ஏன் கடையில் விற்கும் கீரைகள் ஆபத்தானவை?



ஹோம் அக்ரி-4

சென்ற அத்தியாயத்தில் கீரை எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் வாங்கி உண்பது ஆபத்தாக அமைய வாய்ப்பிருக்கிறது என்று பார்த்தோம்.  எப்படி? முதலில், பெரும்பாலான கீரைகள், குறிப்பாக நகரங்களில் வளர்த்து சந்தைக்கு வருபவை கழிவு நீரில் வளர்க்கப்படுபவை. இவ்விதம் வளரும் கீரைகள், உண்பவருக்கு பல விதமான நோய்களை வித்திடுகின்றன.

கழிவு நீர் எப்போதும் தேங்கி நிற்கும் இடங்களிலும், வாய்க்கால் போல் ஓடிக்கொண்டிருக்கும் இடங்களிலும் வசிப்பவர்கள் இத்தகைய விவசாயத்தை பெரும்பாலும் செய்கிறார்கள். இது குறுகிய காலப்பயிராக இருப்பதும், செலவே இல்லாத விவசாயமாக இருப்பதும் இந்தக் கழிவு நீர் வருடம் முழுவதும் கிடைப்பதும் கூடுதல் காரணங்கள். இந்த விலையோடு போட்டி போட முடியாது என்கிற காரணத்தால் காய்கறி பயிரிடும் விவசாயிகள் கீரை பயிர் செய்வதில்லை. சூப்பர் மார்க்கெட் அல்லது ஹோட்டல் காண்ட்ராக்ட் உள்ள விவசாயிகளும், நல்ல விலைக்கு விற்க வேறு வாய்ப்பு இல்லாத மற்றும் வேறு பயிர் செய்ய இயலாத விவசாயிகளுமே கீரையை பயிர் செய்கிறார்கள்.

கழிவு நீரில் விளைவிக்கப்பட்ட கீரைகள் எவ்வளவு கேடானவை என்பதை விவரிக்க விரும்பவில்லை. நம் நகரங்களில் உற்பத்தியாகும் கழிவு நீர் ஆபத்தான கேட்மியம், பாதரசம், ஆர்செனிக், குரோமியம், இவை இல்லாமல் இ-கோலி பேக்டீரியா போன்ற ஆபத்தான உட்பொருட்கள் கொண்டவை. இவை நமக்கு என்ன செய்யும் என்பதை நீங்களே கண்டு பிடித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது ஆராய்ச்சி செய்யாமல் தவிர்த்து விடுங்கள். இரண்டாவது மிக முக்கிய காரணம், விவசாயிகள் கடைப்பிடிக்கும் இப்போதைய கீரை வளர்க்கும் முறை. கீரை ஒரு குறுகிய காலப் பயிர் என்று பார்த்தோம்.

பெரும்பாலான விதை கொண்டு பயிர் செய்யும் கீரைகள் (தண்டுக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, பாலக் கீரை போன்றவை) விதைத்து 25 - 35 நாட்களிலேயே அறுவடைக்கு தயாராகின்றன. நாம் கீரை வாங்கும்போது எப்போதுமே தளதளவென்றும், பளபளப்பாகவும், கொஞ்சம் கூட ஓட்டைகள் இல்லாதவற்றையும் மட்டுமே எடுக்கிறோம். முடிந்த அளவுக்கு விலையும் பேசித்தான் வாங்குவோம். ஆக, அதற்குத் தக்க, அதாவது சந்தை விருப்பத்துக்கு ஏற்ப உற்பத்தி செய்ய விவசாயி நிர்ப்பந்திக்கப்படுகிறார். இவர் விதைக்கும் முன் மண்ணில் கலக்கும் குருணை மருந்திலிருந்து, இலையில் தெளிக்கும் கார்பெண்டசைம், கார்பரில், மாலதியான் போன்ற மருந்துகள் எல்லா விதமான உடல் உபாதைகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுவதால் இந்த பூச்சிக் கொல்லிகளையும், பூஞ்சாணக் கொல்லிகளையும், ஒரு சில களைக்கொல்லிகளையும், நாம் தெளித்த ஒரு சில நாட்களிலே, சுடச் சுட கீரையோடு உண்ணும் படி ஆகி விடுகின்றது. இந்த இரண்டு காரணங்களால் நாமே கீரையை பயிர் செய்து உண்பது நல்லது. எவ்வளவு இடம் வேண்டும், எத்தனை விதமான கீரைகள் பயிரிடலாம் என்பது அவரவர் தேவையையும் விருப்பத்தையும் பொறுத்தது. சாதாரணமாக நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு உகந்த கீரைத் தோட்டத்துக்கான மாதிரியைப் பார்ப்போம்.

