38 சீரியல்... 15 ஆயிரம் எபிசோட்ஸ்...
ஒரு தமிழ் எழுத்தாளரின் இமாலய சாதனை!
செல்போனில் பேச சிம்கார்ட் வேண்டும் என்று சொல்வதும் தேவிபாலா ஓர் எழுத்தாளர் என்று ஆரம்பிப்பதும் ஒன்று தான்! தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிந்த பெயர். மாத நாவல்களின் மன்னர். தொடர்கதைகளின் ஜாம்பவான். சீரியல் உலகின் அரசர்... என தேவிபாலாவைக் குறித்து இன் அண்ட் அவுட் அனைவருக்குமே தெரியும். என்றாலும் இப்போது அதை 10 ஆயிரம் மெகா வாட்ஸ் லைட் அடித்து காட்ட வேண்டியிருக்கிறது! ஏனெனில் சன் டிவிக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. இந்நிலையில் 21 ஆண்டுகளாக சன் டிவி சீரியல்களுடன் பயணிக்கும் ஒரே ரைட்டர் தேவிபாலாதான்! மட்டுமல்ல, 38 தொடர்... 15 ஆயிரம் எபிசோட்ஸ்... என சின்னத்திரையில் பயணிக்கும் ஒரே தமிழ் எழுத்தாளர் இவர் மட்டும்தான்!
‘‘சின்னத்திரைக்கு எழுத ஆரம்பிச்ச புதுசுல கதை, திரைக்கதை, வசனம்னு மூணும் எழுதிட்டிருந்தேன். நிறைய சீரியல்ஸ் வர ஆரம்பிச்சதும் ஒர்க் லோட் அதிகமாச்சு. அதனால வசனம் எழுதறதை குறைச்சு கதை, திரைக்கதைல கவனம் செலுத்தறேன். இந்த நேரத்துல கே.பாலசந்தர் சாரை நன்றியோடு நினைச்சுக்கறேன். முதன்முதலா ‘ஒத்திகை’னு ஏழு வாரத் தொடரை அவர் கொடுத்தார். டிவில இப்பவும் நான் இருக்க அந்த ‘ஒத்திகை’ கத்துக் கொடுத்த விஷயங்கள்தான் காரணம். என் வாழ்க்கைல பெரிய வெளிச்சம்னா அது சன் டிவிதான். அதே மாதிரி என் வளர்ச்சில ‘ஆனந்த விகடன்’ எஸ்.பாலசுப்பிரமணியம் சார், அவரது மகன் சீனிவாசன் சார், ஏவி.எம்.சரவணன் சார், எஸ்.பி.முத்துராமன் சார்னு பலருக்கு பங்கிருக்கு.
இவங்க இல்லைனா நானில்ல. அதுவும் ஏவி.எம் எனக்கு தாய்வீடு மாதிரி. அவங்க செல்லப் பிள்ளை நான்!’’ நெகிழும் தேவிபாலாவின் இயற்பெயர் பாலசுப்ரமணியம். ‘‘‘ஆனந்த விகடன்’ல ‘மடிசார் மாமி’ தொடர்கதை எழுதினேன். அதுக்குப் பிறகுதான் குடும்ப நாவல் உலகத்துல உயரத்துக்கு போனேன். அந்த தொடர்கதைல திரைக்கதை எழுதறதுக்கான பயிற்சியை எஸ்.பாலசுப்பிரமணியம் சார் கொடுத்தார். மாத நாவலைப் பொறுத்தவரை ‘பாக்கெட் நாவல்’ ஜி.அசோகன் சார் முக்கியமானவர். 25 வருடங்களா அவரோட பயணிக்கறேன். என் குடும்ப நண்பரா, சகோதரராவே அவர் மாறிட்டார். இதுவரை நான் எழுதின தொடர்கதைகளும், நாவல்களுமா சேர்ந்து நாலாயிரத்தை தாண்டும்.
