வாட்ச் மனிதர்!
கலெக்டர்ஸ்
ஞாயிறு காலை. தன் வேலையை முடித்துவிட்டு பிரஷாந்த் பாண்டே, அலமாரியில் உள்ள வாட்ச்சுகள் நிறைந்த பவுச்சை எடுத்தார். இதுதான் அன்றைய தினத்தில் இவரது தலையாய பணி. பிரஷாந்த், பெங்களூரைச் சேர்ந்தவர். ஞாயிறுதோறும் வரும் வாரத்தில் ஆறு நாட்களும் என்ன வாட்ச் கட்ட வேண்டும் என வரிசைப்படுத்துவார். இதென்ன பிரமாதம் என கேட்கலாம். ஸ்பெஷல்தான். இவரிடம் இருப்பவை அனைத்தும் எச்.எம்.டி. வாட்ச்சுகள். ஒவ்வொன்றையும் தேடித் தேடி வாங்கியிருக்கிறார். ஆம். ஒருமுறை இவர் கட்டிய வாட்ச்சை மீண்டும் கட்ட குறைந்தது மூன்று வருடங்களாகும்! ‘‘பிறந்தது வளர்ந்தது எல்லாம் உத்திரப் பிரதேசத்துல. லக்னோலதான் படிச்சேன்.
 இப்ப ஐடி நிறுவனம் ஒன்றுல மனிதவள மேம்பாட்டு நிர்வாகியா இருக்கேன். சின்ன வயசுலேந்தே வாட்ச்சுகள் மேல எனக்கு ஈடுபாடு உண்டு. அதுவும் அந்தக் கால வாட்ச்சுகள். குறிப்பா சாவி கொடுக்கக் கூடிய வாட்ச்சுகள். இப்பவும் நினைவுல இருக்கு. தாத்தா எச்.எம்.டி. வாட்ச்சைத்தான் கட்டுவார். தினமும் அதை கட்டுறதுக்கு முன்னாடி சாவி கொடுத்து நேரம் சரியா இருக்கானு பார்ப்பார். அந்த பிம்பம் அகலவே இல்ல. சரியா ஆறு வருஷங்களுக்கு முன்னாடி வேலை விஷயமா வெளியூர் போயிட்டு பெங்களூரு வந்தேன். விமானநிலையத்தை விட்டு வெளில வந்தப்ப பெரிய கட்டடம் கண்ணுல பட்டுச்சு. குறிப்பா ‘எச்.எம்.டி.’ பெயர்ப் பலகை.
அப்படியே கடந்த காலத்துக்கு போயிட்டேன். இன்னைக்கு ஏகப்பட்ட பிராண்டுகள் வந்தாலும் சின்ன வயசுல மனசுல தங்கின பெயர் அந்த மூன்றெழுத்துதான். வீட்டுக்குப் போனதும் அந்த நிறுவனம் பத்தி இணையத்துல தேடினேன். சில காலம் அவங்க இல்லாம போனாலும் வாட்ச் தயாரிப்பதை நிறுத்தலை. குறைந்த அளவுல வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப தயாரிக்கறது தெரிய வந்தது. மறுநாளே அங்க போய் அவங்களோட பிரத்யேக பைலட் வாட்ச்சை வாங்கணும்னு முடிவு பண்ணினேன். பெங்களூர் விமான நிலையத்துக்கு பல கி.மீ. பயணம் செய்யணும். நகரத்தைத் தாண்டி இருக்கு. ஆனாலும் எடுத்த முடிவுல பின்வாங்க விரும்பலை.
