கவிதை வனம்



வெளிச்சத்தை தொலைத்தவர்கள்

மௌனத்தாலான
பூட்டால் பூட்டப்பட்டு
இறுக்கமுற்று
நிற்கிறது அந்த வீடு.
வாழ்ந்து கெட்டதற்கான
அத்துணை அறிகுறிகள்  
கொட்டிக் கிடக்கும்
அவ்வீட்டில்
எந்தவித எதிர்ப்புமின்றி  
சாவித்துவாரத்தினுள்   
நுழைந்த வெளிச்சம்
பூனையெனப் பதுங்கி
பரவவிடுகிறது தன் பார்வையை.  
காரணத்தை அறிய
பொழுதெல்லாம்
தேடிச் சலித்தபின்
சோம்பல் முறித்து
வெளியேறும் அதனிடம்
இந்த வீட்டினர்
உன்னைத்
தொலைத்ததுதான் காரணம்
என்பதை எப்படிச் சொல்லும்
அந்தப் பூட்டு.

- மகிவனி

குறுங் கவிதைகள்

* காலுக்கு அடியில்
கடல் அலை நழுவியதும்
மணலில் பதியும் மனம்.

* கடிகாரம் உடைந்த பிறகும்
ஓடிக்கொண்டே இருந்தது
காலம்!
- கி.ரவிக்குமார்