இதோ, உங்ககிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நிமிஷத்துல கூட நான்கு நாவல்கள் எழுதிட்டு இருக்கேன்...’’ என்றபடி தன் ஃப்ளாஷ்பேக்கை விவரிக்க ஆரம்பித்தார். ‘‘திருவேற்காடு அன்னை தேவி கருமாரிதான் நான் வணங்கற தெய்வம். சாதாரண பாலசுப்பிரமணியத்தை தேவிபாலாவா அழகு பார்க்கறது அந்த கருமாரிதான். ஆமா, சிறுகதை எழுத ஆரம்பிச்சப்ப அன்னை தேவி கருமாரியோட என் பெயரையும் சேர்த்து தேவிபாலா ஆனேன்! அப்பாவோட பூர்வீகம் பாலக்காடு. ரயில்வேல வேலை பார்த்தார். ஓர் அண்ணன். ரெண்டு அக்கா. நான் கடைசிப் பையன். அப்பாவும், அண்ணனும் இப்ப இல்ல. பள்ளிப் படிப்பு, ஊட்டி அரவங்காடுல. அப்புறம் சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். வண்ணாரப்பேட்டை தியாகராஜர் கல்லூரில பி.எஸ்சி. ரசாயனம் முடிச்சேன்.
ஸ்கூல், காலேஜ்ல பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டில கலந்து பரிசு வாங்கியிருக்கேன்...’’ என்ற வரின் முதல் சிறுகதை ‘சுமங்கலி பிரார்த்தனை’. ‘‘1979 அக்டோபர் மாத ‘கலைமகள்’ல அந்தச் சிறுகதை வெளியாச்சு. உண்மைல அந்தச் சிறுகதையை எழுதி முடிச்சதும் திருவேற்காடு போய் அம்மன் சன்னிதில அதை வைச்சு பூஜை செஞ்ச பிறகே ‘கலைமகளு’க்கு அனுப்பினேன். இந்த நேரத்துல ‘இதயம் பேசுகிறது’ வார இதழ்ல ஒரு சிறுகதை போட்டியை மணியன் சார் அறிவிச்சார். ‘ஒரே கேள்வி’னு அதுக்கும் ஒரு கதையை எழுதி அனுப்பினேன். முதல் பரிசு கிடைச்சுது. இந்த இரண்டு சிறுகதைகளையும் படிச்சுட்டு சாவி சார் ஒரு கதை கேட்டார். ‘சாவி’ பத்திரிகைக்கு தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன். அதுல வந்த ‘போகட்டும் விடு’ சிறுகதையை தூர்தர்ஷன்ல இருந்த எம்.எஸ்.பெருமாள் சார் படிச்சுட்டு, அதை ஒருமணி நேர நாடகமாக்கி கேட்டார்.
‘ஒரு மீனின் கண்ணீர்’னு டைட்டில் மாத்திக் கொடுத்தேன். என் திரைவடிவத்தோட முதல் ஆசான் எம்.எஸ்.பெருமாள். தொடர்ந்து சென்னை தொலைக்காட்சில 13 நாடகங்கள் எழுதினேன்...’’ என்று சொல்லும் தேவிபாலா தனியார் நிறுவனம் ஒன்றில் இரண்டரை வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். ‘‘தொடர்ந்து பத்திரிகைகள்ல சிறுகதை, தொடர்கதைனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால வேலையை ராஜினாமா செஞ்சுட்டு முழுநேர எழுத்தாளரானேன். இதுக்கு இடைல ‘மீண்டும் ஆண்டாள்’ சிறுகதை ‘விகடன்’ல வெளியாகி பரவலா பேசப்பட்டது. உடனே சாவி சார் கூப்பிட்டு ‘நாவல் எழுது... அதுவும் க்ரைம் கதையா’னு சொல்லி, ‘அக்டோபர் பவுர்ணமி’னு அவரே தலைப்பும் கொடுத்தார். என் முதல் க்ரைம் தொடர்கதையா அது ‘சாவி’ல வெளியாச்சு. அந்த நேரத்துல ‘மோனா’னு அவர் ஒரு மாத நாவலை நடத்திட்டிருந்தார்.
அதுல ‘இளமையில் கொல்’ எழுதினேன். அப்புறம் ‘மணியன்’ மாத இதழ், ‘மாலைமதி’, ‘ராணிமுத்து’னு வரிசையா என் நாவல்கள் வர ஆரம்பிச்சது. சிறுகதைகள் எழுதறதையும் விடலை. ஒரேநேரத்துல நாலஞ்சு தொடர்கதைகள் கூட எழுதியிருக்கேன். அப்ப, மாத நாவல்கள் ரேஸ் நடக்கும். ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரை, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா எல்லாம் உச்சத்துல இருந்த நேரம். ஒரு அப்ரன்டீஸ் மாதிரி நானும் க்ரைம் நாவல் ரேஸ்ல நுழைஞ்சேன்...’’ என பத்திரிகைகள் குறித்த ஃப்ளாஷ்பேக்கை சுருக்கமாக முடித்துவிட்டு சீரியல் பக்கம் வந்தார். ‘‘சன் டிவில வாரத் தொடர்கள்தான் முதல்ல அதிகமா வந்தது. மெகா தொடர்கள் வராத நேரம். ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ தொடங்கப்பட்டு முதன் முதல்ல ‘அக்ஷயா’ தயாரிச்சாங்க. இதுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினேன்.
