ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி-71

சிலவகைப் பொருட்களை இன்னின்ன யாப்பில்தான் பாடவேண்டும் என்கிற மரபு நம்மிடமுண்டு. கட்டளைக் கலித்துறை போன்று வார்த்தைகளைக்  கணக்கிட்டு எழுதும் வழக்கத்தைக் கொண்டவர்களே நாம். ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று வகைக்குஒன்றை வடிவமைத்து, அதற்கான  இலக்கணத்தையும் வரையறுத்திருக்கிறோம். ஆனால், இன்று அதையெல்லாம் விட்டுவிட்டு, எளிய வகையில் எழுதும் சூழலைப் புதுக்கவிதைகள்  உருவாக்கியுள்ளன. எழுதுகிறவனுக்குக் கடினம் என்பதைவிட, வாசிப்பவனுக்குக் கடினமில்லாமல் இருக்க வேண்டும் என்னும் கருத்து முந்திவிட்டது.
ஏற்கனவே ‘குறும்பா’ என்னும் வடிவம் நம்மிடம் இருந்ததுதான்.

என்றாலும், அதை குறும்பா என்று காசி ஆனந்தன் போன்றோர் குறிப்பிடுவதில்லை. ‘நறுக்குகள்’, ‘பொழிச்சல்கள்’ என்று புதுப்பெயரில் அழைக்கிறார்கள்.  ஹைக்கூ, சென்ரியூ, லிமிரைக்கூ என்று பலவிதமான வடிவங்களில் எழுதினாலும் அவையெல்லாம் கவிதையென்னும் வகைக்குள் வருகிறதா?  என்பதுதான் கேள்வியே. எது கவிதை என்பதிலிருந்து, எதுவும் கவிதை என்னும் நிலைக்கு வந்திருக்கிறோம். வரலாற்றுப் போக்கில் நாம்  இவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருப்பது தவிர்க்க முடியாததே. சமூக வலைத்தளங்களின் பெருக்கத்திற்குப் பிறகு, இன்னும் புதுப்புது வடிவங்களைத்  தமிழ்க்கவிதைகள் தரித்துக்கொள்ளக்கூடும்.

பாப்லோ நெருடாவின் ‘The Book of Questions’ஐ அடிப்படையாகக் கொண்டு, தமிழன்பன் எழுதியுள்ள ‘கனா காணும் வினாக்கள்’ என்னும் நூல்  கவனத்துக்குரியது. முழுக்க முழுக்க கேள்விகளாலேயே அமைந்த நூல் அது. கேள்விகளின் வழியே கவித்துவ தருணங்களை உருவாக்கி,  அக்கேள்விகளுக்கான பதிலை மெய்யியலில் முன்வைத்திருக்கிறார். “நாணய ஓசையில் / நனைந்துகொண்டிருப்பவனுக்கு / ஈர மழையிடம் / என்ன  செய்தி இருக்கும்..?” எனவும், “பருத்தி பூப்பதற்கு முன் / சூரியனின் ஒரு யோசனையாக / இருந்திருக்குமோ..?” எனவும் அவர் எழுப்பியிருக்கும்  கேள்விகள் சுவாரஸ்யமானவை.

கடவுள், சாதி, மதம் ஆகியவற்றை மறுக்கக் கூடியவராக இருந்தும்கூட, ஒரு கவிஞனாக மெய்யியலிலிருந்து அவரால் விடுபடமுடியல்லை. கடவுள்  என்கிற கருத்தாக்கம் முதலில் அற இயலுக்கும் அதன் பிறகு ஆன்மிகத்திற்கும் இட்டுச்செல்லும். ஆன்மிகத்தை அடைந்தவுடன் கடவுள் சிந்தனை  எத்தகைய விளைவைத் தரும் என்பது விவாதத்துக்குரியது. உலகக் கவிஞர்கள் பலரும் கடவுளை மறுத்திருக்கிறார்கள். ஆனாலும், மெய்யியலை  அவர்கள் தொடாமல் இல்லை. தமிழன்பனும் மெய்யியல் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘ஜென்’ மெய்யியலை சமதர்மத்தின் குறியீடாகக்  கண்டிருக்கிறார்.

