தேநீர் வியாபாரிகள்



இரவுக்கு ஆயிரம் கண்கள்

காலையில் எவ்வளவு விலையுயர்ந்த சுவையான தேநீரைக் குடித்திருந்தாலும் இரவில் பருகும் தேநீருக்கு ஈடாகாது. அது குளிர்ந்திருந்தாலும், தேநீருக்குரிய எந்தப் பண்பும் அதில் இல்லையென்றாலும் கூட அதன் ருசி அதிகம். அதுவும் நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் தேநீர் அருந்துவது சுகானுபவம்.

இப்படி எல்லையில்லா ஆனந்தத்தை அள்ளி வழங்குகின்ற இரவையும், தேநீரையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்கள் தேநீர் வியாபாரிகள். உறக்கம் மறந்து, குடும்பத்தை விட்டு, காவல்துறையின் வேட்டைக்கு நடுவில் நம் தேநீர் தாகத்தை தணிப்பதற்காக அவர்கள் விழித்திருக்கிறார்கள். அந்த விழிப்பில் கூடுகிறது தேநீரின் சுவை. நள்ளிரவு 1.15 மணி. அசோக் பில்லரில் வானளவு உயர்ந்து நிற்கும் சர்வதேச உணவகமான ‘கே.எஃப்.சி’ முற்றிலும் அடைக்கப்பட்டிருக்க, அதன் முன் விரிந்து கிடக்கும் சாலையின் ஓரத்தில் தேநீர் வியாபாரம் கன ஜோராக அரங்கேறியது. அந்த வழியில் வெறுமனே பயணிப்பவர்களைக்கூட தன்வசப்படுத்துகிறது தேநீர்.  அதனால்தானோ என்னவோ இரவு நேரத்தில் தேநீர் வியாபாரம் ஒரு திருவிழா போல களைகட்டுகிறது.

‘‘பொறந்து வளர்ந்தது எல்லாமே மெட்ராஸ்லதான். ஆறாவதுதான் படிச்சிருக்கேன். 15 வயசுலயே டீக்கடைக்கு வேலைக்கு வந்துட்டேன். கொஞ்ச நாள்லயே டீ மாஸ்டர் ஆகிட்டேன். அவ்வளவு சூட்ல வேலை செஞ்சாலும் சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்ல. அஞ்சு, ஆறு பேக்கரிக்கு மாத்தி மாத்தி போயும் எதுவும் செட் ஆகல. அப்புறம் கட்டட வேலைக்குப் போனேன். ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். கொழந்தையும் பொறந்துடுச்சு. அப்ப மாசத்துல அஞ்சு நாள், ஆறு நாள்னுதான் கட்டட வேலை கிடைச்சுச்சு. ஆஸ்பிட்டல், அது இதுன்னு எக்கச்சக்க செலவு வேற. குடும்பமே நடத்த முடியல. தெரிஞ்ச ஒரே தொழில் டீ போடுறதுதான். சரி... இதையே செஞ்சு பாக்கலாம்னு வந்துட்டேன்.

