மதுரை அழகர் கோவில் தோசை!
லன்ச் மேப்
சோழ நாட்டுக்கு எப்படி ஆடி மாசமோ அப்படி பாண்டிய நாட்டுக்கு சித்திரை. அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க ஆயிரம் கண் வேண்டும். மகிழ்ச்சியை மட்டுமே தரும் மதுரை மக்களின் இஷ்ட தெய்வம் கள்ளழகர். அழகருக்கு அறிமுகம் தேவையில்லை. திருப்பதிக்கு எப்படி லட்டோ அதுபோல மதுரை கள்ளழகருக்கு சம்பா தோசை!
இந்த பிரசாதத்தை கோவிலில் வாங்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட நேரத்துக்கு போனால்தான் கிடைக்கும். ஆனால், நாற்பது வருடங்களாக மதுரை காமராஜர் சாலையில் அதே ருசியில் கோவிலில் தயாராகும் மணத்தில் செய்து தருகிறார் விஸ்வநாதன். ‘‘இதே பகுதில இருக்கிற செளராஷ்டிரா பள்ளி மாணவர்களுக்கு 108 வருடங்களா மதிய உணவு சமைச்சுத் தர்றோம். அறங்காவலர்கள் தர்ற குறைஞ்ச தொகையை வைச்சுத்தான் மதிய உணவை சமைக்கறோம். என் கொள்ளுத் தாத்தா முக்கால் அணாவுக்கு சமைச்சுக் கொடுத்தார். இப்ப ஓராளுக்கு 12 ரூபானு சமைக்கறோம். லாபம் வராதுனு தெரியும்.
ஆனாலும் இப்படி சமைச்சுத் தர்றதை கடமையா நினைக்கறோம்!’’ என்று சொல்லும் விஸ்வநாதனின் அப்பா டி.பி.வாசு தேவன் கள்ளழகர் கோயிலில் மிராசுதாரராக இருந்தவராம். ‘‘ஜில்லாவுல இருந்து அழகர் கோவிலுக்கு போக இருபத்தியோரு மைல். அப்ப மதுரையை ஜில்லானுதான் சொல்லுவோம். போக்குவரத்து எல்லாம் இப்ப மாதிரி அப்ப கிடையாது. அழகருக்கு படைக்கிற தோசையை மக்களும் சாப்பிடணும்னு அப்பா விரும்பினார். ஆரம்பிச்சு வைச்சதும் அவர்தான். அவர்கிட்ட இருந்து கைப் பக்குவத்தை கத்துக்க எனக்கு பல வருஷங்களாச்சு! அழகர் கோவில் தோசையை எண்ணெய்ல சுட தனியா அச்சு எதுவும் கிடையாது. கை வாட்டம் அச்சு மாதிரி விழணும். பழகப் பழகதான் இது கைகூடும்!
இதுக்கு மாவு தயாரிக்கிற பதமும் லேசானதில்ல; நுட்பமானது. அரிசியை ஊற வைக்கிற நேரமும் வெயில் காலத்துல வேற மாதிரியும் மழைக் காலத்துல இன்னொரு மாதிரியும் இருக்கும். அதே மாதிரி அரைக்கிற பதமும் முக்கியம். விறகடுப்புதான் சரிப்படும். புளியமரம், கருவேல மர விறகுக் கட்டைல அடுப்பை பத்த வைச்சா கதகதனு சட்டி முழுக்க நெருப்பு எரியும். அனலும் சமமா பரவும். இது எல்லாத்தையும் விட தண்ணீர் ரொம்ப முக்கியம். நூபுர கங்கை தீர்த்த நீர்ல செய்தாதான் அது அழகர்கோவில் தோசை!’’ என்கிறார் விஸ்வநாதன்.
குடும்ப உறவுகளுக்கிடையில், நண்பர்களுக்கிடையில் சண்டை வந்து பிரிந்தவர்கள் அழகர் கோவிலுக்கு வந்து, சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன் - மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, வாய்க்கா வரப்பு சண்டை, நண்பர்களுக்கிடையிலான சண்டை எல்லாம் தீரும். அன்பும் உறவும் பலப்படும் என்பது நம்பிக்கை. ‘‘ஆரம்பத்துல நாலு ரூபாய்க்கு செஞ்சு மேலமாசி வீதி, அலங்கார் தியேட்டர் பக்கம் சைக்கிள்ல வைச்சு மாலைல விற்பனை செய்வேன். கோவில்ல மட்டும் கிடைக்கிற தோசை ஊருக்குள்ளயும் கிடைக்கவே மக்கள் விரும்பி வாங்கினாங்க. தேவஸ்தான தோசைல நெய் அதிகம் இருக்கும்.