என்னென்ன கீரைகள்?

*    தவசிக் கீரை (மல்டி வைட்டமின் கீரை)
*    முருங்கை
*    அகத்தி
*    லச்ச கொட்டை கீரை
*    முள்ளு முருங்கை
*    தண்டுக் கீரை
*    அரைக் கீரை
*    புளிச்சக் கீரை
*    பொன்னாங்கண்ணி
*    கொடிப் பசலி
*    மணத்தக்காளிக் கீரை
*    குத்துப் பசலி (பாலக்)
*    கோதுமைப் புல் (wheat grass)
*    வெந்தயக் கீரை.

இதிலுள்ள சில குறுகிய கால கீரைகளை மூன்று மாதங்களுக்குப் பின் மாற்றிக் கொள்ளலாம். முதல் ஐந்து கீரைகளும் மர வகையைச் சார்ந்தவை. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் அறுவடை செய்யத்தகுந்தவை. மற்றவை, குறுகிய காலப் பயிர்கள்.

திட்டமிடல்:

வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் சரியான திட்டமிடல் அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள 14 கீரைகளையும் இதற்கு முன் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நுண் பசுந்தழைகளையும் ஒருவர் பயிரிடும்போது தினந்தோரும் அறுவடை செய்யுமாறு அமையும். ஆனால், நடைமுறையில் தினசரி கீரை உண்பது இன்றைய வாழ்க்கை முறைக்கு சரிப்பட்டு வராத ஒன்றாகவே இருக்கிறது.

மேலும் சில கீரைகளை பயிரிடும் போது அவை தேவைக்கு அதிகமானதாக இருக்கும். முருங்கை, அகத்தி, தவசி, புதினா, கொடிப்பசலி, லச்ச கொட்டை கீரை போன்றவற்றை ஒருவர் வளர்த்தால் 10 - 15 குடும்பங்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். ஆக, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்வது அவசியம். கீழ்க்கண்ட விஷயங்களைப் பொறுத்து திட்டமிடல் செய்ய வேண்டும்.

இடம் - தரையிலா, பால்கனியிலா, மொட்டை மாடியிலா, இருக்கும் இடத்தின் அளவு.
குடும்ப உறுப்பினர்கள் - உண்பவர் எண்ணிக்கை, குழந்தைகள் / வயதானவர்கள் எத்தனை பேர் போன்ற விஷயங்கள்.
வேறு என்ன பயிர்கள் - பயிரிட திட்டமிட்டிருக்கிறோம் / அதற்கு என்ன தேவைகள் உள்ளன?
எவ்வளவு நேரம் செலவு செய்ய முடியும் - தினசரி எவ்வளவு நேரம், சனி / ஞாயிறு எவ்வளவு நேரம்?
 
தவசிக் கீரை:

இதை மல்டி வைட்டமின் கீரை என்பார்கள். இதில் ஒரு செடி வைத்தால், வருடம் முழுவதும் கீரை பறித்துக்கொண்டே இருக்கலாம். இதை விதை அல்லது கன்றாக நடலாம். ஒரு பெரிய பூந்தொட்டியில் ஒரு செடி வைக்கலாம். தரையில் என்றால், வேறு ஏதாவது மரம் அல்லது செடி அருகில் நடலாம். ஒரு சதுர அடி போதுமானது. வைத்தபின் குத்தாக பத்து அடிக்கும் மேல் உயரமாக வளரும் என்பதால், நான்கு ஐந்து அடி உயரத்தில் வெட்டி விடலாம்.  

