இது வெறும் அப்பா, மகன் படம் மட்டுமல்ல...



‘‘அப்பா - பையன் உறவைப்பத்தித்தான் ஒரு கதை மனசில வந்தது. அதற்கு கார்த்திக்தான் சரியாக வருவார்னு திடமான நம்பிக்கை. அப்புறம்தான்  கௌதம் கார்த்திக்கும் வந்துட்டா இன்னும் ப்ளஸ் ஆக இருக்குமேன்னு மனசு சொன்னது. இதற்கு முன்னாடி விக்ரமை வைத்து ‘கருடா’னு ஆரம்பிக்க  இருந்தேன். தொடங்க முடியலை. அதற்குப் பிறகு இந்தக் கதை. இதை மேம்போக்காக அப்பா - மகன் கதைனு மட்டும் சொல்லிட முடியாது.

மல்டி ஜானரில் அமைஞ்சிருக்கு. ஃபேமிலி டிராமான்னு குறுகிடாமல் லவ், ஆக்‌ஷன் எல்லாமே கலந்த ஃபீல் குட் மூவி. அதுதான் இந்த ‘மிஸ்டர்  சந்திரமௌலி’. படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலங்கரிக்கிறார் கார்த்திக். அவரின் இடத்தை அவரால்தான் நிரப்ப முடியும்னு தோணுது...’’  பளிச்சென்று பேசுகிறார் டைரக்டர் திரு. கவனம் பெற்ற படங்களின் இயக்குநர்.

கார்த்திக்கை இவ்வளவு தூரம் புகழ்றீங்க..?

கூட இருந்து பார்க்கணுமே... அவ்வளவு அழகா இருக்கும். 130 படம் முடிச்சிட்டாரு. கௌதமிற்கும் சார் அப்பாவாக இருந்ததால் ரிலாக்ஸாக, டென்ஷன்  இல்லாமல் இருந்தார். சத்யராஜ், கமல் மாதிரி இருந்திருந்தால் பயம் தெரிஞ்சிருக்கும். கௌதம், கொஞ்சம் அப்பா பைத்தியம். அவங்க இரண்டு பேரும்  சேர்ந்து நடிக்கிறது நடிப்பாக இல்லாமல் அவ்வளவு இயல்பில் துல்லியம். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடித்துவிட்டுப் போகும்போது ‘தேங்க்ஸ்  திரு’னு சொல்லிட்டுப் போவார்.

‘இப்பத்தான் இவன்கூட சேர்ந்து ரொம்ப நேரம் இருக்கேன். கிட்டே இருந்து நடிச்சுப் பார்க்கிறேன். எனக்கு அதுமாதிரி கொடுத்து வைக்கவே இல்லை.  ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின்போதே எங்கப்பா இறந்திட்டார். எனக்கு அப்பாகூட இதுமாதிரி நேரம் அமையலை. கொஞ்ச காலத்திற்கு முன்னாடி  கூட கெளதம் நடிக்க வருவானான்னு சந்தேகம் இருந்தது. இப்ப அவன் கூடவே நடிக்கிறது சந்தோஷமா இருக்கு’னு நெகிழ்ந்தார். சிறு தருணங்களைக்  கூட அவர் ‘டச்’ வைக்காமல் பண்றதே இல்லை.

கௌதம்கிட்டே அப்பாவை பாருங்கனு கண்ணாலேயே பேசுவேன். அவர்கூட இருக்கிறது பாடம் பயிலும் அனுபவம். அவங்க இரண்டு பேர்கிட்டேயும்  ஒரு பேரன்பு பரிமாற்றம் நடக்கும் பாருங்க, அதுவும் அழகாயிருக்கும். இதுல ‘மிஸ்டர் சந்திரமௌலி’ தலைப்பு வந்ததுதான் ஆச்சரியம். நான் வேறொரு  தலைப்பு வைச்சிருந்தேன். இயக்குநர் சுசீந்திரன் என் நண்பர். ஒருநாள் அவர்கிட்ட இந்தக்கதையை சொன்னேன். கதையின் தாக்கத்தில்  யோசித்திருக்கிறார்.

இரவு அலைபேசினார். ‘திரு, டைட்டில் ஃபிக்ஸ் பண்ணியாச்சில்ல... ‘மிஸ்டர் சந்திரமௌலி’னு வச்சா இன்னும் நல்லாயிருக்குமே! கலகலப்பான  கதைக்கு இது அருமையாக போய்ச் சேரும்’னு சொன்னார். சட்னு ஒளி தெரிஞ்ச மாதிரி இருந்தது. நண்பர்களிடம் சொன்னால் இதுதான் ரொம்பவும்  பொருத்தம்னு சொன்னாங்க. ‘என் டயலாக்கா வைக்கப் போறீங்க?’னு கேட்ட கார்த்திக் சார், ‘அப்புறம் நல்ல ரீச்’னு சந்தோஷப்பட்டார். ஆனா,  இந்தத்தலைப்பை கொடுத்தது நண்பர் சுசீந்திரன்தான்.

இரண்டு பேரையும் டைரக்ட் செய்தது எப்படியிருந்தது?

