ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி-75
அனுபவங்களின் திரட்சியையும் வாசிப்பில் கண்டடைந்த உண்மைகளையும் தமிழன்பன் போல் வேறொருவர் பேசியதில்லை. இளம் படைப்பாளர்கள் யாராயிருந்தாலும், அவர்களை உச்சிமோந்து வரவேற்பதிலும் அவருக்கு இணை இன்னொருவர் இல்லை.
எதையும் ஆராய்ந்து ஆதாரத்துடன் பேசக்கூடிய அவருடைய நினைவாற்றல் மெச்சத்தக்கது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே அவர்மீதும் அவர் கவிதைகள்மீதும் ஈடுபாடுள்ள நான், அவர் தலைமையில் கவியரங்கமென்றால் பங்கேற்கத் தவறியதில்லை. காரணம், சிலேடைகளைச் சொல்லியோ கிளுகிளுப்புகளை மூட்டியோ அவர் அரங்கத்தைக் குறுக்க மாட்டார். நேர்த்தியாக ஒவ்வொரு மேடைக்கும் உரிய கருத்துகளை எழுதி வருவார். கவியரங்கில் பங்கேற்கும் எங்களையும் புதிதாகச் சிந்திக்கத் தூண்டுவார். ஒருமுறை மும்பை தமிழ்ச் சங்கம் கவியரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கவிதை வாசிப்புக்கென்று நிர்ணயித்திருந்த தொகையைக் காட்டிலும் அதிகமாக எனக்கு வழங்கப்பட்டது.
“எல்லோருக்கும் ஒரே தொகையைத் தராமல் எனக்கு மட்டும் கூடுதலாக ஏன் தருகிறீர்கள்..?” என்று கேட்டேன். அப்போது தமிழ்ச் சங்கத்தினர், “இப்போது திரைத்துறையில் பணியாற்றிவரும் நீங்கள் அய்யாவுக்காக விழாவில் பங்கேற்க சம்மதித்ததை அறிவோம். என் அழைப்பை ஏற்று வர சம்மதித்த பாரதிக்கு கூடுதலாகத் தரவேண்டுமென அய்யா கேட்டுக் கொண்டார்...” என்றார்கள். எனக்கு சுளீரென்றிருந்தது. தமிழன்பனைக் காட்டிலும் தகுதியோ திறமையோ அனுபவமோ வாசிப்போ வாய்க்கப் பெறாத நான், திரைத்துறையில் இருப்பதாலே உயர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை என்று அந்த நொடியிலேயே மறுத்து, எல்லோருக்கும் நிர்ணயித்த தொகையையே எனக்கும் தரும்படி கேட்டுக்கொண்டேன்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதைத்துறையில் இயங்கிவரும் அவர், என் போன்ற பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர். உருவாக்கியதோடு நில்லாமல் தொடர்ந்து வளர்த்தும் விடுபவர். இந்தியாவின் பல மூலைகளுக்கும் அவர் எங்களை கவிதை வாசிக்க அழைத்துப் போயிருக்கிறார். அண்ணா நூற்றாண்டு விழா சமயத்தில், அவர் தலைமையில் ஏற்பாடான அத்தனைக் கவியரங்கங்களிலும் என் பெயரும் இடம்பெற அவரே காரணம். என்றாலும், ஒருபொழுதும் தன்னால்தான் இத்தனை வளர்ச்சியைக் கண்டிருக்கிறாய் எனச் சொல்ல அவர் துணிந்ததில்லை. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், ‘‘தன்னுடன் நிகழ்ச்சியில் பங்குகொண்ட பாரதிதாசனுக்கு தம்மைவிட அதிகமாகச் சன்மானம் தரவேண்டும்...’’ எனச் சொல்லியிருக்கிறார்.
வானொலி நிகழ்ச்சிக்கென்று விதிக்கப்பட்டுள்ள தொகைக்கு அதிகமாகத் தர வரைவு இல்லையென்று எவ்வளவோ சொல்லியும் கி.வா.ஜ. கேட்கவில்லை. அடம்பிடித்து வேறொரு நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்ய வைத்து, தம்மைவிட கூடுதலான தொகையை பாரதிதாசன் பெறும்படி செய்திருக்கிறார். பிறரைவிட தனக்கே அதிகம் தரவேண்டும் என நிபந்தனை விதித்த கதைகளைத்தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், பெரியவர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை. தங்களைத் தாழ்த்திக்கொண்டு பிறரை உயர்த்துகிறார்கள். ‘‘தன்னைத் தாழ்த்திக்கொள்பவனே உயர்த்தப்படுவான்...’’ எனும் விவிலியத்தின் வாசகங்கள் அவர்களுக்கே பொருத்தமானவை. தமிழன்பன், பணத்துக்காக எதையும் எழுத ஒப்பாதவர்.
நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில், இருபது அம்சத் திட்டத்தை ஆதரித்துப் பாட்டெழுதினால், பாட்டுக்கு இரண்டாயிரம் தருவதாக வானொலி நிலையம் அறிவித்தது. அவ்வறிப்பைத் தொடர்ந்து பலரும் இருபது அம்சத் திட்டத்தை ஆதரித்து எழுதினார்கள். தமிழன்பனிடமும் பிரத்யேகமாக வானொலி நிலைய இயக்குநர் கேட்டுக்கொண்டார். அப்போதும் ‘‘காசு கிடைக்கிறது என்பதற்காக மக்களுக்கு விரோதமான திட்டத்தை ஆதரித்து எழுதமாட்டேன்...’’ என்றிருக்கிறார். ‘‘கண்ணதாசனே எழுதி யிருக்கிறார்...’’ எனக்கூறி, வானொலி இயக்குநர் வற்புறுத்தியபோதும், எடுத்த முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. கண்ணதாசனுக்கு இருபது அம்சத் திட்டத்தில் ஏற்பிருந்தது. அத்தோடு காங்கிரஸ் கட்சியுடன் உறவுமிருந்தது.
ஏற்பினாலும் உறவினாலும் அவர் எழுதியதைக் காசுக்காக எழுதினார் என்று கருதிக்கொண்டால், அதைவிட மடமை ஒன்றில்லை. ‘மணிக்கொடி’, ‘எழுத்து’, ‘கசடதபற’ என்னும் வரிசையில் ‘வானம்பாடி’ இதழ் வருகிறபோதுதான் தமிழன்பன் போன்றோர்க்கு வெளிச்சம் கிடைக்கிறது. கோவையில் ஆரம்பித்த ‘வானம்பாடி’ இதழை ஆதரித்தும், அவர்களுடைய கவிதை முயற்சிகளைப் பாராட்டியும் எழுதத் தொடங்கியவர்களே இன்குலாப்பும், தமிழன்பனும். இரண்டுபேருமே அப்போது புதுக்கல்லூரியில் பேராசிரியர்களாக இருந்தவர்கள். ஒத்த சிந்தனையுடைய அவர்கள் இருவருடைய படைப்புகளையும் தொடர்ந்து வெளியிட்ட பெருமை, கவிஞர் இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ என்னும் இதழுக்கு உரியது.
பெரியாரியம், மார்க்சியம் என்ற தளத்தில் ஆரம்பித்து இயங்கிய அவர்கள் இருவருமே ஒருகட்டத்தில் தமிழ்த் தேசிய கொள்கைக்கு வந்தடைந்தார்கள். மார்க்சியத்திலிருந்து சர்வதேசியத்தை நோக்கி விரியாமல், தமிழ்த் தேசியத்தை நோக்கி அவர்கள் திரும்பியதை சிலர் விமர்சிப்பதுண்டு. நியாயமாகப் பார்த்தால், ‘தமிழ்த் தேசியமே சர்வதேசியம்’ என்ற கருத்தே அவர்களுடையது. தனித் தமிழ் ஈழத்துக்கான கனவுகளோடு இளைஞர்கள் உலவிய காலங்களில், அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கவிதைகளை ஆக்கியளித்தவர் தமிழன்பன். ஈழம் என்றில்லை, உலகத்தின் எந்த மூலையில் ஆதிக்கம் தலைவிரித்தாடினாலும், அதை அவர் எழுதுகோல் குத்திக்கிழிக்கத் தயங்கியதில்லை.
அமெரிக்க எதிர்ப்பு என்பதை நெருடா வழியாகப் பெற்றவர் அவர். அதேபோல் சமூகநீதி சமன்பாட்டை பாரதிதாசனிடமிருந்து பெற்றிருக்கிறார். ‘உன் வீட்டுக்கு நான் வந்திருந்தேன் வால்ட் விட்மன்’ என்னும் நூலில், பயண அனுபவங்களை முதல் முதலாக கவிதையில் எழுதிக் காட்டியவரும் தமிழன்பனே. ஆபிரகாம் லிங்கனையும் வால்ட் விட்மனையும் தந்த அதே அமெரிக்காவை இன்றைய அரசியல் புரிதலோடு அந்நூலில் அணுகியிருக்கிறார். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுடன் அமெரிக்காவை ரசிக்க முடியாத துக்கத்தையும் அந்நூலில் பதிந்திருக்கிறார். எதை எழுதினாலும் எவ்வளவு எழுதினாலும் திரும்பத் திரும்ப தமிழன்பன் மக்களைச் சுற்றியே வருகிறார்.