அப்புறம் ‘ஆனந்தபவன்’, ‘புஷ்பாஞ்சலி’, ‘மூன்று முடிச்சு’ பண்ணினேன். சீனிவாசன் சாருக்கு மட்டுமில்ல, அவர் மனைவி ராதிகா மேடம், சாரோட அக்கா ராதா மேடம்னு மூணு பேருக்குமே கதை ஞானம் அபாரம். ஒரு கதையை அவங்க தேர்ந்தெடுக்க நூறு சீன்ஸை திரைக்கதையோடு எழுதிட்டு வரச் சொல்வாங்க. அப்பதான் கதையோட விறுவிறுப்பு தெரிய வரும் இல்லையா? அதே மாதிரி டயலாக்ல ‘சல்லிக்காசு’ வரக் கூடாது. எல்லா காசுக்கும் ஒரு மதிப்பு இருக்குனு சீனிவாசன் சார் சொல்லுவார். ஒவ்வொரு எபிசோடு முடியறப்பவும் பன்ச் வைக்கறது போதாதுனு சொல்வாங்க. ‘அலைகள்’ டைம்ல ஒவ்வொரு எபிசோடுக்கும் வர்ற மூணு பிரேக்குக்கும் பன்ச் கேட்பாங்க. கதை, கேரக்டர்ஸோட ஏரியாக்குள்ள நுட்பமா நுழைஞ்சு பட்டை தீட்டுவாங்க. இதெல்லாம் நடக்கும்போதே ‘ஏவி.எம்’ல குமரன் சாருக்காக ‘இப்படிக்கு தென்றல்’ எழுதினேன்.
இது ஒரு பார்ட் 50 வாரங்கள் வீதம் மூணு பார்ட்டா வந்தது. ஏவி.எம் சரவணன் சார் கூப்பிட்டு ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ கொடுத்தார். அதுவும் மூணு பார்ட். எஸ்.பி.முத்துராமன் சார் இதை டைரக்ட் பண்ணினார். இந்த நேரத்துல நடிகை ரேவதியும் சுரேஷ்மேனனும் ‘டெலிபோட்டோ ஃபிலிம்ஸ்’ தொடங்கினாங்க. என் முதல் மெகா தொடரான ‘நிறங்கள்’ (300 எபிசோட்) அவங்களுக்கு பண்ணினதுதான். அந்த வெற்றியைத் தொடர்ந்து மறுபடியும் அவங்க ‘நிஜங்கள்’ பண்ணினாங்க. இதே டைம்ல ‘கவிதாலயா’வுக்கு ‘ஜன்னல்’ எழுதினேன். ஒரு நாள் சரவணன் சார் கூப்பிட்டு ‘ஏவி.எம்ல முதல் மெகா தொடர் பண்ணலாம்’னு சொல்லி ‘நம்பிக்கை’ கொடுத்தார். 460 எபிசோட். அதைத் தொடர்ந்து ‘சொர்க்கம்’ (980 எபிசோட்) போச்சு.
சுஜாதா விஜயகுமார் மேடத்துக்காக ‘குங்குமம்’, ‘மனைவி’, ‘லட்சுமி’, ‘சிவசக்தி’னு மெகா தொடர்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் பண்ணினேன். அந்த டைம்ல ‘சத்யஜோதி’ தியாகராஜன் சார் கூப்பிட்டு ‘ஆனந்தம்’ (1320 எபிசோடு) கொடுத்தார். சன் டிவில பெரிய வெற்றி பெற்ற இந்த மெகா தொடருக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது கிடைச்சது. கலைஞர் கையால வாங்கினேன். தொடர்ந்து ‘சத்யஜோதி’க்காக ‘இதயம்’, ‘ஆண்பாவம்’ எழுதினேன். இதெல்லாம் நடந்திட்டிருந்த டைம்லதான் ‘கோலங்கள்’ வந்தது. மூலக்கதை எழுதினேன். 1533 எபிசோடு. ரெக்கார்டு பிரேக் பண்ணின தொடர். ‘சினி டைம்ஸ்’ சித்திக் சார் தயாரிச்ச ‘முகூர்த்தம்’, ‘முத்தாரம்’, ‘கேளடி கண்மணி’னு வரிசையா எழுதினேன்.
