COFFEE TABLE



தங்கைக்காக ஏங்கும் அக்கா!

இப்போது பாலிவுட் படங்களில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் டாப்ஸி. ஷூட்டிங்கோ, மீட்டிங்கோ என்ன வேலையாக இருந்தாலும் தினமும் ஒரு தடவையாவது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட தன் தங்கை ஷாகன் பன்னுவிடம் பேசிவிடுவார். தங்கையை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம்! ‘‘ஷாகனுவை நேரில் பார்த்து ஆறு மாசமாகிவிட்டது...’’ என டாப்ஸி இன்ஸ்டாவில் ஏங்கி ஒரு போட்டோவை பதிவிட, நான்கு நாட்களில் இரண்டரை லட்சம் லைக்ஸை அள்ளிவிட்டது!

ஸ்மார்ட் பேண்ட்!

லேப்டாப் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘லெனோவா’ நிறுவனம் ஃபிட்னஸ் கேட்ஜெட்ஸ் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. சமீபத்தில் ‘HX03 கார்டியோ’ என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகப்படுத்தி பேசிய ‘லெனோவா’வின் தலைமைச் செயல் அதிகாரி, ‘‘இந்திய இளசுகள்தான் எங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள். அவர்களை மனதில் வைத்தே இதை உருவாக்கியுள்ளோம்...’’ என்றார். இதயத் துடிப்பின் அளவை 15 நிமிடத்துக்கு ஒரு முறை துல்லியமாகக் கணித்துச் சொல்வதும், ஏதாவது பிரச்னையென்றால் எச்சரிக்கை மணி அடிப்பதும் இதன் சிறப்பு. விலை ரூ.1,999.

டான்ஸ் பேபி டான்ஸ்

‘முகமூடி’ பொண்ணு பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாவில் 27 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் பூஜா இருக்கிறாரென்றால் அங்கே அரட்டைக் கச்சேரி கலகலக்கும். அதிலும் அவர் மேக்கப், ஹேர் ஸ்டைல் பண்ணும்போது கூட டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பார். ‘‘என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது புது விஷயம் அல்ல...’’ என்கிறார் பூஜா. நீச்சலுடை போட்டோ ஷூட் ஒன்றின்போது, அப்படி டான்ஸ் ஆடிக் கொண்டே மேக்கப் போடும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பூஜா வெளியிட, லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகின்றன!

சுட்டி டான்ஸ்

சமீபத்தில் ஹிட் அடித்த இந்திப் படமான ‘Sonu Ke Titu Ki Sweety’இல் இடம்பெற்ற ‘Bom Diggy’ பாடலுக்கு வியோனா என்ற நாலு வயது சுட்டி, தன் டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடனமாடும் வீடியோதான் பாலிவுட்டில் ஹாட் டாக். சுட்டியின் ஒவ்வொரு நடன அசைவும் இன்டர்நெட்டில் லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளையடித்திருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவுக்கு குவிந்து வரும் ஹார்ட்டின்களே சாட்சி. ஒவ்வொரு நாளும் புத்துணர்வுடன் ஆரம்பிக்க வேண்டுமா? உடனே இந்த வீடியோவைப் பாருங்கள்!

இந்திய விவசாயத்தில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள்!

‘‘இந்தியாவில் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ரசாயன மூலப்பொருட்கள்தான் அதிகமுள்ளன. இந்த மூலப்பொருட்களில் சுமார் 99% வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டவை..!’’ என்று அதிர்ச்சியளிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘‘இதனால் விவசாயம் சீரழிவதோடு, விவசாயிகள் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளை நேரடியாக சுவாசிப்பதால் அவர்களுக்கும் பெரும் பாதிப்பு உண்டாகிறது...’’ என்று வருந்துகின்றனர் ஆர்வலர்கள். ‘‘மலிவான விலையில் கிடைப்பதால்தான் விவசாயிகள் இதை வாங்குகின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு அவர்களிடையே இல்லை. இந்த மருந்துகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டமும் இங்கில்லை...’’ என்கிறார்கள்.

குங்குமம் டீம்