வாரிசு



துருவ்

பாலாவின் ‘வர்மா’வில் அறிமுகமாகிறார் ‘சீயான்’ விக்ரமின் மகன் துருவ். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். வெளிநாட்டில் தியேட்டர், ஃபிலிம்  மேக்கிங் கோர்ஸ் படித்தவர். சிறுவயதிலிருந்தே டைரக்‌ஷனில் ஆர்வம். படிக்கும் காலத்திலேயே டப்ஸ்மாஷில் கலக்கியவர். அப்போது அவர் இயக்கிய  ‘Goodnight Charlie’ குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட். அப்பாவைப் போலவே துருவ்வும் போட்டோகிராபியில் எக்ஸ்பர்ட். கிங்  லியோ, கூஃபின் இதெல்லாம் துருவ் ஆசை ஆசையாக கொஞ்சும் செல்ல நாய்க்குட்டிகள்!

ஜான்வி

பாலிவுட்டில் ‘தாடக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி. செல்லப் பெயர் ஜானு! மும்பையில் உள்ள  அம்பானியின் சர்வதேசப் பள்ளியில் படித்துவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் டிகிரியை முடித்தவர். இந்த  கல்லூரியில்தான் ஹாலிவுட் ஏஞ்சலினா ஜோலி, டோலிவுட் அகில் அக்கினேனி, பாலிவுட் ரன்வீர் கபூர் படித்திருக்கிறார்கள். கரன் ஜோகர் தயாரிப்பில்  இஷான் ஹாட்டர் ஜோடியாக நடித்து வரும் ஜான்விக்கு  மார்ச், 6 பிறந்தநாள்!

கல்யாணி

புரொடக்‌ஷன் டிசைனர், ஆர்ட் டிபார்ட்மென்ட்களில் உதவியாளர்... என சினிமாவில் பயணத்தைத் தொடங்கி, ஹீரோயினாகக் கலக்குபவர் கல்யாணி. இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸியின் மகள். தெலுங்கில் விக்ரம்குமார் இயக்கத்தில் நாகார்ஜுனா - அமலாவின் மகன் அகில் நடித்த  ‘ஹலோ’வில் அறிமுகம். சென்னை, நியூயார்க்கில் பள்ளியும், கல்லூரியும் படித்தவர்.

ஆர்க்கிடெக்கில் டிகிரி வாங்கியவர். படிக்கும்போதே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் டாக முத்திரை பதித்தவர். புதுச்சேரியில் ஆக்டிங் கோர்ஸ் முடித்துவிட்டு,  பாலிவுட்டில் ‘கிரிஷ் 3’ படத்தின் புரொடக்‌ஷன் டிசைனிங் உதவியாளராகவும்; தமிழ் ‘இருமுகன்’ படத்தில் உதவி கலை இயக்குநராகவும்  பணியாற்றியவர். அப்பா பிரியதர்ஷனைப் பிடிக்கும். அம்மா லிஸிக்கு செல்லம். இப்போது கல்யாணியின் கவனம், தெலுங்கில்.

பிரணவ்

மோகன்லாலின் மகன். முழுப்பெயர் பிரணவ் மோகன்லால். அறிமுகம், மலையாளத்தில். படம், ‘ஆதி’. ‘பாபநாசம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி  இயக்குநராக தன் பயணத்தை ஆரம்பித்தவர், அவரிடமே அடுத்தடுத்து இரண்டு படங்கள் வேலை செய்தார். பிரணவ்வின் துறுதுறுப்பை பார்த்த  இயக்குநர் ஜீத்து, ‘அடுத்து இயக்கும் ‘ஆதி’யில் நீதான் ஹீரோ’ என சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கிறார்.

பிறந்தது திருவனந்தபுரத்தில். படித்தது ஊட்டியில். குழந்தை நட்சத்திரமாக ஏற்கனவே ஜொலித்தவர். கேரள அரசின் சிறந்த குழந்தை  நட்சத்திரத்துக்கான விருதைப் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் சைக்காலஜி படித்திருப்பவருக்கு பயணங்கள் என்றால் சால இஷ்டம்!

ஷிவானி

டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதாவின் மூத்த மகள். அறிமுகம் தெலுங்கில். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. க்ளாப் அடித்து படப்பிடிப்பை ‘பாகுபலி’ எஸ்.எஸ்.ராஜமவுலி தொடங்கி வைத்திருப்பதால் நல்ல எதிர்காலம் தனக்கு இருப்பதாக நம்புகிறார். படித்தது ஹைதராபாத்தில்.  ரோல் மாடல் அப்பாதான். தந்தையைப் போலவே டாக்டராக விரும்புகிறார். நடித்தபடியே மருத்துவப் படிப்பையும் தொடர்கிறார். அம்மா செல்லம்.  மியூசிக்கில் ஆர்வம் அதிகம். கீபோர்ட், புல்லாங்குழல் இரண்டையும் இசைப்பதில் எக்ஸ்பர்ட்!

ஜோவிதா

சுந்தர்.சி.யின் உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் ‘கலாசல்’ படத்தின் மூலம் ஹீரோயினாகிறார் லிவிங்ஸ்டனின் மகள்  ஜோவிதா. பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். மியூசிக்கில் ஆர்வம் அதிகம். கர்நாடக இசை பிடிக்கும். மகள் நடிப்பதில் அப்பாவுக்கு  விருப்பமில்லை.

எதேச்சையாக ஒருநாள் பாரதிராஜா, ‘உன் பொண்ணுக்கு சினிமா ஃபேஸ் இருக்குய்யா...’ என்று சொல்லியிருக்கிறார். ‘போட்டோஜெனிக்  ஃபேஸ்’ என பி.சி.ஸ்ரீராம் அதற்கு வலு சேர்த்திருக்கிறார். அதன் பிறகே லிவிங்ஸ்டனுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. இவர் நடித்து வரும் ‘கலாசல்’  படத்தின் ஹீரோ, வேறு யாருமல்ல... அம்பிகாவின் மகன் ராம்கேசவ்தான்!

-தொகுப்பு:மை.பாரதிராஜா