கர்மாதான் சாராம்சம்!



‘‘பூ மராங்கை வீசினா திரும்பி நம்மகிட்டேயே வரும். அதுதான் விஷயம். ‘கர்மா’னு சொல்வாங்களே, அதுதான் படத்தின் சாராம்சம். நீங்கள் நல்லது செய்திருந்தால் அதற்கான பலன் எந்த விதத்திலாவது உங்களை வந்தடையும். அதே மாதிரி நீங்கள் தப்பு செய்திருந்தால், அது நீங்க  எங்கிருந்தாலும் வந்து திருப்பி அடிக்கும். இதைத்தான் ஒரு படம் எடுத்து செய்திருக்கோம்.

படம் பார்த்ததும் நல்லது செய்தால் நல்லதுன்னு கண்டிப்பாக மனதிற்குத் தோணும். ‘இவன் தந்திரனி’ல் அப்படிப்பட்ட சில நல்ல விஷயங்களைச்  சொல்லியிருந்தேன். இந்த ‘பூமராங்’ படத்துல கடைசி யில் எந்த இடத்தில் ரசித்துப் பார்த்தோம்னு மறந்து போகிற அளவுக்கு நல்ல காட்சிகள்  தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்...’’ நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். ‘ஜெயம்கொண்டானி’ல் தொடங்கி இன்றைக்கு வரைக்கும்  பவனி வருகிற மணிரத்னத்தின் முதன்மை சீடர்.

எப்படியிருக்கும் ‘பூமராங்’...?

நிஜமாகவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் மக்களுக்கு என்ன என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்னு ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகுதான்  தொடங்குவோம். அப்படியொரு தயக்கம் கூட இல்லாமல் எடுத்த படம் இது. இன்றைக்குத் தேவையான இளைஞர்களின் பக்கங்களையே கணக்கில்  எடுத்திருக்கேன். என் முந்தைய படங்களின் தரத்திலிருந்து இன்னும் வேறுபடுகிற படம். நல்ல வேகம் பிடிக்கிற சினிமா. Race Against Time-னு  சொல்வாங்க... அதுதான். எனக்கு அதர்வாவை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அவர்.

ஒரு பெரிய நடிகரின் மகனாக உருவாகி வந்ததால், நடிகர்களின் கஷ்ட நஷ்டம் புரியும். தயாரிப்பாளர்களின் துயரம் கண்ணில் படும். அவரே  தயாரிப்பாளராகி இருக்கிறார். அதனால் எல்லாமே உணர்ந்து நடிக்கிறவர். ‘பரதேசி’ அவர் நடிச்சு தன்னை முழுமையாக நிரூபித்த படம். இரண்டு மணி  நேரம் சொன்ன கதையில் அவர் மனப்பூர்வமாக சம்மதிச்சு வந்தார். அதற்குப் பிறகு அவருடைய அக்கறையில் ஒரு குறையும் சொல்லவே முடியாது.  இந்தக் கதையை ரெடி பண்ண இரண்டு வருஷம் ஆச்சு. ‘பூமராங்’ டிராப்ட் எழுதும் போது திருத்தி திருத்தி எல்லாம் சரியாகி அருமையா வந்திருக்கு.

அப்படியொரு பயிற்சியில் வந்தது என்பதால் திரைக்கதை சிறக்கிறது, சிக்கனப்படுகிறது, முறுக்கேறுகிறது. இளைஞர்களின் விறுவிறுப்பான  அனுபவங்கள் இருக்கு. இதில் அவ்வளவு நேர்த்தியாக முட்டி மோதி முளைச்சு வர்றவங்களைப் பத்தி சொல்லியிருக்கேன். அதர்வா, ஆர்.ஜே.பாலாஜி,  மேகா ஆகாஷ், சதீஷ், சிந்துஜா இவங்களைச் சுற்றி பயணமாகிறது கதை. ‘ஐ’ படத்தில் நடித்த உபேன் படேல் இதில் அருமையான ரோல்  செய்திருக்கிறார். அருப்புக்கோட்டை, விருதுநகர், தேனி, பெரியகுளம், சென்னையைச் சுத்தி படமாக்கியிருக்கோம்.

