கருத்து கணிப்புகள்!
தேர்தல் நேரங்களில் டோக்கனுக்கு சமமாக கருத்துக் கணிப்புகளுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. மற்ற நேரங்களில் கருத்துக் கணிப்பை எப்படி பயன்படுத்தலாம்? மல்லாந்து படுத்து யோசித்தபோது எரிந்த பல்புகள்!
புடவைக்கு புகழாரம்
ஆயிரம் ரூபாய் கொடுத்து புடவை வாங்கி அதை உடுத்தும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அக்கம்பக்கத்தில் பத்து பெண்களாவது ‘என் கண்ணே பட்டுடும்போல இருக்கே... எங்கயும் பார்த்திராத இந்த ‘பூசணிக்காய் டிசைன்’ புடவையை இவ்வளவு குறைந்த விலைல எங்க வாங்கினே..?’ என கேட்கும்போது ஏற்படும் உணர்வுக்கு அளவே இல்லை! ஒருவேளை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் என்ன செய்வது?
 இந்தப் படபடப்பைத் தவிர்க்க சாதகமான கருத்துகளை வரவழைக்க கருத்துக் கணிப்பு ஏஜென்சிகளிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம்! சாதக, பாதக தகவல்களின் கலவை எப்படி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே அவர்களிடம் சொல்லிவிட்டால், அதற்கேற்றாற்போல் அவர்கள் சந்திக்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்! முற்றிலும் சாதக தகவல்களுக்கும் புகழார வீடியோ பதிவுகளுக்கும் அதிக விலை கொடுத்தாகவேண்டும்.
இந்த உண்மையை உணர எந்த கருத்துக் கணிப்பும் தேவையில்லை! இதை கருத்தில் கொண்டு விழாக்காலங்களில் இலவச சாதக கருத்துக் கணிப்பு வசதியை ஜவுளிக் கடைகளே ஏற்பாடு செய்தால் அவர்களின் வியாபாரம் பெருகும். பெண்களின் டிரஸ் சம்பந்தப்பட்டது என்பதால், அது சம்பந்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஏஜென்சிகள் ஆண்டு முழுவதும் பிசியாக இருப்பார்கள். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும்!
ஸ்கூல் செலக்ஷன்
குழந்தையை எல்.கே.ஜி. சேர்ப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பள்ளியில் யூ.கே.ஜி. படிப்பவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தலாம்! ‘அந்த ஸ்கூல் பத்து கி.மீ. தூரத்துல இருக்கு. காலை ஆறு மணிக்கே ஸ்கூல் பஸ் தெருக்கோடிக்கு வந்துடும். ஒரு நிமிஷம் தாமதமானாலும் குழந்தையை விட்டுட்டுப் போயிடுவாங்க. குழந்தைக்கு சட்டை போடலைனாலும் பரவால்ல... நிச்சயமா கழுத்தை நெருக்கி நாக்கு வெளிய தள்றா மாதிரி டை கட்டணும்.
மூணு மாசத்துல குழந்தைங்க இங்கிலீஷ்ல அழ ஆரம்பிப்பாங்க. ஒரு வருஷ ஃபீஸை முன்னாடியே கட்டிடணும்...’மாதிரியான விவரங்களை எந்தப் பள்ளி மாணவர்கள் அதிகம் சொல்கிறார்களோ அப்பள்ளியே சிறந்த பள்ளி என டிக் செய்யலாம்! வட்டிக்குப் பணம் வாங்கி அந்தப் பள்ளியிலேயே நம் குழந்தையை ப்ரீகே.ஜி. சேர்க்கலாம்!