மகேந்திரநாத் குப்தா எழுதிய ‘எம்’ என்ற தலைப்பிலான இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்று நூலை தன்னைக் கவர்ந்த நூல்களில் ஒன்றாகத்  தெரிவித்திருக்கிறார். ‘‘தான் என்பதைக் கடந்த ஆன்மிகவாதிகள்மீது தனக்கு அபிமானம் உண்டு...’’ என்று கூறும் அவர், கடவுள் என்னும்  கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்டவரல்ல. ஆன்மிகம் வேறு, கடவுள் வேறு என்பதன் பின்னணியில்தான் அவருடைய மெய்யியல் கவிதைகள்  எழுதப்பட்டுள்ளன. ஆன்மிகவாதியான தன் உடன் பிறந்த அண்ணன் தங்க வேலுவின் மறைவை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள ‘தத்துபித்துவம்’ என்னும்  நூல் அதற்கான சாட்சியைப் பகிர்கிறது.

‘‘ஒரு சித்தரைப்போல தத்துவ தரிசனம் பெற்றிருந்த அண்ணனுக்காக தமிழன்பன் எழுதிய ‘தத்துபித்துவம்’, வாழ்வியல் அனுபவங்களையும் வாழ்வியல்  தேடல்களையும் குறிக்கோளாகக் கொண்ட பயணம்...” என்பதாக கலாநிதி நா.சுப்ரமணியன் ஆய்வுரை வழங்கியிருக்கிறார். மூடநம்பிக்கைகளின்  பாற்படாத ஓர் ஆன்மிகவாதியாக இருந்த அண்ணன், சித்து முயற்சிகள், விவாதங்களில் ஈடுபட்டதை அந்நூலில் நினைவுகூர்ந்துள்ள தமிழன்பன்,  ‘போகர் ஏழாயிரம்’ என்னும் நூல், அண்ணனின் சாய்வு நாற்காலிக்கு அருகே இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்முடிவுகள் எதுவும் இல்லாமல்  ஒன்றை அணுகி, அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்களைக் கவிதையாக்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

தமிழ் இலக்கியக் கல்வி புலத்திலிருந்து படைப்பாளிகளாக வருபவர்களிடம் ஒருவிதமான பண்டிதத்துவம் வெளிப்படுவதுண்டு. எதார்த்த நிலையில்  படைப்புகளை எதிர்கொள்ளாத அவர்களின் எழுத்துகளில் இலக்கணச் சுத்தமிருந்தாலும், இலக்கிய அனுபவமென்பது சற்று குறைந்தே காணப்படும்.  அந்தக் குறைகளைக் களைந்த ஒருவராகத் தமிழன்பனைக் கருதலாம். பாரதிதாசனின் தமிழியக்க சிந்தனைகளை உள்வாங்கியபோதிலும் கூட,  தமிழையும் இலக்கியத்தையும் மொழி கடந்த அனுபவங்களாக மாற்றுவதிலேயே அவர் குறியாய் இருந்திருக்கிறார்; இருந்து வருகிறார். ‘பாரதிதாசனுடன்  பத்து ஆண்டுகள்’ எனும் நூலில், பாரதிதாசனுக்கும் தனக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை, சம்பவங்களை விவரித்திருக்கிறார்.

தன்னுடன் பயின்ற பள்ளித் தோழர் மணியின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘நெஞ்சில் நிழல்’ என்னும் நாவலை எழுதியதாக அந்நூலில்  குறிப்பிட்டிருக்கிறார். ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம் வெளிவந்திருந்த சமயத்தில், அதன் பாதிப்பில் எழுதப்பட்ட அந்நாவல் மூலம் திரைத்துறைக்குள்  நுழையலாம் எனும் திட்டமும் அவருக்கு இருந்திருக்கிறது. கவிஞராக அறியப்பட்டுள்ள தமிழன்பன் முதலில் எழுதியது நாவலே என்பது பலர் அறிந்த  தகவல். காண்டேகரையும், மு.வரதராசனையும் வாசித்திருந்த உத்வேகம், நாவல் முயற்சிக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது.

திரைத்துறைமீது தனக்குப் பெரிய ஆவலோ ஆசையோ இல்லை என்றபோதிலும், நண்பனின் விருப்பத்திற்காக எழுதப்பட்ட அந்நாவலை பாரதிதாசன்  பாராட்டியிருக்கிறார். கையெழுத்துப் பிரதியாயிருந்த அந்நாவலை வாசித்துவிட்டு, அதை அச்சாக்க வேண்டுமென விரும்பி, ‘பாரி’ நிலையத்தாரிடம்  தமிழன்பனை நேரில் அழைத்துப்போய் பாரதிதாசனே பரிந்துரையும் செய்திருக்கிறார். அந்தச் சந்திப்பில், “லட்ச ரூபாயை பரிசுத் தொகையாகக் கொண்ட  ‘ஞானபீடம்’ தங்களுக்குக் கிடைக்க இருக்கிறது...” என்னும் தகவலை, பாரி நிலையத்தார் பாரதிதாசனிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.

