தேர்தலல்ல... திருவிழா!



செய்தி:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் பிரசாரம் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது! - வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு கவர்ந்திழுக்க நம் பங்களிப்பாக சில ஜாலி ஐடியாஸ்!

வாங்க மச்சான் வாங்க...

வருந்தி அழைத்தால் வராதவர் உண்டோ? இந்த லாஜிக்கை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர்களை வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், சந்தனம் வைத்து அழைத்தால் வராமலா போய் விடுவார்கள்! நடிகைகள் இந்த அழைப்புகளில் கலந்துகொண்டு, ‘(தேர்தல்) திருவிழாவுக்கு வரலைனா உங்க கனவுல வரமாட்டேன்’ என ஆண்களுக்கு ஜெர்க் கொடுக்கலாம்!

கூடவே ஆண் வாக்காளர்களின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளி அடையாளம் பதித்தால் அடையாள மை இட்டுக்கொள்ள ஜொள்ளர்கள் அதிக அளவில் ஆஜராவார்கள். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர்களுக்கு, நடிகை பிரியா வாரியரின் ‘கண்ணடி தாக்குதலுக்கு’ ஆளாகும் பாக்கியம் கிட்டும் என்று அறிவித்தால் வாலிப, வயோதிக வாக்காளர்கள் கண்டிப்பாக ஓட்டுப் போட வருவார்கள்!

கலைநிகழ்ச்சி

ஓட்டுப் போட அழைத்தால் மக்கள் சலித்துக் கொள்கிறார்கள்! எனவே தேர்தலையே திருவிழாவாக அறிவிக்கலாம். ‘திருவிழாவுல கலந்துக்குங்க...’ என அழைத்து மக்களின் சலிப்பை போக்கலாம்! இதனால் தேர்தல் கமிஷன் என்பது ‘திருவிழா கமிஷன்’ என பெயர் மாற்றம் பெறும்! தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே அந்தந்த பகுதிகளில் நடிகர் நடிகையர் பங்கேற்கும் பாட்டு, டான்ஸ் (குத்தாட்டம் ஓ.கேவா?) என கலைநிகழ்ச்சிகள் நடத்தலாம்!

‘ஆலுமா... டோலுமா...’ போல் பட்டையைக் கிளப்பும் சில ஆஸ்தான பாட்டுகளைத் தேர்ந்தெடுத்து விரலில் அடையாள மை இட்டுக் கொண்டவர்கள் தங்கள் அபிமான நடிக, நடிகையர் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் கை கோர்த்து வாக்குச் சாவடிக்கு வெளியே சிறிது நேரம் டான்ஸ் ஆடலாம் என விளம்பரப்படுத்தலாம்!

சாப்பிட்டுத்தான் போகணும்!

‘அவர் சமைச்சு பத்து பாத்திரம் கழுவிட்டு கிளம்பறதுக்குள்ளே போதும், போதும்னு ஆயிடுது...’ என்று சாக்கு சொல்லும் மனைவிகளைக் கவர திருவிழா அன்று வாக்காளர்களுக்கு காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யலாம். ஓட்டுப் போட்டதற்கான அடையாள மையை காண்பித்தால்தான் சாப்பாடு கிடைக்கும் என கண்டிஷன் போட்டால் வாக்கு சதவிகிதம் நிச்சயம் அதிகரிக்கும்!

ஜோசியம் ஃப்ரீ

ஜோசியர்கள் இல்லாமல் தேர்தல் திருவிழா நிறைவு பெறாது. ஆக, ஓட்டுப்போடுபவர்களுக்கு புத்தாண்டு பலன் சொல்லப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் பலன் தரும்! கிளி ஜோசியம், எலி ஜோசியம், பூனை ஜோசியம், அணில் ஜோசியம், ஆட்டு ஜோசியம், புலி ஜோசியம் என்று பலவிதமான ஜோசியக் கலைகளை திருவிழாவில் அறிமுகப்படுத்தலாம்!

போவோமா ஊர்கோலம்!

திருவிழாவுக்கு முதல் நாளன்று அந்தத் தொகுதியில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களையும் மாப்பிள்ளை அழைப்பு போல் டாப் திறந்த கார்களில் மாலை மரியாதையுடன் உட்காரவைத்து தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து வரலாம்! இதனால் அந்த ஏரியாவே களை கட்டி மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் கூடும். கூடவே வேட்பாளர்களை அந்தத் தொகுதியில் பார்ப்பதற்கான கடைசி வாய்ப்பு அதுவே என்றும் மக்கள் நினைக்கலாம்!

ரெஸிப்பி இலவசம்

சமையல் ரெஸிப்பி மோகம் அதிகரித்திருக்கும் காலம் இது. ஓட்டுப்போட்டால் பிரபல சமையல் கலைஞர் நடத்தும் ரெஸிப்பி வகுப்புக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கலாம். இதனால் பெண்கள், தங்கள் கணவன்மார்களை ரெஸிப்பி வகுப்புக்கு அனுப்ப நிச்சயம் ஓட்டுசாவடிக்கு உறுதியாக இழுத்து வருவார்கள்! ரெஸிப்பியை வீட்டில் முயற்சி செய்து கணவர் சொதப்பினால்... திருவிழா கமிஷன் தாய்க்குலங்களின் சாபத்திற்கு உள்ளாக நேரிடும். அதற்கான பரிகார பூஜைகளை செய்து கொள்ளவேண்டியது கமிஷனின் பொறுப்பு!

எஸ்.ராமன்