காட் ஃபாதர்-போதை உலகின் பேரரசன்
யுவகிருஷ்ணா-52
ஒரு காலத்தில் ஓட ஓட விரட்டியவர்களை ஓடி ஒளிய வைத்தது காலம். தொடர்ந்து பல காலமாக பாப்லோவும், அவரது சகாக்களும் போலீஸுக்கும், ராணுவத்துக்கும் பயந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். கனல் அடுப்பில் பணத்தைப் போட்டு குளிர் காயுமளவுக்கு பாப்லோவின் செல்வம் கொட்டிக் கிடந்தது. இருந்தும் என்ன பயன்? உயிர் பிழைக்க நாய் படாத பாடு. ஒரு காலத்தில் இவரோடு சமரசம் செய்துகொள்ள அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தேவுடு காத்திருந்தார்கள். இப்போதோ, பாப்லோ அந்த நிலையில். ‘திருப்பி அடிப்போம்’ என்றெல்லாம் வீராவேசம் பேசக் கூடிய காலம் மலையேறிப் போனது. நாட்கள் செல்லச் செல்ல நிலைமை படுமோசம்.
 குடும்பத்தை பாதுகாப்பாக இடப்பெயர்வு செய்துவிட்டு, நெருங்கிய சகாக்களோடு வனவாசம் கொண்டிருந்தார். பாதுகாப்புக்குக் கூட ஆட்கள் இல்லை. “நம்முடைய பாதுகாப்புக்காக அவர்களுக்கு கணிசமாக சம்பளம் கொடுக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் - நாம் பாதுகாவலர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட பன்மடங்கு பணத்தை நம் தலைக்கு விலை வைத்திருக்கிறார்கள். அந்த விலைக்கு எவனாவது ஆசைப்பட்டு விட்டால்?” என்று ஒருமுறை சொன்னார் பாப்லோ. பாப்லோவின் தலைக்கு ஒரு கோடி டாலர் விலையை அமெரிக்க அரசு நிர்ணயித்திருந்தது.
ஒரு மனிதனை காட்டிக் கொடுக்க (இன்றைய மதிப்பில்) 70 கோடி ரூபாய் என்றால் முற்றும் துறந்த முனிவனுக்குக் கூட ஆசை வருமே? மெதிலின் நகரில் இருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் இருந்த அமாகா என்கிற பண்ணைவீடு ஒன்றில் தன் சகோதரருடன் ஒருமுறை தங்கியிருந்தார் பாப்லோ. வீடு இருப்பதே தெரியாத அளவுக்கு அந்த வீட்டைச் சுற்றி ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மரங்கள் வளர்ந்து காடாக உருமாறியிருந்தது. எங்கு பார்த்தாலும் வண்ண மலர்கள் மலர்ந்து கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கும். பாப்லோவுக்கு இந்த இடம் மிகவும் பிடித்துப் போய் விட்டது. வெளி உலகோடு எந்தத் தொடர்புமின்றி சுமார் எட்டு மாதங்கள் இங்குதான் பாப்லோ தங்கியிருந்தார்.
வயதான தம்பதியினரான அல்பெர்ட்டினோ மற்றும் இல்டாவுக்குச் சொந்தமான பண்ணை அது. தினமும் ஷேவிங் செய்து பளிச்சென்று தோற்றமளிக்கும் பாப்லோ, இங்கு தங்கியிருந்தபோது சேகுவேரா பாணியில் தாடி வளர்க்க ஆரம்பித்தார். கோட், சூட் என்று நாகரிக உடை அணிவதைத் தவிர்த்தார். அழுக்கான ஜீன்ஸ் பேண்ட், தன்னுடைய உடல்வாகுக்கு சம்பந்தமே இல்லாத அளவில் ஒரு டீசர்ட் என்று சராசரி கொலம்பியன் தோற்றத்துக்கு உருமாறினார். வீட்டுக்கு சொந்தக்காரரான அல்பெர்ட்டினோ ஓர் ஓவியர். மெதிலின் நகரில் பெயிண்டிங் காண்ட்ராக்டும் எடுத்துச் செய்வார்.
ஏதாவது கட்டிடத்துக்கு வெள்ளை அடிக்க அல்பெர்டினோ கிளம்பும்போது, பாப்லோவும் கூடவே பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். இதுபோல பலமுறை மெதிலின் நகருக்கு பெயிண்டர் வேடத்தில் சென்றிருக்கிறார். நகரில் யாருமே, பாப்லோவை இந்தத் தோற்றத்தில் அடையாளம் கண்டு கொண்டதில்லை. இம்மாதிரி நகரத்துக்கு போகும்போது அரசாங்கத்தின் முக்கியப் பிரமுகர்களோடு சமரசம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்தப் பயன்படுத்திக் கொண்டார். பாப்லோ, எந்தக் கதவைத் தட்டினாலும் யாரும் திறக்கத் தயாராக இல்லாத காலம் அது. அதற்காக பாப்லோ கதவைத் தட்ட சலித்ததே இல்லை.