டெனன்ட் கண்ட்ரோல்
வாடகைக்குக் குடி வருபவர்கள் பற்றி வீட்டு ஓனர் முன்கூட்டியே சில முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள கருத்துக் கணிப்பு அவசியம். அவர்கள் ஏற்கனவே குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் ஏரியாவாசிகளிடம் ஏஜென்சி கருத்துக் கணிப்பு நடத்தும். குடி வருபவர்கள் ஓனரைப் போலவே அவருடைய மனைவியிடம் அடிபணிந்து நடப்பாரா... ஓனரின் மனைவி கேட்கும்போதெல்லாம் சமையல் காஸ் சிலிண்டர் முதல் காப்பிப்பொடி, காய்கறி வரை முகம் சுளிக்காமல் ‘வாரா’ கடன் தருவாரா... எக்குத்தப்பான கரண்ட் பில்லை முணுமுணுக்காமல் செலுத்துவாரா... வீட்டு ஓனரின் அடக்குமுறை பற்றி அக்கம்பக்கத்தில் வம்பு பேசாமல் இருப்பாரா... என்பதையெல்லாம் ஏஜென்சி துல்லியமாகச் சொல்லிவிடும்! இதன் அடிப்படையில் நல்ல மதிப்பெண் பெறுபவருக்கு வாடகைக்கு வீடு தரலாம்!
விடுமுறை கணிப்பு
காலை ஆறு மணிக்கு லேசாகத் தூறும் மழை ஒரு கருத்துக்கணிப்புக்கு வித்திட்டு விடுகிறது! வழக்கமாக காலை ஏழு மணிக்கு எழுந்திருக்கும் குழந்தைகள், ஆறுமணிக்கே எழுந்து பள்ளிக்கு விடுமுறையா என்று அறிய அனைத்து போன்களையும் கைப்பற்றி நண்பர்களுடன் பேச ஆரம்பிப்பார்கள். கடந்த காலங்களில் எத்தனை மில்லிமீட்டர் மழைக்கு விடுமுறை அறிவித்தார்கள் என்பது தொடங்கி பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தத் தொடங்குவார்கள்.
 ‘இப்ப ரமணன் அங்கிள் இல்லாமப் போயிட்டாரே...’ என்ற ஆதங்கம் பிள்ளைகளின் மனதில் மேலோங்கும். இடையிடையே டிவியில் விடுமுறை அறிவிப்பு ஸ்க்ரோல் ஓடுகிறதா என உன்னிப்பாக கவனிப்பார்கள். ஆனால், ஸ்கூல் பஸ் வீட்டு வாசல் அல்லது தெரு முனையில் நின்று ஹாரன் அடித்து அன்று பள்ளி இயங்குவதாக அறிவிக்கும். அப்போது குழந்தை களின் மனதில் படரும் சோகத்தை அளக்க நிச்சயம் இன்னொரு கருத்துக் கணிப்பு தேவைப்படும்!
ஞாயிறு கொண்டாட்டம்
ஞாயிற்றுக்கிழமை கணவனும் குழந்தைகளும் வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஸ்பெஷல் பலகாரம் செய்ய வேண்டும் என வீட்டுத் தலைவிக்கு தோன்றும். கருத்துக் கணிப்பு இல்லாமல் இந்த ஐடியாவை செயல்படுத்த முடியாது! எனவே அக்கம் பக்கம், சுற்றம், நட்பு வட்டங்களில் அதிகநேரம் கிச்சனில் செலவிடாமல் அதேநேரம் சுவையாக எந்த பலகாரம் செய்யலாம் என தொலைபேசி வழியே கருத்து கணிப்பு நடத்தலாம்! ஒருவர் சொல்லும் கருத்தை மற்றவரிடம் தவறாமல் சொன்னால்தான் அவர் அதை மறுத்து தன் தரப்பு நியாயங்களை முன்வைப்பார்.
ஒருவழியாக இந்த அக்கப்போர் முடிய மாலை 7 மணியாகி விடும். உடனே, ‘எதுவும் சரியா அமையலை. இந்த வாரம் ஹோட்டல்லயே சாப்பிடலாம். அடுத்த வாரம் வட்டியும் முதலுமா ஜமாய்ச்சிடலாம்...’ என குடும்பத்தோடு வெளியே கிளம்ப மனைவி ஆணையிடும்போது பசியையும், கோபத்தையும் எப்படி கணவன் அடக்க வேண்டும் என்பதையும் தனியாக கருத்துக் கணிப்பு நடத்தி அறிய வேண்டியது அவசியம்!
-எஸ்.ராமன்
|