மெட்ராஸ் என்கிற சென்னையின் கதை
தல புராணம்
சென்னைக்கு வந்து எத்தனை ஆண்டுகளாகின்றன? ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை இதற்கு சொல்வார்கள். என்றாலும் பெரும்பாலானவர்களின் சென்னையைப் பற்றிய ஆரம்ப நினைவுகள் இருவகையாகத்தான் இருக்கும். ஒன்று, தெருவில் வசித்த அண்ணன்கள், ‘வேலைக்கு மெட்ராஸ் போறேன்...’ எனச் சொல்லக் கேட்டது. அடுத்து, ஊரில் ‘கிரிக்கெட் ஆடிய மெட்ராஸ் பையன்’. விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வருபவனை பெயர் சொல்லி அழைத்ததை விட ‘மெட்ராஸ்... மெட்ராஸ்...’ என கூப்பிட்டே பழக்கப்பட்டிருப்போம். ஆம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ‘சென்னை’ என்ற சொல்லை அவ்வளவாக யாரும் கேட்டதில்லை. ‘மெட்ராஸ்’தான்.
 அதிகாரபூர்வமாக கலைஞர் ஆட்சியில், 1996ல், சென்னை எனப் பெயர் மாற்றப்பட்ட பிறகும் கூட, ‘மெட்ராஸ்’தான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கு இந்த மாநகரம் தரும் ஆச்சரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எலக்ட்ரிக் ரயில், மெரீனா பீச் தொடங்கி மால்கள் வரை பல்வேறு இத்யாதிகள் இருக்கின்றன. ஆனால், இதெல்லாம் ஒரே நாளில் வந்துவிடவில்லை. நகரம் வளர வளர அதுவும் வளர்ந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு தி.நகர் என்பதே கிடையாது! அது ‘மயிலாப்பூர் ஏரி’ என்ற பெயரில் ஒரு பெரிய ஏரியாகக் காட்சியளித்தது.
அதேபோல் மெரீனா கடற்கரையும் துறைமுகம் கட்ட ஆரம்பித்த பிறகே உருவான ஒன்று. தாதுப் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் உருவானதுதான் பக்கிங்ஹாம் கால்வாய். இப்படி சென்னைக்குள் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. அதைவிட சென்னையா? மெட்ராஸா? எப்படி வந்தன இந்தப் பெயர்கள்... என்பதிலும் கதைகள் உள்ளன. அதற்கு மெட்ராஸ் என்கிற சென்னையின் தலபுராணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்! இன்றுவரை சென்னையின் பிறந்தநாள் என்பது ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய 1639ம் வருடம், ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்தே கணக்கிடப்படுகிறது. எனில், அதற்குமுன் இங்கு மக்கள் இல்ைலயா? இருந்தார்கள், வாழ்ந்தார்கள் என்பதே வரலாறு.
அன்றும் கூவமும், அடையாறும் ஆறாக ஓடி கடலில் கலந்தன. மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும், திருவான்மியூரும், திருவொற்றியூரும் பாடல் பெற்ற தலங்களாக புகழ் பெற்றிருந்தன. வேளச்சேரியும், பூந்தமல்லியும், கற்காலத்திய பல்லாவரமும் இன்னும் பல ஊர்களும் கிராமங்களாக ஒளிர்ந்தன. இதையெல்லாம் இணைத்து வணிகத் தலமாக்கி ஒரு நகராக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்களே! சரி, எதற்காக அவர்கள் இந்தப் பகுதிக்கு வர வேண்டும்? பெப்பருக்காக! அதன் காரச் சுவைக்காக! இன்றைய தலைமுறை உணவில் சேர்க்கப்படும் மிளகினை, சாப்பிடும்போது தனியாக ஒதுக்கி வைத்துவிடுவதைப் பார்க்கிறோம்.