நாங்க நெய் குறைவா சேர்த்து நல்லெண்ணெய் / கடலெண்ணெய் சேர்ப்போம். அதனால திகட்டாது. ரெண்டு நாட்கள் வரை வைச்சு சாப்பிடலாம்! ஆரம்பத்துல சனிக்கிழமை மட்டும் கொண்டு போனேன். வெள்ளிக்கிழமைகள்ல மாரியம்மன் கோயில்களுக்கு வர பெண்கள் வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப எல்லா நாளும் செய்யறோம். முன்னாடியே செஞ்சு வைக்கிற பழக்கம் இல்ல. கேட்கறவங்களுக்கு சுடச்சுட செஞ்சு தருவோம். பரமசாமி அய்யங்கார் 108 வருஷங்களுக்கு முன்னாடி அஞ்சு மாணவர்களுக்காக இதே வீட்டை மெஸ்ஸாக்கினார். காமராஜர், எம்ஜிஆர் எல்லாம் இங்க வந்திருக்காங்க. எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் ஆரம்பிச்சப்ப, ‘என்ன மாதிரி ஆகாரம் சமைக்கறீங்க... சரிவிகித உணவை எப்படி கொடுக்க முடியுது’னு கேட்டார்.
‘அந்தந்த சீசனுக்கு கிடைக்கிற காய்கறி, கீரைகளை பயன்படுத்துவோம். எல்லாரும் வளர்ற பசங்க. ருசியா சாப்பிட விரும்புவாங்க. அதையும் தாண்டி உடலுக்குத் தேவையான பாகற்காய், முள்ளங்கினு செஞ்சு சாப்பிட வைப்போம்’னு பதில் சொன்னோம்’’ என்கிறார் விஸ்வநாதன் மனைவி வைஜெயந்திமாலா. ‘‘நாலு தலைமுறைகளா ஆக்கிப் போடறோம். கலெக்டர், டாக்டர்னு பின்னாடி ஆனவங்க எல்லாம் சின்ன வயசுல இங்க சாப்பிட்டிருக்காங்க. ‘உங்க கையாலதான் சாப்பிட்டேன்... இப்ப பெரிய பதவியில இருக்கோம்’னு அவங்க சொல்றப்ப மனசு குளிரும். ஒருமுறை மும்பைல இருந்து ஒரு பையன் வந்தான். ‘ஆறாவதுல இருந்து +2 வரைக்கும் உங்க கையாலதான் சாப்பிட்டேன்.
இப்ப கப்பல்ல வேலை செய்யறேன். இதுக்கு காரணம் நீங்கதான்’னு சொல்லி தன்னோட முதல் மாசத்து சம்பளத்துல இருந்து அஞ்சாயிரம் ரூபா கொடுத்தார்! ‘சந்தோஷம்பா. சாப்பிட்டுப் போ’னு உட்கார வைச்சு சாப்பாடு போட்டோம். ரெண்டு கவளம் சாப்பிட்டிருப்பார். ‘இதோ வந்துடறேன்’னு எழுந்து போனவர், ஏடிஎம்ல இருந்து மொத்த பணத்தையும் கொண்டு வந்து ‘பள்ளி மாணவர்களுக்கு சமைச்சுப் போடுங்க’னு சொல்லி கொடுத்துட்டுப் போனார்! அந்தப் பணத்துல பல மாதங்களுக்கு பசங்களுக்கு சமைச்சுப் போட்டோம். இப்படி பலபேர் வந்து எங்களை நெகிழ வைச்சிருக்காங்க. இது மாதிரியான அன்புதான் தெம்பா எங்களை சமைக்க வைக்குது...’’ நெகிழ்கிறார் விஸ்வநாதன்.
திலீபன் புகழ் படங்கள்: அருள், ராஜ்
சம்பா தோசை
தேவையானவை:
சம்பா பச்சரிசி, கருப்பு உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், சுக்கு (பொடித்தது), கட்டி பெருங்காயம், நெய், உப்பு.
பக்குவம்:
தோல் நீக்காத உளுந்தை ஆட்டுக்கல்லில் ஆட்டி குருணை பதத்துக்கு அரைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சம்பா பச்சரிசியை உரலிலிட்டு இரண்டும் கலக்கப்பட வேண்டும். அதை சிறிது நேரம் ஈரம் போக உலர்த்தி மீண்டும் அரைக்க வேண்டும். ஏழுபடி அரிசிக்கு இரண்டு படி உளுந்து சேர்த்து, தலா 150 கிராம் மிளகு, சீரகம், பொடித்த 50 கிராம் சுக்கு, 20 கிராம் பெருங்காயம் சேர்க்கவும்.
இத்துடன் கோவிலின் நூபுர கங்கை தீர்த்தத்தை சேர்த்து பிசைந்து எடுக்கின்றனர். ருசிக்கு இந்த தண்ணீரும் ஒரு காரணம். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையை குழியான கிண்ணத்தில் எடுத்து சட்டியில் கொதிக்கும் பசு நெய்யில் வட்டமாக வார்த்து எடுக்கவேண்டும். 200 கிராம் அளவு கலவை வேக சரியாக இருக்கும். எண்ணெய் சட்டியில் தோசை மீது துளை இட்டால் நன்றாக வெந்து நெய்யும் வடையின் உள்ளே சென்று மணக்க வைக்கும்!
அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்!
நெல், கரும்பு, கடலை போன்ற பயிர்களை அறுவடை செய்யும்போது, லாபம் கிடைக்க வேண்டி இந்தத் தோசையை வாங்கிச் செல்வார்கள். அறுவடை நடக்கும்போது எல்லாருக்கும் விபூதி பூசி, இந்தத் தோசையைச் சின்னச் சின்னத் துண்டுகளாக்கிக் கொடுப்பார்கள். கோவிலில் காலையும் மாலையும் அழகருக்காக ஒரே ஒரு தோசை மட்டும் செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1, 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும்.
பஞ்சலோக பாத்திரத்தில் மடப்பள்ளியில் இதைச் செய்வார்கள். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். ‘அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்’ என்ற சொலவடை சுற்றுவட்டாரத்தில் உண்டு. எவ்வளவுக்கு எவ்வளவு அழகருக்கு சாற்றிய பூவும் சந்தனமும் தொலைதூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு இணையாக அழகரின் நைவேத்திய தோசையின் மணமும் தன் வாசனையால் சுண்டி இழுக்கும்!
உணவு சார்ந்து தமிழில் வந்த முதல் நூல்!
இராமச்சந்திர ராயரால் எழுதப்பட்ட ‘இந்து பாக சாஸ்திரம்’ என்கிற 400 பக்கங்களைக் கொண்ட நூல், 1891ம் ஆண்டு வெளியானது. இரண்டு ரூபாய் விலை கொண்ட அந்தப் புத்தகம் அந்தக் காலத்திலேயே 2 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு சில ஆண்டுகளிலே விற்றுத் தீர்ந்து மறுபதிப்பு கண்டது. உணவு சார்ந்து தமிழில் வந்த முதல் நூல் இதுவே! பீடிகா விதிகள், பலவகை போஜன பதார்த்த பக்ஷணங்கள் என அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு 49 உபதலைப்புகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில், 298 வகையான பதார்த்தங்கள் செய்யும் முறையும், 104 பக்ஷணங்கள் செய்யும் முறை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. சுவை மிகுந்த உணவு எல்லா காலங்களிலும் சமைக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், எப்படிச் சமைக்கப்படுகிறது என்பதற்கான பதிவுகள், 125 ஆண்டுகளுக்கு முந்தைய அடுப்பங்கரை சமையல் சம்பந்தப்பட்ட பொருட்கள், உபகரணங்கள், என்னென்ன இருந்தன, அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தினர் என துல்லியமாக பதிவு செய்துள்ளனர். செம்பு, பித்தளைப் பாத்திரங்களை உபயோகிக்கும்போது அடிக்கடி ஈயம் பூச வேண்டும்.
இல்லையெனில் அவற்றில் வைக்கும் புளி முதலியவை கலந்து உணவுப்பொருட்களில் ரசாயன மாற்றம் உண்டாகி உணவே நஞ்சாக மாறிவிடும் ஆபத்து உண்டு. ‘பசியடங்கல், பிணி தீர்த்தல், பலத்தைக் கொடுத்தல், நல்லறிவை விளைவித்தல்’ என்று ஆகாரத்தின் நற்குணங்களைப் பட்டியலிடும் ராயர், வைத்திய சாஸ்திரம், யோக சாஸ்திரம் முதலிய பல சாஸ்திரங்களின் அடிப்படையில் உணவுக்கு அடிப்படையான 267 வகையான பொருட்களின் குணங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
தானியங்களைக் குத்துவது, பின் அவற்றை உமி நீங்கும்படியாக முறம், சுளகு இவற்றால் நன்றாகப் புடைத்து உமியைப் போக்கல், குத்தல், மழுக்கல், சலித்தல், கசடு நீக்குதல் போன்ற வேலைகளை தெளிவாகச் செய்ய வேண்டும் என்கிறார். இப்புத்தகத்தில் இருக்கும் வியப்பே சமையல் செய்ய அன்றைய பயன்பாட்டில் இருந்த சுமார் 100 பாத்திரங்களைப் படத்தோடு விளக்கியுள்ளதுதான்! 402 வகையான உணவைச் சமைத்து முடித்தபின் அவை எப்படி பரிமாறப்பட வேண்டும் என்று கூறத் தொடங்குகிறார். உணவு பரிமாற ஏற்றது வாழை இலை. அது கிடைக்காதபோது ஆல், பலா, மந்தார இலைகளைத் தைத்துப் பயன்படுத்தலாம் என்கிறார்!
|