அதுகுறித்து பெரிதாக உணர்ச்சியை வெளிப்படுத்தாத பாரதிதாசன், “ஒருவேளை அவர்கள் சொல்வதுபோல லட்ச ரூபாய் பரிசாகக் கிடைத்தால், உடனே  ஒரு அச்சு எந்திரம் வாங்கி, இந்நாவலை நாமே அச்சிட்டுவிடலாம்...” எனத் தெரிவித்திருக்கிறார். இளம் படைப்பாளர்களை வளர்த்தெடுப்பதில்  பாரதிதாசனுக்கு இருந்த ஆர்வத்தை இதன்மூலம் அறியலாம். அதே நேரத்தில், பாரதிதாசனின் இதயத்தை ஈர்க்கும் அளவுக்கு தமிழன்பனின் நாவலும்  இருந்திருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘ஞான பீட’ விருதுக்கான பரிந்துரைக் குழுவில் இப்போது போலவே அப்போதும் அரசியல்  விளையாடி இருக்கிறது.

விருதுகள் யாருக்குத் தரப்படவேண்டும் என்பதைவிட, யாருக்குத் தந்துவிடக்கூடாது என்பதில்தான் பரிந்துரைக் குழுக்கள் கவனம் கொள்கின்றன.  குழுவில் நடுவர்களாக தொ.பொ.மீ, பெரியசாமித் தூரன், சா.கணேசன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். மூவருமே பாரதிதாசனை முன்மொழிந்தும்,  அவ்வாண்டு அவ்விருதை மலையாளக் கவி சங்கர குரூப் பெற்றிருக்கிறார். பாரதிதாசனை முன்மொழிந்த  மூவரும்  இராஜாஜியை இது சம்பந்தமாக  சந்தித்தபோது, “நாமக்கல் கவிஞரை பரிந்துரை செய்திருக்கலாமே...” எனச் சொல்லியிருக்கிறார். “பாரதிதாசன் மலைபோல் உயர்ந்து நிற்கிறார்.

அவரைப் புறக்கணித்துவிட்டு வேறு எவரையும் எங்களால் பரிசுக்கு உரியவராகப் பரிந்துரைக்க முடியவில்லை...” என்று மூவரும்  பதிலளித்திருக்கிறார்கள். நாமக்கல் கவிஞரைப் பரிந்துரை செய்திருக்கலாமே என்று இராஜாஜி சொன்னது, அவருடைய விருப்பமே தவிர,  கட்டளையில்லை. காந்தீயக் கவிஞராகவும் தேசீயக் கவிஞராகவும் அடையாளப்பட்டிருந்த நாமக்கல் கவிஞரை நினைவூட்டியதால், பாரதிதாசன்மீது  இராஜாஜிக்கு மதிப்போ மரியாதையோ இல்லையென்று சொல்வதற்கில்லை. இதுகுறித்து தமிழன்பன் பல மேடைகளில் விளக்கியிருக்கிறார்.

என்றாலும், தமிழன்பனின் கூற்றில் இராஜாஜிமீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடுமோ? என்னும் ஐயத்தை கவிஞர் முருகுசுந்தரம் கிளப்பியிருக்கிறார்.  உடனே நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த சா.கணேசனிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதுவிஷயமாக சா.கணேசன், முருகுசுந்தரத்திற்கு எழுதிய  கடிதத்தில், “இராஜாஜி எவ்விதத்திலும் முடிவில் தலையிடவில்லை. பரிந்துரையைப் பற்றி நாங்கள் கூறியதைக் கேட்ட இராஜாஜி, முடிவு  சரியானதே...” என்று சொன்னதாக அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.  மேலும், “கொள்கைக் கோலை வைத்து கவிதையை அளக்காத எங்கள் முடிவே  நன்றென்று...” இராஜாஜி சொன்னதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

(பேசலாம்...)
-ஓவியங்கள்: மனோகர்