 ஆனால், அந்த மிளகுக்காக கிழக்கிந்தியப் பகுதி முழுவதும் அடிமையானது என்பதே வரலாறு. முதலில் மிளகுக்காகவும், அடுத்ததாக காட்டன் துணிகளுக்காகவும் வந்தவர்கள்தான் பரந்துபட்ட இந்தியாவையும் கட்டி ஆண்டனர். ஆங்கிலேயர்களுக்கு மட்டு மல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கே இந்தியப் பொருட்கள் மேல் அதீத விருப்பம். குறிப்பாக, அங்கு கிடைக்காத பருத்தி ஆடைகள், ஏலக்காய், சாதிக்காய், இலவங்கம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், மிளகு, கிராம்பு போன்ற மசாலா ஐட்டங்கள் போன்றவற்றிற்காக கடல் கடந்தனர். இதில் முதலில் வந்தவர்கள் போர்த்துகீசியர்கள். போர்த்து கீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டறிய... அவர்கள் வணிகத்தில் திளைக்கத் தொடங்கினர்.
கிழக்குக் கடற்கரை எனப்படும் கோரமண்டல் கடற்கரையை ஏகபோக உரிமை கொண்டாடினர். சென்னையின் சாந்தோம், இவர்களின் குடியேற்றப் பகுதியானது. 16ம் நூற்றாண்டில் இந்திய வணிகத்தின் ராஜா இவர்கள்தான். இந்நேரத்தில் ஐரோப்பாவில் சிறந்த வணிகர்கள் எனப் பெயரெடுத்த டச்சுக்காரர்களும் இந்தியா பக்கமாகக் கடையை விரிக்கக் கிளம்பினர். ஏற்கனவே, போர்த்துகீசியர்கள் இங்கே கிடை போட்டதால் அவர்கள் spice island எனப்படும் மலாய் தீவுப் பக்கமாக நகர்ந்தனர். அதாவது, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட தீவுக் கூட்டங்கள் ‘மலாய் தீவுகள்’ எனப்பட்டன.
அதன்பிறகு 1610ம் ஆண்டு இந்தியா வந்து இதே கோரமண்டல் கடற்கரையில் ‘புலிகாட்’ எனப்படும் பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டி நிர்மாணித்தனர். அந்தக் கோட்டையின் பெயர் கெல்ட்ரியா! இன்றும் இதன் எச்சம் பழவேற்காட்டில் உள்ளது. தவிர, இவர்களின் கல்லறைகளையும் பார்க்கலாம். 17ம் நூற்றாண்டு டச்சுக்காரர்களின் வசமானது. இந்த வரலாறு நிகழும்போதே டச்சு வழியில் ஆங்கிலேயர்களும் இங்கிலாந்தில் இருந்து படையெடுத்திருந்தனர். ஏனெனில், மலாய் தீவில் கிடைத்த பொக்கிஷ மிளகுக்கு ஐரோப்பிய மார்க்கெட்டில் கூடுதல் விலை விதிக்கப்பட்டது.
டச்சுக்காரர்கள் மிளகின் விலையை அதிகளவில் உயர்த்த, கடுங்கோபம் கொண்ட லண்டன் வியாபாரிகள், 1599ம் வருடம், ‘Merchant Adventurers’ என்ற அமைப்பை நிறுவி கிழக்கின் செல்வத்தைத் தாங்களே தேடிச் செல்ல ராணியிடம் அனுமதி கேட்டனர். அடுத்த ஆண்டே 24 இயக்குநர்கள் கொண்ட குழுவிடம் வணிக நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் சந்திப்பு நடந்ததும் கிழக்கு நோக்கிப் பாய்ந்தன கப்பல்கள். ஆரம்பத்தில் சுமாத்ரா, ஜாவா பகுதியிலேயே தங்கள் கொடியை நிலைநிறுத்தினர்.
‘‘அப்போது ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த துணிகள், தகரம், ஈயம், கண்ணாடி, தட்டுகள் போன்றவற்றை இறக்குமதி செய்துவிட்டு அதற்கு பதிலாக மிளகு, சாதிக்காய், கிராம்பு, மூலப்பட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இச்சூழலில் மலாய் தீவுகளில் இந்தியாவில் உற்பத்தியாகும் காலிகோ துணிகளுக்கு ஏகடிமாண்ட் இருப்பது தெரியவர, அங்கிருந்து இந்தியா பக்கமாக தங்கள் கவனத்தைத் திருப்பினர். முதன்முதலாக 1608ம் ஆண்டு சூரத் நகரத்தில் நங்கூரமிட்டன ஆங்கிலேய கப்பல்கள். அப்போது இந்தியாவின் பல பாகங்களை முகலாய மன்னர் ஜஹாங்கீர் ஆட்சி செய்தார்.