 மனைவி, மகளைக் கூட்டிட்டு அந்த நிறுவனத்துக்கு போனேன். ஆனா, வாங்க நினைச்ச பைலட் வாட்ச்சை வேற ஒருத்தர் சில நிமிடங்களுக்கு முன்னாடி வாங்கிட்டார். ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு. மனசைத் தேத்திட்டு வேற ரக வாட்ச்சை வாங்கினேன். என் ஏக்கத்தை புரிஞ்சுகிட்ட கடைக்காரர், பைலட் வாட்ச்சை வரவைச்சுத் தரேன்னு சொன்னார். அதே மாதிரி வரவழைத்துக் கொடுத்தார். அந்த நொடிலேந்து என் சேகரிப்பு ஆரம்பமாச்சு...’’ என்று சிரிக்கும் பிரஷாந்த், இதன்பிறகு இந்தியாவிலுள்ள அனைத்து எச்.எம்.டி. கிளைகளுக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார். ‘‘அந்தக் காலத்துல வாட்ச்சுனா அது எச்.எம்.டி.தான்.
இன்னைக்குதான் பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பிராண்டை நம்ம நாட்டுல விற்கறாங்க. இன்டர்நேஷனல கம்பெனிங்க நம்ம நாட்டுக்கு வருவது நல்ல விஷயம்தான். ஆனா, சுதேசி பொருட்களுக்கு இருக்கிற மகத்துவமே தனிதானே? ஆக்சுவலா எச்.எம்.டி. போர்டை பார்த்துட்டு அங்க நான் போனது இன்னும் அவங்க வாட்ச் தயாரிக்கறாங்களா இல்ல வேற பொருட்களை உற்பத்தி செய்யறாங்களானு பார்க்கத்தான். அந்த கட்டடத்துக்குள்ள போனதும்தான் இப்பவும் அவங்க வாட்ச் தயாரிக்கறாங்கனு தெரிஞ்சுது. அதுக்குப் பிறகு சும்மா இருக்க முடியலை.
 எச்.எம்.டி.யோட எல்லா டிசைனும் எங்கிட்ட இருக்கணும்னு வெறி ஏற்பட்டுச்சு...’’ என்று சொல்லும் பிரஷாந்த், அந்நிறுவனம் தயாரித்த ஒவ்வொரு ரக வாட்ச்சையும் தேடித் தேடி வாங்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘முதல்ல நான் வாங்கினது ஜனதா. அடுத்து பைலட். அப்புறம் ஜலக் மற்றும் ஜுக்லி வாங்க நினைச்சேன். இந்த இரண்டுமே பெங்களூர்ல இல்ல. இந்தியாவுல எங்க கிடைக்கும்னு தேடினப்ப மும்பைல இருப்பது தெரிஞ்சுது. அங்க என் சகோதரன் இருந்ததால உடனே போன் பண்ணி வாங்கி வரச் சொன்னேன். இது மாதிரிதான் செஞ்சேன். எந்தெந்த ஊர்ல எச்.எம்.டி. கடைகள் இருக்கு... அங்க என்னென்ன வகைகள் இருக்குனு தேடுவேன்.
சம்பந்தப்பட்ட ஊர்ல சொந்தக்காரங்களோ நண்பர்களோ இருந்தாங்கன்னா உடனே அவங்களை வாங்கி அனுப்ப சொல்லுவேன். ஒருமுறை சென்னைல ஒரு ரகம் இருக்கறது தெரிஞ்சுது. நைட்டோட நைட்டா சென்னைக்கு கிளம்பி வந்து மறுநாளே அதை வாங்கினேன். வாங்கின கையோட பெங்களூரு திரும்பினேன். இப்படி வாட்ச் வாங்கறதுக்காகவே சென்னை தவிர்த்து, பூனா, மும்பை, தும்கூர், லக்னோனு போயிருக்கேன்...’’ என்ற பிரஷாந்த், எச்.எம்.டி. ஷோரூம்களில் மட்டும் எச்.எம்.டி. வாட்ச்சுகளை வாங்குவதில்லை! ‘‘வாட்ச் ரிப்பேர் கடைங்க, செகண்ட்ஸ் பொருட்கள் விற்கறவங்க... இவங்களையும் தேடிப் போவேன். எனக்கான வாட்ச் அவங்ககிட்ட இருக்கானு பார்ப்பேன். இருந்தா வாங்கிடுவேன்.