ஆரம்பத்துல பகல்ல டீ வித்தேன். சரியா போகல. இப்ப நைட்ல விற்கறேன். 11.30 மணிக்கு ஃபோரம் மால் வந்தேன்னா வடபழனி, அசோக் பில்லர்ன்னு சுத்திட்டுப் போக விடியற்காலை நாலு மணி ஆகிடும். பகல்ல கட்டட வேலைக்கும் போறேன். இப்ப மாசத்துக்கு 20 நாட்கள் வேலை இருக்கு. ஓரளவுக்கு குடும்பத்தை நடத்த முடியுது. ஆனா, தூக்கம்தான் மறந்துபோச்சு...’’ தான் படுகிற பாடுகளை பத்து நிமிடங்களில் பகிர்ந்த கணேசனுக்கு வயது 28. அவரது டிவிஎஸ் XL வாகனத்தில் பின்னிருக்கையைத் தூக்கிவிட்டு தேநீர் கேனை லாவகமாக கட்டி யிருக்கிறார். அதன் மீது மின் விளக்குகள் ஒளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்தன. நடுநிசியிலும் நான்கைந்து பேர் அவரின் வண்டியைச் சுற்றி நின்றுகொண்டு மெய்மறந்து தேநீரைப் பருகிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவரது கண்களோ காவல்துறையினர் வந்து விடுவார்களோ என்ற பயத்திலும் பதற்றத்திலும் விழித்துக் கொண்டே இருந்தன. அவை உறக்கத்தை மறந்துவிட்டதால் சிக்கி முக்கி கல்லை உரசி எழுப்புகின்ற நெருப்பைப் போல ஒளிர்ந்தன. ‘‘அதிகமா தியேட்டர் வாசல்லதான் நிற்பேன். செகண்ட் ஷோ பாத்துட்டு வர்றவங்கதான் என்கிட்ட அதிகமா டீ குடிப்பாங்க. புதுசா படம் எதுவும் ரிலீஸாகாததால பிசினஸ் ரொம்ப சுமாராத்தான் போகுது. வெயில் காலம் வேறயா, அதனால மோரும் வெச்சிருக்கேன். தினமும் 400 ரூபா கிடைக்கறதே இன்னைக்கு பெரும்பாடா இருக்கு. இதுல போலீஸ் வந்தா அவங்களுக்கு 100, 200னு கொடுக்கணும். இல்லைனா ரோட்டுல டீ விக்கக் கூடாதுன்னு விரட்டி விடுவாங்க.

லத்தில அடிப்பாங்க. நைட்ல டீ விற்கறதால என் மேல் பெட்டி கேஸ் கூட இருக்கு. மாசா மாசம் ஃபைன் கட்டிட்டு இருக்கேன். இதெல்லாம் மீறித்தான் எங்க பொழப்பை ஓட்ட வேண்டியிருக்கு...’’ என்கிற சாந்தகுமார் ஒன்பதாவதுதான் படித்திருக்கிறார். இவரைப் போன்ற தேநீர் வியாபாரிகளில் பலர் பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாதவர்கள் என்பது சோகம். இவர்களில் முக்கால்வாசிப்பேர் பகலிலும் வேறு வேலைக்குச் செல்கிறார்கள். இன்னும் சிலர் சிறு வயதிலேயே குடும்பச்சூழல் காரணமாக வேலைக்கு வந்துவிட்டவர்கள். ‘‘காலேஜ்ல படிக்கறேன். வடபழனியில ரூம் இருக்கு. பக்கத்துலயே டீ கிடைக்கும். இருந்தாலும் அசோக் பில்லர் வரைக்கும் தனியா காலார நடந்து வந்து டீ குடிக்கிற அனுபவமே தனி பாஸ்.

அதையெல்லாம் வார்த்தைகள்ல விவரிக்க முடியாதுங்க...’’ என்று பரவசப்படுகிறார் டீ குடிக்கும் இளைஞர் ஒருவர். இவரைப் போல ஆயிரமாயிரம் தன்னந்தனியர்களை அரவணைத்து ஆசுவாசப்படுத்துகிறது இரவும், தேநீரும். கோடை கால வெப்பத்தை பகலில் உள்வாங்கிய மவுண்ட் ரோடு, இரவில் அக்னிப்பூவாய் தகித்துக் கொண்டிருந்தது. வானுயர்ந்த கட்டடங்கள் கடல் காற்றை தடுத்து நிறுத்தியிருந்தன. வாகன நெரிசலற்ற அந்த சாலை கரும் பாலைவனம் போல காட்சியளித்தது. அந்த நேரத்தில் தேநீர் வியாபாரிகள் தங்களது இரு சக்கர வாகனத்தில் தேநீர் கேனைக் கட்டிக்கொண்டு சென்னை மாநகரை அலங்கரிக்கும் தியேட்டர், மால், மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையம்... என்று மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் வாடிக்கையாளர்களின் வருகைக்காக மலர்ந்த முகத்துடன் காத்துக்கிடக்கிறார்கள்.

