நமக்குள் இருக்கும் மிருகம் விழித்தால் என்னாகும்? வெல்வெட் நகரம் மாதிரி இருக்கும்



‘‘நல்ல அவகாசம் எடுத்து செய்த ஸ்கிரிப்ட், ‘வெல்வெட் நகரம்’. சினிமா இப்ப வந்து நிற்கிற இடம் ஓர் அருமையான நிலை. புது முயற்சிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறாங்க. ‘வெல்வெட் நகரம்’ ஒரு கற்பனையான நகரம். நம் எல்லோரிடத்திலும் ஒரு மிருகம் உறங்கிக்கிட்டே இருக்கும். அது நல்ல மிருகமா, கெட்ட மிருகமானு அவங்களுக்கு மட்டுமே தெரியும். பொதுவாக அந்த மிருகத்தை நாகரீகம் என்ற போர்வையில் நாம் கட்டிப்போட்டிருக்கோம்.

கோபம் வந்தால் மற்றவனை அடிச்சே கொன்னு போடறவனும் இருக்கான். மன்னிச்சு ஒரு புன்முறுவலோடு ஒதுங்கிப் போறவனும் இருக்கான். அந்த நாகரீகம் என்ற சங்கிலி உடைந்தால் சென்னை நகரம் எப்படி இருக்கும்? ‘வெல்வெட் நகரம்’ மாதிரி இருக்கும்! இது ஒரு சிட்டியில் நடக்கிற ஓர் இரவோட கதை...’’ தெளிவாகப் பேசுகிறார் புதுமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.

படத்தின் ஒன்லைன் சொல்லுங்களேன்...

ஆக்‌ஷன் த்ரில்லராக 48 மணி நேரத்தில் நடந்து முடிகிற மாதிரி கதை அமைஞ்சிருக்கு. கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான ஆதாரம் தேடி சென்னை வருகிறார் பத்திரிகையாளர் வரலட்சுமி. அவர் சந்திக்கும் அனுபவங்கள் எதிர்பாராததாக அமைகிறது. தப்பு செய்தால் தண்டனை வரும் என்பதைத் தாண்டி தப்பு பண்றாங்க இல்லையா, அப்படி ஒரு ஊரே இருந்தது என்றால் எப்படியிருக்கும்?

நிறைய உண்மைச் சம்பவங்களிலிருந்து இன்ஸ்பையர் ஆகி, ஈ.சி.ஆரில் தம்பதியாகப் போகிறவங்களுக்கு ஏற்படுகிற பிரச்னை தொடங்கி, பழங்குடியினருக்கான அல்லல் வரைக்கும் ஒரு லைனில் கொண்டு வந்திருக்கேன். ரொம்ப நாளைக்குப் பிறகு ஹீரோவே இல்லாத படம். வரலட்சுமியை முன்னிறுத்தி ஒன்பது கேரக்டர்களுக்கு இடமிருக்கு. நீங்க என்னை சந்திக்கிறது, நான் உங்களைப் பார்க்கிறது எல்லாத்திலும் ஒரு ட்ராவல் இருந்திருக்கும். ‘கேயாஸ்’ தியரி மாதிரி ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையும், பாதிப்பும் உண்டு.

ஒவ்வொரு கேரக்டரும் இன்னொரு கேரக்டரை மீட் பண்ணியிருக்க மாட்டாங்க. ஆனால், அவங்க செயல்களில் தொடர்பிருக்கும். அவர்கள் ஒவ்வொருத்தரும் வந்துவிட்டு வேறொரு இடத்தில் அகப்பட்டு, வந்த வேலையை முடித்தார்களா என்பதே கதை. காமெடிகளை எல்லாம் சீரியஸாகவும், சீரியஸ்களை எல்லாம் காமெடியாகவும் பார்த்துப் பழகிவிட்ட சமகால சமூகத்தைப் பற்றின கதை. கதையில் ஒவ்வொருத்தரும் இந்த சமூகத்தை மறைமுகமாக அடையாளம் காட்டிக் கொண்டும், அக்கறைப்பட்டுக் கொண்டும் இருப்பாங்க.

வரலட்சுமி இப்ப ஒரு நல்ல இடத்துக்கு வந்து நிற்கிறாங்கனு தெரியுது...