இந்த ஒரு செடியை நீங்கள் வைத்திருந்தால் பக்கத்து குடும்பங்கள் பலருக்கும் பகிர்ந்து கொடுக்கலாம். உரமில்லா மண்ணிலும், குறைந்த நீரிலும் கூட நன்றாக வளரும். எளிதாக எந்த பூச்சியும் இதை அண்டாது. எந்த நோய்க்கும் தாக்குண்டு நான் பார்த்ததும் இல்லை. இதன் இலையையும், பசுந்தண்டையும் பச்சையாகவும் சாப்பிடலாம். சமைக்கும் முறை, மருத்துவ பலன்கள் குறித்து இந்த தொடரில் நாம் பார்க்கப்போவதில்லை. இதை நூல்கள் மற்றும் இணையம் வழியே அவரவர் வசதிக்கு ஏற்ப அவரவரே தெரிந்து கொள்ளலாம்.

(வளரும்)
மன்னர் மன்னன்

முதல் முறையாக வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க விரும்புகிறேன். நிச்சயமாக தோல்வி அடையாத ஒரு காய்கறியை சொல்லவும்.
- ஜே.எஸ்தர், நாகர்கோவில்.

கொத்தவரங்காய் முயற்சி செய்யுங்கள். நீங்களாக விரும்பினால் மட்டுமே இதில் தோல்வி கிட்டும். விதையை நேரடியாக மண்ணில் விட்டு, சிறிது குப்பை கொடுத்து, வாரத்துக்கு ஓரிரு முறை நீர் தெளித்தால் போதும். 30 நாட்களில் பலன் கிட்டும்.  

தொட்டியில் சிறந்தது மண் தொட்டியா ? ப்ளாஸ்டிக் தொட்டியா? வேறு என்ன விதமான பொருட்களை தொட்டி போல் பயன் படுத்தலாம்?
- முத்துராமன், பெருந்துறை

மண்ணின் வெப்பம் நேரடியாக செடியின் வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக் / சிமெண்ட் தொட்டிகளைக் காட்டிலும் மண் சட்டி சிறந்தது. அதற்காக மண் தொட்டி இல்லாவிட்டால் வீட்டுத்தோட்டம் அமைக்க முடியாது என்றில்லை. கிடைப்பதைக் கொண்டு ஆரம்பிக்கலாம்.  சிமெண்ட் சாக்கு, அரிசி சாக்கு, துணிப்பை, பழைய டிராவல் பேக், பெயிண்ட் வாளி - இவற்றிலும் தொடங்கலாம். தொட்டி எதுவாக இருந்தாலும் நீர் வெளியேறும்படி கீழே ஓட்டைகள் இடுவது அவசியம்.

அந்தக் காலத்தில் என் கொள்ளுப் பாட்டி பலகீரை என்ற ஒன்றை அடிக்கடி சமைத்ததாகவும், அதனால் அவர் 95 வயது வரை கண்ணாடி இல்லாமல் படித்ததாகவும் அம்மா சொல்கிறார். அதுபற்றி ஏதும் சொல்ல முடியுமா?
- கனிமொழி, தஞ்சாவூர்

தெருக்களிலிலும், குப்பை மேடுகளிலும் இன்று காணும் பல கீரைகளும் சாப்பிடக் கூடியவையே. குப்பைக் கீரை, பருப்புக் கீரை, நாய் வேளை, நல்ல வேளை, குப்பை மேனி, மூக்கரட்டை, சாரணத்தி, துத்தி, முடக்கத்தான், சக்கரவர்த்தி கீரை... போன்றவற்றை இப்போது நாம் உண்பதில்லை. ஆனாலும் இவை நம்மை விட்டு விலகாமல் அருகில் மண்டிக் கிடக்கின்றன. இந்தக் கீரைகளை எல்லாம் ஒன்று சேர்த்து, வெறும் மிளகும் உப்பும் கொண்டு சமைப்பதைத்தான் பல கீரை என்பார்கள். இது அதீதமான மருத்துவ பலன்கள் கொண்டது.