கார்த்திக் சார்கிட்டே ஒன்மோர் கேட்க முடியாது. அவரே ரெடியாகி பண்ணிடுவார்னு சொன்னாங்க. எனக்கே ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய  சீனியர்கிட்டே எப்படி ஒர்க் பண்ணப்போறோம்னு சின்ன தயக்கம் இருந்தது. அதை அருமையாக உடைச்சார் அவர். அழகா ரிகர்சல் பண்ணிக்கிட்டு,  இளமையோடு நடித்துக் கொடுத்தார். பழைய கார்த்திக்கை நினைவூட்டுகிற காட்சிகளும் இருந்தது. அதையும் மீட்டுக்கொடுத்தார். கௌதம் யூனிட் வந்து  சேர்வதற்கு முன்னமே நிற்பார். ஒண்ணும் அவசரமில்லையே கௌதம்னு சொன்னால், அழகாக சிரித்து வைப்பார்.

ரெஜினா பின்னி எடுக்கிறாங்க...

நான் அவங்க படங்களை அவ்வளவா பார்த்ததில்லை. ‘மாநகரம்’ மட்டும் பார்த்திருக்கேன். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டிரைலர் பார்த்தேன். அவரது  ரியாக்‌ஷன் அவ்வளவு அருமையாக இருந்தது. ‘அடடா’னு சொல்ல வைக்கிற முகபாவங்கள். நம்ம கதைக்கு அவங்கதான் சரினு முடிவு பண்ணிட்டேன். அவங்களோட டெடிகேஷன் சொல்லித் தீராது. நில்லுங்க, குதிங்க, வெயிலில் படுங்கன்னு என்ன சொல்லிக்கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்வாங்க.

‘எனக்கு இது வேணும்’ங்கற மாதிரி சொல்லிட்டா போதும். கொண்டு வந்து சேர்த்திடுவாங்க. எங்க பட்ஜெட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருந்தாங்க.  இருந்தும் எங்க தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சார் கொண்டுவந்து அவரைச் சேர்த்தார். பிருந்தா மாஸ்டர் ரெஜினாவைப் பார்த்து, ‘இந்த பொண்ணுகிட்டே  இருக்கிற சின்சியாரிட்டியைப் பாருங்க திரு’னு சொல்லிக்கிட்டே இருப்பார்.

வரலட்சுமியும் இருக்காங்க...

Surprise package மாதிரி வரலட்சுமி ரோல் வரும். நான் ரொம்பவும் ரசித்து எழுதிய கேரக்டர். படம் பார்த்திட்டு வீட்டுக்குப்போகும்போது take  away கேரக்டர் மாதிரி இருக்கும்னு நம்புறேன். நிறைய கதாநாயகிகள் ஏத்துக்க மாட்டாங்க. ‘என்ன ஆகும், பண்ணிடலாம், ட்ரை பண்ணலாம்’னு  எங்ககூட வந்திட்டாங்க. நானே Fan boy மாதிரி அவங்க ரோலை ரசிச்சு ஷூட் பண்ணினேன். ‘மௌனராகம்’ பார்த்தீங்கதானே, அதில் கொஞ்ச நேரம்  வந்தாலும் கார்த்திக் சார் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாரையும் காலி பண்ணிட்டுப் போவாரே, அப்படியிருக்கும் அவர் ரோல் என்பது என் நம்பிக்கை.

சாம்.சி.எஸ். வந்திட்டாரு...

இன்னிக்கு தேதிக்கு அவர் மியூசிக்கிற்கு ஏக டிமாண்ட். எங்களுக்கு ரசிச்சு பாடல்கள் போட்டுக் கொடுத்தார். ‘நான் கொடுக்கிறேன்னு ஏத்துக்காதீங்க.  உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் ஓ.கே. பண்ணுங்க’னு சொல்வார். எனக்கு முதல் படத்தில் மட்டுமே அரவிந்த் கிருஷ்ணா கேமிராமேன். அதற்கடுத்து  எப்பவும் ரிச்சர்ட்தான். எனக்கு என்ன பிடிக்கும், எப்படி காட்சிகள் வரணும்னு நினைப்பேன்னு அவருக்குத் தெரியும். அப்படியொரு அலைவரிசை. 42  நாட்கள்ல படத்தை முடித்ததற்கு அவரே காரணம். ஆக்‌ஷன், சேஸ், வெளிநாட்டில் பாடல்கள்னு எல்லாத்துக்கும் சேர்த்து இது மிகவும் குறைவான  நாட்கள். பேசப்படுகிற விதத்தில் ஷூட் பண்ணிக்கொடுத்தார்.

இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன்னு பரபரப்பாக சேர்ந்து இருக்கீங்க...?

மகேந்திரன் சார் அவ்வளவு இயல்பா செய்திருக்கார். அந்த குரல், ஸ்டைல், பாவனை எல்லாம் அப்படியே வந்திருக்கு. கார்த்திக் சாருக்கு ஃப்ரெண்ட்  கேரக்டர் வேணும். எனக்கு திடீரென்று அகத்தியன் சார் ஞாபகம் வந்தது. அவரிடம் கேட்டால் ‘கதையெல்லாம் சொல்ல வேண்டாம். உங்களுக்கு  நம்பிக்கை இருந்தால் நடிக்கிறேன்’னு சொல்லிட்டு நடிச்சார். கார்த்திக் சார் அவர் நடிப்பைப் பார்த்திட்டு, ‘எப்படி நடிக்கிறார் பாருங்க’னு ஆச்சரியப்பட்டுப்  போயிட்டார். ‘கும்கி’ தம்பி ராமைய்யா மாதிரி மனசில் நிற்பார். நாங்க கேட்டதெல்லாம் நிகழ்த்திக் கொடுத்தது தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். அவரின்றி  இந்தப் படம் சாத்தியப்பட்டிருக்காது.

-நா.கதிர்வேலன்