வாட்டர் மூவி!
‘‘‘முதல்வன்’ அப்ப நான் ஷங்கர் சார்கிட்ட இருந்தேன். மனிஷா கொய்ராலாவுக்கு முன்னாடி த்ரிஷாவுக்குத்தான் முதல்ல மேக்கப் டெஸ்ட் நடந்தது. சில காரணங்களால த்ரிஷாவால அந்தப் படத்துல நடிக்க முடியாமப் போச்சு. ஆனாலும் அன்னிலேந்து த்ரிஷாவைத் தெரியும். எங்காவது ஃபங்ஷன்ல பார்த்தா சின்ன ஸ்மைலோடு ‘ஹாய்...’ சொல்லிப்போம். ‘மோகினி’ல த்ரிஷாவின் டெடிகேஷனைப் பார்த்தேன்.
 தொடர்ந்து பதினைஞ்சு வருஷங்களா எப்படி ஹீரோயினாவே தாக்குப் பிடிச்சு நிக்கறாங்கனு புரிஞ்சுது...’’ மகிழ்ச்சியாகப் பேசுகிறார் ‘மோகினி’ இயக்குநர் ஆர்.மாதேஷ். விஜய்க்கு ‘மதுர’யும், விஜயகாந்துக்கு ‘அரசாங்க’மும் கொடுத்தவர். ‘‘வினய் நடிச்ச ‘மிரட்டல்’ முடிஞ்சதும் ‘கோச்சடையான்’ல கிரியேட்டிவ் இயக்குநரா ஒர்க் பண்ணினேன். அப்புறம் இந்தி, மராத்தில டைரக்ட் பண்ண ஆஃபர்ஸ் வந்தது. மராத்தியை செலக்ட் பண்ணினேன்.
புது இண்டஸ்ட்ரி... புது அனுபவம் கிடைக்கும்னு நினைச்சு, அங்க ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கினேன். பிசினஸ் அளவுல சின்ன மார்க்கெட்தான். படம் நல்லா போச்சு. அங்க சூப்பர் ஹீரோவுக்கான சம்பளமே வெறும் ரூ.15 லட்சம்தான்! நிறைய விஷயங்கள் அங்க கத்துக்க முடிஞ்சது. மறுபடியும் தமிழ்ல ஒரு படம் பண்ணிட்டு அடுத்து குஜராத்திலயோ ஒரிய மொழிலயோ படம் பண்ணணும்! ஒரு இயக்குநரா என் ட்ராவல் இந்திய அளவுல இருக்கணும்!’’ நிறைவாக சிரிக்கிறார் இயக்குநர் மாதேஷ்.
யார் அந்த ‘மோகினி’?
த்ரிஷாதான்! ‘மோகினி’ டிரெயிலர் பார்த்து அவங்க ஹேப்பி. ‘இதெல்லாம் நானா பண்ணினேன்னு ஆச்சர்யமாவும் நம்ப முடியாமயும் இருக்கு. திரும்பத் திரும்ப டிரெய்லரை பார்த்துட்டிருக்கேன். படம் ரெடியானதும் சொல்லுங்க’னு பிரமிப்பா பேசினாங்க. இந்த ‘மோகினி’யை வெறும் ஹாரர் படம்னு சொல்லிட முடியாது. ஆக்ஷன், ஃபேமிலி, காமெடினு எல்லாம் கலந்த கலவையா வந்திருக்கு. இது ஒரு வாட்டர் மூவி! ஒவ்வொரு ஃப்ரேமிலும் தண்ணீர் காட்சிகள் மிரட்டும். வாட்டர் சீக்குவென்ஸ் தொடர்ந்து வரும்.
 கதையை நகர்த்த உதவும் செக்மென்ட் தண்ணீர்தான். ஹீரோவுக்காக கதை பண்ணும் போது, அவருக்கான ஓபனிங் சீன், ஆக்ஷன்னு நிறையவே யோசிப்போம் இல்லையா... அப்படி இதுல ஹீரோயினுக்காக நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கோம். ‘வெளிநாட்டுல கார் சேஸிங்... ஹீரோயின் படு வேகமா காரை ஓட்டுறாங்க’னு ஸ்கிரிப்ட்ல ஈஸியா எழுதின பிறகுதான், த்ரிஷாவால இதெல்லாம் பண்ண முடியுமானு யோசிச்சேன். ஆனா, ஸ்பாட்டுல நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல கலக்கினாங்க.
பாலிவுட் நடிகர் ஜாக்கி பஹானி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், பூர்ணிமா, யோகி பாபு, முகேஷ்திவாரினு அதிக நட்சத்திரங்கள் இருக்காங்க. படத்தோட கதை 80 சத விகிதம் பாங்காக், லண்டன்னு நிறைய நாடுகள்ல நடக்குது. மீதி படப்பிடிப்பு சென்னைல. ‘சிங்கம் 2’ லக்ஷ்மண் சார் இதை தயாரிச்சிருக்கார். படத்தோட ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் கவனிச்சிருக்கார். திட்டமிட்டபடி 90 நாட்கள்ல படத்தை முடிக்க ஒளிப்பதிவாளரும் ஒரு காரணம். விவேக் - மெர்வின் இசையும் நல்லா வந்திருக்கு. படத்துல எடிட்டர் தினேஷுக்கு மிகப்பெரிய பங்கிருக்கு.
த்ரிஷாவுக்கு டபுள் ஆக்ஷனா?