 சிலசமயம் சிலர் ரிப்பேருக்காகக் கொடுத்திருப்பாங்க. அது நான் தேடற வகையா இருக்கும். உடனே உரிமையாளரைத் தேடிப் போய் கெஞ்சிக் கேட்டு விலை கொடுத்து அதை வாங்குவேன்! இப்படித்தான் ஒருத்தர்கிட்ட போய் கேட்டேன். என்ன விலைனாலும் பரவால்லனு சொன்னேன். ‘சாரி பாஸ்... அது எனக்கு பிரசன்ட்டா வந்தது. தர முடியாது’னு சொல்லிட்டார்! சில கடைகள்ல விற்காமயே பழசா இருக்கும். அதையும் வாங்குவேன். அதுக்காக பார்க்கறது எல்லாம் வாங்குவேன்னு நினைக்காதீங்க. எச்.எம்.டி.ல பல ரகங்கள் இருக்கு. எல்லாத்தையும் மானாவாரியா வாங்க மாட்டேன். என் மனசுக்கு நெருக்கமா இருக்கணும். அது மேல எனக்கு ஈர்ப்பு ஏற்படணும்.
அப்படி இருந்தாதான் விலையைப் பத்தி கவலையே படாம வாங்குவேன். பைலட் ரகத்துலயே பல நிற டயல்கள் இருக்கு. பொதுவா வெள்ளை, பிரவுன், கருப்பு டயல்கள்தான் இருக்கும். சிலது மட்டும் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்கள்ல வரும். இதெல்லாமே என்கிட்ட இருக்கு!’’ என்ற பிரஷாந்த், இதன் வரலாற்றைக் குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார். ‘‘சிட்டிசன் நிறுவனத்தோடு சேர்ந்து இந்திய அரசாங்கம் 1953ல எச்.எம்.டி. வாட்ச்சுகளை நம்ம நாட்டுல அறிமுகம் செஞ்சது. அதுக்குப் பிறகு இந்த நிறுவனத்தோட ராஜ்ஜியம்தான். தொழில் நுட்பம் வளர வளர பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ள வர ஆரம்பிச்சது.
இதனோட போட்டி போட முடியாம காலப்போக்குல குறுகிட்டாங்க. மறைஞ்சுட்டாங்கனு சொல்ல முடியாது. மக்கள் மறந்துட்டாங்கனு வேணா சொல்லலாம். இப்ப திரும்பவும் தலை தூக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு என்னை மாதிரியான காதலர்கள்தான் காரணம். ஃபேஸ்புக்குல எச்.எம்.டி., பத்தி தொடர்ந்து எழுதறேன். Blogம் எழுதறேன். என்னை மாதிரியே பலரும் இருக்கறது அப்பதான் தெரிஞ்சுது. ஆக, எச்.எம்.டி. மீட்கப்பட்டதுல எங்களுக்கும் பங்கிருக்கு!’’ வாய்விட்டுச் சிரிக்கும் பிரஷாந்த், தன்னிடம் எவ்வளவு வாட்ச் இருக்கிறது என கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ‘‘மூடநம்பிக்கைதான் காரணம். கணக்கு வைச்சுகிட்டா மத்தவங்க கேட்கிறப்ப சொல்லணும்.
 ‘எதுக்கு இவ்வளவு செலவு பண்ற... ஒரு வாட்ச் போறாதா’னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. இது என்னோட காதல். காதலுக்காக செலவு செய்யறது என் விருப்பம் இல்லையா? என்னால முடியற வரைக்கும் வாங்குவேன். ‘சரியான வாட்ச் பைத்தியம்’னு என் மனைவி கூட என்னை கிண்டல் பண்ணுவா. ‘எங்க கூட இருக்கறதை விட வாட்ச் கூடதான் அதிகம் இருக்க’னு கோபப்படவும் செய்வா. இப்ப அவளைப் பார்த்துட்டு என் மகளும் அதே புகாரை வாசிக்க ஆரம்பிச்சிருக்கா. ஆனாலும் ரெண்டு பேரும் எனக்கு, என் காதலுக்கு பக்கபலமா இருக்காங்க. அவ்வளவு எளிதா யார் கூடயும் ஃப்ரெண்ட் ஆக மாட்டேன். பொழுதுபோக்காதான் இந்த சேகரிப்பை ஆரம்பிச்சேன்.
