என்ன சரளா... என்ன விஷயம்?’’ மகிழ்ச்சி தாண்டவமாடும் முகத்துடன் தன் முன்னால் வந்து நின்றவளைப் பார்த்து சரயு கேட்டாள். ‘‘அக்கா... இதப் பாருங்க...’’ தன் பத்தாவது மார்க் ஷீட்டை எடுத்துக் காண்பித்தாள்.

‘‘உங்ககிட்டதான் முதல்ல காண்பிக்கணும்னு ஓடி வந்தேன். இன்னும் அம்மாகிட்ட கூட காட்டலை...’’ சொல்லும்போதே சரளாவுக்கு மூச்சு வாங்கியது. வாங்கும்போதே சரயுவின் கைகள் நடுங்கின. சில நிமிடங்கள் மதிப்பெண் சான்றிதழை உற்றுப் பார்த்தாள். பிறகு சரளாவை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். ‘‘அம்மாகிட்ட காட்டு. சந்தோஷப்படுவாங்க...’’ ‘‘சரிக்கா...’’ மார்க் ஷீட்டை வாங்கிக் கொண்டு சரளா ஓடினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த சரயுவின் மனதிலிருந்த பாரம் இறங்கத் தொடங்கியது. மனதில் பதிந்திருந்த வடுவும் கரைய ஆரம்பித்தது.   

வனிலா பாலாஜி

பர்த்டே!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் புதிதாகப் பிறந்த வாம்பட் என்ற சிறிய கரடி போன்ற பிராணியின் படத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்தார். உடனே அவரது நண்பர், ‘மனமார்ந்த வாழ்த்துகள். அவன் அழகாக இருக்கிறான். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன்...’ என கமெண்ட் எழுதிவிட்டார்! அதாவது தன் நண்பருக்கு புதிதாக குழந்தை பிறந்திருப்பதாக நினைத்துவிட்டார்! போதாதா? இந்த மறுமொழி வைர லாகிவிட்டது.

இறைச்சி சாப்பிடுவது தவறா?

இந்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட ‘எது உங்கள் சாய்ஸ்?’ என்ற டுவிட்டர் படம்தான் இணையத்தில் அதிரிபுதிரி சர்ச்சை. இதில் குண்டாக உள்ள பெண்ணின் வடிவம் இறைச்சியாலும், ஒல்லியாக உள்ள பெண் காய்கறிகளாலும் உருவாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனங்களைக் கிளப்பியுள்ளது. சைவ பழக்கத்தை அரசு விளம்பரம் செய்கிறதா எனும் நெட்டிசன்களின் கேள்விக்கு அரசின் அட்மின் எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.

ரத்தத்தில் உணவு!

லண்டனைச் சேர்ந்த ஊலலா என்னும் புகழ்பெற்ற பேக்கரி, ரத்தத்தில் நனைத்த டிசைனில் மெக்ரூனை உருவாக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. பிஜிபி என்னும் தன்னார்வ தொ்ண்டு நிறுவனத்துக்காக இம்முயற்சியாம். சானிடரி பேடுகள் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு இந்த மெக்ரூன் பாக்ஸ்களை வாங்கும் தொகை சென்று சேருமாம். எட்டு பீஸ் கொண்ட பாக்ஸின் விலை ரூ.2,272.