அப்படியே மெதுவா கதையை சொல்ல வச்சிருவீங்க போலிருக்கே! இண்டஸ்ட்ரி ஸ்டிரைக் முடிஞ்சதும் படம் ரிலீஸ் ஆகிடும். அதுவரை அமைதியா இருக்கறதுதான் நல்லது! த்ரிஷா இதுல ஸ்டார் ஹோட்டல் செஃப். நிஜமாவே அவங்க அட்வென்ச்சர் கேர்ள்தான். ஆழ்கடல் சீன்களாகட்டும், அந்தரத்தில் ரோப் கட்டி தைரியமா கீழ குதிப்பதாகட்டும்... ‘நானே பண்றேன்... டூப் வேணாம்’னு சொல்லி நடிச்சுக் கொடுத்தாங்க.
 ஏற்கெனவே ஸ்கூபா டைவிங்ல த்ரிஷாவுக்கு பழக்கம் இருந்ததால கடல் சீக்குவென்ஸ்ல பிச்சு உதறியிருக்காங்க. அதே மாதிரி வெளிநாடுகள்ல கார் சேஸிங் ஷூட் பண்றதெல்லாம் ஈஸியான விஷயமில்ல. ஒவ்வொரு கார் பின்னாடியும் ஆம்புலன்ஸ், டாக்டர்கள்னு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பண்ணியிருக்கோம்னு பர்மிஷன் வாங்கின பிறகுதான் சேஸிங் ஷூட் பண்ணமுடியும். இன்னமும் ஆக்ஷன் ஹீரோயினுக்கேற்ப அவங்க உடம்பை செம ஃபிட்டா வச்சிருக்கறதால அசத்தியிருக்காங்க.
தயாரிப்பாளர் மாதேஷ், இயக்குநர் மாதேஷ்... யார் பெஸ்ட்?
ரெண்டு ரோலுமே பிடிக்கும். புரொட்யூசரா இருக்கறப்ப நிறைய பொறுப்புகள தோள்ல சுமக்க வேண்டியிருக்கும். கடினமான வேலைதான். ஆனா, ஒரு கிரியேட்டரா இருந்தா நினைச்சதெல்லாம் பண்ண முடியும். எனக்கு ரோல் மாடல் எங்க ஷங்கர் சார்தான். இருபத்தி நாலு மணிநேரமும் சினிமாவைப் பத்தி சிந்திக்கறவர். அவரோட அசிஸ்டென்ட்டான நானும் அப்படித்தான் இருக்க முயற்சி பண்றேன். சார் நினைச்சா, ஒரு மாசம் கூட ரெஸ்ட் எடுத்துட்டு ரெஃப்ரெஷ் பண்ணிட்டு ஒர்க் பண்ண முடியும். யாரும் ஏன்னு கேட்க மாட்டாங்க.
 ஆனா, எந்த படத்துக்கும் அவர் அப்படி பண்ணினதே இல்லை. எந்த நேரமும் சினிமாவைப் பத்தியே சிந்திப்பார். நான் சினிமாவுல அடியெடுத்து வைச்சப்ப என்கூட வந்த பலரும் ஊருக்கே திரும்பிப் போயிட்டாங்க. ஆனா, நான் தொடர்ந்து சினிமால இயங்கறேன். இதுக்கு காரணமே அவர் கத்துக் கொடுத்த கடின உழைப்புதான். அதனாலதான் 26 வருஷங்களா இந்த ரேஸ்ல நிற்காம ஓட முடியுது. இன்னிக்கு இருக்கற சினிமா ரொம்ப மாறியிருக்கு. காலேஜ் படிப்பு முடிச்சதுமே யார்கிட்டயும் ஒர்க் பண்ணாம டைரக்டராக முடியுது.
இன்னொரு விஷயம்-கிராஃபிக்ஸ், டெக்னிகல், லென்ஸ்னு அத்தனையும் ஆடியன்ஸும் தெரிஞ்சு வச்சிருக்காங்க. முன்ன மாதிரி தோணுற விஷயத்தை டக்குனு சொல்லிட்டு போயிட முடியாது. ஜனங்க கேலி பண்ணி சிரிச்சிடக் கூடாதுங்கற பயத்தோடயே சீன்ஸ் யோசிக்க வேண்டியிருக்கு. பொதுவா நமக்கெல்லாம் யாரும் அட்வைஸ் பண்றதோ அட்வைஸை கேட்கறதோ பிடிக்காது. வீட்ல அப்பா அட்வைஸ் சொன்னா கேட்க மாட்டோம். ஆனா, சினிமால மட்டும் காசு கொடுத்துட்டு அட்வைஸ் கேட்கறோம். அப்படி ஒரு பவர்ஃபுல் டூல் இது. மக்கள் நம்ம அட்வைஸை கேட்கறாங்க... இல்ல கேட்கலை... அது வேற விஷயம்.
ஆனா, நாம சொல்ல நினைச்சதை சொல்ல முடியும். நான் ஒர்க் பண்ணின ‘கோச்சடையான்’ல ஒரு வசனம் வரும். ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’. அதுமாதிரி நானும் இந்த டிரெண்டுக்கு ஏற்ப அப்டேட் ஆகிட்டிருக்கேன். ‘மோகினி’ ஸ்கிரிப்ட் எழுதுறதுக்கு முன்னாடி ஒன்றரை மாசம் மெனக்கெட்டேன். நிறைய இன்ஃபர்மேஷன் தேடிக் கண்டுபிடிச்சு சேர்த்திருக்கேன். இங்க அதிர்ஷ்டம் இருந்தா ரெண்டு வருஷங்கள் தாக்குப் பிடிக்கலாம். ஆனா, மூணாவது வருஷமும் நாம தாக்குப் பிடிக்கணும்னா திறமையும், ஒரு நேர்மையும் இருந்தாகணும். இத்தனை வருஷ அனுபத்துல நான் கத்துக்கிட்ட பாடம் இதுதான்!
-மை.பாரதிராஜா
|