பி3ந்து3லா கெ2நி புகா3ர் ஸ்ர்கு3!- இது என்னனு புரியுதா?



ஒஸ்த தி3க்கும் ரா:ந் தே3ஷும் ரீ:யவெ ஹுஜாள்க ரா:ந் கு3ள்ளெ மீட்கிந் க2வ்நஸ் தே3ஷும் ரீ:யவெ களவநி பு4ர்கொ ஒட்டுகந் கவ்லி ஜளெத் அவந்தூ4மு ஸுக3ந்தமுந் க2ள்ளத்தெ அளிந் ஸொட்டி3யாஸ். பொ3து3லுக் உத்தர்கி3ரி தேஷும் ரீ:யநெ காந்திஹொயெ ஸிர்க்கணு தெ3க3டா3ம், தெட்சிண் பு2ட3ர் பொதிகெ மெநந் தெ3க3டு3ம் ெஹாடி3யவெ ஸிர்க்கணு கெட்டெ சொக்கட் நி:நாவ்க ஹுளி  ஆங்க3ஸ்கொ  மித்ருந் ஸெந்தொ செரி ரி:யெ  து3ஸ்ரெ லவ்லியாஸ்.

சௌராஷ்டிர மொழியில் சிலப்பதிகாரம்

பக்கம் 24 - 25ல் இருந்த பத்தியைப் படிக்கும்போது தலை சுற்றுகிறதா? அதை மகிழ்ச்சி உணர்வாக மாற்றிக் கொள்ளுங்கள். யெஸ். இளங்கோவடிகள் இயற்றிய ‘சிலப்பதிகாரம்’ காப்பியத்தை செளராஷ்டிர மொழியில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் சூர்யா ஞானேஸ்வர். இதன் முதல் கட்டமாக ‘புகார் காண்டம்’ செளராஷ்டிர மொழியில் அச்சாகி இருக்கிறது! இந்நூலின் தலைப்பைத்தான் இங்கும் டைட்டிலாக வைத்திருக்கிறோம்! புத்தகத்திலிருந்து ஒரு பத்திதான் பக்கம் 24 - 25ல் அச்சாகியிருக்கிறது! ‘‘சௌராஷ்டிர மொழியில வந்திருக்கிற சிலப்பதிகாரத்தின் முதல் நூல் சார் இது...’’ பெருமையுடன் பேச ஆரம்பித்தார் சூர்யா ஞானேஸ்வர்.

63 வயதாகும் இவர், ‘சௌராஷ்டிரா டைம்’ என்கிற இன்டர்நெட் பத்திரிகையை மதுரையிலிருந்து நடத்தி வருகிறார். ‘‘சொந்த ஊர் மதுரை. தியாகராசர் கல்லூரில பி.ஏ. தமிழ் படிச்சேன். அப்பவே ‘சிலப்பதிகாரம்’ மேல அதீத ஆர்வம். இதை சௌராஷ்டிர மொழில மொழியாக்கம் செய்யணும்னு நினைச்சேன். 1980கள்ல ‘சௌராஷ்டிரா டைம்’ பத்திரிகை ஆரம்பிச்சு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடுனு எங்க மக்கள் இருக்கிற ஊர்கள்ல சந்தா வாங்கி நடத்தினேன். ஒருகட்டத்துல அலைய முடியல. அதனால, இ-பத்திரிகையா அதை மாத்தினேன். ஆனாலும் உள்ளுக்குள்ள ‘சிலப்பதிகார’ தாகம் இருந்துகிட்டே இருந்தது.

இப்பதான் அது கைகூடியிருக்கு!’’ என்றவரிடம், ‘சௌராஷ்டிர  மொழிக்கு எழுத்துகள் உண்டா? எண் குறியீடுகள் எதற்கு..?’ எனக் கேட்டோம். ‘‘எழுத்துகள் இருக்கு. ஆனா, யாரும் பயன்படுத்தறதில்ல. குஜராத்துலகூட குஜராத்திதான் பேசறாங்க. நான் சௌராஷ்டிர மொழியை எழுதவும் கத்துக்கிட்டேன். இருந்தாலும் பலருக்கும் மொழி தெரியாததால இந்தப் புத்தகத்தை நாங்க பேசற சௌராஷ்டிர மொழில தமிழ் எழுத்துகளை வச்சு உருவாக்கினேன். அதாவது, ‘amma’னு ஆங்கிலத்துல தமிழ்ச் சொல்லை எழுதறோம் இல்லையா..? அதுமாதிரி.

அப்புறம், சௌராஷ்டிர மொழியிலுள்ள மெய் எழுத்துகள்ல ஒவ்வொண்ணுக்கும் நாலு உச்சரிப்பு இருக்கு. அதைச் சரியான உச்சரிப்போடு வாசிக்கத்தான் இந்த எண் குறியீடு. இது எங்க மக்களுக்குப் புரியும்! பேசும் மொழில இந்த நூல் இருக்கறதால எங்க மக்கள் நிறைய பேர் இதை வாங்கிப் படிக்கறாங்க. சந்தோஷமா இருக்கு. இப்ப ‘மதுரைக் காண்டம்’, ‘வஞ்சி காண்டம்’னு அடுத்தடுத்த காண்டங்களை மொழியாக்கம் செய்துட்டிருக்கேன். இதை முடிச்சுட்டு பாவேந்தர் பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கை’யும் செளராஷ்டிர மொழில கொண்டு வரணும்!’’ கண்களில் கனவு விரிய சொல்கிறார் சூர்யா ஞானேஸ்வர்.

பேராச்சி கண்ணன்