ஆண்கள் பாதி கோட், சூட் மீதி!
அன்று முதல் இன்று வரை மரியாதை, ஸ்டைல், கெத்து... என மாஸ் லுக் காட்ட ஆண்கள் டிக் செய்யும் உடை எது? கண்ணை மூடிக்கொண்டு இதற்கான விடையாக கோட், சூட்டை சொல்லலாம்! சின்னச் சின்ன மாற்றங்களுடன் இன்றும் தனக்கான இடத்தை தக்க வைத்தபடி ஃபேஷன் உலகில் இதுவே ரவுண்ட் அடிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற குளிர் பிரதேசங்களுக்கு இந்தக் கோட் சூட் சரி. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கும் இந்த உடை எப்படி சரிவரும்? ‘வரும்’ என்று சொல்லி நம் நாட்டில் அதை எப்படி அணிய வேண்டும் என ஆலோசனைகளும் தருகிறார் பிரபல டிசைனர் மஹேஷ் ராமகிருஷ்ணன்.
 இவர், சச்சின், விஜய் அமித்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களின் டிசைனர்! ‘‘அதீத ஸ்டைலிஸ்ட் லுக்கை கோட் மட்டும்தான் கொடுக்கும். எப்படி அணிந்தாலும் கோட் கெத்துதான். இங்க நாம பயன்படுத்தறது இந்தியா, குறிப்பா தமிழகம் மாதிரியான ஹாட் இடங்கள்ல பயன்படுத்தக் கூடிய கோட். இதை எப்படி வேண்டுமானாலும் டிசைன் செய்யலாம். ஆனா, சீசனுக்கு தகுந்த மெட்டீரியலை செலக்ட் பண்ணணும். பெரும்பாலானவங்க இதுலதான் தப்பு பண்றாங்க. சென்னை மாதிரியான சிட்டில ட்வீட் மெட்டீரியல்ல கோட் போட்டுகிட்டு வியர்க்க விறுவிறுக்க வந்து நிக்கறாங்க.
' இதுக்கு பதிலா லினென், திக் காட்டன் மாதிரியான மெட்டீரியல்கள் தேர்வு செய்துக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஹை லுக் கிடைக்கணும்னா வெல்வெட் மாதிரியான துணிகள்ல கோட் டிசைன் செய்துட்டு நிகழ்ச்சி நடக்கிற ஹால்ல போய் போட்டுக்கலாம். அடுத்த தப்பு, டைட்டா போட்டுக்கறது. இல்லைனா ஒண்ணு, ரெண்டு கோட்டை மட்டுமே வைச்சுகிட்டு இதையே மாத்தி மாத்தி அணியறது. கோட் சூட்டுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. பாக்கெட்ல வைக்கிற வாலட் தொடங்கி போட்டுக்கற ஷூ வரைக்கும் பக்குவமா தேர்வு செய்துக்கணும்.
அப்புறம் உடல் வாகு. நம்ம உடல் எப்படிப்பட்டது, என்ன வயசு... இதெல்லாம் புரிஞ்சு சூட் தேர்வு செய்யணும். முக்கியமா க்ராப் பேண்டை 35 வயசுக்குக் கீழ இருக்கிற அல்லது அந்த வயதுள்ள, ஃபிட்டான உடல்வாகு உள்ளவங்க மட்டுமே உடுத்தணும். அடுத்து கேஷுவல் கோட், ஜீன்ஸ் காம்பினேஷன். இன்னைக்கு பரவலா எல்லாரும் பயன்படுத்தற ட்ரெஸ் இதுதான். இதுக்கு ஒரே ரூல், ஜீன்ஸுக்கும் கோட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்கக் கூடாது. அதாவது தொடர்பே இல்லாத கலர்ல கோட் போட்டுக்கிட்டா ராயல் ஃபேன்ஸி லுக் கிடைக்கும்.