2014ல ராதிகா மேடத்துக்காக ‘தாமரை’ எழுத ஆரம்பிச்சேன். இப்ப வரை சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு. இடையிடைல ‘சொந்தபந்தம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மருதாணி’ தவிர தெலுங்கிலும் நாலு தொடர்கள் பண்ணியிருக்கேன். அதாவது சன் டிவில மட்டும் 13 ஆயிரம் எபிசோட்ஸ் எழுதியிருக்கேன்!’’ என்ற தேவிபாலாவிடம் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டோம். ‘‘உழைக்க நீங்க தயார்னா இதுக்கு மேலயும் நீங்க போகலாம். அதிகாலை இரண்டரைக்கு எழுந்துப்பேன். அன்னைக்கு யார் யாருக்கெல்லாம் சிறுகதை, தொடர்கதை சேப்டர், நாவல் எழுதணுமோ அதை எல்லாம் எழுதி எட்டு மணிக்குள்ள முடிப்பேன். இதுக்கு அப்புறம் சீரியல் வேலைகளை கவனிப்பேன்.
பத்திரிகை எழுத்தைப் பொறுத்த வரை எழுத்தாளர்தான் ராஜா. சீரியல் உலகம் அப்படியில்ல. அது டீம் ஒர்க். டிஸ்கஷன் போகணும். பெரிய நடிகைகள் நடிக்கிற சீரியல்னா சிலசமயம் ஸ்பாட்டுக்கு போக வேண்டி இருக்கும். இந்த வேலைச்சுமையை ரசிக்கறேன். விரும்பிச் செய்யறேன். அதனாலதான் சுமையா இல்லாம சுகமா இருக்கு...’’ என்றவருக்குள் டைரக்ஷன் ஆசை இருந்திருக்கிறது. ‘‘சரவணன் சார் கூட, ‘நீங்க முத்துராமன் சார் தொடர்ல சில வாரங்கள் ஒர்க் பண்ணுங்க. டெக்னிக்கலா கத்துக்கலாம். அடுத்த தொடரை இயக்கற வாய்ப்பு தர்றேன்’னு சொன்னார். அப்ப நான்கைந்து தயாரிப்பாளர்களுக்கு எழுதிட்டிருந்தேன். என்னை வாழ வைக்கறவங்க அவங்கதான். என் ஆசையால அவங்க பாதிக்கப்படறதை விரும்பலை. அதனால டைரக்ஷன் ஆசையை தள்ளி வைச்சுட்டேன்.
பெரிய திரைல முத்திரை பதிக்கணும்னு ஆசை இருக்கு. பார்க்கலாம்...’’ என்று புன்னகைக்கும் தேவிபாலா, தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். ‘‘1986 மே மாசம் எனக்கு திருமணமாச்சு. மனைவி பெயர் சாந்தி. மத்திய அரசுப் பணில இருக்காங்க. ‘மடிசார் மாமி’ வர்றப்ப மகள் ஸ்ருதி பிறந்தா. என்லக்கி கேர்ள். பி.டெக் முடிச்சுட்டு இப்ப தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறா. 2015ல அவளுக்கு திருமணமாச்சு. மருமகன் பிரகாஷ் ராமநாதன் எனக்கு மகனா இருக்கார். மகளோட கல்யாணத்துக்கு நிறைய நட்சத்திரங்கள் வந்திருந்தாங்க. ஏவி.எம். சரவணன் சாரும், எஸ்.பி.முத்துராமன் சாரும் ஃபங்ஷன் முடியற வரை கூடவே இருந்ததை மறக்கவே முடியாது. சொந்த வீடு கட்டவும் சரவணன் சார்தான் பெரிய அளவுல உதவி செஞ்சார். என் நலன்ல எப்பவும் அக்கறை காட்டுபவர் அவர்...’’ நெகிழ்கிறார் தேவிபாலா.
மை.பாரதிராஜா படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|