 அரசாங்கத்துடன் ஒத்துப்போக ஒரு சிறு பிடி கிடைத்தால்கூட போதுமென்று கருதிக் கொண்டிருந்தார். கணக்கு வழக்கில் இல்லாத பாப்லோவின் பணத்தை பதுக்கி வைத்திருந்த பெருச்சாளிகள் பலரும், இவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தும்கூட தங்கள் சுயநலத்துக்காக பாப்லோவிடமிருந்து வெகுதூரம் விலகி நின்றார்கள். ஒரு நாள் இரவு. மெதிலினிலிருந்து அமாகாவுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார் பாப்லோ. காரை அல்பெர்ட்டினோதான் ஓட்டிவந்தார். இவர்களை போலீஸ் ரோந்து வண்டி ஒன்று பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது இவர்களுக்குத் தெரியாது. சரியாக வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக தெருமுனையில் இவர்களது காரை மறித்து நின்றது போலீஸ் வண்டி.
காருக்குள்ளிருந்த பாப்லோ, சட்டென்று கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தயாரானார். போலீஸ் காரில் இருந்து சார்ஜெண்ட் ஒருவர் இறங்கி வந்தார். “இந்த நேரத்துலே எங்கே போயிட்டு வர்றீங்க..?” “மெதிலினுக்கு. நான் பெயிண்டிங் காண்ட்ராக்டர். ஒரு வேலையை முடிச்சிட்டு வர்றேன்...” “உள்ளே யாரு. பார்க்க கேடிப்பய மாதிரி இருக்கான்...” பழைய பாப்லோவாக இருந்திருந்தால், அந்த போலீஸ்காரனின் தலை மண்ணில் உருண்டிருக்கும். “அய்யா, நான் சார் கிட்டே அசிஸ்டெண்டா வேலை செய்யுறேங்க...” சட்டையில் பெயிண்ட் தெளிக்கப்பட்ட, முகமெல்லாம் சுண்ணாம்பு தெறித்த பாப்லோவை, அந்த போலீஸ் பெயிண்டர் என்று நினைத்ததில் ஆச்சரியமில்லை.
“ஒண்ணுமில்லை சார். பெயிண்டருங்களாம்...” போலீஸ்காரர், காரில் இருந்த உயரதிகாரியிடம் சொல்ல, வண்டி கிளம்பியது. இது வழக்கமான சோதனைதான். ஆனால் - மாட்டிக் கொண்டோமோ என்று பாப்லோவின் இதயம் தடதடத்து விட்டது. குமுறிக் கொண்டிருந்த உள்ளத்தோடு வீட்டுக்குள்ளே நுழைந்தவர், எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கோபத்தோடு காலால் எட்டி உதைத்தார். “நான் அவ்வளவுதானா? கொலம்பியாவின் காட்ஃபாதர் செத்துவிட்டானா? போதை உலகின் பேரரசன் இப்படித்தான் சாக்கடைப் பெருச்சாளியைப் போல பயந்து பயந்து வாழ வேண்டுமா?” சீற்றத்தோடு ஒலிக்க ஆரம்பித்த அவரது குரல், அப்படியே உடைந்தது.
குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். பதறிப்போன பாப்லோவின் சகோதரர் ராபர்ட்டோவும், அல்பெர்ட்டினோ தம்பதியினரும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பாப்லோவின் அழுகை நிற்கவேயில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு அடிக்கடி பாப்லோ நகரத்துக்கு செல்ல ஆரம்பித்தார். தன்னுடைய புது மாறுவேடத்தை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஒருமுறை போலீஸுக்கு ஒரு அனாமதேய போன் வந்திருந்தது. மெதிலின் நகரின் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி, குறிப்பிட்ட நேரத்தில் அங்கே பாப்லோ எஸ்கோபார் வரவிருக்கிறார் என்கிற தகவல்தான் அது.
போலீஸ், பெரும்படையோடு அந்த நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டது. இண்டு இடுக்கு விடாமல் எல்லா இடத்தையும் சல்லடைபோட்டுத் தேடியது. அந்த ஹோட்டலின் நான்காவது மாடி ஜன்னலுக்கு பெயிண்ட் அடித்தவாறே அத்தனை அமளி துமளியையும் ரசித்துக் கொண்டிருந்தார் பாப்லோ. அவருக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் நிரம்பவே பிடித்து விட்டது. இதன் பிறகுதான் எந்த இடத்துக்குச் சென்றாலும் போலீஸ் தலைமையகத்துக்கு போன் போட்டு, “அங்கே பாப்லோ இருப்பான். முடிஞ்சா அவனைப்பிடி...” என்று சொல்லுவார்.போலீஸ் சற்றும் எதிர்பாரா வேடங்களில் அங்கே தோன்றி, தன்னை அவர்கள் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ரசிப்பார்.
(மிரட்டுவோம்) -ஓவியம் : அரஸ்
|