காட்ஃபாதர்-போதை உலகின் பேரரசன்
யுவகிருஷ்ணா-56
போலீஸ் எப்போதுமே இதுபோன்ற வாய்ப்புகளுக்காகத்தான் காத்திருக்கும். கேலனின் படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை பழைய பகைகளுக்கு பழிதீர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். பல நூறு பேர் எவ்வித விசாரணைக்கும் உள்ளாகாமல் கைதாகி, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.மெக்ஸிகன் என்று பாப்லோ எஸ்கோபாரால் செல்லமாக அழைக்கப்பட்ட காச்சா என்கிற கார்டெல் முக்கிய தலைதான் கடுமையாக பாதிக்கப்பட்டது (கேலன் படுகொலை நடந்து நான்கைந்து மாதங்களுக்குப் பிறகுதான் காச்சா கொல்லப்பட்டார்). அவருடைய பண்ணை வீடுகள் அத்தனையும் போலீஸாரால் தீவைக்கப்பட்டன. அவரிடம் பணிபுரிந்துகொண்டிருந்த அப்பாவிகள் அத்தனை பேரையும் அள்ளிக் கொண்டு போய் சித்திரவதை செய்துகொண்டிருந்தார்கள்.
இதில் காச்சாவின் நெருங்கிய உறவினர்களும் அடக்கம். கேலனை படுகொலை செய்த சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டவர் காச்சா என்று போலீஸ் சொல்ல, எந்த லாஜிக்கலான கேள்விகளையும் கேட்காமல் அரசு அப்படியே நம்பியது. யாரை வேண்டுமானாலும் கைது செய்து கொள்ளுங்கள், எப்படி வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்கிற வானளாவிய அதிகாரத்தை போலீஸுக்கும், இராணுவத்துக்கும் அரசாங்கம் கொடுத்தது. அதுதான் தவறாகப் போயிற்று. இந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு போதை சாம்ராஜ்யக் கடத்தலின் தலைவனும் கைதாகவில்லை. திமிங்கல வேட்டை என்று சொல்லி, கெண்டை மீன்களைத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தாங்கள் கைதாகாமல் தப்பிக்க பல கோடி டாலர்களை போலீஸுக்கும், இராணுவத்துக்கும் கார்டெல் தலைவர்கள் அள்ளி இறைத்தார்கள். போலீஸின் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் இருக்க அரசியல்வாதிகளுக்கும் கணிசமாக பங்கு போனது. அந்தக் காலத்தை பணி ஓய்வு பெற்ற பின்பு ஒரு போலீஸ்காரர் நினைவுகூர்ந்தார். “தினமும் காலையில் ஐந்து பைசா கூட இல்லாமல் பணிக்குப் போவேன். வீடு திரும்பும்போது ஒரு மூட்டை நிறைய பணம் இருக்கும். அவ்வளவு பணத்தை வைக்க என்னுடைய சிறிய வீட்டில் இடமேயில்லை! உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பணத்தை கத்தை கத்தையாகப் பரிசளித்தோம். நிறைய சொத்துகளை வாங்கிக் குவித்தோம்.
தினசரி சேர்ந்துகொண்டே இருந்த பணத்தை எப்படி செலவழிப்பது என்றே தெரியாமல் திண்டாடிப் போய்விட்டோம்!” நம்மூரில் ஹெட் கான்ஸ்டபிள் என்கிற அளவுக்கான பதவியில் இருந்தவர் அந்த போலீஸ்காரர். அவரே இப்படியொரு வாக்குமூலம் கொடுத்திருந்தார் என்றால் அதிகாரிகள் எவ்வளவு அள்ளியிருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! காதில் எல்லாம் பூ சுற்றவில்லை. கொலம்பியாவில் அவ்வளவு பணம் இருந்தது. அதை செலவழிக்கத்தான் மார்க்கங்கள் இல்லாமல் இருந்தது. இது ஒரு புறம். மறுபுறம் ஒருவேளை உணவுக்காகக் கொலையே செய்யக்கூடிய அளவுக்கு வறுமை தாண்டவமாடியது. வேலைவாய்ப்பு சுத்தமாக இல்லை. வேலை என்றால் ஏதாவது போதைத் தொழிற்சாலையில் பணியாளராகச் சேரலாம்.