ரொம்ப உண்மை. அவசியத்தையும், கதையையும் புரிந்துகொண்டு சரியான இடத்தில் அவ்வளவு பொருத்தமாக வெளிப்படுகிறார். இப்பப் பாருங்க, அவங்ககிட்டே நல்ல படங்களின் லைன் அப் இருக்கு. சட்னு ஒன்றிரண்டு டேக்கில் பிரமாதமாக நடிக்கிறாங்க. சமயங்களில் படத்தை தோளில் வைத்து சுமக்கிற மாதிரி கூட இருக்கும். இன்னும் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், கண்ணன் பொன்னையா, பிரகாஷ் ராகவன்னு படத்தின் மிகச்சரியான கேரக்டர்கள் இருக்காங்க. பொதுவாகவே இங்கே தன்னோட பலம், இன்னொருத்தரோட பயத்துல இருக்குன்னு சந்ேதாஷமாகிடறாங்க. இந்த மாதிரி சம்பவங்கள் நிஜத்தில் நடக்கலை.

நிஜத்தில் நடக்கிற மாதிரியான நாட்கள் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கு என்கிற மாதிரியே படுது. நமக்கே வெளியே நடக்கிற அநியாயங்களைப் பார்க்கும்போது நிறைய பேரை அடிக்கணும்னு தோணும். ஆனால் எல்லாத்தையும் முழுங்கிட்டு சில சமயங்களில்தான் வெளிப்பட்டு இருக்கோம். பாருங்க, குரங்கணி சம்பவம்கூட நமக்குப் புதுசு. ஆனால், மலையோரமாக இருக்கிறவங்களுக்கு இதெல்லாம் பழைய செய்தி. மனிதர்களே சிக்கி சின்னபின்னமாகி, யார் யாரோ ஓடிப்போய் காப்பாத்தினாங்க. முகம் தெரியாத அந்த ‘யார் யாரோ’ முடிகிறதை செய்கிறதாலதான் இந்த உலகம் இன்னும் உயிர்த்திருக்கு. சுனாமின்னா ஜப்பானில்தான் தெரியும். இங்கே விஷயம் தெரியாமல் ஆளுயரத்திற்கு அலை எழுந்ததை வேடிக்கை பார்க்கப் போய் உயிரை இழந்தவர்கள் பாதி.

பாடல்கள் அருமையாக இருக்கு...

இப்ப அச்சு ராஜாமணி எல்லார் பார்வையிலும் பட்டுக்கிட்டே இருக்கார். அவரேதான் மியூசிக். அவரது ட்யூன்கள் நிறைய வித்தியாசம் தருது. நான் ஒண்ணும் பெரிய ரெஃபரன்ஸ் சொல்லலை. அவரே ஆர்வமாக வந்து பிரமாதமாகச் செய்கிறார். பகத்குமார்தான் கேமரா. எனக்கு சில ஆரம்பங்களை வகுத்துக் கொடுத்தவர். இந்தப்படத்தை தயாரிப்பது என் நண்பன் அருண் கார்த்திக். சில இடங்களில் கதை சொல்லி, அவர்களுக்குப் பிடித்து, படம் தயாராவதற்கான நேரம் தள்ளிக் கொண்டே போனது. ‘வந்திடு... நாமளே தயாரிப்போம்...’னு தட்டிக்கொடுத்து தங்கு தடையில்லாமல் தயாரிக்க உதவியவர் அருண்.

இப்ப மக்கள் ரசனை வளர்ந்து போச்சு. அயல் சினிமாவையும் பார்த்து புதிய படங்களுக்கு மக்கள் கை கொடுத்து வரவேற்கிறாங்க. நாம என்ன நினைக்கிறோமோ அதை மக்களுக்கு நல்லபடியாக கடத்திட்டா போதும்னு நினைக்கிறேன். எழுத்துக்கும் அது காட்சி வடிவமாவதற்கும் நடுவில் ஒரு பெரிய கெமிஸ்ட்ரி இருக்கு. அதற்கு கூடுதலான உழைப்பும், கவனமும் தேவைப்படுது. என்னைப் பொறுத்தவரைக்கும் அது கூடுதலான அனுபவம். அந்த வகையில் ‘வெல்வெட் நகரம்’ தனியா, வித்தியாசமா, புதுசா இருக்கும்னு நம்புறேன்.

நா.கதிர்வேலன்