இதில் கிராமம், நகரம் இரண்டின் பின்னணியும் இருக்கு. கிட்டத்தட்ட இரண்டு வருஷமா நான் தனிச்சுப் போய் உட்கார்ந்து திரட்டின அவ்வளவு  விஷயங்களும் இதில் இருக்கு. இப்ப இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை  தேவைப்படுகிறது. அடுத்த கட்டம், அடுத்த டெக்னாலஜினு போக வேண்டியிருக்கு. முக்கியமாக அவர்களின் பிரச்னைகளைச் சொல்ல வேண்டியிருக்கு.  அதற்கான நியாயத்தைச் செய்திருக்கிறார் அதர்வா.

மேகா ஆகாஷ் இளைஞர்களுக்கு பிடித்தவராச்சே... எப்படி இதில் கொண்டு வந்தீங்க..?

அருமையான சென்னைப் பொண்ணு. தங்கு தடையில்லாத தமிழ் கரை புரண்டு வருது. ‘ஒரு பக்கக் கதை’ படத்தில் நடிச்சிருக்காங்க. ‘என்னை நோக்கி  பாயும் தோட்டா’வில் தனுஷின் இணை, ‘மறுவார்த்தை பேசாதே’ பாட்டு அவரை புகழின் உச்சிக்குக்  கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. அவருக்கென்று  ‘மேகா ஆர்மி’னு படை திரண்டு இணையத்தில் நிற்கிறாங்க. அழுத்தம் திருத்தமா, களையா இருக்காங்க. உணர்ந்து நடிக்கிறாங்க.

சினிமாவை விளையாட்டாக எடுத்துக்காத பொண்ணு. அதர்வா மாதிரியே அக்கறையானவர் மேகா. அதோட ‘மேயாத மானி’ல் பின்னி எடுத்த இந்துஜா  நடிக்கிறாங்க. இப்படி சினிமாவை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிற ஹீரோ, ஹீரோயின்களைப் பார்த்தால் ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா  இருக்கும். எனக்கும் இருந்தது. அந்த சந்தோஷம்தான் வெற்றி.

இசைக்காக என்ன செய்திருக்கீங்க?

ரதன்தான் ம்யூசிக். தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்குப் பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. அவர் இசையை ரொம்ப லேசாக எடுத்துக்கிட்டது  கிடையாது. அவசரப்படாமல் கதை கேட்டுப் பார்த்து, அதுல இசைக்கு என்ன வழியிருக்குன்னு பார்த்திட்டு ‘சரி’ன்னு சொல்றவரு. ‘அர்ஜுன் ரெட்டி’க்கு  மியூசிக் அமைத்ததால், அவர் அந்த ஊர்க்காரர் இல்லை.

இங்கே கே.கே.நகரில் வாழ்ந்துகிட்டு, அழகா தமிழ் பேசிக்கிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் இருந்தவர். மக்களுக்கான ட்யூன்களை மட்டுமே  போடுகிறார். பாடல்கள் அருமை அருமையாக வந்திருக்கு. வித்தியாசப்படுத்திக் காட்டணும் என்ற தனித்துவம் இருக்கு. தேனியை அடுத்த ‘தேவாரம்’  என்ற இடத்தில் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ், 100 டான்சர்களை வைச்சு, வந்தே மாதரம் ஆல்பம் மாதிரி திறந்தவெளியில் ஒரு பாட்டு படமாக்கினோம்.

‘தேசமே கண் முழிச்சுக்க, கூட்டமா கை சேர்த்துக்க’னு பாடல் அடுத்தடுத்து பிரமாதமாகப் போகும். என் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த  பிரசன்னகுமார்தான் கேமரா. தமிழ் சினிமா கொடுத்திருக்கிற ஆரோக்கியமான மாறுதலும், அதர்வா கொடுத்திருக்கிற உழைப்பும், என் எண்ணங்களும்  சேர்ந்து படம் அழகா வந்திருக்குன்னு ஒரு நம்பிக்கைச் சித்திரம் மனதில் வருது. அதுவே உங்கள் மனதிலும் வந்தால் மகிழ்வேன்.

-நா.கதிர்வேலன்