அல்லது ஏதேனும் கார்டெல்லில் கையாளாக இருக்கலாம். இந்த வேலையில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், உயிருக்கு உத்தரவாதமில்லை. சுருக்கமாக, கொலம்பியா கொந்தளித்துக் கொண்டிருந்தது என்று நீங்கள் ஒரு வரியில் புரிந்து கொண்டால் போதும். யாருக்கும் வெட்கமில்லை. நீதி, தர்மம் போன்ற வார்த்தைகளுக்கு பொருளே இல்லை. தான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வதுதான் தர்மம் என்று கருதினார்கள். நாட்டை ஆண்டுகொண்டிருந்தவர்களில் தொடங்கி, அடிமட்ட குடிமகன் வரை இப்படியான மனநிலையில்தான் இருந்தார்கள். கொலம்பியாவின் சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்திருந்த ‘அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் சட்டம்’ மீண்டும் அமலானது.
யாரை வேண்டுமானாலும் கைது செய்து, ‘போதை முத்திரை’ குத்தி அமெரிக்கச் சிறைகளில் அடைக்கலாம் என்கிற நிலையை அன்றைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டது. அம்மாதிரி அமெரிக்காவுக்கு ஓர் ஆள் நாடு கடத்தப்பட்டாலும், ஓர் ஆளுக்கு பதிலாக பத்து நீதிபதிகளைக் கொல்வோம் என்று ஒட்டுமொத்த கார்டெல்களும் அறிவித்தன; செயலிலும் காட்டின. இதையடுத்து நீதிபதிகள் உயிரைக் காத்துக்கொள்ள தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கினார்கள். இதனால் நீதிமன்றங்கள் இயங்குவதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதெல்லாம் போதாதா, ஓர் உள்நாட்டுப் போர் நடப்பதற்கு? யார் யாரைத் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. மெதிலின் காலி கார்டெல்களுக்குள்ளான உள்மோதல் ஒருபுறம்.
மறுபுறம் பணத்துக்காக வேட்டை நாய்களாகப் பாய்ந்து வந்துகொண்டிருந்தார்கள் இராணுவத்தினர். விசாரணை ஏதுமின்றி அப்பாவிகள் கொத்து கொத்தாக சிறைக்குச் சென்றுகொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தெருவில் இறங்கி கல்லெறிய ஆரம்பித்தனர். இடதுசாரி கொரில்லாக் குழுக்களும் மக்களுக்குள் மக்களாக நின்று ஆயுதப் போரைத் தொடங்கினார்கள். கார்டெல்களின் சொர்க்கபுரியாகத் திகழ்ந்த மெதிலின் நகரம்தான் 24 மணி நேரமும் பற்றியெரிந்துகொண்டிருந்தது. நீதிமன்றங்களுக்கு கட்டாய லீவு என்பதால் சாமானியர்களுக்குக்கூட வன்முறை எண்ணம் தலைதூக்கியது. அதை அடக்குவதற்காகக் களமிறங்கிய அரசப் படைகள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டன.
வங்கிகள், வணிக வளாகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இம்மாதிரி வன்முறைகளில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்குண்டு என்றாலும், மொத்தப் பழியும் வழக்கம்போல பாப்லோ மீதுதான் போடப்பட்டது. ஏனெனில், மெதிலின் அவருடைய கோட்டைதானே? அமெரிக்கா, இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டது. நேரடியாக கொலம்பிய மண்ணில் தன்னுடைய இராணுவத்தைக் கால்பதிக்க வைக்க இதுதான் சந்தர்ப்பம் என்று முடிவெடுத்தது. அமெரிக்காவின் அதிரடிப்படை வீரர்கள், கொலைகார ஆயுதங்களோடு கொலம்பிய நகரங்களில் வலம் வரத் தொடங்கினார்கள். இயல்பிலேயே அமெரிக்க எதிர்ப்பு எண்ணம் கொண்ட கொலம்பியர்கள் இந்த நிலையை எதிர்த்தார்கள்.