ஆனா, விலை மதிக்க முடியாத பல நண்பர்களை இந்த வாட்ச்கள்தான் எனக்கு அறிமுகம் செய்திருக்கு. உண்மையைச் சொல்லணும்னா என்கிட்ட எல்லா ரகங்களும் இல்ல. அதனால அருங்காட்சியகம் அமைக்கற எண்ணமும் இல்ல. நிச்சயம் எனக்கு அப்புறம் என் மக இதை பார்த்துப்பா. இன்னொரு விஷயம். இது வெறும் வாட்ச் இல்ல. வரலாற்றுப் பொக்கிஷம். அதனால விற்கிற ஐடியா இல்ல...’’ என அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் பிரஷாந்த், மற்றவர்களுக்கு இதை பரிசாகக் கொடுக்கவும் தயங்கியதில்லை. ‘‘எனக்கு சொந்தமா வாங்கவும் பிடிக்கும். மத்தவங்களுக்கு படிசா கொடுக்கவும் பிடிக்கும். 12 பிரேல் வாட்ச்சுகளை பார்வையற்ற மாணவர்களுக்கு கிஃப்டா கொடுத்திருக்கேன்.
என் மனைவிக்கு, உறவினர்களுக்கு பரிசா தந்திருக்கேன். ஒண்ணு தெரியுமா, தங்களோட திறமையான ஊழியர்களுக்கு அங்கீகாரம் தரும் விதமா அவங்க பெயர்ல வாட்ச்சை தயாரிக்கறாங்க. அப்படி முதன்முதல்ல அவங்ககிட்ட ரிசப்ஷனிஸ்ட்டா இருந்தா சுஜாதா என்பவரின் பெயர்ல வாட்ச் தயாரிச்சாங்க. இப்ப விஜய், அசோக், பிரணவ்னு ஏகப்பட்ட பெயர்கள்ல வாட்ச்சுகள் உண்டு. நான் லக்னோ போயிருந்தப்ப சுதீப் என்கிற ஊழியரை சந்திச்சேன். ரொம்ப திறமையானவர். அவர் பெயர்லயும் வாட்ச் இருக்கு! இந்த வாட்ச்சுகள் வெறும் நேரத்தை மட்டும் காண்பிக்கறதில்லை. இது நம்ம தேசத்தோட வாட்ச்.
எலக்ட்ரானிக் வாட்ச்சுகள் நிறைய இருந்தாலும் இவங்களோட தனித்துவம் சாவி கொடுக்கும் வாட்ச்தான். இன்னைக்கும் பலரும் அதை விரும்பி வாங்கறாங்க. ராகு காலத்தை சுட்டிக் காட்டும் வாட்ச், தங்க பிஸ்கெட் கொண்ட வாட்ச், பார்வையற்றவர்களுக்காக பிரைல் வாட்ச், டாக்டர்கள் பல்ஸ் பார்க்க சிறப்பு வாட்ச், இந்தியா சுதந்திரம் அடைஞ்சு பொன்விழா வந்ததை ஒட்டி அறிமுகமான வாட்ச், எண்களுக்கு பதிலா 12 ராசிகள் மற்றும் ரோமன் எண்கள் பொறிக்கப்பட்ட வாட்ச்னு எவ்வளவு வெரைட்டீஸ் இருக்கு தெரியுமா..?’’ கண்களை விரிக்கும் பிரஷாந்தின் கருவிழிகளில் எச்.எம்.டி. என்ற மூன்றெழுத்துகள் மின்னின!
-ப்ரியா படங்கள்: வெங்கடேசன்
|