 ஒரே மாதிரி கருப்பு, டார்க் ப்ளூ மாதிரியான கலர்ஸை போடாம செக்ட், ஸ்ட்ரிப்ஸ் அல்லது சில ப்ரைட் கலர்ஸ் கூட போடலாம். அடுத்து மிடுக்கான நடை. நிமிர்ந்து தன்னம்பிக்கையோட கை குலுக்கணும். ஒரே ஷூவை போட்டுக்காம ஒவ்வொரு சூட்டுக்கும் ஒவ்வொரு ஷூ பயன்படுத்தணும். இதையெல்லாம் கடைப்பிடிக்க முடிஞ்சா மட்டும் கோட், சூட்டோட வலம் வாங்க. இல்லைனா பிராண்டட் ஷர்ட் மற்றும் பேண்ட் போதும்...’’ என்கிறார் மகேஷ் ராமகிருஷ்ணன். மாடல்கள்: வசீகரன், விஸ்வநாத் PU, MD கான், ஜுகேஸ், ஆதித்யா, யூசுஃப், ராஜ் மேக்கப் & ஸ்டைலிஸ்ட்: மகேஷ் ராமகிருஷ்ணன். கிரெடிட்: Lexus Launch Co-Ordinator: சுபாஷ் ஸ்ரீ
-ஷாலினி நியூட்டன் படங்கள்: சிவா, ஜஹாங்கீர் (MJ Digital)
சூட்டுகள் பலவிதம்...
சிங்கிள் பிரெஸ்டட் & டபுள் பிரெஸ்டட் (single & Double Breasted): ஒன்று முதல் மூன்று பட்டன்கள் பயன்படுத்திய கோட். இது வயிற்றுப் பகுதி வரை ஓபனாக வரும். டபுள் பிரெஸ்டடில் நான்குக்கும் மேலான பட்டன்களுடன் கோட்; இரண்டு பக்கங்களையும் ஒன்றை ஒன்று இணைத்துக் கொள்ளும் வகை.
லவுஞ்ச் சூட் (lounge suit): கேஷுவல் ஆபீஸ் சூட். டையுடன் அல்லது டை இல்லாமல் பயன்படுத்தலாம். லைட்டான, மீடியம் கலர் அல்லது கருப்பு நிறங்களில் உடுத்தக் கூடியவை. இதில் மூன்று பட்டன்கள் பயன்படுத்தினால் அதீத டிப் டாப் லுக் பெறலாம்.
டின்னர் சூட் (Dinner Suit): கழுத்தில் பௌ அல்லது உள்ளே ஒரு ஷர்ட் மற்றும் ஜாக்கெட் சகிதமாக பயன்படுத்தும் சூட். இதில் காலர் மட்டும் சம்பந்தமே இல்லாத நிறத்தில் அணிந்து ஷூவுடன் மேட்ச் செய்து கொள்ளலாம்.
பிஸினஸ் சூட் (Business Suit): சுருக்கமாக 007 ஸ்டைல். ஷார்ப் கட், பெர்ஃபெக்ட் ஃபிட் காலர் என ரிச் லுக் கொடுக்கும் சூட். இதில் சரியான உடல் அளவுகளை நேர்த்தியாக அளவிட்டு தைப்பவராக டிசைனர் இருக்க வேண்டும்.
 மாண்டரின் சூட் (Mandarin Collar Suit): சைனீஸ் காலர் அல்லது பெல்ட் காலர் வகை. ஜவஹர்லால் நேரு அணிந்த சூட்தான் இந்த மாண்டரின் சூட். இதில் நிறத்தில் எவ்வித ரூல்களும் இல்லை.
கல்யாண சூட் (Wedding Suit): வெல்வெட், சாட்டின் போன்ற பளபளப்பான மெட்டீரியல்களில் டிசைன் செய்யப்படும் சூட். இதில் மெட்டீரியல்தான் முக்கியம். இப்போது இவை ஸ்லிம் ஃபிட்டாக மாற்றம் அடைந்துள்ளன.
ஸூட் சூட் (Zoot Suit): ஆப்பிரிக்க, அமெரிக்கர்களின் ஜாஸ் காலத்து சூட். அதாவது கோட் நீளமாக முட்டி வரையில் வரும். நம்மூரில் எம்ஜிஆர் படங்களில் வில்லன்கள் அதிகம் பயன்படுத்தியிருப்பார்கள்.
டக்ஸிடோஸ் (Tuxedos): சிறப்பு நிகழ்ச்சிகள், விருது விழாக்களில் ஹாலிவுட் நடிகர்கள் அணியும் ரிச் சூட். இடையில் ஒரு பெல்ட் போன்ற சாட்டின் துணி பயன்படுத்தி அணியும் சூட். அதற்கு மேட்ச்சிங்கான பவ் அல்லது டை அணிவதுண்டு. மேலும் உடலை ஒல்லியாக்கிக் காட்டும் பெல்ட்டுகளை சிலர் உடைக்குள் அணிவதுண்டு.
|