சிறு பையன்கள் கூட அமெரிக்க ராணுவத்தினர் மீது கல்லெறிதல் மாதிரி சம்பவங்களில் ஈடுபடுவார்கள். பதிலுக்கு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடக்கும். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு போர் என்றாலே சர்க்கரைப் பொங்கல். அது என்னவோ தெரியவில்லை, வெடிகுண்டு வெடித்து மக்கள் இரத்தம் தெறிக்க, சதைத்துணுக்குகளாகச் சிதறி வீழ்வதை ரசிக்கக்கூடிய சைக்கோ மனநிலையில் அமெரிக்கா இருந்தது. கொலம்பியாவுக்குள் கால் பதித்த அமெரிக்க இராணுவம், “யார் அந்த பாப்லோ? எங்கிருப்பான் சொல்லுங்கள், சிதற அடிக்கிறோம் அவனை!” என்று கர்ஜித்துக் கொண்டிருந்தது. உண்மையைச் சொல்லப்போனால், பாப்லோ என்றுமே அமெரிக்காவை எதிர்த்துப் போரிட்டதில்லை.
அவர் எப்போதுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் கூடுதல் கவனம் செலுத்தினாரே தவிர, தாக்குதல்களில் அல்ல. பாப்லோ தன்னுடைய சகாக்கள் ஓச்சா, காச்சா உள்ளிட்டோரை வைத்து வெள்ளைக்கொடி காட்டினார். “நாங்கள் எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்கிறோம். போதைத்தொழில் உட்பட. இனிமேலும் கொலம்பியாவில் உயிர்கள் போகக்கூடாது. அரசியல் படுகொலைகள் நடக்கக்கூடாது. குண்டுகள் வெடிக்கக்கூடாது...” நியாயமாக கொலம்பிய அதிபர் இப்படித்தான் பேசியிருக்க வேண்டும். அவரோ, கார்டெல் ஓனர் மாதிரி பேச கார்டெல் உரிமையாளர்களோ இச்சூழலில் நாட்டின் நலம் கருதி பொறுப்பாக நடந்துகொள்ளத் தொடங்கினர். மெதிலின் நகரின் மேயர், கொலம்பிய அதிபருக்கு கடிதம் எழுதினார்.
“நீங்கள் அமைதியை நிலைநாட்டுவீர்கள் என்று மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்!” அதிபரின் பதில் ரவுடித்தனமாக வந்தது. “எங்களுக்கு இன்னமும் வேட்டை மிச்சமிருக்கிறது!” இந்தமாதிரி தற்குறித்தனமான ஆட்சிப் போக்கினால் விரக்தியடைந்துபோன பாப்லோ எஸ்கோபார் ‘லா ப்ரென்ஸா’ என்கிற செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதி, தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தினார். “எவ்வளவு இரத்தத்தை பார்த்துவிட்டோம்? இரத்தம் வழியுமென்றுதான் சொல்வார்கள். ஆறாக ஓடுவதை கொலம்பியர்கள் நாம்தான் கண்டிருக்கிறோம். அந்த துரதிருஷ்டவசமான வாய்ப்பு நம்முடைய தலைமுறைக்குத்தான் கிடைத்திருக்கிறது.
வன்முறையாளர்கள் என்று அறியப்பட்ட நாங்களே அமைதியைத்தான் விரும்புகிறோம். அதையேதான் உரத்த குரலில் வலியுறுத்துகிறோம். அமைதிக்காக நாங்கள் கொலம்பிய, அமெரிக்க அரசுகளிடம் பிச்சை கேட்காதது ஒன்றுதான் பாக்கி. அவர்கள் எங்களைப் போலவும், நாங்கள் அவர்களைப் போலவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு அருகிக்கொண்டே போகிறது. ரத்தத்துக்கு ரத்தம் என்று அரசு முடிவெடுத்துவிட்டால் யாருக்கும் வேறு மார்க்கமில்லை...”கிட்டத்தட்ட மிரட்டல் நடையில் பாப்லோ அந்தக் கட்டுரையை எழுதியபிறகு, அமெரிக்கத் தூதரகம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
(மிரட்டுவோம்) ஓவியம் : அரஸ்
|