இக்காத்திருப்பின் போது நீள்கின்ற அவர்களின் தனிமையை எஃப்.எம்மில் ஒலிக்கும் பாடல்கள் இனிமையாக்குகின்றன. ‘‘24 வருஷங்களா டீ வித்துட்டு இருக்கேன். அப்ப இருந்து இப்ப வரைக்கும் சைக்கிள்தான். பத்து வருசத்துக்கு முன்னாடியெல்லாம் முப்பது, நாப்பது பேர் என் வண்டியைச் சுத்தி நின்னுட்டே இருப்பாங்க. காலையிலும் நிறைய இடங்களுக்கு டீ சப்ளை பண்ணுவேன். டீ வித்துதான் என் பொண்ணை படிக்க வச்சு, கல்யாணம் கட்டிக்கொடுத்தேன். எங்க வீட்ல எப்பவும் அடுப்பு எரிஞ்சிட்டே இருக்கும். இப்ப மூணு ஃப்ளாஸ்க் டீ விக்கிறதுக்குள்ள காவு வாங்கிடுது. அப்பவெல்லாம் தியேட்டர் வாசல், பனகல் பார்க்குன்னு ஏதாவது ஒரு இடத்துல நின்னுட்டா போதும். இப்ப ஊரெல்லாம் சுத்திக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. அப்ப இருந்த தண்ணியும், பாலும் இப்ப கிடைக்கறதில்ல. அதனால டீயும் டேஸ்ட்டா இருக்குறதில்ல.

எல்லாமே மாறிப்போச்சு...’’ கடந்த இருபது வருடங்களில் சென்னையில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களின் சாட்சியாக இருக்கும் அந்த முதியவருக்கு வயது அறுபதுக்கு மேல். ‘‘இங்க டீ விக்கிறேன்னு சொல்லிட்டு நிறைய பேர் கஞ்சா வித்துட்டு இருக்கான். அப்புறம் டீ குடிக்கிறேங்கிற பேர்ல நாப்பது ஐம்பது பேர் ஒரே இடத்துல கூடிக்கிறாங்க. அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை பண்ணிட்டு அடி தடின்னு வெட்டு குத்து வரைக்கும் போயிருக்கு. இது லேட் நைட்ல பயணிக்கறவங்களுக்கு அச்சுறுத்தலா இருக்கு. ஏதாவது அசம்பாவிதம் நடக்காத வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல. அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா அது எங்க தலையிலதான் விடியும். அதனாலேயே லேட் நைட்ல டீ விக்கறத அனுமதிக்கறது இல்ல. அதையும் மீறி டீ வித்துட்டுத்தான் இருக்காங்க. ஒரு லெவலுக்கு மேல நம்மால என்ன செய்ய முடியும் சொல்லுங்க...’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த காவல்துறை அதிகாரி.

பனகல் பார்க்கின் அருகில் இருள் சூழ்ந்த ஓர் இடம். அங்கே தனது வாகனத்தில் மின்னும் லைட் வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தார் ஒரு தேநீர் வியாபாரி. மிச்சமாகும் தேநீரை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் நல்ல மனிதர். அவரைச் சுற்றி ஆட்டோ டிரைவர்கள். காவல்துறை வாகனத்தின் சைரன் சத்தம் கேட்டது. பதற்றமடைந்த அந்த தேநீர் வியாபாரியின் கண்கள் அகல விரிந்தன. சுற்றிலும் மொய்த்துக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்களிடம், “போலீஸ் வருது. முதல்ல டீயை வாங்கிக்கங்க. பணத்தைக் கூட நாளைக்கு வாங்கிக்கிறேன்...” என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்தார். நூறு மீட்டர் தொலைவில் காவல்துறையின் வாகனம் தெரிய, மின்னல் வேகத்தில் மறைந்தார் அந்தத் தேநீர் வியாபாரி. அவர் நின்றுகொண்டிருந்த இடத்தில் மறுபடியும் இருள். இருள்தானே இரவுக்கு அழகு!

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்