“ஒரு காலத்தில் சமயங்களின் இடத்தை கவிதைகள் கைப்பற்றும்...” என்பது அவருடைய நம்பிக்கை. ஆனால், இன்றைய மதவாதச் சூழலில், கவிஞர்கள் படுகிற பாடுகளைச் சொல்வதற்கில்லை. ஆண்டாள் சந்நிதிகளிலும் ஆய்வுக் கட்டுரைகளிலும் கவிஞர்கள் மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களாக சித்திரிக்கப்படுகிறார்கள். நெருக்கடி நிலை காலத்தில் இந்தியாவென்றால் இந்திரா என்றதுபோல, மதமென்றால் மத்திய அரசென்ற நிலை இப்போது வந்திருக்கிறது. இந்த அபாயங்களைத் தடுக்கும் செயலூக்கம் மிக்கவராக தமிழன்பன் இருந்துவருகிறார். ‘‘படித்தவர் படிக்காதவர் எல்லோரும் உண்ணக்கூடிய ரொட்டிகளாக கவிதைகள் இருக்க வேண்டும்...’’ என விரும்பியவர் நெருடா, அவரையே தன் கவிதை ஆசானாகக் கொண்டு இயங்கி வருபவர் தமிழன்பன்.
அவருமே நெருடாவைப் போல் எளிய பொருள்களை எளிய சொற்களால் எழுதுவதையே விரும்பும் கவியாக இருந்துவருகிறார். ஒப்பீட்டளவில் ஒவ்வொரு கவிஞரும் ஏதோ ஓர் இடத்தில் தேங்கிவிடுவதை அறிகிறோம். அந்தத் தேக்கம், வாசிப்பின்மையாலும் வயதின் காரணத்தாலும் வருவது. தமிழன்பனுக்கோ இரண்டினாலும் தேக்கம் வரவில்லை என்பதுதான் ஆச்சர்யம். தொடர்ந்து வாசிப்பதைத் தன்னுடைய கொள்கையாகவே வைத்திருக்கும் அவர், இக்கட்டுரை எழுதப்படும் இந்த சமயத்தில்கூட ஏதோ ஒரு புதிய நூலுக்கான சிந்தனையில் இருக்கக்கூடும். ‘‘தீவனம் வைத்துத்தான் மாட்டைக் கறக்கவேண்டும்...’’ என பாரதிதாசன் நூல் வாசிப்பு குறித்துச் சொல்லுவார்.
‘‘தீவனம் வைக்காமல் கறந்தால் மடிக்கும் வலி, கறக்கும் விரலுக்கும் வலி என்பதே அவர் சொல்லாமல் சொல்லியிருப்பது...’’ என இக்கூற்றை அடிக்கடி நினைவூட்டும் தமிழன்பன், இதயங்கள் மென்று சுவைக்கவும் எதிர்காலப் படைப்பிலக்கியவாதிகள் ஜீரணித்துக்கொள்ளவும் எழுதிக்கொண்டே இருக்கிறார். ‘மலை கண்டு மலைக்காதே’ என்றொரு கவிதையைத் தமிழன்பன் எழுதியிருக்கிறார். எதைக் கண்டும் வியந்து வீழ்ந்துவிடாதே என்பதே அக்கவிதையின் உட்பொருள். அக்கவிதைபோல பல கவிதைகளை மிகை உணர்ச்சியிலிருந்து விடுபட அவர் எழுதியிருக்கிறார். உண்மையில், மிகை உணர்ச்சிக்கு ஆட்படாமல், ஒரு கவிஞனால் இவ்வளவு எழுத இயலுமா? என்பதே என்னுடைய கேள்வி. அதீத வியத்தலை அல்லது மிகை உணர்ச்சியைப் பற்றிக் கொள்ளாத ஒருவர், தொடர்ந்து கவிதை எழுதுவதும், நூல்களை வெளியிடுவதும் சாத்தியமே என்பதை தமிழன்பனைத் தவிர்த்து, வேறு யாரால் சொல்ல முடியும்?
(முற்றும்) ஓவியங்கள்: மனோகர்
|