உலக விதைகளுக்கு ஒரு வங்கி!
ஒருபுறம் க்ரீன்லாந்து கடலுக்கும் மறுபுறம் ஆர்க்டிக் கடலுக்கும் அருகில் வங்கி அமைக்க நிச்சயம் ஒருவருக்கு தைரியம் வேண்டும். காரணம், அப்படிப்பட்ட இடத்துக்கு மக்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழும். ஆனால், அது பணப் பரிமாற்றத்திற்கான வங்கி அல்ல; அடுத்த தலைமுறைகளை வாழவைக்கும் விதைகளுக்கான ஸ்பெஷல் வங்கி! நார்வே அரசின் உணவுத்துறை, மரபணு மையம் மற்றும் பயிர்அறக்கட்டளை இணைந்து ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவில் அமைத்துள்ள ஸ்வால்பார்ட் விதை வங்கிக்கு இந்த ஆண்டு பத்தாவது பர்த்டே. மைனஸ் பதினெட்டு டிகிரி செல்சியஸில் கவனமாக இயங்கும் விதை வங்கியில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 557 விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.
 இவை நிகழ்காலத்தில் வாழ்பவர்களுக்கானதல்ல. எதிர்காலத் தலைமுறையினருக்காக! நிலநடுக்கம், பூகம்பம், தீ விபத்து ஆகியவை ஏற்பட்டு பயிர்கள் அழிந்துபோனால் நிலத்தில் உழுது பயிரிட நெல், கோதுமை, சோளம் ஆகிய தானியங்கள் வேண்டுமே... அதற்காகத்தான் இந்த பாதுகாப்பான விதை வங்கி. ‘‘விதைகளுக்கான மரபணு வங்கிகள் ஐம்பதாண்டுகளுக்கு முன்பிலிருந்தே செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில வங்கிகள் இரண்டாம் உலகப்போர் நிகழ்வதற்கு முன்பே விதைகளைச் சேமித்து, அவற்றைப் பெருக்கி செயல்பட்டு வருகின்றன.
பருவச்சூழல் மாறுபாடு, நோய்களின் பெருக்கம், உணவுத்தேவை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு தானியங்களின் சேமிப்பு அவசியம்...’’ என்கிறார் ஸ்வால்ட்பார்ட் விதை வங்கியின் ஒருங்கிணைப்பாளரான அஸ்முந்த் அஸ்டல். உலகிலுள்ள எந்த நாட்டு விதை வங்கியும் ஸ்வால்பார்ட் மையத்தில் விதைகளைச் சேமித்து அவசர நிலையின்போது திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. விதை தானியங்களை ஸ்வால்ட்பார்டில் சேமித்து அதன் மாதிரிகளை போர் நடைபெறும் சிரியாவின் ஆலெப்போவிலுள்ள விதை வங்கியில் வைத்திருக்கிறார்கள். ‘‘விதைகளை அப்படியே வைத்திருந்து திரும்ப மண்ணில் போட்டால் முளைக்காது.
எனவே அதன் தன்மையை சோதித்து, பயன்படாமல் போகும் முன் அதனை விளைவித்து, முளைக்கும் திறன் கொண்டதாக வைத்திருக்க வேண்டும்...’’ என்கிறார் அஸ்டல். பிரபஞ்ச விதை வங்கிகளை உலக விவசாய ஆராய்ச்சி மையம் (Icarda) கண்காணித்து ஒருங்கிணைக்கிறது. ஸ்வால்ட்பார்ட் விதை வங்கி உள்ள ஏரியாவில் மைனஸ் மூன்று டிகிரி வெப்பநிலை நிலவுகிறது எனில் அதன் உள்ளே குளிர்நிலையை நிலையாகத் தக்க வைக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஹால்களைக் கொண்ட விதை வங்கி மழை வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இதற்கான செலவு மட்டும் ஆண்டுக்கு ஆறரைக் கோடி ரூபாய்! பிற பகுதிகளைப் போலவே பருவச்சூழல் மாறுபாட்டால் இப்பகுதியில் பனிச்சரிவு பிரச்னை உருவாகியுள்ளது. இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் தலைநகரான தில்லியிலும் தேசிய விதை வங்கி அமைக்கப்பட்டு நான்கு லட்சம் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் 2009ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் லே நகரில் விதை வங்கியை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தொடங்கியது. பனி சூழ்ந்த இவ்விடத்தில் பல்வேறு தாவரங்களின் 5 ஆயிரம் விதைகள் சேமிக்கப்பட்டுள்ளன.
தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்புகள், மருத்துவ தாவரங்கள் ஆகியவற்றின் விதைகள் இங்குள்ளதாக தகவல் தருகிறார் தேசிய விதை வங்கி முன்னாள் இயக்குநரான கே.சி.பன்சால். 2015ம் ஆண்டு 17 ஆயிரத்து 600 அடி உயரத்தில் ஆய்வு மையத்தை அமைத்து டிஆர்டிஓ செயல்பட்டு வருகிறது என்றாலும் இதை ஸ்வால்பார்ட் விதை வங்கியோடு ஒப்பிடமுடியாது. ‘‘இந்தியா அப்படி ஒரு முயற்சியைச் செய்தால் அதற்கு ஆய்வாளர்கள் மட்டுமல்ல, பொறியாளர்கள், புவியியலாளர்கள் என பலரின் அறிவும், ஒத்துழைப்பும் தேவை. அவை எதிர்காலத்தில் உருவாக அதிக வாய்ப்புள்ளது...’’ என நம்பிக்கை தெரிவிக்கிறார் கே.சி.பன்சால்
-ச.அன்பரசு
புதிய தலைமுறை விதை வங்கி!
நார்வே மற்றும் வடதுருவத்துக்கு இடையிலான ஸ்வால்ட்பார்ட் பகுதியில் மலைத்தொடருக்கு உட்புறமாக அமைந்துள்ளது விதைவங்கி. பனி, பாறை ஆகியவற்றின் பாதுகாப்பிலுள்ள இந்த விதை வங்கி எதிர்காலத்துக்கான பேக்அப் குடோனாக செயல்படுகிறது. நூறு மீட்டர் அளவில் விதைவங்கி உள் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. புவியியலில் மாறுபாடற்ற, ஈரப்பதம் குறைந்த பகுதியான இங்கு உலகெங்கும் பெறப்படும் 250 கோடி விதைகளை சேமிக்கலாம்.
 Crop Trust
1996ம் ஆண்டு உலகிலுள்ள 150 நாடுகள் இணைந்து பயிர்களைக் காப்பதற்காக CGIAR என்னும் ஒப்பந்தத்தை உருவாக்கி ட்ரஸ்டை அமைத்தன. ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த அறக்கட்டளையை நிறுவி 2008ம் ஆண்டு முதல் ஸ்வால்பார்ட் விதை வங்கியை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
|