 அவரிடம் ஆசி பெற்று தங்கள் வணிகத்தைத் தொடங்கினர். சூரத் வணிகர்களிடம் தங்கள் பொருட்களைக் கொடுத்துவிட்டு பதிலாக காலிகோ, பருத்தி துணிகளை மலாய் தீவுகளுக்கு எடுத்துச் சென்றனர்’’ என்கிறார் ஜேம்ஸ் டால்பாய்ஸ் வீலர், ‘Madras in the olden time’ என்கிற தன்னுடைய நூலில்! இவர்தான் மெட்ராஸ் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய முதல் ஐரோப்பியர். மட்டுமல்ல, சென்னை மாநிலக் கல்லூரியின் பேராசிரியராகவும் இருந்தவர். அடுத்தது? இந்திய வணிகம் இனிக்க, கோரமண்டல் கடற்கரையிலிருந்த மசூலிப்பட்டிணத்தில் கோல்கொண்டா சுல்தானின் தயவுடன் முதன்முதலாக ஒரு கம்பெனியை நிர்மாணித்தனர்.
ஆனால், அருகே போட்டியாளர்களான டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் இருந்ததாலும், கோல்கொண்டா ஆளுகையிலிருந்த அந்நகர கவர்னரின் அழுத்தத்தாலும் வியாபாரத்தில் சிறக்க முடியவில்லை. அதனால், நிரந்தரமாகத் தொழிலை அமைக்க வேறு இடத்தைத் தேட வேண்டி இருந்தது. பிறகு, 1626ல் மசூலிப்பட்டிணத்திலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்த ‘ஆர்மகான்’ என்ற இடத்தில் கம்பெனியும், கோட்டையும் நிர்மாணித்தனர். ஆறுமுகம் என்பவர் பெயரில் அந்த இடம் இருந்ததால் அதை, ‘ஆர்மகான்’ என ஆங்கிலேயர்கள் உச்சரித்தனர். இந்த இடமும் துறைமுகத்திலிருந்து தள்ளியிருந்ததால் வணிகத்திற்கு தோதுபடவில்லை.
அதனால், ஆர்மகானின் தலைமைப் பொறுப்பில் இருந்த கம்பெனியின் ஏஜென்ட் பிரான்சிஸ் டே, ஒரு நல்ல இடத்தைத் தேடி தெற்கு நோக்கிப் பயணமானார். நிறைவில், கடலையொட்டி அவர் கண்டறிந்த ஒரு பெரிய மணல்திட்டுதான் இன்று தமிழகத்தின் அத்தனை அதிகாரங்களையும் கொண்ட, ‘கோட்டை’ என ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்படும் தமிழகத்தின் தலைமைச் செய லகம்! இதைச் சுற்றி வளர்ந்த நகரமே தமிழகத்தில் ஆறில் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் மெட்ராஸ் என்கிற இந்த சென்னை மாநகரம்! ஆமாம். சென்னையா? மெட்ராஸா? இந்தப் பெயர் எப்படி வந்தது?
(பயணிப்போம்) பேராச்சி கண்ணன்
கோரமண்டல்..?
கோரமண்டல் கடற்கரை என்பது சோழ மண்டல கடற்கரை என்பதன் திரிபு என்கிறார் சென்னையின் வரலாற்றைப் பற்றி, ‘Vestiges of Old Madras’ என்ற மூன்று பாகங்கள் கொண்ட நூலை எழுதிய கர்னல் ஹென்றி டேவிசன் லவ். ஏனெனில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சோழர்கள் வடக்கே ஒரிசா முதல் கிழக்கில் ஜாவா, சுமித்ரா என இந்தோனேஷியா பகுதிகள் வரை ஆண்டுள்ளனர். அதனாலேயே இந்தப் பெயர். தவிர, சோழர்கள் கடல் வணிகத்திலும், கடற்படையிலும் சிறந்து விளங்கினர். அவர்களுக்குப் பிறகு கடல் வணிகம் தொடரப்படவில்லை.
அம்போய்னா படுகொலை!
1623ம் வருடம் வணிகப் போட்டியில் பத்து ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட 21 பேர்கள் டச்சு அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். இதை ‘Amboina Massacre’ என்கிறது வரலாறு. இதன்பிறகே டச்சுக்காரர்களின் சகவாசம் முறிக்கப்பட்டது.
|