பொதுவெளியில் இலவசமாக திரையிடப்படும் மக்கள் சினிமா!



கொல்கத்தாவின் பாக்பஜார். உணவகங்களில் இருந்து வெளிவரும் புச்கா, ஜூக்னி சாட்களின் வாசனை மூக்கைத் துளைக்க தெருமுனையில் உள்ள திரையை ஆர்வமாய் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள். சிலர் ‘என்ன இது?’ என்பதைப் போல பார்த்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பொழுதுபோக்குத் திரைப்படம் அல்ல. வேதனையும் வலியும் நிறைந்த, மறைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை; சீழ்பிடித்த இந்தியாவின் யாரும் காணாத மறுபக்கம்; அதிகாரவர்க்கங்கள் சொல்ல மறந்த கதை. ‘மக்கள் திரைப்படக் குழு’ மேற்கு வங்கம் முழுதும் இப்படியான ஆவணப்படங்களை மக்கள் மன்றத்தில் திரையிட்டு வருகிறது. மக்களின் மனசாட்சியுடன் நேரடியாக உரையாடும் இந்தத் திரைப்படங்கள் விருதுகளுக்காக எடுக்கப்படுபவை அல்ல; சமூக மாற்றத்துக்காக எடுக்கப்படுபவை. ‘‘பொதுவாக, இப்படியான படங்கள் திரைப்பட விழாக்களில் அதுவும் மல்டிபிளக்ஸ் அரங்குகளில் மட்டுமே திரையிடப்படும்.

ஆனால், மக்கள் திரைப்படக்குழுவின் உறுப்பினர்களாகிய நாங்கள் 2013ம் ஆண்டிலிருந்து வங்கத்தின் கிராமங்கள், சிறு நகரங்கள், பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், தொழிற்சாலைகள், ரயில்வே நிலையங்கள் எனப் பொதுவெளியில் இதுபோன்ற படங்களைத் திரையிடுகிறோம். மக்களின் பிரச்னைகளை விவாதித்து தீர்வுக்கு நகர்த்தும் ஆயுதமே திரைப்படம். இதுவே எங்கள் வலுவான நம்பிக்கை. இத்திரைப்படங்களை எடுப்பது, திரையிடுவது... என இதற்காக ஆகும் செலவை பொதுமக்களிடமிருந்தே நிதியாகப் பெறுகிறோம். ஏனெனில், ஸ்பான்சர்ஷிப் என்பதன் இன்னொரு பெயர் தணிக்கை! நீங்கள் தனிநபர் யாரிடமிருந்தாவது நிதி பெற்றால் அவரது விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயல்பட நேரிடலாம்.

இதைத் தவிர்க்கவே மக்களிடமிருந்து நேரடியாக நிதி பெறுகிறோம். ஆண்டுதோறும் மக்களின் பங்கேற்புடன் கொல்கத்தா திரைப்பட விழாவை நடத்துகிறோம். கூடவே ‘Pratirodher Cinema’ என்ற கலாசார இதழையும் நடத்தி வருகிறோம்...’’ என்று சொல்லும் இந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான கஸ்தூரி பாஸு, அமெரிக்காவில் படித்தவர். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற அங்கு சென்ற காலத்திலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகக் களம் கண்டவர். கஸ்தூரி பாசுவின் தோழி ருத்ரா. இவர்கள் இருவரும் இணைந்தே பணியாற்றுகின்றனர். வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ருத்ரா.

கஸ்தூரியின் கணவரான த்வைபாயன் பானர்ஜியும் இந்த செயல்பாட்டில் முழுமூச்சுடன் இயங்கி வருகிறார். ‘‘மக்களது பிரச்னைகளைப் பேசும் டாக்குமென்டரிகளின் ரசிகன் நான்!’’ என்கிறார் பானர்ஜி. இடதுசாரி போராளியான உங்களின் கருத்துநிலை உங்கள் படங்களில் பிரதிபலிக்கும்தானே என்று கேட்டால்,  ‘‘உலகிலேயே இடதுசாரிகள் மட்டும்தான் அதிகபட்ச ஜனநாயகவாதிகள். பொதுவாக, மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் சேர்க்க பேச்சு, ஆடல், பாடல்கள் போன்றவற்றைத்தான் இடதுசாரிகள் பயன்படுத்துவார்கள். நாங்கள் வலதுசாரிகளின் ஊடகமான சினிமாவையும் பயன்படுத்திக் கொள்கிறோம்!’’ என்கிறார்கள். ஒரு பென்ட்ரைவ் நிறைய படங்கள், மினி ப்ரொஜெக்டர், 8X10 அடி ஸ்க்ரீன்-இவைதான் இத்திரைப்படக் குழுவின் உபகரணங்கள்.

மணிப்பூரின் ஆயுதப்படை கொடுமைகள், அரியானாவின் கப் பஞ்சாயத்துகள், நர்மதா ஆற்றின் போராட்டம், ஜார்க்கண்ட் ஆதிவாசிகள் வாழ்வாதாரம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்த ஆவணப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். ‘‘திரைப்பட விழாக்களைக் கடந்து, மக்களை நேரடியாக அணுகி திரைப்படங்களைக் காணச் செய்யும் மக்கள் திரைப்படக்குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது. இவ்வழியே அறிவுஜீவிகளைக் கடந்து வெகுஜன மக்களிடம் நிஜங்களைப் பேசும் அவர்களின் ஸ்டைல் ரொம்பவே புதுசு!’’ என இவர்களைச் சிலாகிக்கிறார் ‘சினிமா ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ என்னும் திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநரான சஞ்சய் காக்.

டாகுமென்டரியின் கதை!

ரயில் நிற்பது, விமானம் கிளம்புவது ஆகிய ஒரு ஷாட் காட்சிகள்தான் 19ம் நூற்றாண்டுக்கு முன்பு படங்களாக இருந்தன. இவையும் அகஸ்டே மற்றும் லூமியர் ஆகியோர் எடுத்த ஒரு நிமிடப் படங்கள்தாம். 1896ம் ஆண்டு போல்ஸ்லா மாசுட்ஸ்கி, வார்ஸா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் மருத்துவமனைகளில் பதிவு செய்த படங்களே அதிகாரபூர்வ ஆவணப்படங்களாகும். ‘Une nouvelle source de l’histoire’ என்ற ஆவணப்படத்தின் செய்முறையை விளக்கிய முதல் நூலை எழுதியவரும் போல்ஸ்லா மாசுட்ஸ்கிதான். பின்னர் திரையரங்குகளில் அரசின் செயல்பாடுகளை விளக்கும் நியூஸ் ரீல்கள்தான் டாக்குமென்டரிகளாக இருந்தன. 1973ல் சிலி நாட்டின் சால்வடோர் அலண்டே அரசு கவிழ்ந்ததற்கு ஒரே காரணம், ‘Chile: A Special Report’ என்ற ஆவணப்படம்தான்!

ச.அன்பரசு